Advertisement

அத்தியாயம் – 28

“உன் அக்காவை ஏன் அசிங்கப் படுத்தினேன்னு கேட்டியே, காரணம் நீதான்…! எனக்குன்னு ஒரு சாம்ராஜ்யம் அமைச்சு என் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் நடத்திட்டு இருந்தேன்… ஹரிகிட்ட நல்ல பேர் வாங்கி என் கம்பெனிக்குள்ள காலடி வச்ச…! என் கைக்குள்ள இருந்த ரிஷி மனசுல இடம் பிடிச்சு அவனைப் பொறுப்பானவனா மாத்தி குடியை யோசிக்க நேரம் இல்லாமப் பண்ணின… இப்படி ஒரு சாம்ராஜ்யத்தை ஆள நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்… எங்கிருந்தோ வந்த நீ எல்லாத்தையும் அசைச்சுப் பார்க்க விடுவேனா…?”

பாரதிக்கு மெல்ல விஷயம் புரியத் தொடங்க பேச்சின்றி அமைதியாய் நின்றாள்.

“எப்ப நீ என் வாழ்க்கைல வந்தியோ, அன்னைல இருந்து எல்லாமே மாறத் தொடங்குச்சு…” என்றாள் கங்கா.

“வேண்டாம் கங்கா, நீ ரொம்ப தப்புப் பண்ணற… ஒழுங்கு மரியாதையா இந்த வீடியோ இருக்கிற பென்டிரைவை கொடுத்திரு… நான் உன் கம்பெனியை விட்டு, வேணும்னா இந்த ஊரைவிட்டே போயிடறேன்…” எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்ட பாரதியின் வார்த்தையில் மரியாதை காணாமல் போயிருக்க இளக்காரமாய் சிரித்தாள் கங்கா.

“ஆர்டர் போடற இடத்துல இப்ப நீ இல்லை, நான் சொல்லறதைத்தான் செய்யணும்… அமைதியா உக்கார்…” அதட்டலாய் சொல்லவும் விக்கித்துப் போனாள் பாரதி.

“ப்ளீஸ் கங்கா… தேவையில்லாம என் அக்கா வாழ்க்கைல விளையாடாத, அவளுக்கு கல்யாணம் நடக்கப் போகுது… நா..நான் என்ன பண்ணனும் சொல்லு, செய்யறேன்… இந்த வீடியோவை மட்டும் என்கிட்ட கொடுத்திரு, ப்ளீஸ்…”

“சொல்லறேன், முதல்ல உக்கார்…” என்றதும் பாரதி அமர்ந்தாள். அவளிடம் வந்த கங்கா ஏற இறங்கப் பார்த்தாள்.

“பெண்களே பொறாமைப் படற அளவுக்கு நீ பேரழகி… உன் அழகுல என் முட்டாள் கொழுந்தன் மயங்கினது தப்பில்ல… ஆனா, என் அடிமையா இருந்த அவனை நீ மாத்த நினைச்சது தான் தப்பு… ஆக்சுவலா நான் உன்னைத்தான் நேத்து வீடியோ எடுக்கப் பிளான் பண்ணிருந்தேன், அப்புறம் தான் தோணுச்சு… நீ ரொம்ப பாசக்காரப் பொண்ணாச்சே, உனக்கு ஒரு ஆபத்து வர்றதை விட உன் அக்காவுக்கு ஆபத்து வந்தா துடிச்சுப் போயிருவன்னு… அதான் லாஸ்ட் மினிட்ல உன்னை விட்டு உன் அக்காவைத் தூக்கினோம்…”

கங்கா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அவள் உடல் நடுங்க, திகைத்துப் போய் பார்த்தாள் பாரதி.

“இதப்பார்… உன்னைப் போல மிடில் கிளாஸ் பொண்ணுக்கு பணத்தை விட மானம் தான் முக்கியம்னு எனக்குத் தெரியும்… இப்ப உன் அக்காவோட மானம் என் கைல, நான் நினைச்சா இந்த வீடியோ நெட்ல கொடி கட்டிப் பறக்கும்… அவமானம் தாங்காம நீ உன் அக்கா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் நாண்டுகிட்டு சாகணும்… என்ன செய்துடவா…?”

“ச்சீ… ரிஷி என்னை லவ் பண்ணறது உனக்குப் பிடிக்கலன்னா அவன்கிட்ட என்னை வேண்டாம்னு சொல்லிருக்கணும்… இல்ல, இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லன்னு உன் புருஷன்கிட்டயாச்சும் சொல்லிருக்கணும், அதை எல்லாம் விட்டுட்டு உன் புருஷன் கிட்டயும், கொழுந்தன் கிட்டயும் நல்லவ மாதிரி தலையை ஆட்டிட்டு இப்ப இப்படி ஒரு கேவலமான விஷயத்தைப் பண்ணி வச்சிருக்க… ஹரி சார் ரொம்ப நல்லவர், ரிஷி உன்னை அம்மாவாப் பார்க்கறான்… எந்த அம்மாவாச்சும் இப்படி ஒரு கேடு கெட்ட செயலை செய்வாளா…? உன்ன மாதிரி மானங்கெட்ட இந்த செயலை செய்யறவங்களுக்கு இங்க வேற பேரு இருக்கு…! நீ அம்மா இல்லை, மாமி…!” ஆத்திரத்தில் வார்த்தையை விட்டாள் பாரதி. அவள் வார்த்தையில் கொதித்துப் போனாள் கங்கா.

“என்னடி சொன்ன…?” என்றவள் ஓங்கி அறைந்து விட்டாள்.

பாரதி கோபத்தில் பெருமூச்சு வாங்க கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ, உன் திமிரை அடக்கறேன்டி… இப்பவே இந்த வீடியோவை நெட்ல அப்லோட் பண்ணறேன்…” என்றவள் கம்ப்யூட்டருக்கு செல்ல பதறிப் போனாள் பாரதி.

“ஐயோ, அவளிடம் இப்படி கேவலமாய் சிக்கி இருக்கையில் பொறுமையாய் பேசாமல் ஆத்திரத்தில் அறிவிழந்து பேசி விட்டோமே…” எனத் தன்னைத் தானே நொந்து கொண்டவள் எழுந்து கங்காவிடம் வந்தாள். சட்டென்று அவள் காலில் விழுந்து விட்டாள்.

“ஸாரி… நான் பேசினது தப்புதான், என்னை மன்னிச்சிரு… என் அக்கா வாழ்க்கையைக் கெடுத்துடாத…” கெஞ்சினாள். கங்காவின் இதழில் குரூரச் சிரிப்பு.

“அப்படி வா வழிக்கு… எழுந்திரு…!” என்றதும் கண்ணீருடன் எழுந்து கொண்டாள் பாரதி.

“நான் என்ன செய்யணும்னு சொல்லு…?”

“ம்ம்..! புத்திசாலி… உன்கிட்ட பிடிச்சதே உன் புத்திசாலித்தனம் தான், சட்டுன்னு வியாபாரம் பேச ரெடியாகிட்டியே…”

“நான் வியாபாரம் பேசல, எங்க வாழ்க்கைக்குப் பேசறேன்…”

“ம்ம்… எதுவோ இருக்கட்டும், நீ இப்ப என் கூண்டுல சிக்கின பட்சி, உன்னை அவ்ளோ சீக்கிரம் ப்ரீயாப் பறக்க விட மாட்டேன்… என்னை மீறி நீ சுண்டு விரலை அசைச்சாக் கூட இந்த வீடியோவை உலகம் எல்லாம் பார்த்து ரசிக்கும்…” கங்கா சொல்ல அருவருப்பாய் முகத்தை சுளித்தாள் பாரதி.

“நான் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு, எங்களுக்குன்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் முன்னமே இருக்கு… நான் ரிஷியைக் கல்யாணம் பண்ணறது தான் உனக்கு பிராப்ளம்னா நான் இப்பவே போயிடறேன், எனக்கு என் காதலை விட குடும்ப மானம் தான் பெருசு…! எங்களை எதுக்கு நீ இப்படி அசிங்கப்படுத்த நினைக்கற…?”

“ச்சு…ச்சு… பாரதி! இந்த கங்காவோட கேரக்டர் என்னன்னு தெரியாம என்னோட மோதிட்ட… என்னை யாராவது அசிங்கப் படுத்தினா, அவமானப் படுத்தினா, எனக்கு சொந்தமானதை நஷ்டப்படுத்தினா என்ன பண்ணுவேன் தெரியுமா…? சாவுக்கும் மேல உள்ள வலியை அவங்களுக்குக் காட்டாம ஓய மாட்டேன்… இந்த ரிஷியும். ஹரியும் என் அடிமையா கால்ல கிடக்கறாங்களே, அதுக்கு நான் எத்தனையோ இழந்து தான் இந்த இடத்தைப் பிடிச்சிருக்கேன்… உறவுகளையே நான் மன்னிக்க மாட்டேன், உன்னை எப்படிடி விடுவேன்…” கர்ஜித்தாள் கங்கா.

பாரதி மிரண்டு போய் அவளை நோக்க கங்கா தொடர்ந்தாள்.

“சரி, வியாபாரத்துக்கு வருவோம், நீ என்ன பண்ணனும்னு கேட்டியே இப்ப சொல்லறேன் கேட்டுக்க…! நீ காலம் முழுக்க என் சொல் பேச்சைக் கேட்டு அடிமையா இருக்கணும்…”

“அதெப்படி…? நான் என்ன செய்ய முடியும்…?”

“முடியும்… நீ என்ன சொன்ன..? உனக்கு ரிஷியோட லவ்வை விட மானம் தான் முக்கியம்னு சொன்னேல்ல, அது உண்மை தான், அதுக்காக நீ என் கம்பெனி வேலையை விட்டோ, அவனை விட்டுட்டோ போயிடக் கூடாது…”

“எ…எனக்குப் புரியலை…”

“சொல்லறேன்… ரிஷிக்கு உன்னைக் கல்யாணம் பண்ண நான்  சம்மதிக்கலேன்னா அவனோட பாசக்கார அண்ணன் வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் முடிவு பண்ணுவார்… அப்புறம் அந்தப் பொண்ணைத் தூக்கி வீடியோ எடுத்து மிரட்டணும், கைல லட்டு மாதிரி ஆல்ரெடி ஒரு வீடியோ இருக்கும்போது எதுக்கு வேற யோசிக்கணும், அதுக்கு ஒண்ணு பண்ணலாம்…” என்றவள் நிறுத்த அவள் பேச்சை அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் பாரதி.

“நீயே அவனைக் கல்யாணம் பண்ணிக்க, ஆனா நான் சொல்லுறதுக்கு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை அதிகமாப் பேசக் கூடாது… நான் சொல்லாம ஒரு குண்டூசியைக் கூட மாத்தி வைக்கக் கூடாது… எதையாச்சும் மாத்த நினைச்சா அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை…” என்றாள் கேலி சிரிப்புடன்.

பாரதி திகைப்புடன் நோக்க, “இங்க பார்…! இதை நீ ரிஷி, ஹரி கிட்ட சொல்லி தப்பிக்க வழி தேடினா அடுத்த நாளே ஊர் முழுக்க உன் அக்கா போட்டோவை போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன், விஷயம் விபரீதமாகும்… உன் குடும்ப மானம் சந்தி சிரிக்கும், அக்கா கல்யாணமும் நடக்காது… அதனால இனி நீ பேச எதுவும் இல்லை, என் வார்த்தைக்கு தலையாட்டறது மட்டும் தான் உன் வேலை…”

பாரதி பதில் சொல்லாமல் அவளையே வெறுப்புடன் நோக்க,

“என்ன பாரதி…! ஒரு விதத்துல உனக்கு நான் நல்லது தானே பண்ணிருக்கேன்… நீ ஆசைப்பட்டவனைக் கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு தான சொல்லறேன்…” என்றவளை நோக்கிய பாரதியின் மனது யோசித்தது.

“வேறு வழியில்லை, இப்போதைக்கு இவள் சொல்லுவதைக் கேட்டு தான் ஆக வேண்டும்…” என நினைத்தது.

“இங்க பார் பாரதி… நீ எனக்கு எதிரா எதுவும் பண்ணாம இருக்கிற வரைக்கும் நிம்மதியா இருக்கலாம், உன்னை என் பர்சனல் அசிஸ்டண்டா நியமிக்கலாம்னு இருக்கேன்…” என்றதும் திகைப்புடன் நோக்கினாள்.

“என்ன பார்க்கிற, நீ நல்லாப் படிச்சிருக்க, புத்திசாலியா இருக்க… உன் புத்தி என் பிசினஸ்க்கு தேவை, ஆனா எனக்கு எதிரா ஏதாச்சும் யோசிச்சாக் கூட உன் நிம்மதிக்கு நான் பொறுப்பில்லை, அதுவரைக்கும் இந்த வீடியோ என்கிட்ட பத்திரமா இருக்கும், நீயும் பயப்படாம இருக்காலாம்… ஆனா, இனி உன்னோட ஒவ்வொரு அசைவும் என்னால கவனிக்கப்படும்… உனக்குத் தனியா எனக்குப் பக்கத்துலயே ரூம் உண்டு, கம்பெனி கார், மற்ற எல்லா வசதியும் உண்டு… உனக்கு என்ன வேணும், வேண்டாம்னு இனி நான் முடிவு பண்ணுவேன்… இப்ப நீ போகலாம்…” என்றாள்.

பாரதி தளர்ந்து போய் எழுந்திருக்க, “ஒண்ணு மட்டும் மனசுல வச்சுக்க, இந்த அன்னை குரூப்ஸ் பொறுத்த வரைக்கும் நான் தான் பிரதான மந்திரி, என் ஹஸ்பன்ட் ஹரி வெறும் ஜனாதிபதிதான், ரிஷி டம்மி போஸ்ட்… சோ என் முடிவு தான் இங்கே நடக்கும், புரிஞ்சு இருந்துக்க…” இதழில் வெற்றிப் புன்னகை நெளிய சொன்னாள் கங்கா.

“நீ ஒண்ணு பண்ணு, இன்னைக்கு ஹாஸ்டலுக்கு கிளம்பு, நாளைக்கு காலைல ஹாஸ்டலுக்கு கார் வந்திரும்… நீ நாளைக்கு வரும்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டர், தனியா ரூம் எல்லாம் ரெடியா இருக்கும்… என்னை அனுசரிச்சா எல்லா சலுகையும் அனுபவிச்சு நல்லாருக்கலாம், இல்லன்னா அசிங்கப்பட வேண்டி வரும்… ஜாக்கிரதை…! போ…” எச்சரித்து அனுப்பினாள். தனது காபினுக்கு வந்து ஹான்ட்பாகை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் பின்னில் கெளதம் அழைப்பதைக் கூடக் காதில் வாங்காமல் வெளியே வந்தாள்.

Advertisement