Advertisement

“போலாம் ரிஷி…!”

“ம்ம்… அண்ணி உன்கிட்ட என்ன சொன்னாங்க, பேசினதும் உன் முகமே சரியில்லை…”

“எதுவும் சொல்லலை, வாங்க கிளம்பலாம்…” அவசரப் படுத்தியவள் எழுந்து நடக்க புரியாமல் பின் தொடர்ந்தான் ரிஷி. பாரதியின் பார்வை சுற்றிலும் சுழல ஒரு தூணுக்குப் பின்னில் ருக்மணி மறைந்து கொள்வதைக் கண்டு விட்டாள்.

“இந்த ராட்சஸி தான் அந்தத் தாடகைக்கு இன்பார்ம் பண்ண ஸ்பையா…” நினைத்தபடி வெளியே நடந்தாள் பாரதி.

ரிஷி அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டுக் கிளம்ப வான்மதி இன்னும் வந்திருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தவள் மனம் அன்று முழுதும் நடந்ததை அசை போட பாரதிக்கு ஒருவித அச்சம் நிறைந்தது.

“கடவுளே…! இப்படி ஒரு இக்கட்டுல என்னை மாட்டி விட்டிருக்கியே, நான் எப்படி இதுல இருந்து வெளிய வருவேன்… ரிஷிக்கு எப்படிப் புரிய வைப்பேன், அந்த கண்கொத்திப் பாம்பு கங்காகிட்ட இருந்து எப்படி என் அக்கா வாழ்க்கையை மீட்பேன்…” பல கேள்விகள் வரிசையாய் எழ சிறிது நேரம் கண் மூடி மனதை நிதானப் படுத்தினாள். மனம் சற்று அமைதியடைந்தது.

‘மழையை எதிர்பார்க்கையில் வெயில் காய்வதும், வெயிலை எதிர்பார்க்கையில் மேகம் மூடுவதும், இயற்கை நமக்கு எதிராகப் போடும் வேடமல்ல…! பொறுமையை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்…’ படித்தது நினைவு வந்தது.

“ஆம்…! முள்ளின் மீது விழுந்த சேலையாய் மாட்டிக் கொண்டாகி விட்டது… இந்த விஷயத்தைப் பொறுமையாகத் தான் கையாள வேண்டும்… வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் இந்த குத்திக் கிழிக்கும் கண்ணாடியை கண்ணாடியால் தான் அறுக்க வேண்டும்… எனக்கு அவள் கொடுத்த பிஏ பொறுப்பு என்னை அவளுடன் வைத்துக் கொள்ளும் பதவி என கங்கா நினைக்கலாம்… ஆனால், அப்படியல்ல…! இது அவளை நெருங்க எனக்கு கொடுத்த வாய்ப்பென மாற்றிக் கொள்ள வேண்டும்… எப்படி..?” யோசித்தவள், எழுந்து சென்று ஜன்னலைத் திறக்க சட்டென்று முகத்தில் மோதியது குளிர்ந்த இளம் காற்று. மூக்கை உரசிய மண்ணின் மணம் அருகெங்கோ மழை பெய்கிறது எனக் கூறியது. காற்றில் கண் மூடி நின்றவள் காதில் அந்த வரிகள் கேட்டது.

வானோடு முடிவும் இல்லை…

வாழ்வோடு விடையும் இல்லை…

இன்றென்பது உண்மையே…

நம்பிக்கை உங்கள் கையிலே…

அடுத்த கட்டிடத்தில் சின்னத் திரையில் ஓடிக் கொண்டிருந்த எஸ்பிபி யின் இனிமையான குரல் ஜன்னல் வழியே காதை உரசி சிலிர்க்க வைக்க அந்த வரிகள் அவளுக்கே சொன்னது போல் தோன்றியது.

“நான் பாரதி…! அத்தனை சீக்கிரம் என் நம்பிக்கையை இழந்து விட மாட்டேன்… இனிமுதல் கங்காவின் ஒவ்வொரு நீக்கங்களும் என்னாலும் கண்காணிக்கப்படும், எத்தனை பெரிய சதிகாரியையும் விதி ஒருநாள் சதி செய்யக் கூடும்… அந்த நிமிடத்திற்காய் காத்திருப்பேன்…” மனதில் உறுதியோடு நிமிர கதவைத் திறந்து கொண்டு வான்மதி வந்தாள்.

“பாரு…! மழை வர்ற போலருக்கு, ஜன்னலைத் திறந்து வச்சு குளிர்ல நின்னுட்டு இருக்க… காய்ச்சல் வந்துடப் போகுது…”

“இயற்கை என்னை நிச்சயம் ஏமாத்தாது வானு, நீ வேண்டியதெல்லாம் வாங்கிட்டியா…?”

“சூர்யா செம ஸ்மார்ட்… எனக்கு என்னெல்லாம் வேணுமோ நான் சொல்லாமலே கரக்டா அந்தக் கடைகளுக்குப் கூட்டிப் போயி எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துட்டார்…”

“ஓ… சூப்பர்…!”

“ம்ம்… நாளைல இருந்து ஆபீஸ் போகும்போது என்னை அவரே பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னார்…”

“ஓ..! ரொம்ப சூப்பர்…!” என்றாள் புருவம் தூக்கி வியப்புடன்.

“சரி இந்தா, உனக்குப் பிடிக்குமேன்னு ஆனியன் சமோசா வாங்கிட்டு வந்தேன், சூடா இருக்கு சாப்பிடு…” சொன்னவள் ஒரு கவரை நீட்ட வாங்கிக் கொண்டாள் பாரதி.

“பாரதி, உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன், இந்த கங்கா எப்படி சட்டுன்னு நல்லவளா மாறினா…? நீ ஜாயின் பண்ணி ஒரு மாசம் கூட ஆகல, உனக்கு அவளோட பிஏ வா பிரமோஷன் கொடுத்திருக்கா… ரிஷிக்கு உன்னை மேரேஜ் பண்ண சம்மதிக்கிறா, என்னால இப்பவும் இதையெல்லாம் நம்பவே முடியல…” சொல்லிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவளை அமைதியாய் பார்த்தாள் பாரதி.

“அன்னைக்கே வானு சொன்னா… இந்த கங்கா சரியில்ல, அவளை நம்பாதன்னு, நான்தான் வேலைக்கு ஆசைப்பட்டு அந்தப் பிசாசு கைல போயி மாட்டிகிட்டேன்…” பாரதி யோசித்துக் கொண்டிருக்க வான்மதி தோழியைப் பார்த்தாள்.

“என்னடி, என் முகத்தையே பார்த்துட்டு ஏதோ யோசிச்சிட்டு இருக்க… இன்னைக்கு நீ நார்மலாவே இல்ல, என்ன விஷயம்னு சொல்லவும் மாட்டேங்கற… அந்த கங்கா வெளிய யாருக்கும் தெரியாம ஏதாச்சும் பிரச்சனை பண்ணறாளா…? என்னன்னு சொல்லுடி…”

தோழியைத் திகைப்புடன் பார்த்தவள் யோசித்தாள்.

“வானுவிடம் பிரச்னையை சொல்லி விடலாமா…?”

“இல்லை, இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்…” என தற்காலிகமாய் அதைத் தள்ளி வைத்தாள் பாரதி.

“நேத்து நைட் சரியா தூங்கல, அந்த டயர்ட் தான்… தூங்கி எழுந்தா சரியாகிடும் வானு…”

“ம்ம்… சரி, நீ சமோஸா சாப்பிட்டு தூங்கு… நான் வந்துடறேன்…” சொன்னவள் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள சமோசாவை எடுத்த பாரதி நான்கு முக்கோண குட்டி சமோசாக்களை உள்ளே தள்ளிவிட்டு எழுந்தாள்.

அடுத்தநாள் அழகாய் விடிய கிளம்பினர்.

பாரதியின் முகத்திலும், மனதிலும் இப்போது ஒரு தெளிவு வந்திருந்தது.

கங்காவின் அறைக்கு அருகிலேயே பாரதிக்கு ஏசி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தனி மேஜை, கம்ப்யூட்டர், இன்டர்காம், டிவி என சகல வசதிகளும் இருந்தன. பாரதியே திகைத்துப் போனாள். கங்கா காலையில் நேரமே வந்திருந்தாள். பாரதிக்கான வேலைகளை சொல்லிவிட்டு மறக்காமல் பென் டிரைவை நினைவு படுத்திவிட்டு சென்றாள்.

சிறிது நேரத்தில் ரிஷி அவளைக் காண வர அங்கே இருந்த செட்டப்பைக் கண்டு அசந்தான்.

“வாவ்… என் ரூமை விட உன் ரூம் பெருசா நல்ல வசதியா இருக்கு ரதி…” அவன் சொல்லும் போதே கங்கா வந்தாள்.

“என்னடா ரிஷி, உன் வருங்காலப் பொண்டாட்டிக்கு நான் ரெடி பண்ண ரூம் எப்படி இருக்கு…? உனக்கு ஹாப்பி தானே…?” எனவும் அவன் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டான். பாரதி கங்காவை யோசனையாய் பார்த்தாள்.

“போங்கண்ணி, மார்க்கெட்டிங் செக்ஷன்ல பாரதி என் பக்கத்துல இருக்கிற குஷில உற்சாகமா வேலை செய்துட்டு இருந்தேன்… இப்ப அவளை உங்க பக்கத்துல கொண்டு வந்து தனி ரூம் கொடுத்து வச்சுட்டா நான் என்ன பண்ணுவேன்…?”

“படவா, அவளை சைட் அடிக்க முடிலயேன்னு உனக்கு பீல் ஆகுதுன்னு சொல்லு…” சிரித்தாள் கங்கா.

“அதெப்படி அண்ணி உங்ககிட்ட ஓப்பனா சொல்ல முடியும்…”

“டேய்..! பாரதி இந்தக் கம்பெனி ஜேஎம்டியோட வருங்கால மனைவி… அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுக்கணும்ல… அப்புறம் இந்த அண்ணி என் வருங்காலப் பொண்டாட்டிக்கு மரியாதை கொடுக்கலன்னு நீ பீல் பண்ணிட்டா என்ன பண்ணறது…?” கங்கா சிரித்தபடி கேட்க ரிஷி பெருமையுடன் பாரதியைப் பார்த்தான். ஆனால் பாரதியின் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் தெரியவில்லை.

“ரிஷி…! நாளைக்கு நானும், உன் அண்ணனும் ரோஷனை ஊட்டில விட கிளம்பறோம்… ஈவனிங் வந்திடுவோம்… நீ கெமிக்கல் பாக்டரிக்கும், மெடிக்கல் லாபுக்கும் போயி பார்த்துக்க… பாரதிக்கு இங்கே என்ன பண்ணனும்னு நான் வொர்க் கொடுத்துடறேன்…”

“சரிங்க அண்ணி…”

“உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, ஹர்ஷா இண்டர்நேஷனல் எம்டி புது ஆர்டர் விஷயமாப் பேசணும்னு சொல்லிருக்கார், நீ இங்க நின்னுட்டு இருக்காம கிளம்பு…”

“சரி அண்ணி, கிளம்பறேன்…”

“கிளம்பறதுக்கு முன்னாடி அவங்க பைல்ஸ் எல்லாம் ஒரு முறை பார்த்திடு, என்ன ரேட்ல கன்பர்ம் பண்ணலாம்னு ஒரு ஐடியா கிடைக்கும்…”

“ஓகே அண்ணி…” என்றவன் அங்கிருந்து நகர கங்கா பாரதியை நோக்கி ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்த்தாள்.

“ரிஷி உன் ரூமுக்கு வந்ததும் எப்படி கரக்டா நானும் வந்தேன்னு யோசிக்கறியா…? நீ முழுசா என் கன்ட்ரோல்ல இருக்க கண்ணு, நீ அசைஞ்சா கூட எனக்குத் தெரிஞ்சிடும்… அப்புறம் இன்னொரு விஷயம், நீ அந்த பென்டிரைவை நினைச்சு எப்பவும் பதட்டமாவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை… எனக்கு எதிரா நீ திரும்பாம இருக்கற வரைக்கும் நான் உனக்கும் நல்லவ தான்… வரட்டா…” சொன்னவள் கிளம்ப திகைப்புடன் பார்த்திருந்தாள் பாரதி.

புதிது புதிதான

பாடத் திட்டங்களுடன்

புரியாத கேள்விகளுக்கு

பதில் தேடும் தேர்வாய்

புன்னகைக்கிறது வாழ்க்கை…

Advertisement