Advertisement

அத்தியாயம் – 30

அன்றைய பொழுது கங்காவின் சொல்படி அவளோடு பாரதிக்குக் கழிய, மதியம் கங்கா வீட்டுக்கு கிளம்பியதும், பாரதியைக் காண அவள் அறைக்கு வந்தான் ரிஷி

ஆனால் பாரதி சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை.

“ரதீ… வா, ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சிட்டு வந்திருவோம்…”

“இல்ல, நான் வரலை… எனக்கு நிறைய வேலை இருக்கு, முடிச்சிட்டு காண்டீன்ல சாப்பிட்டுக்கறேன்…”

“ப்ச்… நேத்து நான் நடந்துகிட்டதை நினைச்சு எனக்கே கில்ட்டியா தான் இருக்கு, காலைலயே உன்கிட்ட சாரி சொல்ல தான் உன்னைப் பார்க்க வந்தேன்… அதுக்குள்ள அண்ணி வந்துட்டாங்க, ஐ ஆம் ரியல்லி சாரி ரதீ…!”

“ப்ச்… நீங்க முதலாளி, நான் உங்ககிட்ட வேலை செய்யறவ… என்னை நீங்க அதட்டலாம், அடிக்கலாம், அவமானப் படுத்தலாம்… அடிமை மாதிரி எல்லாத்தையும் பொறுத்துட்டு போய்த்தான ஆகணும், எனக்கு எதுக்கு சாரி சொல்லணும்…”

“நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியுது… ஆனா எப்பவும் நீ எனக்கு கோபம் வர்ற போலவே பேசினா நான் என்னதான் பண்ணறது…? சாரி மா…!”

“வேணாம் ரிஷி… உங்ககிட்ட பேச எனக்கு நேரமும் இல்லை, புரிய வைக்க தெம்பும் இல்லை, நான் சொன்னதை கொஞ்சமாச்சும் யோசிங்க, அது போதும்…! இப்ப கிளம்புங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு…” விரட்டினாள்.

ரிஷிக்கு வருத்தமாக இருந்தது. இதுவரை எந்தப் பெண்ணையும் அவன் கை நீட்டி அடித்ததில்லை. அவனை ஒருத்தி காதலித்து ஏமாற்றி விட்டு சென்றபோது கூட அவளை அவன் அடித்ததில்லை… அப்படியிருக்க அவனது ரதியை அடிக்க எப்படி மனசு வந்தது… அப்படி என்ன அவள் மீது பொறுக்க முடியாத கோபம்…? வருந்தினான்.

பாரதியின் வாடிய முகமும், அவன் முகத்தைக் கூடப் பார்த்து பேசாமல் எங்கோ பார்த்தபடி பேசிய விதமும் அவனை சங்கடப் பட வைத்ததோடு யோசிக்கவும் வைத்தது. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் எனும்போது அவன் மனசு மட்டும் இளகாதா என்ன…? அதற்காகத் தானே அவன் கோபம் தெரிந்தாலும் பாரதி மீண்டும், மீண்டும் கங்காவைப் பற்றி அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள். பாரதியின் முயற்சி பலன் கொடுக்கத் தொடங்கியது.

“நான் எத்தனையோ முறை கோபப்பட்டும் ரதி ஏன் அண்ணியைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்… அப்படி அண்ணி அவளுக்கு என்னதான் துரோகம் செய்து விட்டார்கள்…? இப்படி இருந்தால் நாளை இருவரும் ஒரு வீட்டில் எப்படி ஒன்றாக வாழ முடியும்…? நான் அன்னையைப் போல், தெய்வத்தைப் போல் காணும் அண்ணியை அவள் மீண்டும், மீண்டும் தப்பு சொல்லிக் கொண்டே இருக்கிறாள் என்றால் இதில் ஏதாவது உண்மை இருக்குமா…?” யோசித்தவனுக்கு தலை வலித்தது. நம்பவும் முடியாமல், யோசிக்கவும் விரும்பாமல் புதிராய் இருந்தது. கெளதமிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.

ரோஷனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த கங்கா வாசலில் நின்ற ரிஷியின் காரைக் கண்டதும் திகைத்தாள்.

“ஹாய் சித்து…” ரோஷன் ஓடிச் செல்ல அவனுக்காய் வாங்கி வந்த கார்னட்டோ ஐஸ்க்ரீம் பாக்ஸை நீட்டினான்.

“வாவ், சூப்பர் சித்து… நான் சொல்லாமலே எனக்குப் பிடிச்ச ஸ்ட்ராபெர்ரி பிளாவர்ல வாங்கிட்டு வந்திருக்கியே…”

“ம்ம்… ஐஸ்க்ரீம் எல்லாம் இருக்கட்டும், முதல்ல சாப்பாடு சாப்பிடு, அப்புறம்தான் ஐஸ்க்ரீம் சாப்பிடணும்…” கங்கா மகனை அதட்டினாள்.

“ஹூம்…! மம்மி, சாதம் போதும்…!”

“அடி விழும் ரோஷன், ஒழுங்கா சாப்பிடு…” சொன்னவள் சாப்பாட்டை எடுத்து மகன் வாயில் திணிக்க ரோஷன் முகத்தை சுளித்தபடி அதை சாப்பிட, சிரித்தான் ரிஷி.

“ஏன் அண்ணி, எப்பவும் அவனே தான சாப்பிடுவான்…? இன்னிக்கு என்ன, நீங்க ஊட்டி விடறீங்க…?”

“அது ஒண்ணுமில்ல ரிஷி, நாளைக்கு பிள்ளை ஊட்டி கிளம்பிருவானே, இன்னிக்கு நாமளே ஊட்டி விடுவோம்னு ஒரு ஆசைல தான்… நீ உன் பாரதியோட ஹோட்டலுக்குப் போயி சாப்பிடுவேன்னு நினைச்சேன், வீட்டுக்கு வந்துட்ட…! அவ எதாச்சும் சொல்லி விரட்டிட்டாளா…? அண்ணிகிட்ட சொல்லு, மிரட்டி உன்னோட வர சொல்லறேன்…” புன்னகையோடு கேட்டவளைப் புரியாமல் பார்த்தான் ரிஷி.

“இல்ல அண்ணி, தல வலிச்சுது… வெளிய எங்கயும் போகவும் பிடிக்கல, அதான் வீட்டுக்கு வந்துட்டேன்…”

“ம்ம்… சரி வா, உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன்…”

“அண்ணன் இன்னும் வரலியா அண்ணி…”

“அவர்க்கு ஏதோ மீட்டிங் இருக்கு, வெளிய சாப்பிடறேன்னு சொன்னார்… நீ பிரஷ் ஆகிட்டு வா, நாம சாப்பிடுவோம்…” சொன்னவள் மகனுக்கு ஆசையாய் சாதத்தை ஊட்ட அதைப் பார்த்துக் கொண்டே தனது அறைக்கு சென்றான் ரிஷி.

மனதில் பாரதியின் கண்ணீர் முகமும், கோப முகமும் மாறி மாறி வந்து இம்சை செய்தது. அவள் அண்ணியைப் பற்றி கோபத்தோடு சொன்னது காதுக்குள் கேட்டபடி இருந்தது. எத்தனை நேரம் அப்படியே கிடந்தானோ கதவு திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்க்க கங்கா உள்ளே வந்தாள்.

“என்ன ரிஷி, சாப்பிட வருவேன்னு பார்த்தா படுத்திருக்க…”

“எனக்குப் பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க அண்ணி…”

“என்னடா என்னாச்சு, நீதான் வீட்டுல எப்பவும் சரக்கு ஸ்டாக் வச்சிருப்பியே…! தலை வலிச்சா அதுல ஒரு பெக் அடிச்சிட்டு வந்து சாப்பிடு, நல்லாத் தூங்கி எழுந்தா தலைவலி காணாமப் போயிடும்…” அவள் அவனை ஒரு குடிகாரனைப் போல் சொன்னது என்னவோ ரிஷிக்குப் பிடிக்கவில்லை.

“இல்ல அண்ணி, இப்ப வீட்டுல பாட்டில் வைக்கறதில்லை, நீங்க போயி சாப்பிடுங்க, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சாப்பிட்டுக்கறேன்…”

“ம்ம்… சரி, உன் இஷ்டம்…! நான் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பறேன்… எல்லாம் மேஜை மேல எடுத்து வச்சிருக்கேன், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சாப்பிடு…” சொல்லிவிட்டு அவள் செல்ல கண்ணை மூடிக் கிடந்தான்.

மனது ஒருமாதிரி வெறுமையாய் இருந்தது.

ரோஷனை கட்டாயப்படுத்தி அண்ணி ஊட்டி விட்டது கண்ணுக்குள் வந்தது. சாப்பிடாமல் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது என அவனைக் கண்டித்தது நினைவில் நின்றது.

“அண்ணிக்கு என்னிடம் அன்பிருக்கும் அளவுக்கு கண்டிப்பு இல்லையோ…? ரதி சொல்லுவது போல் எனக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுத்து கெடுத்து விட்டாளோ…? சேச்சே, என் அண்ணி அப்படி இல்லை, என் பிடித்தத்துக்கு மதிப்புக் கொடுக்கிறாள்…! எனக்கு மது பிடிக்கும் என்பதால் குடிக்க சொல்லுகிறாள், மற்றபடி என்னை ரோஷனைப் போல் தான் கவனித்துக் கொள்கிறாள்…” சுயம் சமாதானம் செய்தான். ஆனாலும் மனது முழுமையாய் அமைதியாகவில்லை. பசித்தாலும் சாப்பிடப் பிடிக்காமல் படுத்திருந்தவன் ரோஷன் அழைக்கவும் எழுந்து ஹாலுக்கு வந்தான்.

“சித்து, எங்காச்சும் வெளிய கூட்டிட்டுப் போறியா…?”

“இல்லடா கண்ணா, எனக்கு ரொம்ப தல வலிக்குது…”

“ஓ… சரி நீ இன்னும் சாப்பிடல தானே, சாப்பிட்டு ரெஸ்ட் எடு… நான் போயி வீடியோ கேம் விளையாடறேன்…” சொன்னவன் மாடிக்கு சென்றுவிட்டான். உணவு மேஜையில் இருந்த ஹாட் பாக்ஸைத் திறந்து பார்க்க சுவையான சுகமான மணம் பரப்பும் உணவுகள் மூக்கைத் துளைத்தன. மனதுக்குள் மீண்டும் பாரதியின் சுணங்கிய முகம் நினைவில் வரவே சாப்பிடத் தோன்றாமல் அறைக்கு சென்றவன் உடை மாற்றி கட்டிலில் அமர செல்போன் சிணுங்கியது.

எரிச்சலுடன் எடுத்துப் பார்க்க புதிய ஏதோ லான்ட்லைன் நம்பர். கடுப்பில் எடுக்காமல் துண்டிக்க மீண்டும் அடித்தது.

“ப்ச்… கட் பண்ணாலும் யாரு விடாம கூப்பிடறது…?” எனத் திட்டிக் கொண்டே எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ, யாரு…?” குரலில் எரிச்சல் வழிந்தது.

“ரிஷி, நான்தான் பாரதி பேசறேன்…!” அவனது ரதியின் தேன் குரலைக் கேட்டதும் மனம் துள்ள உற்சாகமாய் கேட்டான்.

“ரதீ…! நீ ஏன் உன் நம்பர்ல இருந்து கூப்பிடாம ஏதோ லான்ட்லைன் நம்பர்ல இருந்து கால் பண்ணற…?”

“காரணமா தான் ரிஷி, அதை அப்புறம் சொல்லறேன்… என்னாச்சு…? தல வலிக்குதுன்னு வீட்டுக்குக் கிளம்பிட்டதா கெளதம் சொன்னார்…”

“ம்ம்… ஆபீஸ்ல இருக்க பிடிக்கல, அதான் கிளம்பிட்டேன்…”

“மறுபடி தப்புப் பண்ணறீங்க ரிஷி… நீங்க என் பக்கத்துல இருக்கீங்கன்னு தான் நான் கொஞ்சமாச்சும் தைரியமா இருக்கேன், நீங்களே இப்படிப் பண்ணினா எப்படி…?”

“ரதீ, நீ சொல்லறது எனக்குப் புரியலை… நான் பக்கத்துல இருந்தா உனக்கென்ன தைரியம்…? ஆனா நான் பேச வந்தப்ப நீ என்கிட்ட முகம் கொடுத்து கூடப் பேசலயே, நான் சாரி சொல்லியும் மன்னிக்காம என்னை விரட்டறதுல தான குறியா இருந்த… நீ அண்ணியை மட்டும் தப்பாப் பேசலனா நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் வராது…”

“இத்தனை நாள் சொல்லி உங்களுக்குப் புரியாதது இனி மட்டும் புரியவா போகுது, என் பிரச்சனையே அவங்க தான்…”

“ப்ச்… மறுபடி அவங்களைத் தப்பாப் பேசாதே…!”

“ஓகே வச்சிடறேன், இனி உங்ககிட்ட பேசி பயனில்லை…”

“ஏய்…! இரு வச்சிடாத, எனக்குப் பேசணும்…”

Advertisement