Advertisement

“என்னாச்சு இந்த பாரதிக்கு…?” யோசித்தவன் இன்டர்காம் சிணுங்க அதை எடுக்க கங்கா விவரம் கூறினாள்.

“பிரமோஷன் கிடைச்சா சந்தோஷப்படத்தானே வேணும், இந்த பாரதி எதுக்கு ஒரு மாதிரி மூடவுட்டா போறாங்க…” யோசித்தவன் தனது வேலையில் மூழ்கினான்.

மதிய உணவுக்கு கங்கா வீட்டுக்கு செல்ல ரோஷனுடன் வெளியே சுற்றிக் கொண்டிருந்த ரிஷி அவனை வீட்டில் விட்டு பாரதியைக் காணும் ஆவலில் அலுவலகம் கிளம்பினான். அங்கே அவளைக் காணாமல் திகைத்தவன் கெளதமிடம் விசாரிக்க அவன் பாரதிக்கு கிடைத்த பிரமோஷன் பற்றிக் கூறி இன்று ரெஸ்ட் எடுக்க சென்றதாய் சொல்ல திகைப்புடன் தனது இருக்கைக்கு வந்தான்.

பாரதியைக் காணாமல் என்னவோ போல் இருக்க அவளுக்கு போன் செய்ய நினைத்தவன் இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை.

“ப்ச்… இந்த பாரதிக்கு வொர்க் ரெஸ்பான்சிபிலிடி இருக்கிற அளவுக்கு லவ்வுல ரெஸ்பான்சிபிலிடி இல்ல, அவளைப் பார்த்து முழுசா ரெண்டரை நாள் ஆச்சு… இங்க நான் தவிப்பனேன்னு கொஞ்சமாச்சும் தோணுதா, ஒரு போன் கூட பண்ணாம கிளம்பியாச்சு…” செல்லமாய் கடிந்தான். சிறிது நேரம் இருந்தவன் அவளது ஹாஸ்டலுக்கே கிளம்ப அதற்குள் சூர்யா அழைத்து வழக்கமாய் சந்திக்கும் ரெஸ்டாரண்டுக்கு வருமாறு அழைத்தான். மீண்டும் பாரதியை அழைத்த ரிஷி அவள் போன் எடுக்காததால் கடுப்புடன் கிளம்பினான்.

ஆபீசிலிருந்து கிளம்பிய பாரதி ஹாஸ்டலுக்கு செல்லாமல் அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்திருந்தாள். மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

கண்கள் கலங்க யோசனையுடன் அமர்ந்திருந்தவள் மனதில் கங்கா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ரிப்பீட் ஆக அவள் மேல் கோபமும், ஆத்திரமும் பொங்கியது.

“என்ன ஒரு கீழ்த்தரமான பிளாக்மெயில்…! ஒரு குடும்பப் பெண்ணின் மனதில் இத்தனை வஞ்சமும், அசிங்கமான சிந்தனைகளும் சாத்தியமா…? ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை அசிங்கப்படுத்துவது எத்தனை கேவலம்… பெண் எனும் பிறவிக்கே இது அசிங்கம் அல்லவா…?” வெகு நேரம் யோசிக்க கலங்கிக் கிடந்த மனது நிதானத்துக்கு வந்தது.

“எத்தனை வருடமாய் இப்படி நல்ல பிள்ளை வேடம் அணிந்து உடன் இருப்பவர்களையே ஏமாற்றுவாள்… இதற்கு துணிந்தவள் இவளுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டாளே…! விடக் கூடாது, அவள் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்… ரிஷி, ஹரி சாரைக் காப்பாற்ற வேண்டும்…” யோசித்தாள்.  அவளுக்குப் பிடித்த பாரதியின் வரிகள் மனதுக்குள் ஓடியது.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா…!

மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…!

“ஆம்!… அவளைக் கண்டு பயந்திருந்தால் வேலையாகாது… அவள் வழியிலேயே சென்று மோதிப் பார்த்து விட வேண்டும், அவளிடமிருக்கும் வீடியோவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும்… ரிஷியால் தான் இதில் எனக்கு உதவ முடியும், ஆனால் அவன் அண்ணியைப் பற்றி என்ன சொன்னாலும் நம்ப மாட்டானே… நம்புவான்…! ஆதாரத்தோடு சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும், நம்ப வைக்கிறேன்…” உறுதி கொண்டாள்.

மதியம் சாப்பிடாத வயிறு பசித்தது. சைலண்டில் போட்டிருந்த அலைபேசியை எடுக்க ரிஷி, வான்மதியின் மிஸ்டு காலுடன் சக்தியின் மிஸ்டு காலும் இருந்தது.

“பாவம் அக்கா, இன்னும் அந்த சம்பவத்தையே நினைத்து குழம்பிக் கொண்டிருப்பாள்… கொஞ்ச நாளில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு சந்தோஷப்படாமல் வருந்திக் கொண்டிருக்கிறாள்…” யோசித்தவள் சக்திக்கு அழைத்தாள். அவள் புலம்பலுக்கு சமாதானம் சொல்லி தேற்றிக் கொண்டிருக்க வான்மதி இரண்டாவது அழைப்பில் வந்தாள்.

அக்காவிடம் சொல்லி அழைப்பைத் துண்டித்தவள் தோழியின் அழைப்பை எடுத்தாள். அவள் அன்றே சூர்யாவின் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலையில் சேர்ந்து விட்டதாக சொன்னவள் இப்போது ஹாஸ்டலுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொல்ல அவளை அந்த பார்க்குக்கு வரும்படி கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

“ரிஷி…! அவனை இப்போது அழைக்கலாமா, வேண்டாமா…? பாவம், நாமளும் அவனை ஏமாற்றக் கூடாது…” நினைத்தவள் ரிஷிக்கு அழைத்தாள்.

“ரதீ…! நான் உன் மேல ரொம்ப கோபமா இருக்கேன், எவ்ளோ டைம் கால் பண்ணறது… நீ எங்க இருக்கே…? போனை எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க…?” வார்த்தை கோபமாய் இருப்பதாக சொன்னாலும் குரல் கொஞ்சியது.

“நான் ஹாஸ்டலுக்குப் பக்கத்துல உள்ள பார்க்ல இருக்கேன், வான்மதி வர்றேன்னு சொன்னா, வெயிட் பண்ணறேன்…”

“ஓ… அந்த வான்கோழிக்கு போன் பண்ணிப் பேச முடியுது… எனக்கு ஒரு போன் பண்ண மேடத்துக்கு டைம் கிடைக்கலியா…?” கேட்டுக் கொண்டே ரெஸ்டாரன்ட் செல்ல கிளம்பியவன் காரைத் திருப்பி பார்க்குக்கு விட்டான்.

“சரி, கோச்சுக்காதிங்க ரிஷி… உங்ககிட்ட எனக்கு நிறையப் பேச வேண்டி இருக்கு… அதான், பொறுமையா அப்புறம் பேசலாம்னு நினைச்சேன்…”

“ம்ம்… சரி, சரி… நான் பார்க்குக்கு வந்துட்டேன், நேர்லயே பேசிக்கலாம்…” சொன்னவன் காரைப் பார்க் செய்து கொண்டிருக்க திகைப்புடன் பார்த்திருந்தாள். அது ஒரு சின்ன பார்க் என்பதால் அங்கங்கே ஒரு சிலரைத் தவிர கூட்டம் இல்லாமல் இருந்தது. காலை, மாலை நேர நடை பயணத்திற்கு அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அந்தப் பார்க்கை அதிகம் உபயோகிப்பார்கள். இன்னும் வெயில் குறையாததால் அவர்களும் வந்திருக்கவில்லை.

காரை நிறுத்திவிட்டு வந்தவனின் பார்வை பாரதியைத் தேட எழுந்து கையசைத்தாள். அவளைக் கண்டவன் புன்னகையுடன் காலை சாய்த்து நடந்து வர சட்டென்று கீழே இருந்த கல் ஒன்று இடற தடுமாறினான் ரிஷி. அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பாரதி பதறி ஓடிப் போய் தாங்கிக் கொள்ள புன்னகைத்தான் ரிஷி.

“ஹாஹா, சும்மா விளாட்டுக்கு…” எனவும் முறைத்தவள் அவனைப் பற்றியிருந்த கையை எடுக்கப் போக அதற்குள் அவனது கைகள் அவள் கைகளுக்கு விலங்கிட்டிருந்தன.

“அப்ப… என் மேலயும் மேடத்துக்கு அன்பிருக்கு…” என்றதும் முறைத்தவள், “இப்படி தான் விளையாடுவாங்களா…? நீங்க விழப் போறிங்கன்னு பயந்துட்டேன்…” என்றவளை நோக்கி கண் சிமிட்டியவன், “மத்த நேரத்துல எப்படியோ, ஆனா நீ என்கூட இருக்கும்போது நிச்சயம் தவறி விழ மாட்டேன் ரதீ…” எனவும் மனம் சற்று லேசாக புன்னகைத்தாள்.

இருவரும் ஓரமாய் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தனர்.

“அப்புறம் மேடம்க்கு பிரமோஷன் எல்லாம் கிடைச்சிருக்கு, எனக்கு ட்ரீட் எதுவும் இல்லியா…?”

“ம்ம்… கொடுத்துட்டாப் போச்சு…”

“என்னமா, அண்ணிக்கு அசிஸ்டன்ட்னா நல்ல போஸ்டிங், சாலரி, எல்லாம் இருக்குமே… இவ்ளோ அசால்ட்டா சொல்லற, உன் முகத்துல சந்தோஷமே இல்லை…”

“ம்ம்… கொஞ்சம் டயர்டா இருக்கு ரிஷி, மதியம் சாப்பிடலை… பசிக்குது…”

“ஏன்..? ஏன் சாப்பிடலை… பிரமோஷன் கிடைச்ச குஷில மனசோட வயிறும் நிறைஞ்சிடுச்சா…?” சந்தோஷமாய் கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள்.

“சரி வா… சூர்யா என்னை ரெஸ்டாரன்ட் வர சொல்லி இருந்தான், நீயும் வா சாப்பிட்டு வரலாம்…”

“வானு வரேன்னு சொல்லிருக்கா, இப்ப வந்திருவா…”

“அதுக்காக பசியோட இருப்பியா…?” என்றவனின் முகத்தைப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்து கொள்ள நெகிழ்ந்தான் ரிஷி.

“என்னமா, ஏதோ மனசுக்குள்ள வச்சு அலட்டிட்டு இருக்க போலத் தெரியுது, அக்கா கல்யாணத்தைப் பத்தி யோசிச்சியா… நான்தான் எவ்ளோ பணம் வேணும்னாலும் அண்ணி கிட்ட வாங்கித்தரேன்னு சொன்னனே, நீதான் ஒத்துக்க மாட்டேங்கற… எப்பதான் என்னையும் உன் குடும்பத்துல ஒருத்தனா ஏத்துக்கப் போறியோ…?” அவன் பாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்க அவள் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

ரிஷியிடம் சொல்லி அந்த அழகான சூழலைக் கெடுக்க விரும்பாமல் அமைதியாய் இருந்தாள்.

மனதில் உள்ள பிரச்சனைகளை சிறிது நேரம் மாற்றிவிட்டு அவன் தோளில் சுகமாய் கண் மூடிக் கிடந்தாள்.

‘இவன் என்னவன், எனக்காய் இவன் இருக்கிறான்…’ எனும் எண்ணமே ஒருவித இதத்தைக் கொடுப்பதை உணர்ந்தாள். அவனும் அவள் விரலில் சொடுக்கு எடுத்துக் கொண்டு அமர்ந்திருக்க பின்னில் வான்மதியின் குரல் கேட்டது.

“அது சரி, நீங்க ரெண்டு பேரும் இங்க உக்கார்ந்து ரொமான்ஸ் பண்ணறதைப் பார்க்கத்தான் என்னை பார்க்குக்கு வரச் சொன்னியா…?” தோழியின் குரலில் சட்டென்று ரிஷியின் தோளில் இருந்து விலகினாள் பாரதி.

“வா வானு, ரெஸ்டாரன்ட் போக உனக்கு வெயிட்டிங்…” விஷயத்தை சொல்ல ரிஷியின் காரில் கிளம்பினர். சூர்யா முன்னமே ரெஸ்டாரன்ட் வந்துவிட்டு ரிஷியை அழைக்க தன்னுடன் பாரதி, வான்மதியும் வருவதை சொன்னான் ரிஷி.

ரெஸ்டாரண்டை அடைந்து நால்வரும் சாப்பிட அமர பாரதியின் முகத்தை கவனித்த வான்மதி அவள் காதில் கிசுகிசுத்தாள்.

“பாரு, உனக்கு என்னாச்சு… இயல்பா இல்லாம எதையோ யோசிச்சிட்டு இருக்கிற போலவே இருக்கு…?”

“ப்ச்… ஒண்ணுமில்லடி…” பாரதி சொல்ல ரிஷி கேட்டான்.

“வான்மதி, உங்க பிரண்டுக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு, சொன்னாங்களா, ஸ்பெஷலா ட்ரீட் கேளுங்க…” என்றான்.

“வாவ் சூப்பர் பாரதி, வாழ்த்துகள்…” சூர்யா சொல்ல வான்மதி யோசனையாய் கேட்டாள்.

“பாரு வேலைக்கு சேர்ந்து இன்னும் ஒரு மாச சாலரி கூட வாங்கலையே, அதுக்குள்ளே பிரமொஷனா…?”

“ம்ம்… எல்லாம் என் அண்ணி புண்ணியம்… அவங்களுக்கு பாரதியை ரொம்பப் பிடிச்சிருச்சு போல, அதான் அவங்களுக்கு அசிஸ்டன்டா அப்பாயின்ட் பண்ணிருக்காங்க…” பெருமையாய் சொல்ல பாரதி அமைதியாய் இருந்தாள்.

“யாரு உங்கண்ணியா…? அப்படி நடக்க வாய்ப்பில்லையே…”

“என்னங்க, நீங்களும் என் அண்ணியைத் தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க… அவங்க ரொம்ப நல்லவங்க, ஒருத்தரைப் புடிச்சுட்டா அவங்களுக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்வாங்க…”

“என்ன செய்தாலும் விருந்தைப் படைச்சு அதுக்கு நடுவுல அசிங்கத்தை வைக்கிற குணம் தானே உன் அண்ணி குணம்…” மனதில் நினைத்தாலும் பாரதி சொல்லவில்லை.

“அப்படியா பாரு…” வான்மதி அப்போதும் நம்ப முடியாமல் தோழியிடம் கேட்க அமைதியாய் தலையாட்டினாள் பாரதி.

“ம்ம்… என்னவோ, என்னால நம்ப முடியலை…”

“ம்ம்… என்னால கூடத்தான் நடக்கறதை நம்ப முடியலை, அதை விடு…! இன்னைக்கு புதுசா வேலைல ஜாயின் பண்ணிருக்க, உன் ஆபீஸ் அனுபவத்தை சொல்லு…” பேச்சை மாற்றினாள் பாரதி.

வான்மதி சந்தோஷமாய் சூர்யாவைப் பாராட்டியபடி சொல்லத் தொடங்க சூர்யாவின் கண்கள் அவளை ஸ்பெஷலாய் வருடுவதை ரிஷி உணர்ந்தான்.

பாவங்களுக்கு அஞ்சுவதில்லை

பணம் படைத்தவர் மனம்…

பொய்யும் தலை நிமிரும்

பாவத்தின் புரையோடிய

நீதியற்ற நெஞ்சில்…

Advertisement