Advertisement

அத்தியாயம் – 27

பாரதி வீட்டை அடைகையில் இரவு 12 மணி ஆகிவிட்டது. மாமாவிடம் அவள் வருவதை சொன்னதும் அவர் தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவரை பேருந்து நிலையம் சென்று அவளை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார்.

பாரதி ஆட்டோவில் இருந்து இறங்கியதும் வாசலில் காத்திருந்த சக்தி ஓடி வந்தாள்.

“பாரு…” தங்கையைக் கட்டிக் கொண்டு சக்தி கண் கலங்கத் தொடங்க, “அக்கா… எல்லார் முன்னாடியும் அழுதுட்டு  அவங்களையும் என்ன பிரச்சனைன்னு கேக்க வச்சுடாத, கொஞ்ச நேரம் அமைதியாரு…” சற்று அதட்டலாய் சொல்ல கண்ணைத் துடைத்துக் கொண்டாலும் அவள் சிவந்திருந்த முகமும், கண்களும் நிச்சயம் கேள்வி எழுப்பும் என்றே பாரதிக்குத் தோன்றியது.

“முகத்தைத் துடைச்சுக்கக்கா, நாம அப்புறம் பேசிக்கலாம்…” சொன்னவள் அவளுடன் உள்ளே சென்றாள்.

அஷ்டலட்சுமி கால் வலிக்கு மாத்திரை போட்டு உறங்கியிருக்க, பேச்சுக் குரல் கேட்டு அறையிலிருந்த கோபாலகிருஷ்ணன் வெளியே வந்தார்.

“வாடா பாரு… பிரயாணம் எல்லாம் சுகமா இருந்துச்சா…? ஆட்டோ டிரைவர் சரியான நேரத்துக்கு வந்துட்டாரா…?”

“ம்ம்… மாமா, நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க, அத்தை தூங்கிட்டாங்களா, நீங்க மாத்திரை போட்டீங்களா…?” அன்போடு அவள் விசாரிக்க திகைத்தார் கோபால்.

“அடடா, தினமும் சக்தி மாத்திரை எடுத்துக் கொடுத்திருவா, இன்னைக்கு மறந்திட்டா போலருக்கு… என்னடா, மாத்திரை போட்டா தூக்கம் தள்ளுமே, இன்னிக்கு தூக்கம் வரலியேன்னு நினைச்சேன்…”

சொல்லிக் கொண்டே சக்தியை நோக்கியவர் பார்வை உன்னிப்பாய் மாறியது.

“என்னடா உடம்புக்கு முடியலியா, ஒரு மாதிரி இருக்க…”

“அ..அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா… லைட்டா தலைவலி, தூங்கினா சரியாப் போயிடும்…”

“ஆமா மாமா, அக்கா போன்ல பேசினப்பவே சொன்னா… நீ எதுக்கு தூங்காம எனக்கு வெயிட் பண்ணினக்கா, தூங்கிருந்தா இப்ப சரியாகி இருக்கும்ல…” என்றாள் பாரதி.

“அதுக்கு ஏன் சக்தியோட கண்ணும், முகமும் எல்லாம் கலங்கிருக்கு, ஏதாவது பிரச்சனையா…? மாமாட்ட சொல்லுங்கடா…?” சக்தி அமைதியாய் தலை குனிந்து நிற்க அருகே வந்தவர் அவள் தலையில் தடவிக் கொடுத்தார்.

“கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு, பணம் சரியாகி எல்லாம் நல்லபடியா நடக்குமான்னு கவலை வந்திருச்சா…?” அன்போடு கேட்டவரை ஏறிட்ட சக்தி உடைந்து விடுவாள் போலத் தோன்ற பாரதி இடையிட்டாள்.

“அப்படில்லாம் எதுவும் இருக்காது மாமா… நாமதான் அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டு இருக்கமே, அக்காக்கு தான் தலைவலி வந்தா ரொம்ப அவஸ்தைப் படுவாளே, உங்களுக்குத் தெரியாதா…?” என்றாள்.

“ம்ம்… பிரச்சனை இல்லன்னா சந்தோஷம் தான், சரி நீ பிரஷ் ஆகி சாப்பிடு, நாளைக்குப் பேசிக்கலாம்… நானும் மாத்திரை போட்டுப் படுக்கறேன்…” என்றார் கோபால கிருஷ்ணன்.

“நீங்க போங்க மாமா, நான் எடுத்திட்டு வர்றேன், அக்கா நீ எனக்கு சாப்பிட எடுத்து வை…” என அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு மேஜையில் இருந்த மாத்திரையை தண்ணி கிளாசோடு மாமாவுக்குக் கொடுத்தாள் பாரதி.

அவர் உறங்க சென்றதும் அடுக்களைக்கு செல்ல அங்கே சக்தி தங்கைக்கு தோசை ஊற்றிக் கொண்டே கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“அக்கா, நீ சாப்பிட்டியா…?” எனக் கேட்க, “ப்ச்… எனக்குப் பசிக்கல…” சக்தி சொல்லவும் பாரதி கையைக் கழுவிவிட்டு தட்டிலிருந்த ஒரு தோசையுடன் சட்னியை எடுத்துக் கொண்டு அடுக்களைத் திண்டிலேயே அமர்ந்தாள்.

தோசையை சட்னியில் தொட்டு அக்காவின் முன் நீட்டியவள், “முதல்ல சாப்பிடுக்கா… பட்டினி கிடந்தா எதுவும் மாறப் போறதில்ல, அதோட பசியில இருக்கிறப்ப நம்ம மூளையும் சரியா யோசிக்காது, வாயைத் திற…” அதட்டலாய் சொன்ன தங்கையைக் கண்ணீருடன் ஏறிட்டாலும் சக்தி வாயைத் திறக்க மறுக்கவில்லை. ஏனெனில் இதை எப்போதும் சக்திதான் பாரதிக்கு சொல்லுவாள்.

நடுவில் சக்தி ஏதோ சொல்ல வந்த போதும், “சாப்பிட்டுப் பேசிக்கலாம்…” என்ற பாரதி ஆளுக்கு இரண்டு தோசையை உள்ளே தள்ளிய பின்னரே கேட்டாள்.

“அக்கா, நீ சொன்னதை எல்லாம் யோசிக்கும்போது தேவை இல்லாம பயப்படறியோன்னு தோணுது… எதை வச்சு ஏதோ தப்பா இருக்குன்னு சொல்லற…”

“பாரு… எ..என்னால சரியா சொல்ல முடியலை, ஆ..ஆனா நான் மயங்கறதுக்கு முன்னாடி இருந்த போல எழுந்திருக்கும் போது இல்லை… அதுவும் கோவிலுக்குப் பின்னாடி யாரும் இல்லாத இடத்துல மரத்தடில கிடந்தேன்… ஏதோ தப்பு நடந்திருக்கு, அந்தம்மா தான் எனக்கு பிரசாதத்துல மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை மயங்க வச்சு எதையோ பண்ணிருக்காங்க… ஆனா என்ன பண்ணினாங்கன்னு எனக்கு சொல்லத் தெரியலை…” சொல்லும்போதே கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

“சரிக்கா, அழாத… அந்தம்மாவை இதுக்கு முன்னாடி எங்காச்சும் பார்த்திருக்கியா…?”

“இல்லியே, அன்னைக்குதான் பார்த்தேன்… பிரசாதம் வாங்கிக்கமான்னு பொங்கல் கொடுத்தாங்க… கொடுத்துட்டு என் பக்கத்துல உக்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க…”

“ம்ம்… ஏன் வேற யாருக்கும் பொங்கல் கொடுக்கலையா…?”

“எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியா தான் எனக்குக் கொடுத்ததா சொன்னாங்க… அதை சாப்பிடும்போதே தொண்டைல ஒரு மாதிரி இருந்துச்சு, இருமினேன்… அவங்களே தண்ணியும் கொடுத்தாங்க…”

“என்னக்கா, முன்னப் பின்னத் தெரியாதவங்க எதாச்சும் கொடுத்தா வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு நீ தான எனக்கு சொல்லிக் கொடுத்த, இப்ப நீயே இப்படிப் பண்ணிருக்க…”

“பாரு, கோவில்ல பிரசாதம்னு கொடுக்கும்போது எப்படி வேண்டாம்னு சொல்லுறது…?”

“தண்ணி ஏன் குடிச்ச…?”

“அ..அது, இருமல் வந்தப்ப அவங்க கொடுக்கவும் சட்டுன்னு… ஒருவேளை, அதுல மயக்க மருந்து கலந்திருப்பாங்களா…?”

“எனக்கு எப்படி தெரியும்… சரி, அப்புறம் என்னாச்சு…?”

“அப்புறம்…?” யோசித்தவளுக்கு எதுவும் நினைவில் இல்லை.

“தெரியலியேடி…” உதட்டைப் பிதுக்கியவள் கண் கலங்கினாள்.

“சரி அழாத… நீ எத்தன மணிக்கு சாமி கும்பிட்டுட்டு அவங்க கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்ட…?”

“ஒரு ஆறு மணி இருக்கும்…”

“ஆறு மணின்னா, எத்தன மணிக்கு கண் விழிச்சுப் பார்த்த…?”

“ஒன்பது மணிக்கு… நல்லவேளை, பவுர்ணமிங்கறதால லேட்டா தான் நடை சாத்தினாங்க… இல்லன்னா கோவிலுக்குள்ள மாட்டிருப்பேன்… எழுந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ள அத்தை மாமாகிட்ட சொல்லி அவர் என்னைத் தேடி கோவிலுக்கு வந்திட்டு இருந்தார், வழியில என்னைப் பார்த்துட்டு மாமாதான் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார்… அத்தை ரொம்ப திட்டினாங்க, அம்மாவும் பயந்துட்டாங்க…”

பாரதிக்கும் ஒன்றும் புரியவில்லை.

“அக்காவுக்கு மயக்கம் இயல்பாய் வந்திருந்தால் கோவிலுக்கு வந்தவர்கள் யாரேனும் தெளிய வைக்க முயற்சி செய்திருப்பார்கள்… நகை திருடுவதற்காக என்றால் கழுத்தில் உள்ள செயினும், கம்மலும் அப்படியே தான் இருக்கிறது… பிறகு எதற்காக மயங்க வைத்திருக்க வேண்டும்…? இந்த சில மணி நேர இடைவெளியில் அப்படி என்ன நடந்திருக்கும்…?” யோசித்தவளுக்கு தெளிவாய் எதுவும் புரியா விட்டாலும் ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

“எது சரியில்லை…?” அவளை யோசிக்க விடாமல் சக்தியின் விசும்பல் சத்தம் கேட்க அவளை நோக்கினாள் பாரதி.

“அக்கா, எதுக்கு பயப்படற…? உனக்கு எதுவும் ஆகலயே…?”

“ஒண்ணும் ஆகலதான், உடம்புல கூட எந்த மாற்றமும் இல்லை… ஆனா…” என்றவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

“ஆனாவும் இல்லை, ஆவன்னாவும் இல்லை… நீயா தேவையில்லாம இல்லாததை யோசிச்சு குழப்பிக்காத… உன் உடம்புல எந்த மாற்றமும் இல்லை, அப்புறம் எதுக்கு இப்படி பதட்டப் படற… ஒருவேளை, உன் கழுத்துல காதுல கிடக்கற தங்கத்தைத் திருடுறதுக்காக மயக்கப்படுத்திட்டு அந்தம்மா கோவில் பின்பக்கம் அழைச்சிட்டுப் போயிருக்கலாம்… யாராவது அந்தப் பக்கம் வரவும் பார்த்திடுவாங்கன்னு எதுவும் எடுக்காம அப்படியே விட்டுட்டு போயிருக்கலாம்… உன் நல்ல மனசுக்கு எந்தத் தப்பும் நடக்காதுக்கா, இல்லாத பொல்லாததை யோசிச்சு பயப்படறதை முதல்ல நிறுத்து…” பாரதி சொல்ல சக்தியின் மனம் உள்வாங்கிக் கொண்டது.

“ஒருவேளை இவள் சொல்லுவது போல் நடந்திருக்குமோ…? என்னை ஏதாவது செய்வது அவர்கள் நோக்கம் என்றால் என் உடம்பில் எந்த மாற்றமும் இல்லையே…?” சக்தியின் மனதும் மெல்லத் தெளியத் தொடங்க பாரதி மேலும் அவளை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லி தெளிய வைத்தாள்.

ஒருவிதத்தில் சமாதானம் ஆன சக்தி உறங்கச் செல்ல பாரதியின் மனதில் குழப்பம் நிறைந்திருந்தது.

“அக்காவை எப்படியோ சமாதானம் செய்தாயிற்று… ஆனாலும் அவள் சொல்லுவதில் ஏதோ ஒரு தப்பு எங்கேயோ ஒளிந்து கிடக்கிறது…? அது என்ன தப்பு…?”

அடுத்தநாள் பாரதிக்கு அன்னையுடனும், அவ்வப்போது புலம்பிய அக்காவிற்கு சமாதானம் சொல்லியும் அத்தைக்கு கால் பிடித்து விட்டும் கழிந்தது.

Advertisement