Advertisement

“ரிஷி…! கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, உங்க அண்ணி உங்களுக்கு தெய்வமா இருக்கலாம், ஆனா என்னோட பிரச்சனைகள் வேற… நான் வேற யாரையாச்சும் குத்தம் சொல்லறேனா, எதுக்கு உங்க அண்ணியை மட்டும் சொல்லணும்…? என்னால என் மொபைல்ல கூட உங்களுக்கு கால் பண்ண முடியலை, என் கால்ஸ் டிரேஸ் பண்ணப் படலாம்… ஆடியோ, வீடியோன்னு சகலத்துலயும் என்னை வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க…”

“யாரு…? யார் உன்னை வாட்ச் பண்ணறா…?” ரிஷி புரியாமல் கேட்டான்.

“வேண்டாம் ரிஷி, உங்கண்ணியைப் பத்தி பேசினா உங்களுக்குப் பிடிக்காது, விட்டுடலாம்…! என்னை கடுமையா கண்காணிச்சிட்டு இருக்காங்க, சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க…! நான் வேற வழியில்லாம ஒரு கட்டாயத்துல தான் உங்க கம்பெனில இருக்கேன்… இந்த பிஏ போஸ்டிங் எல்லாம் வெறும் நாடகம்…!”

“ரதீ, என் அண்ணி தப்பானவங்கன்னு சொல்லறியா…?”

“விடுங்க ரிஷி…! நீங்க என்னை நம்பலை, நாம இனி இதைப் பேச வேண்டாம்… இப்ப கூட உங்ககிட்ட சொல்லணும்னு ஆபீஸ் பக்கத்துல உள்ள கடைக்கு வந்து பேசிட்டு இருக்கேன்… என் பிரச்சனைகளை நானே பார்த்துக்கறேன்… ஆனா, ஆபீஸ்ல என் அறைல நான் உங்ககிட்ட சரியா பேச மாட்டேன், அதுக்காக உங்களை எனக்குப் பிடிக்காமலோ, வருத்தமோ இல்லை… நீங்க நல்லவர், உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு ரிஷி… நீங்களும் இந்த பிரச்சனைல மாட்டி இருக்கீங்க, உங்களையும் கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு, சரி…! நான் வச்சிடறேன், நாளைக்கு ஆபீஸ்ல சந்திப்போம்…” சொன்னவள் போனை வைத்துவிட அவனுக்கு குழப்பம்.

“எனக்கு என்ன பிரச்சனை…? என்னையும் கரை சேர்க்கப் போறேன்னு சொல்லுறா… ரதி பேசறது எல்லாம் புதிராவே இருக்கு…” ஆனாலும் அவள் பேசியது சந்தோஷத்தைக் கொடுக்க பசியில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான்.

அடுத்த நாள் காலையில் கங்காவும், ஹரியும் ரோஷனுடன் ஊட்டி கிளம்பினர். ரிஷிக்கு கங்கா கெமிக்கல் பாக்டரியிலும், மெடிக்கல் லாபிலும் வேலை கொடுத்திருக்க ஹரி ஒரு முக்கிய கஸ்டமர் ஒருவர் ஆபீஸ் வருவதால் அவரை சந்திக்க ஆபீஸ் செல்லுமாறு சொல்லி இருந்தான்.

காலை நேராக கெமிக்கல் பாக்டரிக்கும், லாபுகும் சென்று அண்ணி சொன்ன வேலைகளை சீக்கிரமே முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டான் ரிஷி. வாசலில் காத்திருந்த வயதான நபர் ஒருவர் அவனைக் கண்டு ஓடிவந்தார்.

“தம்பி…! நீங்க தான் ஹரி சார் தம்பியா…?”

“ஆமாம், நீங்க யாரு…? என்ன வேணும்…?” அவன் கேள்விக்கு சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டவர், “தம்பி உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும், இங்க வேண்டாம்… பக்கத்துல எங்காவது போய் பேசலாமா…?”

அவரை யோசனையுடன் பார்த்தவன் கார்க் கதவைத் திறந்து விட்டு, “உக்காருங்க…” எனவும் அந்தப் பெரியவர் வேகமாய் அவன் அருகே வந்து அமர காரை எடுத்தான் ரிஷி. அவரது தோற்றத்தில் ஒரு எளிமை இருந்தாலும் பார்க்க கண்ணியமாய் தெரிந்தார்.

“தம்பி…! உங்க அப்பா காலத்து ஆளு நானு… அவரோட தோஸ்த்னு கூட சொல்லலாம், பிசினஸ் ரீதியான நட்பா இருந்தாலும் வாடா, போடான்னு கூப்பிடற அளவுக்கு எங்களுக்குள்ள நெருங்கின நட்பு இருந்துச்சு…”

“அப்படியா…! உங்களை நான் பார்த்ததே இல்லையே…!”

“என்னை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை தம்பி…! அதான், ஒரு பிசாசை பொம்பளைன்னு நம்பி உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கிங்களே…!” எனவும் ரிஷியின் முகம் மாறியது.

“யாரு..? என் அண்ணியை சொல்லறீங்களா…?”

“நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க தம்பி… உங்க அண்ணன் ரொம்ப நல்லவர், வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிற குணம்… ஆனா அவர் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்தாரே கங்கா… அவ பேருல மட்டும் தான் புனிதம் இருக்கு, குணத்துல சாக்கடை…” எனவும் சட்டென்று வண்டியை ஓரமாக்கி நிறுத்தினான் ரிஷி.

“யோவ் இறங்குயா…! என் அண்ணியைப் பத்தி என்கிட்டவே தப்பாப் பேசறியா..? தொலைச்சிருவேன்…”

“தம்பி…! அவசரப்படாம அஞ்சு நிமிஷம் நான் சொல்லறதைக் கேளுங்க, அப்புறம் அதுல எதுவும் தப்பிருந்தா என்னை அடிக்கக் கூட செய்யுங்க…” அவர் சொல்ல குழம்பினான்.

“அடுத்து இவர் அண்ணியை என்ன சொல்லப் போகிறார்…?”

“தம்பி..! உங்க அப்பா ரொம்ப நேர்மையா தொழில் பண்ணின ஆளு… அவருக்கப்புறம் உங்க அண்ணன் பொறுப்புக்கு வந்தப்பவும் அதே நேர்மையோட தான் தொழிலைக் கொண்டு போனார், ஆனா உங்கண்ணி அப்படி இல்லை… தான் நினைச்சது நடக்கணும், தொழில் சாம்ராஜ்யமே தன் காலடில கிடக்கணும்னு கணக்குப் போட்டு தப்பான வழியில பல வேலைகள் பண்ணிட்டு இருக்கா… இதெல்லாம் பாவம் உங்கண்ணனுக்கு கூடத் தெரியாது, அவரைப் பார்த்துப் பேச எத்தனையோ முயற்சி செய்தும் முடியல… இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் கார்ல எங்கயோ கிளம்பினதைப் பார்த்திட்டு தான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்…”

“யோவ்… போனாப் போகுதுன்னு நீ சொல்லறதைக் காது கொடுத்து கேட்டா என் அண்ணியை அசிங்கப் படுத்துவியா…? இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்லை, முதல்ல இறங்கு…” கோபமாய் கத்தியவன் அவரைப் பிடித்து வெளியே தள்ள முயல அவர் இறங்கிக் கொண்டார்.

“தம்பி, உங்க நல்லதுக்கு தான் சொல்ல வந்தேன்… கொஞ்சம் பொறுமையா கேளுங்க…” என்றவரை முறைத்தான்.

“யோவ்…! வயசுல பெரியவராச்சேன்னு பார்க்கிறேன், இழுத்துப் போட்டு மிதிக்கிறதுக்கு முன்னாடி கிளம்பிரு…” சொன்னவன் காரைத் திருப்பி அலுவலகம் வந்தான். ஆனால் மனசுக்குள் அந்த சம்பவம் மீண்டும் வந்து கொண்டிருக்க ஆபீஸை அடைந்தவன் கடுப்புடன் காரை நிறுத்திவிட்டு அவனது அறைக்கு சென்று அமர்ந்தான்.

கெளதம் வந்து கையெழுத்திட சில பைல்களை வைக்க மேலோட்டமாய் பார்த்து கையெழுத்திட்டுக் கொடுத்தவன் இன்டர்காமில் பாரதியை அழைத்தான்.

“பாரதி, எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… என் ரூமுக்கு வர்றியா…?” எனவும் சம்மதித்தவள் சில நிமிடத்தில் அவன் ரூமை அடைந்திருந்தாள்.

“குட் மார்னிங் ரிஷி…”

“ம்ம்… குட்மார்னிங்கா, பேட் மார்னிங்கான்னு தெரியல ரதீ…” அவன் சொல்லவும் நெற்றியை சுருக்கி, “ஒரு நிமிஷம்…!” என்றவள் சுற்றிலும் நோக்கிவிட்டு, “இங்கே காமரா எதுவும் இல்லியே…” எனவும் ரிஷிக்கு முன்தினம் அவள் சொன்னது நினைவில் வர மறுப்பாய் தலையாட்டினான்.

“நேத்தும் இப்படி எதையோ சொன்ன… எனக்குப் புரியல, உன் ரூம்ல காமரா இருக்கா, என்ன…?”

“ம்ம்… நீங்க கோபப்பட்டாலும் பரவால்ல ரிஷி, நான் சொல்லுறது உண்மை…. என் ரூம்ல நாம பேசறதை எல்லாம் உங்கண்ணி வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க, அதான் நேத்து நான் வெளிய வந்து உங்களுக்கு கால் பண்ணேன்…” அவள் சொல்ல அந்தப் பெரியவர் சொன்ன தகவலும் மனசுக்குள் வர ரிஷிக்கு குழப்பத்தில் கோபம் வரவில்லை.

“ரதீ…! என்னால நீ சொல்லறதை நம்ப முடியல, ஆனா திரும்பத் திரும்ப நீ இப்படி சொல்லும்போது அப்படியே உதாசீனப் படுத்தவும் மனசு வரலை, நிச்சயம் என் அண்ணி அப்படிப் பட்டவங்க இல்லை… நீ எதோ தப்பா நினைச்சுட்டு இப்படி சொல்லறன்னு நினைக்கறேன்…”

“ஓ… நீங்க ME தானே படிச்சிங்க… கம்ப்யூட்டர் பத்தி நல்லாத் தெரியும் தானே, முடிஞ்சா உங்க அண்ணி ரூம்ல போயி செக் பண்ணிப் பாருங்க…! அப்ப நம்புவிங்க… சரி, அதிருக்கட்டும்…! இப்ப என்னை எதுக்கு வர சொன்னிங்க…?”

“ரதீ…! நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன், நடக்கிற விஷயங்களை நம்பறதா வேண்டாமா தெரியலை… இப்ப நான் ஆபீஸ் வர்றதுக்கு முன்னாடி ஒரு பெரியவரைப் பார்த்தேன்…” என்ற ரிஷி அவரிடம் பேசிய எல்லாத்தையும் பாரதியிடம் சொல்ல அமைதியாய் கேட்டிருந்தாள்.

“நீயே சொல்லு ரதி… யாரோ ஒருத்தர் என் அண்ணியைக் கேவலமா பேசறதை எப்படி நான் கேட்டுட்டு இருப்பேன்…”

“தொடர்ந்து தப்பு பண்ணறீங்க ரிஷி… அந்தப் பெரியவர் சொல்ல வந்ததை முழுமையா கேட்டிருக்கணும், ஆனா உங்க அண்ணி அப்படி செய்யக் கூடியவங்க தான்…”

“ரதீ…!”

“சாரி ரிஷி… நானே அவங்க போன்ல இப்படி தப்பாப் பேசினதைக் கேட்டிருக்கேன்…”

“என்ன…? என்ன கேட்ட நீ…?”

“பெரிய கான்ட்ராக்ட் கிடைக்கறதுக்காக சம்பந்தப்பட்ட ஆளுங்களுக்கு பொண்ணைக் கூட்டிக் கொடுத்து வீடியோவும் எடுத்து வச்சிட்டு பிளாக்மெயில் பண்ணி காரியத்தை சாதிக்கிறது தான் உங்க அண்ணியோட வழக்கம்…”

“ச்சே… ஒரு பொண்ணா இருந்துகிட்டு என் அண்ணியை இப்படி அபாண்டமா பேச உனக்கு எப்படி மனசு வருது ரதீ…”

“ரிஷி…! நான் அபாண்டமா பேசலை, ஆதாரத்தோட தான் பேசறேன்… உங்க அண்ணி போன்ல பேசினதை நானே கேட்டிருக்கேன், அதோட என்கிட்டயும் அவங்க அதே பார்முலா வச்சு தான் பிளாக்மெயில் பண்ணறாங்க… என் அனுபவத்தை நான் எப்படி நம்பாம இருக்க முடியும்…?”

“ரதீ…! நீ சொல்லுறது எனக்கு ஒண்ணும் புரியல, உன்னை என்ன பிளாக்மெயில் பண்ணறாங்க…?” அவன் கேட்க ரிஷியின் மேஜை மீதிருந்த இன்டர்காம் சிணுங்கியது. அதை எடுக்க கங்கா லைனில் வந்தாள்.

“ரிஷி…! பாரதி உன் ரூம்ல இருந்தா கொஞ்சம் அவகிட்ட ரிசீவரைக் கொடேன்… ஒரு முக்கியமான வேலை சொல்லணும், அவ மொபைலுக்கு டிரை பண்ணா கிடைக்கலை…” கங்கா சொல்லவும் ரிஷிக்கு ஒரு மாதிரி யோசனையாய் இருந்தது.

“அதெப்படி பாரதி என்னோடு தனியே பேசும் போதெல்லாம் அண்ணிக்கு மூக்கு வேர்க்கிறது…?” அவன் யோசித்துக் கொண்டிருக்க ரிசீவரை வாங்கிய பாரதி உதட்டில் விரலை வைத்து அவனிடம் அமைதியாய் இருக்க சொல்லிவிட்டு இண்டர்காமில் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

கங்கா பாரதியுடன் பேச அவள் இதழ்களில் புன்முறுவல் நெளிய ரிஷியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

எவன் தடுத்தாலும்

தீமை தான் வெல்லும் என

நினைப்பது மூடனின் மனம்…

ஆனால் முடிவில் என்றும்

நன்மையே வெல்லும் என்பது

நல்லவரின் நம்பிக்கை குணம்…

Advertisement