Advertisement

“ஏண்டி போன வாரம் வந்திட்டுப் போனவ எதுக்கு திடீர்னு ராத்திரி நேரத்துல கிளம்பி வந்திருக்க…” அஷ்டலட்சுமி பாரதியிடம் கேட்க அக்காவைப் பார்த்தவள் சிரித்தாள்.

“அது வேறொண்ணுமில்லை அத்தை… உங்களுக்கு கால் பிடிச்சு விட ஆசையா இருந்துச்சு, அதான் கிளம்பிட்டேன்…”

“இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… உன் ஆபீஸ்ல லோன் கேக்கனும்னு சொன்னியே, கேட்டியா…? பேசாம அந்த ரிஷி தம்பி கிட்டவே பணம் கடனாக் கேட்டா குடுத்திருக்கும்ல, எல்லாம் அவங்க பணம் தானே…?”

“அவங்க பணம்தான், ஆனா அப்படி கேட்டா சரியாருக்காது…”

“ம்ம்… நாங்க சொன்னா கேக்கவா போற, அதான்… உனக்குன்னு ஒரு நியாயம் வச்சிருப்பியே…! சரி, உன் அக்கா கல்யாணத்துக்கு ஒரு வாரமாச்சும் லீவு போட்டுட்டு கிளம்பி வந்திடு, இங்கே நிறைய வேலை இருக்கும்…”

“ம்ம்… பார்க்கலாம், பார்க்கலாம்… நான் வானுவைப் பார்த்திட்டு வந்திடறேன்…” சொன்னவள் கிளம்பினாள்.

அவளைக் கண்டதும் வான்மதி குஷியில் துள்ளினாள்.

“பாரு, நானே உனக்கு கால் பண்ணனும்னு இருந்தேன், சூர்யாகிட்ட என் வேலை விஷயமா சொல்லி இருந்தோம்ல, கால் பண்ணி இருந்தார்… அவர் கம்பெனில ஒரு வேகன்ட் இருக்காம், நாளைக்கு வந்து பார்க்க சொன்னார்…”

“வாவ்… சூப்பர்டி, அப்ப நீயும் என்னோடவே காலைல கிளம்பி வந்திரு…” என்றாள் பாரதி உற்சாகத்துடன்.

“ம்ம்… அப்புறம் என்ன சொல்லுறார் உன் ஆளு, இப்பவும் குடியும், குடித்தனமுமா தான் இருக்காரா…? இல்ல காதலுக்காக குடியைத் தியாகம் பண்ணிட்டாரா…?” என்றவளை முறைத்தாள் பாரதி.

“ரிஷியைக் குத்தம் சொல்லலேன்னா உனக்குத் தூக்கம் வராதே… அவர் முன்ன மாதிரி இல்ல, ரொம்ப பொறுப்பா ஆபீஸ்ல வேலை செய்யத் தொடங்கிட்டார்…” பெருமையுடன் பாரதி சொல்ல உதட்டைப் பிதுக்கினாள் வான்மதி.

“ம்ம்… நல்லா இருந்தா சந்தோஷம்தான்…” என்றவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சேலத்தில் பாட்டி வீட்டில் இருந்த கல்பனாவுக்கும் போன் செய்து விஷயத்தை கூறினர். பாரதி இங்கே வந்ததும் ரிஷிக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டிருந்ததால் அவனை இரவு அழைத்துப் பேசினாள். அடுத்தநாள் விடியலில் சூரியன் உதிக்குமுன்னே எழுந்து இருவரும் சென்னை கிளம்பினர்.

சக்தியை ஒருவாறு சமாதானப் படுத்தினாலும் அவள் முழுமையாய் அதிலிருந்து வெளியே வரவில்லை… அந்த சம்பவம் பாரதியின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஹாஸ்டலில் பாரதியுடன் வான்மதியும் தங்குவதற்குப் பர்மிஷன் வாங்கி குளித்து சாப்பிட்டு கிளம்பினர். வேலை நிச்சயம் கிடைத்துவிடும், உடனே ஜாயின் பண்ண வேண்டுமென்று சூர்யா சொல்லி இருந்ததால் அதற்குத் தயாராகவே வான்மதி கிளம்பி இருந்தாள்.

பாரதியின் அலுவலகம் தாண்டி ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது சூர்யாவின் அலுவலகம். முதலில் இறங்கிய பாரதி தோழிக்கு வாழ்த்து சொல்லி அனுப்பினாள்.

கங்கா முன்தினம் வராததால் அன்று நேரமே அலுவலகம் வந்திருந்தாள். ரிஷி ரோஷனுடன் வெளியே கிளம்புவதால் தாமதமாய் வருவேனென்று சொல்லி இருந்தான்.

அப்போதுதான் உள்ளே வந்த கெளதம் இவளைக் கண்டு சினேகமாய் புன்னகைத்தான்.

“என்னாச்சு பாரதி, திடீர்னு நேத்து லீவு போட்டுட்டீங்க…? ஜேஎம்டி வேற உங்களைக் காணம்னு ரொம்ப விசாரிச்சார்…” சிறு கள்ளச் சிரிப்புடன் கேட்க, “ஊர்ல ஒரு முக்கியமான வேலை, அதான் கிளம்பினேன்…” சொல்லிவிட்டு தனது காபினுக்கு சென்று அமர்ந்தாள் பாரதி.

மனதுக்குள் காலையில் கூட புலம்பிய அக்காவின் தவிப்பான குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. மனதை ஒருமுகப்படுத்தி காத்திருந்த வேலைகளில் கவனத்தை செலுத்தி ஒவ்வொன்றாய் முடிக்கத் தொடங்க இன்டர்காம் சிணுங்கியது, எடுக்கவும் கங்காவின் குரல் கேட்டது.

“என் ரூமுக்கு வா…” அதிகாரமாய் வந்த குரலில் பாரதியின் முகம் சுளிய, தலையைக் குலுக்கிக் கொண்டு எழுந்தாள்.

அறைக்குள் நுழைந்தவளை கங்காவின் இளக்காரப் புன்னகை எதிர்கொள்ள, புரியாமல் பார்த்தாள் பாரதி.

“என்ன பாரதி, அவசரமா ஊருக்குக் கிளம்பிப் போன… அங்க எல்லாமும் சரியா இருக்கு தானே…?” அவள் குரலில் இருந்த அலட்சியமும், திமிரும் புதிதாய் இருக்க யோசனையுடன் பார்த்தாள் பாரதி.

“ம்ம்… என்னை எதுக்கு கூப்பிட்டீங்க மேடம்…”

“ஹூம், நீ புத்திசாலிதான்…! என் குரல்ல உள்ள இளக்காரத்தைக் கூட சரியாப் புரிஞ்சுகிட்டு சட்டுன்னு விஷயத்துக்கு வர்றியே…?” கங்காவின் பதிலில் பாரதியின் முகம் யோசனையைக் காட்ட புரியாமல் பார்த்தாள்.

“நீங்க என்ன சொல்லறீங்கன்னு புரியலை மேடம்…”

“ம்ம்… புரியுற போலவே சொல்லறேன், ரூமை லாக் பண்ணிட்டு வந்து இப்படி உக்கார்…”

“எ..எதுக்கு மேடம்…” என்றாள் குழப்பத்துடன்.

“எதுக்குன்னு தெரிஞ்சுக்க இவ்ளோ அவசரப்படற, முதல்ல நான் சொன்னதை செய்…” என்றாள் அதிகாரமாய்.

பாரதி கதவைத் தாளிட்டு விட்டு கங்காவின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டே புரியாமல் பார்த்தாள்.

“இப்ப விஷயத்துக்கு வர்றேன், அந்த டிவியைப் பாரு…” சுவரில் இருந்த டிவியைக் கண் காட்ட பாரதி தவிப்புடன் அந்தத் திரையில் கண் பதித்தாள்.

கங்கா ரிமோட்டை இயக்க, திரையில் வந்த காட்சியைக் கண்டு பாரதி பதறி அலறிவிட்டாள்.

திரையில் சொர்ணாக்கா போலிருந்த ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். காவிப் பற்களுடன் திரையைப் பார்த்து இளித்த அப்பெண்மணி கட்டிலில் சுயஉணர்வு இன்றிக் கிடந்த சக்தியின் அருகே செல்ல சக்தியின் உடம்பில் பிளவுஸ், உள்பாவாடை மட்டுமே இருந்தது.

பாரதி அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருக்கும்போதே அவள் சக்தியின் உள்பாவாடையை உருவ அலறினாள் பாரதி.

“நோ…!” அலறியவள் அதைக் காண முடியாமல் தன் கண்களை மூடிக் கொண்டாள். அக்காவின் நிலையை எண்ணி நெஞ்சம் பதறிப் போக துடித்துப் போனாள்.

“அட, கண்ணைத் திற…! நீ கண்ணை மூடிகிட்டா மத்தவங்க இதைப் பார்க்காமப் போயிருவாங்களா என்ன…? உன் அக்காக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா…?” கங்கா கிண்டலாய் கேட்க கோபத்துடன் கண்ணைத் திறந்தவள் எழுந்து பதறியபடி கேட்டாள்.

“ஏய்…! ஏன்? ஏன் இப்படிப் பண்ண… எதுக்காக இப்படிப் பண்ணிருக்க…?” சொல்லிக் கொண்டே திரையில் கண்ணைப் பதித்தவள் அலறினாள்.

சக்தியின் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் பல ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

“கங்கா… முதல்ல அதை ஆப் பண்ணு…” பாரதி கோபத்தில் அலற கங்கா கிண்டலாய் சிரித்தபடி அதை ஆப் செய்தாள்.

“ச்சீ… ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணை இப்படில்லாம் அசிங்கப்படுத்த நினைக்கறியே… அதுவும் உனக்கு ஒரு சம்மந்தமும் இல்லாத என் அக்காவைப் போய்… ச்சே…” யோசிக்கும் போதே பாரதிக்கு உடல் கூசி நடுங்கியது. சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது. சக்திக்குத் தெரியாமல் மயக்கத்தில் என்ன தப்பு நடந்திருக்கிறது எனப் புரிய அதிர்ச்சியில் உடல் நடுங்கியது.

“இப்ப உன் அக்காவுக்கு என்னாச்சுன்னு உன்னால ஊகிக்க முடிஞ்சிருக்குமே…” கங்கா கேட்க கோபத்துடன் முறைத்தாள்.

“ச்ச்சே, நீயெல்லாம் பொம்பளை தானா…? ஒரு பொண்ணை இப்படி அசிங்கப்படுத்த எப்படி மனசு வந்துச்சு… நீ எல்லாம் மனுஷ ஜென்மம் தானா…? இப்படி செய்யக் கூசலை…”

“இரும்மா இரு, அவசரப்பட்டு என்னைத் திட்டி முடிச்சிடாத… ஒரு வகைல உன் அக்காவை எதுவும் செய்யாம விட்டதுக்கு நீ எனக்கு நன்றி தான் சொல்லணும்… நான் நினைச்சிருந்தா மயங்கிக் கிடந்த உன் அக்காவை என்ன வேணும்னாலும் பண்ணியிருக்க முடியும்… ஆனா அவ கற்புக்கு எந்த சேதாரமும் இல்லாம எப்படி டிரஸ்ஸை அவிழ்த்து போட்டோ, வீடியோ எடுத்தமோ அப்படியே நீட்டா கட்டி விட்டு அவ மேல யாரோட சுண்டு விரல் கூடப் படாம திருப்பி அனுப்பிருக்கோம்… அவ உடம்பை முழுசாப் பார்த்தது ஒரு பொம்பளை மட்டும் தான், அதுக்காக நீ எனக்கு நன்றி தான் சொல்லணும்…” கங்காவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பாரதி.

“ச்சே… என்னவொரு குரூரம்…! கங்கான்னு புனிதமான பேரை வச்சிட்டு செய்யறது எல்லாம் சாக்கடைத் தனம்…! இந்த உலகத்துல யாருக்காச்சும் ஒருத்தருக்கு நீ உண்மையா இருந்திருப்பியா…? எதுக்காக இந்த பொய் வேஷமும் முகமூடியும்… என் அக்கா உனக்கு என்ன பாவம் பண்ணினா, அவளை இப்படி அசிங்கப்படுத்த…?” உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்கி கன்னத்தை நனைத்தது.

வலிகளுக்கு மருந்திடும்

வல்லமை கொண்ட

வார்த்தை தான் மனதை

வதம் செய்யும் கூரான

ஆயுதமும் ஆகிறது…

ஒரு சொல் வெல்லுமென்றால்

ஒரு சொல் கொல்கிறது…

Advertisement