Advertisement

“ச்சே…! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்… அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு… ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து… இத்தனை வருட சூழ்ச்சியை நிதானமாய் தான் வெளியே கொண்டு வர வேண்டும், என்ன செய்யலாம்…?” யோசித்தான்.

அவன் மூளையில் சில புதிய யோசனைகள் பளிச்சிட்டது. அவனது வேலையை முடித்துக் கொண்டு அண்ணி சொன்ன ஆளைக் கண்டு பணம் வசூல் செய்ய செல்ல அவன் கையை விரித்து கண்ணில் நீரைக் காட்ட கங்காவுக்கு அழைத்தான்.

“அண்ணி, நீங்க சொன்ன கம்பெனிக்கு வந்தேன்… பணம் ரெடியாகலைன்னு சொல்லுறார்…”

“ஓ… அந்த இடியட் ரொம்ப நாளா இதையே சொல்லிட்டு இருக்கான், அவனை நான் டீல் பண்ணிக்கறேன்… நீ கிளம்பி ஆபீஸ் வந்திடு…” சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள்.

ரிஷி காரில் அமர அன்று கண்ட அந்தப் பெரியவர் சோர்வுடன் கேட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

“இவர்தான அன்னைக்கு அண்ணியைப் பத்தி என்கிட்ட தப்பா சொன்னது…? அன்னிக்கு கோபத்துல என்னன்னு கேக்காம விட்டுட்டோம், இன்னிக்கு என்னன்னு பேசிப் பார்த்தா என்ன…?” யோசித்தவன் காரை விட்டு இறங்கினான்.

அவனைக் கண்டதும் திகைத்தவர் நின்றார்.

“த…தம்பி…! நீங்க இங்க…”

“ஒரு வேலையா வந்தேன், நீங்க…”

“இது என் அண்ணன் மகனோட கம்பெனி தம்பி, அவசரமா இடம் விக்கணும்னு சொல்லி இருந்தார்… பேச வந்தேன்…”

“ஓ…! நீங்க சொல்லுறது மிஸ்டர் ராஜேஷா…?”

“ம்ம்… ராஜேஷ் என் அண்ணன் மகன்…”

“அவர்கிட்ட பத்து லட்சம் வசூலிக்க தான் நான் வந்தேன்…” என்றதும் பெரியவர் பரிதாபமாய் முழித்தார்.

“அவர் இருக்கிற நிலைமைல பத்து லட்சம் இல்ல, பத்து ஆயிரம் கூட வசூலிக்கிறது கஷ்டம், மகனால குடும்ப மானம் போகாம இருக்கணும்னு தான் என் அண்ணன் இடத்தை விக்க முடிவு பண்ணிருக்கார்…” சொன்னவர் தலையைக் குனிந்து கொள்ள திகைத்தான் ரிஷி.

“நீங்க என்ன சொல்லறீங்க…? அன்னைக்கும் ஏதோ சொல்ல வந்தீங்க… சாரி, நான்தான் அவசரப்பட்டு திட்டிட்டேன்…”

“வேண்டாம் தம்பி, உங்க அண்ணியைப் பத்தி என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க… இன்னும் எத்தனை குடும்பம் அவங்களால நடுத் தெருவுக்கு வரப் போகுதோ, அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்…” சொன்னவர் நடக்கத் தொடங்க இடைமறித்தான் ரிஷி.

“பெரியவரே…! நீங்க சொல்ல வந்ததை தெளிவா சொல்லிட்டுப் போங்க, அன்னைக்கு கேக்காம உங்களை அவமானப் படுத்தினது தப்புதான், இன்னைக்கு கேக்க தயாரா இருக்கேன்… சொல்லுங்க…” என்றான்.

அவர் நிதானமாய் அவனைப் பார்க்க, “வாங்க, காருக்குள்ள உக்கார்ந்து பேசுவோம்…” என்றவன் தனது கார் கதவைத் திறந்துவிட அவரும் வந்து அமர்ந்தார்.

“தம்பி… இந்தப் பத்து லட்சம் வசூலிக்க வந்தேன்னு சொன்னிங்களே, அது எதுக்கான பணம்னு உங்களுக்கு ஏதாச்சும் விவரம் தெரியுமா…?”

“எங்களுக்கு பிசினஸ் கொடுத்திட்டு இன்னும் பணம் செட்டில் பண்ணாம இருந்தார், அதுக்கான பணம் தானே…”

“இல்ல தம்பி, சரி… உங்க அன்னை குரூப்புக்கு சொந்தமான  கெமிக்கல் பாக்டரில எந்த மாதிரியான வேலைகள் நடக்குதுன்னு தெரியுமா…?” நெற்றியை சுளித்தான் ரிஷி.

“ஏன்…? அங்கே கெமிக்கல் சம்மந்தமான பொருட்கள் தயார் பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியும்… அங்க முழுசா அண்ணி மட்டும் தான் பார்த்துக்கறாங்க, அந்த பாக்டரிக்கு என்ன…?” என்றான் குழப்பத்துடன்.

“அதுக்கு மட்டும் இல்ல தம்பி, சில மறைமுக வேலைகளுக்கும் அந்த பாக்டரியை உங்க அண்ணி யூஸ் பண்ணிட்டு இருக்காங்க…”

“நீங்க சொல்ல வர்றது புரியலியே…”

“பெரிய பிசினஸ் கான்ட்ராக்ட் எல்லாம் அங்கே தான் அதிகம் ஒப்பந்தம் ஆகுது… பேச்சுல, பணத்துல சில பிசினஸ் படியலேன்னா அடுத்து உங்கண்ணி யூஸ் பண்ணுறது அங்க வேலை செய்யுற அழகான பொண்ணுங்க மூலமா பேரம் பேசறதைத் தான்… பெரிய புள்ளிகளை வேண்டிய போல கவனிச்சு அவங்க உல்லாசமா இருக்கிறதை வீடியோ எடுத்து வச்சு பிளாக்மெயில் பண்ணி காரியத்தை சாதிச்சுக்குறா, அப்படி முடியாதவங்களை பணம் கேட்டு மிரட்டுறா…” பெரியவர் சொல்ல அதிர்ந்து போய்ப் பார்த்தான் ரிஷி.

“நீ..நீங்க என்ன சொல்லறீங்க…? அ…அண்ணியா…?”

“உங்களுக்கு இதெல்லாம் நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும்னு தெரியும் தம்பி… இந்த ராஜேஷ் பலான வீடியோவை எடுத்து வச்சு அவனோட கான்ட்ராக்ட் கிடைக்காமப் போகவும் தான் அம்பது லட்சம் பணம் கேட்டு மிரட்டிட்டு இருக்கா… குடும்ப மானம் போயிடக் கூடாதேன்னு ராஜேஷ் தற்கொலை பண்ணிக்கப் போனப்ப என் அண்ணன் எப்படியோ நாப்பது சரி பண்ணிக் கொடுத்திட்டாங்க, இன்னும் பத்து கொடுத்தா தான் அந்த வீடியோவைக் கொடுப்பேன்னு சொல்லிருக்கா… அதுக்குதான் இடத்தை விக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்…” என்றார் வருத்தத்துடன்.

அவர் சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

அந்தப் பெரியவரின் கையிலிருந்த அலைபேசி சிணுங்க, “என் அண்ணன் தான் கூப்பிடறார், நான் வர்றேன் தம்பி… இதை எல்லாம் உங்க அண்ணன்கிட்ட சொல்லி எப்படியாச்சும் அந்த ராட்சசி கிட்ட இருந்து சம்மந்தப்பட்டவங்களை நீங்க தான் காப்பாத்தணும்…” சொல்லிவிட்டு அவர் நகர அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தான் ரிஷி.

“இவர் சொல்லுவதைப் போல் பாரதியும் இப்படி ஒரு சிக்கலில் தான் மாட்டி இருக்கிறாளோ…? அவளை மிரட்டும் அளவுக்கு அந்த வீடியோவில் என்ன இருக்கிறது… அண்ணியைப் பற்றி எல்லாம் சொல்லும் பாரதி அந்த வீடியோவில் இருக்கும் விஷயத்தைப் பற்றி மட்டும் ஓப்பனாக சொல்ல மறுப்பது ஏன்…?” யோசித்தபடி அமர்ந்திருந்த ரிஷிக்கு தலை வலித்தது.

ஒரு காபி சாப்பிட்டால் தேவலாம் எனத் தோன்ற வழியில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்குள் காரை நுழைத்தான். எதேச்சையாய் கார் பார்க்கிங்கில் அண்ணியின் கார் நிற்பதைக் கவனித்தவன் திகைத்தான்.

“அண்ணி கெமிக்கல் பாக்டரிக்குப் போயிட்டு ஆபீஸ் போறதா சொன்னாங்க, இங்க என்ன பண்ணுறாங்க…” யோசித்தவன் கண்ணாடியும், மாஸ்க்கும் அணிந்து கொண்டு உள்ளே சென்றான். ஒரு ஓரமாய் நின்று சுற்றிலும் பார்வையை ஓட்ட தனித்து தள்ளியிருந்த காபின் ஒன்றில் அண்ணி யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அங்கே கிடந்த நாளிதழைக் கையில் எடுத்தபடி நடந்தவன் அவர்கள் இருந்த காபினுக்கு அருகே இருந்த காபினில் சென்று அமர்ந்தான். அவர்களைக் கடக்கையில் உள்ளே கங்காவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவளது அண்ணன் கணேஷ் எனப் புரிய திகைப்புடன் நடந்தான். அவர்கள் பேசுவது தெளிவாய் புரியாவிட்டாலும் சன்னமாய் காதில் விழுந்து உன்னிப்பாய் கவனிக்க வைத்தது.

“அண்ணா…! நீ சொன்ன போல எல்லாமே சரியா தான் நடந்திட்டு இருக்கு, பாரதி, அக்காவோட வீடியோ நம்மகிட்ட இருக்கிற வரைக்கும் அவ வாலாட்ட மாட்டா… ஆனா இந்த ரிஷிப் பய நடந்துக்கிறது எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு, இப்பெல்லாம் அவன் குடிக்கிறதில்லை… இப்படிப் போனா பொறுப்பு எல்லாத்துலயும் அவனும் தலையை நுழைப்பான்… அவனை எப்படியாச்சும் முடக்கிப் போட்டுட்டா அப்புறம் பாரதியாலயும் ஒண்ணும் செய்ய முடியாது…”

“ம்ம்… அதுக்கெல்லாம் வழி இருக்கு மா, நல்லபடியா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடு…”

“என்னண்ணே சொல்லற… கல்யாணம் பண்ணி ஆசிர்வாதம் பண்ணவா நம்ம கஷ்டப்படறோம், அந்தப் பய எப்படி அடங்கிப் போவான்…?”

“கங்கா, அவங்களுக்கு கல்யாணம் பண்ண சொல்லறது வாழ வைக்க இல்லை…”

சொன்ன கணேஷ் சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டான்.

“கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போன இடத்துல அந்த பாரதி செத்துப் போயிட்டா இவன் என்னாவான்… புதுப் பொண்டாட்டி செத்துப் போன துக்கத்துல அழுதிட்டு மூலைல உக்கார்ந்திருப்பானா, ஆபீஸ் வருவானா…?” மெல்லிய சிரிப்புடன் சகுனி சொல்ல கூனி புன்னகைத்தாள்.

“செம ஐடியாண்ணே… இதை நான் யோசிக்கவே இல்லை, ரிஷிக்கு பாரதியைக் கொடுக்கிற போல கொடுத்து ஒரேயடியா பறிச்சுடுன்னு சொல்ல வர்ற… பிரம்மாதம்…!” சந்தோஷித்தாள் கங்கா.

அவர்கள் பேசியதில் பாதி புரிந்தும் புரியாமலும் அமர்ந்திருந்த ரிஷியின் உள்ளம் பதற வேகமாய் எழுந்தான். “இதற்கு மேல் இவர்களை விட்டு வைக்கக் கூடாது…” மனதில் உறுதி செய்து கொண்டான்.

பாரதியை நேரில் சந்திப்பதோ, அவள் அலைபேசி எண்ணில் அழைப்பதோ பிரச்சனை என்பதால் இரவு பாரதியின் ஹாஸ்டல் எண்ணில் அழைத்தவன் அன்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

“ச்ச்சே… நான் நினைச்சதை விட உங்க அண்ணி மோசமா இருக்காளே, அவளை சும்மா விடக் கூடாது ரிஷி…”

“ம்ம்… நானும் அந்த முடிவுக்கு வந்துட்டேன் ரதி… அண்ணன், ரோஷனை நினைச்சா தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு, வேற வழி இல்லை… ஏதாச்சும் பண்ணித்தான் ஆகணும்…”

“ம்ம்… முதல்ல உங்க அண்ணன்கிட்ட அண்ணியோட முகத்திரையைக் கிழிக்கணும்…” என்றாள் பாரதி.

“ம்ம்… அதுக்கு முன்னாடி உன் சம்மந்தப்பட்ட வீடியோ எதையோ வச்சு உன்னை பிளாக்மெயில் பண்ணறாங்கன்னு சொன்னியே, அது என்னன்னு சொல்லு…”

“அது..வந்து…” பாரதி தயங்க ரிஷி வற்புறுத்தினான்.

“சொல்லு ரதி…! அது என்னன்னு தெரிஞ்சா தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும்…”

“அ..து என் அக்காவோட வீடியோ…” என்றவள் தயங்கியபடி விஷயத்தை சொல்ல மேலும் அதிர்ந்தான் ரிஷி.

“ச்சே… ஒரு குடும்பப் பெண்ணுக்குள் இத்தனை கேவலமா…?” வெறுப்பில் மனம் கசந்தான் ரிஷி. அண்ணியின் மேலிருந்த ஆத்திரம் இன்னும் கூடி பல்லைக் கடிக்க வைத்தது.

உள்ளுக்குள்

விஷம் வைத்து

உதட்டிலே

புன்னகைத்தால்

மணப்பதில்லை சிரிப்பூ…

Advertisement