Advertisement

அத்தியாயம் – 29

“வான்மதிக்கு இப்பதான் ஜாப் கிடைச்சிருக்கு… சோ, பர்ஸ்ட் சாலரி வாங்கிட்டு ட்ரீட் கொடுக்கட்டும்… பிரமோஷன் கிடைச்ச பாரதி இன்னைக்கு பில் பே பண்ணட்டும்… என்ன பாரதி, சரிதானே…?” சூர்யா கேட்க, “சரி…” என்றாள் பாரதி. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு வியப்பாய் இருந்தது. பிரமோஷன் கிடைத்ததற்கான எந்த சந்தோஷமும் அவளிடம் தெரியவில்லை. மற்றவர்கள் பேசுவதற்கு பதில் சொன்னாலும் அவள் இயல்பாய் இல்லை எனத் தோன்றியது.

“டேய் சும்மாருடா, பில் நான் பே பண்ணிக்குவேன்…” ரிஷி சொல்ல அதற்கும் பாரதி எதுவும் சொல்லவில்லை.

“ம்ம்… அதானே, இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கம்பெனி ஜேஎம்டி க்கு பாரதி மனைவியாகப் போறாங்க, நீங்க தாராளமா பில் பே பண்ணலாம் சார்…” என்றான் சூர்யா. ரிஷி சிரித்தாலும் பாரதியின் முகத்தில் யோசனையே தெரிந்தது.

சாப்பிட்டு வெளியே வர மழை வரப் போவதாய் மிரட்டிக் கொண்டிருந்தது மேகம்.

“எங்களை ஹாஸ்டல்ல டிராப் பண்ணிடறீங்களா, ரிஷி…?”

“ரதீ… எனக்கு உன்னோட கொஞ்சம் பேச வேண்டிருக்கு, வான்மதியை ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டு நாம பக்கத்துல உள்ள கோவிலுக்குப் போகலாமா…?”

ரிஷி கேட்க, “ஏண்டா, நாங்கல்லாம் கோவிலுக்கு வந்தா பூசாரி உள்ள விட மாட்டாரா…? நாங்களும் வரோம்… நீங்க தனியா பேசுங்க, என்ன வான்மதி…?” என்றான் சூர்யா.

“எனக்கு ஓகே…! பட் அவங்க ஏதோ தனியாப் பேசணும்னு நினைக்கறாங்க, நாம எதுக்கு நடுவுல… நீங்க ப்ரீயா இருந்தா என்னோட ஷாப்பிங் வாங்களேன், எனக்கு ஹான்ட் பாக் வாங்கணும்…” வான்மதி சொல்ல சூர்யா உற்சாகமானான்.

வான்மதி சூர்யாவுடன் கிளம்ப பாரதியும், ரிஷியும் கோவிலுக்கு கிளம்பினர்.

கோவில் நடை திறந்து ஆரம்ப பூஜைக்கான ஆயதங்கள் நடந்து கொண்டிருக்க இருவரும் உள்ளே சென்றனர்.

“என்னாச்சு ரிஷி, இன்னைக்கு கோவிலுக்குப் போகலாம்னு சொல்லறீங்க, திடீர்னு சாமி, கோவில் மேல எல்லாம் நம்பிக்கை வந்திருச்சா..? உங்களுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லையே…!” கிண்டலாய் கேட்டாள் பாரதி.

“பழக்கம் இல்லன்னா என்ன…? உன்னோட பழகினதும் நம்பிக்கை வந்திருச்சு…”

“ம்ம்… அதானே, உங்க அண்ணி வளர்ப்புல இந்த நல்ல பழக்கம் எல்லாம் எங்க இருக்கப் போகுது…?” பாரதி சொல்ல ரிஷியின் முகம் இறுகியது.

அவன் எதுவும் பேசாததிலேயே அவனது கோபம் தெரிய பாரதியும் பேசவில்லை. இருவரும் சாமி கும்பிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து ஓரமாய் அமர்ந்தனர். கோவிலில் கூட்டம் கம்மியாகவே இருந்தது.

ரிஷியின் முகத்தைக் கண்டவள், “என் மேல கோபமா…?” எனக் கேட்க கடுப்பாய் அவளைப் பார்த்தான் ரிஷி.

“உன்னோட பேசணும்னு ஆசையா கோவிலுக்கு வந்தா எதுக்கு என் அண்ணியைக் குறைச்சலாப் பேசற…? உனக்கு எவ்வளவு பண்ணிருக்காங்க…? இப்பவும் அவங்களைத் தப்பாப் பேச உனக்கு எப்படி ரதீ மனசு வருது…?” அவன் கேட்கவும் அவளுக்கு முணுக்கென்று கோபம் வந்தது.

“ஆமா, எனக்கு உங்க அண்ணி ரொம்பவே பண்ணிட்டாங்க, உங்களுக்கு வேணும்னா அவங்க பண்ணறதெல்லாம் வெல்லமா இருக்கலாம், ஆனா எனக்கு விஷமா இருக்கே… என்னோட அனுபவங்கள் எப்படியோ அதைத்தானே நான் சொல்ல முடியும்… என்னால உங்க அண்ணியைத் தப்பா தான் பேசமுடியும், தப்பான ஒருத்தியை எப்படி சரியாப் பேச முடியும்…? நான் பேசறது பிடிக்கலன்னா பேசலை, உங்ககிட்ட பேசினா மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்னு நினைச்சு வந்தேன், ஆனா உங்க அண்ணிக்கு நீங்க ஜால்ரா போட்டு, கொடி பிடிச்சிட்டு திரியுற வரைக்கும் அவங்களைப் பத்தி எது சொன்னாலும் இப்படித் தான் பேசுவிங்க…! கிளம்பலாம்…” என்றாள் கோபத்துடன்.

“ப்ச்… இப்ப எதுக்கு கோபப்படற ரதீ…? நியாயமா என் அண்ணியைப் பேசினதுக்கு நான் தான் கோபப்படணும்… அண்ணன் மூலமா நீ ஆபீஸ்ல ஜாயின் பண்ணாலும் உன் திறமை, புத்திசாலித்தனத்தைப் புரிஞ்சுகிட்டு அண்ணி தான் பிரமோஷன் கொடுத்திருக்காங்க… நான் உன்னை லவ் பண்ணறது தெரிஞ்சு அண்ணன் கிட்ட சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதமும் வாங்கினாங்க, அவங்களை எதுக்கு நீ வெறுக்கறேன்னு எனக்குத் தெரியலை… இவ்ளோ செய்ததுக்கு அவங்களுக்கு நன்றி சொல்லாம, நல்லது செய்தவங்களை வெறுக்கறது என்ன லாஜிக்னு எனக்குப் புரியவே இல்லை…”

“உங்களுக்குப் புரியாது ரிஷி, அதானே உங்க அண்ணியோட சாமர்த்தியம்…! கண் மூடித்தனமா அவங்களை நம்ப வச்சு சாமிக்கு பலி கொடுக்க வளர்த்துற ஆட்டைப் போல உங்களுக்குப் பாசத்தைக் காட்டி வளர்த்து வச்சிருக்காங்க…”

“ஏன் இப்படில்லாம் பேசற…? என்மேல அவங்க பாசத்தைக் காட்டி சொந்தப் பிள்ளை போல வளர்த்ததுல என்ன தப்பு…? அதுக்கு சந்தோஷம் தானே படணும்…”

“ஹூம்… அதான் சொன்னனே, நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது… உங்களை கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிக்காம, நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுக்காம, உங்க இஷ்டத்துக்கு ஒவ்வொண்ணையும் பழக வச்சு, அவங்களோட பாசச்சிறைல உங்களை கைதியா வச்சிருக்காங்க, நீங்க முழிச்சுக்கலேன்னா அந்த பாசமே உங்களை அழிச்சிரும்… தன்னோட சுயலாபத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத ராட்சசி, உங்க அண்ணி…!”

அவள் பேசியதில் கோபம் தலைக்கேற ஓங்கி அறைந்து விட்டான் ரிஷி. நல்லவேளை, அவர்கள் ஒரு ஓரமாக அமர்ந்திருந்ததால் யாரும் கவனிக்கவில்லை.

“போனாப் போகட்டும், கோபப்படக் கூடாதுன்னு நீ பேசறதை சகிச்சுகிட்டு இருந்தா, என் அண்ணியைப் பத்தி என்ன வேணும்னா பேசுவியா…? இதுக்கு மேல அவங்களைப் பத்தி ஏதாச்சும் பேசினா உன்னைக் கொன்னு போடவும் தயங்க மாட்டேன்…” ஆத்திரத்தில் வெடித்தான் ரிஷி. ஆனால் பாரதி கோபப்படவில்லை, அவனிடம் இதை எதிர்பார்த்திருந்ததால் கண்களில் நீர் நிறைய அமைதியாய் அவனை ஏறிட்டாள்.

“கொல்லுங்க ரிஷி, இங்கயே என்னைக் கொன்னு போடுங்க, இந்த நரக வாழ்க்கைல இருந்து எனக்கு விடுதலை கிடைக்கட்டும்… என் மேல உள்ள வெறுப்பால என் குடும்ப மானத்தை ஏலம் போடத் துடிக்கிறா, உங்க அண்ணி… எத்தனை காலம் நான் அவளுக்கு அடிமையா இருக்க முடியும்…? உங்களைப் போல ஒரு நல்லவர் கையால இந்த புனிதமான கோவில்ல வச்சு என் கதை முடியட்டும், கொல்லுங்க ரிஷி…! என்னைக் கொன்னு போட்டிருங்க…!”

அவள் வெடிக்க ரிஷி மிரண்டான்.

“ர..ரதீ…! என்ன பேசற நீ…? அண்ணி உன் குடும்ப மானத்தை ஏலம் போடத் துடிக்கிறாங்களா…? எதுக்கு இப்படில்லாம் அவங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டு அபாண்டமா பேசற…? உனக்கு என்னதான் பிரச்சனை…?”

“யாரு…? நான் அபாண்டமா பேசறனா…? உங்க அண்ணி என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியுமா…?” பாரதி கோபமாய் கேட்க ரிஷியின் கையிலிருந்த போன் அலறியது.

கங்காவின் எண்ணைக் கண்டவன், “அண்ணிதான் கூப்பிடறாங்க…?” எனவும் சட்டென்று சுதாரித்தாள் பாரதி.

“கடவுளே…! நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்… அந்தப் பாதகியின் கையில் என் அக்காவின் மானம் ஊசலாடிக் கொண்டிருக்க இவரிடம் இதைப் பற்றி பேசுவது எத்தனை முட்டாள்தனம்…? என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கப்படும்னு சொல்லி இருந்தாளே, ஒருவேளை நாங்கள் ஒன்றாய் இருப்பது தெரிந்து தான் அழைக்கிறாளா…?” பதட்டமாய் ரிஷியை நோக்கினாள் பாரதி.

“நான் பாரதியோட கோவில்ல தான் இருக்கேன் அண்ணி, இதோ வீட்டுக்கு கிளம்பிட்டேன்… ரோஷனை ரெடியா இருக்க சொல்லுங்க, நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்…”

“ஓ…! கோவில்லயா…? பரவால்லியே, இந்த நேரத்துல பார்ல உக்கார்ந்து சரக்கடிக்கிற உன்னை பாரதி கோவிலுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கா, போனை அவகிட்ட கொடு…”

“இதோ கொடுக்கிறேன் அண்ணி…” என்றவன் அலைபேசியை நீட்ட பாரதி அதிர்ச்சியுடன் வாங்காமல் பார்த்தாள்.

“இந்தா ரதீ, அண்ணி உன்கிட்ட பேசணும்னு சொல்லுறாங்க… பேசு மா…” என்றவன் அவளது கையில் திணிக்க, நடுங்கும் கையால் வாங்கியவளை திகைப்புடன் நோக்கினான் ரிஷி.  போனை காதுக்குக் கொடுத்தாள் பாரதி.

“ஹ..ஹலோ, சொ..சொல்லுங்க மேடம்…!”

“என்னடி…! குரல் நடுங்குது…? நான் சொன்னதெல்லாம் மறந்துட்டியா…? என்னைக் கேட்காம ஒரு ஸ்டெப் கூட நீ எடுத்து வைக்கக் கூடாதுன்னு சொன்னனா, இல்லியா…?” மெல்லிய குரலில் அதட்டினாள் கங்கா.

“ஆ..ஆமாம் மேடம்…”

“நமக்குள்ள பேசினதை நீ மறந்துட்டா, அப்புறம் நடக்குற பின்விளைவுக்கு நான் பொறுப்பில்லை…”

“இல்ல மேடம், நான் மறக்கலை…”

“ம்ம்… மறக்காம இருந்தா உனக்கு நல்லது, இப்ப ரெண்டு பேரும் கிளம்புங்க… போனை அவன்கிட்ட கொடு…”

“ம்ம்… சரி மேடம்…” என்றவளின் முகம் பேயறைந்த போல இருக்க ரிஷி புரியாமல் போனை வாங்கினான்.

“ம்ம் சொல்லுங்கண்ணி, உங்க வருங்காலத் தங்கச்சி கிட்ட என்ன பேசுனிங்க…? அவ முகமே ஒரு மாதிரி ஆயிருச்சு…”

“அது ஒண்ணுமில்ல ரிஷி…! நாளைக்கு என் பிஏ வா பொறுப்பெடுக்கப் போற, அடுத்து இந்த வீட்டுக்கு மருமகளா பிரமோஷன் கொடுக்கப் போறேன்னு சொன்னேன்…”

“ஓ…” என்றவன், “அதுக்கு எதுக்கு இவ மூஞ்சி இப்படி இருக்கு…?” என யோசித்துக் கொண்டே, “சரிண்ணி, நாங்க கிளம்பறோம், வச்சிடறேன்…” என அழைப்பை வைத்தான். அதற்குள் பாரதி கிளம்பத் தயாராகி நின்றாள்.

Advertisement