“தெரியலடா, நீ சொல்லற போலவும் இருக்கலாம்… எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பேசு…”

“சரிடா, நான் பேசிக்கறேன்…”

“ம்ம்… வச்சிடறேன்…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தான் ரிஷி.

“எவ்ளோ நேரமா ரெண்டு பேரையும் சாப்பிடக் கூப்பிடறேன்… இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…” கேட்டபடி வந்த கங்கா ரிஷியின் முகத்தைக் கண்டதும் சன்னமாய் அதிர்ந்தாள்.

“என்னாச்சு, இவன் இப்படி உக்கார்ந்திருக்கான், அதுக்குள்ள பாரதி இவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டாளா…? தப்பாச்சே…” யோசித்தபடி ரிஷியின் தோளைத் தொட்டாள்.

“ரிஷி, என்னப்பா… ஏதோ யோசிச்சிட்டு இருக்க…?”

“அ..அது ஒண்ணுமில்ல அண்ணி… நம்ம பாரதிக்கு கால் பண்ணேன், போன் பிஸின்னு வந்துச்சு… இப்ப சூர்யா கால் பண்ணி காஞ்சிபுரம் போற பஸ்ல அவளைப் பார்த்தேன்னு சொல்லறான்… அதான் எனக்கு ஒண்ணும் புரியலை, நம்மகிட்ட சொல்லாம அவ எதுக்கு இப்ப காஞ்சிபுரம் போகணும்…? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாளா…?”

“இல்லியேப்பா…”

“இன்னிக்கு அவ ஆபீஸ்ல நார்மலா தானே இருந்தா, எதுவும் பிரச்சனை இல்லை தானே…?”

“சேச்சே… எந்தப் பிரச்சனையும் இல்லை, நம்ம மெடிக்கல் லாபைப் பார்க்க வந்த பாரின் டெக்னீஷியனை அவளும் கெளதமும் தான் கூட இருந்து நல்லா கவனிச்சுகிட்டாங்க… அவரும் ரொம்ப ஹாப்பியா நம்ம கம்பெனியைப் பத்தி நல்லவிதமா ரிப்போர்ட் பண்ணிருக்கார்…”

“ஓ…” என்றவனுக்கு பாரதியின் மெசேஜ் நினைவில் வர,

“இதுதான் அவள் சொன்ன வேலையா…?” என யோசித்தான்.

“சரி, எதுவா இருந்தாலும் போன் பண்ணிக் கேட்டுக்கலாம், முதல்ல நீங்க வந்து சாப்பிடுங்க… உன் அண்ணன் ரொம்ப நேரமா டேபிள்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார்…”

“ஹாங், இதோ வர்றேன் அண்ணி…” என்றவன் ரோஷனை அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றான்.

பாரதியைப் பற்றி தெரியாமல் சாப்பிடப் பிடிக்காததால் பேருக்கு ரெண்டு தோசையை உள்ளே தள்ளி எழுந்தான். கெளதமுக்கு அழைத்தால் ஒருவேளை விஷயம் தெரிந்திருக்கலாம் என நினைத்தவன் அழைத்தான்.

“ஹலோ, சொல்லுங்க ரிஷி சார்…”

“கெளதம், பாரதி இன்னைக்கு எதுக்காச்சும் அப்சட் ஆகி இருந்தாங்களா…? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாங்களா…?” நேரடியாய் விஷயத்துக்கு வந்தான்.

“இல்லியே சார்… ஆக்சுவலா இன்னைக்கு அவங்க ரொம்ப ஹாப்பியா இருந்த போல தான் எனக்கு பீல் ஆச்சு… நம்ம மெடிக்கல் லாபைப் பார்க்க வந்த டெக்னீஷியன் நம்ம லாபுக்கு வேண்டிய எக்யூப்மென்ட்ஸ், மெஷினரி அயிட்டம்ஸ் எல்லாத்தையும் அவங்களே சப்ளை பண்ணறதா சொன்னார், பாரதியை ரொம்ப பாராட்டினார்… தான் வந்த வேலை நல்லபடியா முடிஞ்ச குஷில தான் அவங்க ஹாஸ்டலுக்கு கிளம்பினாங்க…”

“ஓ…!! எத்தன மணிக்கு…?”

“ஈவனிங் செவன் ஆகிருச்சு சார், நாந்தான் ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டு ஆபீஸ் போனேன்…”

“ம்ம்… நாளைக்கு லீவுன்னு ஏதாச்சும் சொன்னாங்களா…?”

“இல்ல சார், என்னாச்சு சார்…? ஏதாவது பிரச்சனையா, நான் வேணும்னா கால் பண்ணி கேட்கட்டுமா…?”

“இ..இல்ல வேணாம், நான் பார்த்துக்கறேன்…” ரிஷி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கங்கா பாரதியின் எண்ணுக்கு அழைத்திருந்தாள். அதுவரை பிஸியாக இருந்த நம்பர் கங்கா அழைக்கையில் ரிங்கானது.

அழைப்பு கட்டாகும் நேரத்தில் பாரதியின் குரல் ஒலித்தது.

“ஹ..லோ மேடம்…”

“பாரதி, சாப்பிட்டியா… நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணலியே…?”

“இ..இல்ல, சொல்லுங்க மே..டம்…” குரல் சோர்ந்திருந்தது.

“பாரதி, இன்னிக்கு வந்த வெளிநாட்டு டெக்னீஷியன் உன்னை ரொம்ப பாராட்டினார்… கூட இருந்து நல்லா கவனிச்சதோட ரெஸ்டாரன்ட் போனப்ப டிரஸ்ல ஜூஸ் கொட்டியும் கூட ரொம்ப பொறுமையா இருந்தியாமே… அவங்க நம்மளோட கான்ட்ராக்ட் போட்டுக்க சம்மதம் சொல்லிட்டார்…”

“ம்ம்… சந்தோஷம் மேடம், அப்புறம் எனக்கு ஒரு ரிக்வஸ்ட் மேடம்…” தயங்கியபடியே சொன்னாள் பாரதி.

“என்ன பாரதி, என்ன வேணும்னு சொல்லு… நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்…”

“எனக்கு ஒரு நாள் லீவு வேணும் மேடம்…”

“லீவா…? ஹாஹா, பெருசா ஏதோ கேப்பன்னு பார்த்தா லீவ் கேக்கற… இட்ஸ் ஓகே, நாளைக்கு ஊருக்குப் போயி ரெஸ்ட் எடுத்திட்டு ஆபீஸ் வா…”

“தேங்க்ஸ் மேடம்…”

“அப்புறம் பாரதி, நீ லீவுன்னு ரிஷி கிட்ட சொல்லிட்டுப் போ, நீ கால் பண்ணலன்னு அவன் டென்ஷன்ல இருக்கான்…”

“சரி மேடம்…” என்றவளின் குரல் சுரத்தில்லாமல் இருந்தது. கங்கா அழைப்பைத் துண்டிக்க ரிஷியை அழைத்தாள். பாரதியின் எண்ணைக் கண்டவன் வேகமாய் எடுத்தான்.

“ஹலோ ரதி, என்னாச்சுமா…? எதுக்கு ஊருக்குப் போற…? அத்தைக்கு ஒண்ணும் இல்லியே…” ரிஷி படபடப்பாய் கேட்க பாரதிக்கே திகைப்பாய் இருந்தது.

“நான் ஊருக்குப் போவது அதற்குள் எப்படி இவருக்குத் தெரிந்தது…” யோசித்தவளுக்கு அவனது குரலில் இருந்த அக்கறையும் பதட்டமும் எனக்காய் உருகித் தவிக்க ஒருத்தன் இருக்கிறான்… எனும் சுகத்தைக் கொடுத்தது.

“ரிஷி, எதுக்கு இப்ப பதர்றீங்க…? யாருக்கும் ஒண்ணும் இல்லை, அம்மாக்கு என்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க… அதான் சட்டுன்னு நாளைக்கு லீவு போட்டு கிளம்பிட்டேன்…” அவனை வருத்த விரும்பாமல் பொய் சொன்னாள்.

“ப்ச், அவ்ளோ தானா… அதுக்காக என்கிட்ட கூட சொல்லாமக் கிளம்பிருவியா…? நான் எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்ணிட்டே இருக்கேன்… போன் பிஸியாவே இருந்துச்சு, சூர்யா வேற உன்னை காஞ்சிபுரம் பஸ்ல பார்த்தேன்னு சொல்லவும் அத்தைக்கு எதுவும் பிரச்சனையோன்னு, பதட்டமாயிருச்சு… என்கிட்ட சொல்லிருந்தா நானே கூட்டிட்டுப் போயிருப்பனே, ராத்திரி நேரத்துல தனியா எதுக்கு பஸ்ல போற…” செல்லமாய் கடிந்து கொண்டான்.

அவனது அன்பும், அக்கறையுமான தவிப்பில் நெகிழ்ந்தவள், “சாரி ரிஷி, என்ன பிரச்சனைன்னு எனக்கே முழுசாத் தெரியாம நான் என்னன்னு உங்ககிட்ட சொல்லுவேன், பொய் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிருங்க…” என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்ன ரதி, நான் கேட்டுட்டே இருக்கேன்… பேசாம இருக்க…”

“எ..என்ன கேட்டிங்க…?”

“நான் நாளைக்கு கிளம்பி வந்து உன்னைக் கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டேன்…”

“ப்ச்… அதெல்லாம் வேண்டாம், அத்தையும், மாமாவும் என்ன நினைப்பாங்க… நான் நாளான்னிக்கு வந்திருவனே…”

“ஒரு நாள்…! முழுசா இருபத்தி நாலு மணி நேரம், உன்னைப் பார்க்காம இருக்கணும்னு நினைக்கவே கஷ்டமா இருக்கே…”

“பொறந்து இத்தன வருஷமா என்னைப் பார்க்காம தானே இருந்திங்க, அதெல்லாம் இருப்பிங்க…”

“ப்ச்… நான் எவ்வளவு உருக்கமா லவ் பீல்ல உன்னை மிஸ் பண்ணிட்டு இருக்கேன்… நீ இப்படி சொல்லறியே, ஆமா… யாரோட இவ்ளோ நேரம் போன்ல பேசிட்டு இருந்த…”

“அ..அது..வந்து… வானு, வான்மதிகிட்ட பேசிட்டு இருந்தேன்…”

“ம்ம்… அவங்களுக்கு ஒரு ஜாப் வேணும்னு சூர்யா கிட்ட சொல்லி இருந்தாங்களாமே, நம்ம கம்பெனிலயே ஜாயின் பண்ணிக்க சொல்ல வேண்டியது தானே…”

“ஹா… சொல்லலாம், சொல்லலாம்…” என்றவள் சக்தியின் எண்ணிலிருந்து அழைப்பு வருவதைக் கண்டதும், முகம் மாறினாள்.

“சரி, ரிஷி… எனக்கு செகண்ட் கால் வருது, நான் அப்புறம் உங்களுக்குப் பேசறேன்…”

“ப்ச்… பஸ்ல இருக்கியே, ஊருக்குப் போற வரைக்கும் பேசலாம்னு நினைச்சேன், யாரு அது, இர்ரிடேடிங் இடியட்… இந்த நேரத்துல கூப்பிட்டு நம்ம சொர்கத்துல கட்டெறும்பா கடிச்சிட்டு இருக்கறது…”

“ஐயோ ரிஷி, அக்காதான் கால் பண்ணறா… நீங்க கட் பண்ணுங்க, நான் வீட்டுக்குப் போயிட்டு பேசறேன்…” சொன்னவள் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டிக்க ரிஷி எரிச்சலுடன் பார்த்தான்.

“கொஞ்ச நேரம் என் ரதியைக் கொஞ்ச முடியுதா…? அதுக்குள்ள யாராச்சும் டிஸ்டர்ப் பண்ண வந்துடறாங்க… அவளும் என்னடான்னா என் தவிப்பைப் புரிஞ்சுக்காம ஓடிடறா… ஹூம், இதான் வலிய வலியப் போனா வைரமும் இளிக்கும்னு சொல்லுறது…” புதிதாய் ஒரு புது மொழியைக் கண்டு பிடித்து தனக்குத் தானே சமாதானம் சொல்லித் தேற்றிக் கொண்டான் ரிஷி. பாரதி சக்தியின் எண்ணுக்கு அழைக்க அவள் அழுது கொண்டே பேசினாள்.

“பாரு, எனக்கு ரொம்ப பயமாருக்குடி… யோசிக்கவே பதறுதே, பேசாம செத்துடலாம் போல இருக்கு…”

“ஐயோ அக்கா, இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படியெல்லாம் சொல்லற, உனக்கு தான் எதுவும் நடக்கலியே…”

“அதான்… எனக்கு பயமாருக்கு, ஐயோ…! எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலியே பாரு…” சக்தி அழத் தொடங்கவும் பாரதிக்குப் பதறியது.

வார்த்தைக்கும் வறட்சி உண்டு

வாங்கிக் கொள்ள முடியாத

வலியில் தவிக்கும் உறவின்

கண்ணீர் துடைக்க முடியாமல்

வறண்ட பாலை போல்

வலுவிழந்து தவிக்கிறது மனது…