Advertisement

அத்தியாயம் – 32

பாரதிக்கு முதல் சம்பளம் கைக்கு வந்திருந்தது. அப்போதைய சூழலில் அதை சந்தோஷமாய் கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை. ஊரில் அக்காவின் கல்யாண ஏற்பாடுகள் வேகமாய் நடந்து கொண்டிருக்க அடுத்த வாரம் கல்யாணத்திற்கு போகலாம் என முடிவெடுத்திருந்தாள். அதற்குள் கங்காவின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ரிஷியும் அடியெடுத்து வைத்திருந்தான்.

ரிஷி, பாரதி கல்யாண விஷயத்தை சக்தியின் கல்யாணம் முடிந்ததும் பேசி முடித்து விடலாம் என ஹரி சொல்லி இருக்க கங்காவும் சம்மதித்திருந்தாள். ஆனால் பாரதி, ரிஷி நடவடிக்கையில் அவளுக்கு லேசாய் சந்தேகம் வந்திருக்க அவர்களைத் தீவிரமாய் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அன்று காலையில் ரிஷி அலுவலகம் செல்ல புறப்பட்டு வர ஹரி அவனிடம் தானும் வருவதாகக் கூறினான்.

“ரிஷி…! ஆபீஸுக்கு தான போற, நானும் உன்னோட வர்றேன்… கங்கா நேரமே கிளம்பிட்டா, என் கார் சர்வீஸ்க்கு போயிருக்கு…”

“வாங்கண்ணா…” ரிஷி சொல்ல இருவரும் காருக்கு வந்தனர்.

காரை எடுத்து சாலையில் கலந்ததும் ஹரி சொன்னான்.

“ரிஷி…! உன்னை இப்படிப் பொறுப்பா பார்க்க மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா…? எல்லா வேலைகளையும் தெரிஞ்சுகிட்டு நீ இன்னும் வளரணும், அடுத்து பாரதிக்கும் உனக்கும் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வச்சிட்டா என் பொறுப்பும் குறைஞ்சிடும்…” மனதார தம்பியை சிலாகித்துப் பேசினான் ஹரி.

“நீங்க நினைச்சபடி எல்லாம் நடக்கும் அண்ணா… உங்ககிட்ட சில விஷயம் கேக்கணும்னு தோணுது, கேக்கட்டா…?”

“என்னடா தம்பி கேள்வி இது…? என்ன கேக்கணுமோ கேளு…”

“நீங்க ஏன் நம்ம கெமிக்கல் பாக்டரிக்குப் போறதே இல்ல…? அப்படி அங்கே என்ன நடக்குது…?”

“அதெல்லாம் உன் அண்ணிதான் பார்த்துக்கறா… கெமிக்கல் புராடக்ட்ஸ் தயார் பண்ணறது மட்டும் தான் எனக்குத் தெரியும், இப்ப எதுக்கு அதைக் கேக்கற ரிஷி…?”

“அண்ணா, நீங்க தானே நம்ம அன்னை குரூப்ஸ்க்கு சேர்மன்…? இப்படி தெரியாதுன்னு சொன்னா எப்படிண்ணா…?”

“டேய் அது சரிதான்… பிசினஸ் பொறுத்த வரைக்கும் சில விஷயங்களை அடாவடியா அப்ரோச் பண்ணனும்… அப்பதான் நமக்கு எதிரான போட்டிகளை சமாளிச்சு நம்பர் ஒன் பொசிஷன்ல எப்பவும் இருக்க முடியும்னு உன் அண்ணி சொல்லுவா… அரசியல்ல அண்டர்கிரவுண்டு ராஜ்ஜியம், ரவுடிகள்னு இருக்கிற போல பிஸினஸ்லயும் அரசியல் உண்டு… எனக்கு அதெல்லாம் பிடிக்காது, ஆனா பிசினஸ்ல ஜெயிக்கணும்னா இதெல்லாம் தேவை… ரொம்ப நல்லவங்களா இருந்தா பிசினஸ்ல தோத்துப் போயிடுவோம், நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க… விலகி நில்லுங்க, நான் பார்த்துக்கறேன்… அந்தப் பக்கம் நீங்க வரவேண்டாம்னு கங்கா சொல்லிருக்கா…”

“என்னண்ணா சொல்லறீங்க…? அண்ணி ஒரு பொம்பளை, அவங்க எப்படி இதை எல்லாம்…”

“டேய் ரிஷி… உனக்கு உன் அண்ணியைப் பத்தி சரியாத் தெரியலை… அவ பல சமயங்கள்ல ஆம்பளை மாதிரி… நம்மால முடியாத விஷயங்களையும் அசால்ட்டா சரி பண்ணிடுவா… நீ இவ்ளோ நாள் விலகி இருந்ததால உனக்கு தெரியலை, அதை விடு…! பிசினஸ் நல்லாப் போகுது… கங்கா நீட்டின இடத்துல கையைப் போட்டுட்டு நான் போயிடுவேன், நீயும் அப்படியே இரு… அவ பார்த்துப்பா…!”

அண்ணன் சொன்ன விஷயங்களை ரிஷியால் ஜீரணிக்க முடியவில்லை. அமைதியாய் காரை ஓட்டிக் கொண்டிருக்க ஹரியும் எதுவும் பேசவில்லை.

அலுவலகம் வந்ததும் ஹரி இறங்கிக் கொள்ள, “அண்ணா, எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு… வந்துடறேன்…” என்றவன் கிளம்பினான்.

நேராய் வண்டியை கெமிக்கல் பாக்டரிக்கு விட்டான். இதற்கு முன்னர் ஒரு முறை பாக்டரிக்கு வந்திருந்தாலும் அன்று சரியாய் எதையும் கவனித்ததில்லை. காரை பாக்டரி வாசலில் நிறுத்தினான் ரிஷி.

முன்புறம் ஆபீஸ் அறையும், பெரிய ஹாலில் சின்ன தடுப்புகளாய் பிரிக்கப்பட்டு வேலை செய்பவர்களும் தெரிந்தனர். அதிகமும் அழகான இளம் பெண்கள். அவர்களைக் கடந்து பின்பக்கம் செல்ல ஸ்டாக் குடோனுக்கு செல்லும் கதவு பூட்டப்பட்டிருந்தது.

“இது ஏன் பூட்டியிருக்கு…?” செக்யூரிட்டியிடம் கேட்க அவன் பதட்டமாய் பதில் சொன்னான்.

“ச..சார், அங்கே கெமிக்கல் ஸ்டாக் இருக்கு… குடோனுக்குப் போக இன்னொரு வழி இருக்கு, இந்தப் பக்கம் கேட் வழியாப் போகலாம்…” எனக் காட்டினான்.

“இதை ஓப்பன் பண்ணுங்க…”

“ச..சார்… அ..அது மேடம் யார் வந்தாலும் ஓபன் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க…” செக்யூரிட்டியின் பதிலில் திகைத்த ரிஷி யோசித்தான்.

“ஓ…! அப்படியா, இரு…” என்றவன் ஹரிக்கு அழைத்தான்.

“சொல்லுடா ரிஷி…!”

“அண்ணா, நான் இங்க கெமிக்கல் பாக்டரிக்கு வந்திருக்கேன்… இங்க உள்ள செக்யூரிட்டி ஒரு ரூமை எனக்குத் திறந்து காட்ட மாட்டேன்னு சொல்லுறார், கொஞ்சம் என்னன்னு கேளுங்க…” ஸ்பீக்கரில் போட்டுப் பேச அதற்குள் சத்தம் கேட்டு பாக்டரி மேனேஜர் ஓடி வந்தார்.

“யோவ் மேனேஜர், என் தம்பி இந்த கம்பெனியோட முதலாளி…! அவனைத் தடுத்த நிறுத்துற உரிமை எனக்கே இல்லை… அந்த செக்யூரிட்டி யாரு தடுக்க, அவனை முதல்ல வேலையை விட்டுத் தூக்கு…?” எகிறினான் ஹரி.

“ச..சார்… மேடம் தான் அந்த ரூமை யாருக்கும் ஓபன் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க…” செக்யூரிட்டி மீண்டும் அதையே சொல்ல ஹரி கடுப்பில் கத்த விவரம் கங்காவின் காதுக்கு செல்ல அவள் ஓடி வந்தாள்.

“கங்கா…! நீ ரிஷிக்கு அந்த ஹாலை ஓபன் பண்ணிக் காட்டக் கூடாதுன்னு சொன்னியா…?”

“என்ன ஹரி.. நான் அப்படி சொல்லுவேனா…? அது கான்பிடன்ஷியல் ஏரியா…! எல்லாரும் நுழையக் கூடாதுன்னு சொன்னது நான்தான், செக்யூரிட்டி சரியாப் புரிஞ்சுக்காம ரிஷியை தடுத்திருக்கான்… நீங்க அமைதியா இருங்க, இதை நான் பேசிக்கறேன்…” என்றாள்.

கங்கா பாக்டரி மானேஜரிடம் பேச அந்த ரகசிய ஹால் ரிஷிக்காய் திறக்கப்பட்டது.

“நீங்க இங்கயே இருங்க…” என்றவன் அவன் மட்டும் தனியே உள்ளே சென்றான்.

முதலில் ஏதேதோ கெமிக்கல் பொருட்கள் வரிசையாய் ஸ்டாக் வைக்கப் பட்டிருக்க அதைக் கடந்து உள்ளே செல்லவும் ஒரு அறைக்கான கதவு தெரிந்தது. அதுவும் பூட்டப்பட்டிருக்க மானேஜரை அழைத்து சாவியைக் கேட்டான் ரிஷி.

“சாரி சார், இந்த ரூமோட சாவி மேடம் கிட்ட தான் இருக்கு… அவங்க எப்பவாச்சும் இங்கே ரெஸ்ட் எடுக்கும்போது யூஸ் பண்ணற ரூம் அது…” என்றார் அவர்.

திகைத்தவன் “பூட்டை உடைக்க சொல்லலாமா…?” என யோசித்து பிறகு அந்த எண்ணத்தைக் கை விட்டான். அண்ணியின் ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் அறை அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று மனம் சொன்னது. ரிஷி அங்கிருந்து கிளம்ப அலுவலகத்தில் இருந்த கங்காவின் மனதுக்குள் தீ மூண்டிருந்தது.

“ரிஷி எதற்காக இப்படி அவசரமாய் கெமிக்கல் பாக்டரிக்கு செல்ல வேண்டும்… குடோனைத் திறக்க ஆர்பாட்டம் செய்ய வேண்டும்… இது எதார்த்தமாய் நடந்ததா, இல்லை எனக்கான சூழ்ச்சி எதுவும் இருக்கிறதா….?” யோசித்தாள்.

“பாரதி ரிஷியிடம் எதுவும் சொல்லியிருப்பாளா…? அந்த பென் டிரைவ் என்னிடம் பத்திரமாய் தானே இருக்கிறது…?” யோசித்தவள் கைப்பையில் இருந்த மேஜை சாவியை எடுத்துத் திறந்து பார்க்க பென் டிரைவ் பத்திரமாய் இருந்தது.

நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “இது என்கிட்ட இருக்கிற வரைக்கும் நிச்சயம் பாரதி வாலாட்ட மாட்டா… அப்ப, இந்த பொடிப் பய தான் தேவையில்லாம என் ரூட்டுல கிராஸ் ஆகறானா…? இவனை ஆபீஸுக்குள்ள விட்டது தப்பாப் போச்சே…” யோசித்தபடி தனது அறையில் வேலை செய்து கொண்டிருந்த பாரதியை ஸ்க்ரீனில் நோக்கியபடி அமர்ந்திருந்தாள்.

“ரிஷி வந்ததும் பாரதியைப் பார்த்துப் பேசாம ரூமுக்குப் போக மாட்டான்… பிடிக்கறேன், ரெண்டு பேரையும் கையும் களவுமாப் பிடிக்கிறேன்…” கருவிக் கொண்டவள் யாருக்கோ போன் செய்தாள். அவன் ஒரு எலக்ட்ரானிக் எக்ஸ்பர்ட்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த எக்ஸ்பர்ட் ரிஷியின் அறையில் ஏதோ செய்து முடித்து வெளியேறினான்.

ஒரு மணி நேரம் கழித்து ஆபீஸ் வந்த ரிஷி பாரதியைக் காணாமல் நேரே அவனது அண்ணனின் அறைக்கு செல்ல அங்கே கங்காவும் இருந்தாள். ஹரி ஏதோ டாக்குமென்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான்.

“வாடா ரிஷி, உனக்கு ரொம்ப பொறுப்பு அதிகம் ஆகிடுச்சு போல, கெமிக்கல் பாக்டரிக்கு எல்லாம் போற…?”

“ஆமா அண்ணி, நீ வளர்த்த பிள்ளை நான்… உன் பொறுப்புல கொஞ்சமாச்சும் எடுத்துகிட்டா தானே நீ இல்லாதப்பவும் மேனேஜ் பண்ணிக்க முடியும்…” எனவும் திகைத்தாள்.

Advertisement