Advertisement

அத்தியாயம் – 26

ரிஷியின் பிசினஸ் மீட்டிங் முடிய மதியமாகிவிட்டது. அவனுக்கு அந்த கஸ்டமர் அவர் கம்பெனியிலேயே லஞ்ச் ஆர்டர் செய்திருந்தார். அவருடன் உணவை முடித்துக் கொண்டு அலைபேசியை எடுத்தவன் பாரதியின் மெசேஜைக் கண்டதும் திகைத்தான்.

அதைத் திறக்க ‘வேலை விஷயமாய் வெளியே செல்கிறேன், இரவு பேசுவோம்…’ என அனுப்பி இருந்தாள்.

“ரதிக்கு என்ன வெளிய வேலை…?” யோசித்தவன் அவளை அழைக்க முயல அலைபேசி சுவிட்ச் ஆப் என்றது.

“பகல்ல போனை சுவிட்ச் ஆப் பண்ண மாட்டாளே…?” ரிஷி யோசிக்கும்போதே வேறு ஒரு சப்ளையர் அலைபேசியில் அழைத்து அவனைக் காண வேண்டுமென்று சொல்ல, “சரி, பிறகு பார்த்துக் கொள்வோம்…” எனக் கிளம்பி விட்டான்.

அந்த சப்ளையரின் கம்பெனிக்கு சென்று அவருடன் பேசி புது ஆர்டரைக் கன்பர்ம் செய்து கிளம்புகையில் மணி ஏழாகி இருந்தது. சோர்வுடன் வீட்டுக்குக் கிளம்பியவன் மாலை நேர டிராபிக்கில் நீந்தி வீட்டை அடைகையில் சின்ன முள் எட்டை எட்டிப் பிடிக்கத் தொடங்கி இருந்தது.

கங்கா புன்னகையுடன் அவனை எதிர் கொள்ள, “அண்ணி, ஸ்ட்ராங்கா ஒரு காபி கிடைக்குமா…?” என்றான்.

ஹால் சோபாவில் இருந்த ஹரி, “இந்த நேரத்துல காபியா…? கொஞ்ச நேரத்துல டின்னரே சாப்பிடலாம்ல…?” என்றான்.

“இல்லண்ணா, இன்னிக்கு கொஞ்சம் அலைச்சல் ஜாஸ்தி… தலை ரொம்ப வலிக்குது… புது சப்ளையர் ஒருத்தர்கிட்ட ரேட் பேசி ஆர்டரைக் கன்பர்ம் பண்ணறதுக்குள்ள தல வலியே வந்திருச்சு…” சலிப்புடன் சோபாவில் அமர்ந்தான்.

“அட, நீங்க என்னங்க…? அவன் காபி தான கேட்டான், என்னவோ விஸ்கி, பிராண்டி கேட்டபோல சொல்லுறீங்க… பாவம் புள்ளை, புது ஆர்டர் எடுத்திட்டு சலிச்சுப் போயி வந்திருக்கான்… அவனுக்குத் தல வலிச்சா காபி குடிச்சா தான் சரியாகும்… இதோ காபி கொண்டு வரேன்…” அக்கறையாய் சொன்ன கங்கா அடுக்களைக்குள் சென்றாள்.

“என்ன இருந்தாலும் அண்ணி அண்ணிதான், எனக்கு எப்ப என்ன வேணும்னு அவங்களுக்கு தான் நல்லாத் தெரியும்…”

“ஹூம், காபி குடிச்சா பசிக்காதேன்னு அக்கறைல சொன்னா, நீங்க சேர்ந்துட்டு என்னையே குத்தம் சொல்லுவீங்களே…” ஹரி சலித்துக் கொள்ள ரிஷி சிரித்தான்.

“ஹாஹா, ரோஷன் எங்கேண்ணா காணோம்…?”

“அவன் நம்ம மேல கோவிச்சுட்டு ரூம்ல இருக்கான்…”

“நம்ம மேல அவனுக்கு என்ன கோபம்…?”

“அது, நாம யாரும் வீட்டுல அவனோட இருக்காம ஆபீஸ் போயிடறோமா, என்னை எங்கயும் கூட்டிட்டுப் போக மாட்டீங்கறீங்க, நான் ஹாஸ்டலுக்கே போறேன்னு சொல்லி அழுதுட்டு போயி உக்கார்ந்திருக்கான்…”

“அச்சோ, பாவம்ணா குழந்தை… அவனே எப்பவாச்சும் வீட்டுக்கு வர்றான்… நீங்க ரெண்டு பேரும் அவனோட கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணா சந்தோஷப் படுவான்ல…”

“ம்ம்… நானும் நினைப்பேன் ரிஷி, ஏதாச்சும் மாறி மாறி வேலை வந்து ஓடிட்டே இருக்க வேண்டிருக்கு… அவன் ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொல்லவும் கஷ்டமாகிடுச்சு… அதான், நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் புல் டே அவனோட இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்… நாளைக்கு எந்த வேலைனாலும் நீயே மேனேஜ் பண்ணிக்க…”

“ஓகே அண்ணா, பார்த்துக்கலாம்…” அவன் சொல்லும்போதே காபியுடன் வந்தாள் கங்கா. ஸ்ட்ராங்கான அந்த பில்டர் காபியைக் குடித்ததுமே சோர்வெல்லாம் விலகியது போல் இருந்தது ரிஷிக்கு.

“தேங்க்ஸ் அண்ணி, தலவலி ஓடியே போயிருச்சு…” எனவும் சிரித்தாள் அவள்.

“நான் ரோஷனைப் பார்த்திட்டு வரேன்… ரெண்டு நாள்ல குழந்தை ஹாஸ்டலுக்கு கிளம்பிருவான், அவனை சங்கடப் படுத்தாம சந்தோஷமாப் பார்த்துக்கங்க…” சொன்னவன் சிரமத்துடன் காலை இழுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினான். ரோஷன் படுக்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்திருக்க ஏதேதோ சொல்லி சமாதானம் செய்து ஒருவழியாய் கீழே அழைத்து வந்தான்.

“ரோஷன், நாளைக்கு உன் டாடியும், மம்மியும் எங்கெல்லாம் உன்னை அழைச்சிட்டு போகப் போறாங்க தெரியுமா…? மால், கேம்ஸ், ஹோட்டல், ஐஸ்க்ரீம்னு நல்லா என்ஜாய் பண்ணலாம்… புல்டே உன்னோடவே இருக்கப் போறாங்க…” ரிஷி சொல்ல ரோஷன் நம்பாமல் அன்னையைப் பார்த்தான்.

“ஈஸ் இட் ட்ரூ, மம்மி…?”

“எஸ் டா கண்ணா, நீ பீல் பண்ணறன்னு டாடி போகலாம்னு சொல்லிட்டாங்க…”

“வாவ் சூப்பர், சித்து நீயும் எங்களோட வர்றியா…?”

“இல்லடா தங்கம், எல்லாரும் லீவு போட்டா ஆபீஸ் வொர்க் யாரு பார்க்கறது… நீங்க என்ஜாய் பண்ணுங்க, நான் ஆபீஸ் வொர்க்கைப் பார்த்துக்கறேன்…” ரிஷி சொல்ல கங்கா அவனைக் கிண்டலாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப தான் ஆபீஸ் பக்கமே எட்டிப் பார்க்கறான், அதுக்குள்ள ஆபிஸையே தாங்கறதா நினைப்பு… போ, போ… இன்னும் எத்தன நாளைக்கு தான் இந்தப் பொறுப்பும், பருப்பும் எல்லாம் இருக்கப் போகுதுன்னு பார்க்கறேன்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“ரிஷி, குளிச்சிட்டு வா… டிபன் சாப்பிடலாம்…” அவள் சொல்ல எழுந்து தனது அறைக்கு சென்றான் ரிஷி. அன்றைய நாள் ஒரு மாதிரி நிறைவாய் இருக்க பாரதியைத் தேடியது மனம். அலைபேசியை எடுத்தவன் அவளுக்கு அழைத்தான்.

‘நீங்கள் அழைக்கும் சந்தாதாரர் வேறு ஒரு இணைப்பில் இருக்கிறார்’ என்றது ரெகார்டட் வாய்ஸ்.

“ப்ச்… பேசலாம்னு பார்த்தா போன் பிஸியா இருக்கே, யாரோட பேசிட்டு இருக்கா… சரி, குளிச்சிட்டு வந்திடுவோம்…” என்றவன் டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தான். அலுப்பு தீர கரீனா சொன்ன லக்ஸ் சோப் தேய்த்து புத்துணர்ச்சியை மீட்டுக் கொண்டிருக்க அலைபேசி அலறியது.

“ஆஹா, நான் கூப்பிடும்போது பிஸி, இப்ப குளிக்கும்போது கூப்பிடறாளே…” புலம்பிக் கொண்டே குளித்து முடித்தான். வெளியே வந்தவன் அலைபேசியில் பார்க்க அது சூர்யாவின் மிஸ்டு கால் என்றதும் ஏமாற்றமாய் உணர்ந்தான்.

“ப்ச்… அப்ப, ரதி கால் பண்ணலியா…?” யோசித்தவன் மீண்டும் அவளுக்கு அழைக்க அப்போதும் பிஸியாய் இருந்தது.

“யாருகிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்காளோ..?” சற்று கடுப்பாகத் தோன்ற போனைத் தூக்கி எறிந்துவிட்டு கட்டிலில் மல்லாந்தான் ரிஷி.

சிறிது நேரத்தில் “சித்து…” அழைத்துக் கொண்டே ரோஷன் உள்ளே வந்தான்.

“மம்மி சாப்பிடக் கூப்பிடறாங்க, வா சித்து…” மல்லாந்து படுத்திருந்தவனின் அருகே அமர்ந்து அழைத்தான்.

“டேய் கண்ணா, ஒண்ணா என்னை சித்தப்பான்னு கூப்பிடு, இல்லன்னா ரிஷின்னு கூடக் கூப்பிடு, அதென்ன சித்து…”

“எனக்குப் பிடிச்சிருக்கு கூப்பிடறேன், உனக்குப் பிடிக்கலயா…” ரோஷன் அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு கேட்டான். அப்போது போன் மீண்டும் ஒலிக்க அவசரமாய் எழ முயன்றவனை ரோஷன் விடவில்லை.

“சித்து, உனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்கான்னு சொன்னியே, அவ எப்படி இருப்பா…?”

“ம்ம்… உன் சித்தி போல இருப்பா…” சொன்னவன் அவனை சுமந்து கொண்டே எழுந்து அமர்ந்தான். போனை எடுக்க முயல அது தள்ளிக் கிடந்தது.

“டேய் கண்ணா, சித்தி தான் கூப்பிடறான்னு நினைக்கறேன்… போனை எடுத்துக் குடுடா…” என்றான் சற்று டென்ஷனாய்.

அலைபேசியை எட்டிப் பார்த்த ரோஷன், “சித்தி பேரு ரதி தானே சொன்ன, இதுல சூர்யான்னு வருதே…?” எனவும்,

“இவன் எதுக்கு மறுபடி கால் பண்ணறான்…” யோசித்துக் கொண்டே, “கண்ணா, நகரு… என் பிரண்டு கூப்பிடறான், பேசிட்டு வந்துடறேன்…” எனவும் ரோஷன் எழுந்து கொள்ள போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“டேய் ரிஷி, எவ்ளோ நேரமா கால் பண்ணறது..? போனை எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க…?”

“என்னடா, அப்படி என்ன தலை போற விஷயம்…?”

“தலை போறதா, வால் போறதான்னு தெரியல… உனக்கும் பாரதிக்கும் ஏதாவது பிரச்சனையா…?”

“அதெல்லாம் இல்லையே, ஏன் கேக்கற…?”

“அப்படியா… அப்புறம் ஏன் பாரதி அழுத மாதிரி இருந்தா…”

“என்னடா சொல்லற, பாரதி எதுக்கு அழணும்…? ஒழுங்கா தெளிவா சொல்லித் தொலை…” ரிஷிக்கு பதறியது.

“டேய், நம்ம ரகு அவன் குடும்பத்துல ஏதோ கல்யாணம்னு செங்கல்பட்டு கிளம்பினான்… நான்தான் அவனை தாம்பரம் பஸ் ஸ்டாண்டுல பஸ் ஏத்தி விடப் போனேன்… அப்பதான் காஞ்சிபுரம் போற பஸ்ல பாரதியைப் பார்த்தேன், அழுது முகம் எல்லாம் வீங்கின போல இருந்துச்சு… நான் பைக்கை நிறுத்திட்டுப் போறதுக்குள்ள பஸ் மூவ் ஆகிடுச்சு… அதான், உனக்கு எதுவும் தெரியுமோன்னு கேட்டேன்…”

“இல்லியே டா… நான் காலைல அவளைப் பார்த்தது, இப்ப கூட அவளுக்கு கால் பண்ணா பிஸின்னே வந்துட்டு இருக்கு… ஒருவேளை அவ அம்மாக்கு மறுபடி உடம்புக்கு முடியாமப் போயிருச்சா என்ன…?” என்றான் குழப்பத்துடன்.

Advertisement