Advertisement

அந்த டெக்னீஷியன் சரியான சாப்பாட்டுப் பிரியனாய் இருக்க வேண்டும்… இல்லாவிட்டால் வெளிநாட்டில் மொக்கையான உணவுகளை சாப்பிட்டு சோர்ந்திருந்த அவன் நாவின் சுவை அரும்புகள் தாய் நாட்டு சாப்பாட்டில் சிலிர்த்து எழுந்திருக்க வேண்டும்… விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்கினான்.

பாரதி சிக்கன் பிரைடு ரைஸ் சொல்ல, கெளதம் பிரியாணி லெக் பீஸை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இரு ஆண்களுடன் அமர்ந்து சாப்பிட பாரதிக்கு சற்று கூச்சமாக இருக்க பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஓகே..! பைனலா எல்லாருக்கும் ஒரு ஜூஸ் சொல்லி முடிச்சுக்குவோமா…? எனக்கு மின்ட் ஜூஸ்…” அந்த டெக்னிஷியன் சொல்ல, “எனக்கு ஆரஞ்ச்…” கெளதம் சொல்ல பாரதி, “எனக்கு ஜூஸ் வேண்டாம்…” என்றாள்.

“ஒய் மிஸ் பாரதி… நீங்க புட்டும் ஸ்மால் குவான்டிட்டி தான் எடுத்துக்கறீங்க, ஒரு ஜூஸ் ஆச்சும் குடிக்கலாமே… கம்பெனிக்கு பணத்தை மிச்சம் பிடிச்சுக் கொடுக்கறீங்களா…?” அந்த டெக்னீஷியன் சிரித்துக் கொண்டு அவளைக் கிண்டல் செய்ய புன்னகைத்தாள்.

“நோ சார், எனக்கு ஜூஸ் அவ்வளவா பிடிக்காது… ஓகே, உங்களுக்காக குடிக்கறேன்…” என்றாள். அவர்கள் கை கழுவி வந்து அமர பிரஷ் ஜூஸ் மேசைக்கு வந்தது.

மூவரும் குடிக்கத் தொடங்க பாரதி வேண்டா வெறுப்பாய் மெல்ல ஸ்ட்ராவை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கெளதமின் அலைபேசி சிணுங்க, எழுந்தவனின் கால் ஸ்லிப் ஆக, விழப் போனவன் சட்டென்று பாரதியின் ஜூஸ் கிளாஸ் இருந்த கையைப் பற்ற அவளது கையிலிருந்த ஜூஸ் உடையில் சிந்தியது.

“ஐயையோ, ஸாரி பாரதி… சட்டுன்னு விழப் போகவும் உங்களைப் பிடிச்சிட்டேன், ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி…”

“என்ன மிஸ்டர் கெளதம், பார்த்து எழுந்திருக்கக் கூடாதா…? இப்பப் பாருங்க, ஜூஸ் பிடிக்காதுன்னு சொன்ன பாரதி அதுலயே குளிச்சிட்டாங்க…” அந்த டெக்னீஷியன் கிண்டலாய் சொல்ல பாரதிக்கு எரிச்சலாய் வந்தது.

சட்டென்று நடந்த சம்பவத்தில் அதிர்ந்து போயிருந்தவள் முகத்தை சுளித்தபடி எழுந்திருந்தாள். அவளது லைட் எல்லோ சுரிதாரில் கிரேப் ஜூஸ் மிகவும் பிரகாசமாய் பளிச்சென்று வழிந்து கொண்டிருந்தது.

“ப்ச்… என்ன கெளதம், இப்படிப் பண்ணிட்டீங்க…?”

“சாரி பாரதி, நான் பாலன்ஸ் பண்ண உங்களைப் பிடிச்சுட்டேன், இல்லன்னா விழுந்திருப்பேன்… சீக்கிரம் ரெஸ்ட் ரூம் போயி வாஷ் பண்ணிட்டு வந்திருங்க… கறை ஆகாது…” கெளதம் சொல்ல வேறு வழியின்றி எழுந்தவள் ரெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றாள்.

சிறிது நேரத்தில் நனைந்த உடையுடன் அவள் திரும்பி வர பாவமாய் பார்த்தான் கெளதம்.

“சாரி பாரதி…”

“விடுங்க கெளதம், தெரியாமப் பண்ணினது தானே…”

“சரி, ஜூஸ் குடிங்க… உங்க ஜூஸ் சிந்தினதால வேற ஜூஸ் ஆர்டர் பண்ணி வாங்கிட்டேன்…”

“இல்ல பரவால்ல, எனக்கு ஜூஸ் வேண்டாம்…”

“அடடே, வாங்கினது வேஸ்ட் ஆகிடும், கொஞ்சமாச்சும் குடிங்க…” கெளதம் சொல்ல டெக்னீஷியனும் சொன்னான்.

“எஸ், நீங்க கொஞ்சம் டென்ஷனா இருக்கீங்க, ஜூஸ் குடிச்சு கூலாகுங்க பாரதி…” எனவும் அரை மனதுடன் குடித்தாள்.

*****************

மாலை நான்கு மணிக்கே குளித்து நல்ல சேலை உடுத்து கோவிலுக்கு செல்லத் தயாராகத் தொடங்கிவிட்டாள் சக்தி. அன்னைக்கு சுகமில்லாமல் போன போது அம்மனுக்கு விளக்குப் போடுவதாய் வேண்டுதல் வைத்திருக்க, அதை இன்று நிறைவேற்றுவதற்காய் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போவதாக சத்யனிடம் சொல்லவே அவனும் அவளைக் காண அங்கே வருவதாக சொல்லியிருந்தான்.

அத்தானைக் காணப் போகும் சந்தோஷத்தில் எப்போதும் விட பளிச்சென்று தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

புறப்பட்டு அன்னையிடம் வந்தவள் கோவிலுக்கு கிளம்புவதாகச் சொல்ல தேவதை போல் நின்ற மகளைக் கண்டு புன்னகைத்து தலையாட்டினார் தேவிகா.

அஷ்டலட்சுமி கால் வலிக்கு ஏதோ எண்ணையைத் தடவிக் கொண்டு ஸ்டூல் மீது காலை வைத்து அமர்ந்திருந்தார்.

“அத்த, கோவிலுக்குப் போயிட்டு வர்ற வழில நாளைக்கு வேண்டிய காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்…”

சக்தி சொல்ல, “ம்ம்… காய்கறி, ஒரு வாரத்துக்குத் தேவையானதை வாங்கிக்க, அப்படியே நம்ம வைத்தியர் என் கால் வலிக்கு ஒரு தைலம் தர்றேன்னு சொன்னார், அதையும் வாங்கிட்டு வந்திரு…”

“சரிங்கத்தை…”

“மேஜை மேல பணம் இருக்கு, ஐநூறு ரூபா எடுத்துக்க…”

“ம்ம்…” என்றவள் அத்தையின் அறைக்கு சென்று ஐநூறு தாள் ஒன்றை எடுத்து வந்து, “ஐநூறு எடுத்திருக்கேன் அத்தை…” என்று சொல்ல, “ம்ம்… கல்யாணம் முடிவான பொண்ணு, இருட்டு விழறதுக்கு முன்ன வீட்டுக்கு வந்திரு, பத்திரமாப் போயிட்டு வா…” என்றார் எப்பவும் போல அதட்டலுடன்.

“சரிங்கத்தை…” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு நடந்தாள்.

மனதில் அம்மனை விட அத்தானே நிறைந்திருக்க அவனைக் காணும் ஆவலில் புன்னகையுடனே நடந்தாள்.

“அத்தான் வந்திருப்பாரா…? போன் பண்ணிக் கேட்கலாமா…?” யோசித்தவள், “வேண்டாம்… வண்டி ஓட்டிட்டு இருப்பாரு, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்… முதல்ல விளக்குப் போடுவோம், அப்புறமும் வரலேன்னா கால் பண்ணுவோம்…” நினைத்தவள் ஆட்டோவுக்கு பணம் செலவு செய்ய மனமின்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோவிலுக்கு நடந்தே சென்றாள்.

நேரம் ஐந்தரை ஆகியிருக்க அன்று பவுர்ணமி என்பதால் கோவிலில் விசேஷ பூஜை இருந்தது. கூட்டமும் அதிகமாய் இருந்தது. வரிசையில் நின்று அம்மனைப் பிரார்த்தித்து பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டவள் மீதியை ஒரு சின்ன பேப்பரில் மடித்து பையில் வைத்துக் கொண்டாள். பிரகாரத்தை சுற்றி வந்து விளக்குப் போட்டு முடிக்கையில் நேரம் இருட்டத் தொடங்கியிருந்தது.

“இன்னும் அத்தானைக் காணமே…” யோசித்தவள் அலைபேசியை எடுத்து சத்யனுக்கு அழைக்க முயல அது நாட் ரீச்சபிள் என்றது.

“இப்பவே இருட்டத் தொடங்கிருச்சு, இன்னும் இவரைக் காணோம், நான் வேற காய்கறி வாங்கிட்டு வைத்தியரைப் பார்த்திட்டு தான் வீட்டுக்குப் போகணும், இவர் எப்ப வருவார்னே தெரியலியே… ரொம்ப இருட்டினா அத்தை வேற கத்துவாங்க…” கவலையுடன் யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

“பாப்பா…” அருகே ஒரு பெண் குரல் ஒலிக்க திரும்பினாள். அவள் எதிரில் நின்று சிநேகமாய் புன்னகைத்த பெண்மணிக்கு ஐம்பது வயதிருக்கலாம். கையில் பிரசாதப் பாத்திரத்துடன் நின்றிருந்தார்.

“இந்தா கண்ணு, பிரசாதம் வாங்கிக்க…” ஒரு தூக்குப் பாத்திரத்தில் பொங்கலை வைத்துக் கொண்டு நின்றார். பாத்திரத்தில் எட்டிப் பார்க்கும் அளவே பொங்கல் தெரிந்தது.

அவள் புன்னகையுடன் கை நீட்ட பெரிய ஸ்பூனில் எடுத்து ஒரு தொன்னைக் கப்பில் போட்டு நீட்ட வாங்கிக் கொண்டு நன்றி கூறினாள் சக்தி.

“ரொம்ப நன்றி மா…”

“உனக்கு தான் கடைசியா பிரசாதம் கிடைக்கனும்னு இருக்கு, சாப்பிடு கண்ணு…” என்றவர், “உஸ்ஸ்…” என்று பெருமூச்சுடன் அருகே அமர சாப்பிடத் தொடங்கினாள் சக்தி.

“இந்தக் கோவில்ல எல்லா மாசமும் பவுர்ணமிக்கு பிரசாதம் கொடுப்பேன், உன்னைப் பார்த்ததில்லையே கண்ணு, ஊருக்குப் புதுசா…” அவர் கேட்க புன்னகைத்தாள்.

“இல்லம்மா, இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தான் என் வீட்டுக்கு… அம்மா கொஞ்சம் உடம்பு முடியாதவங்க, தனியா விட்டுட்டு வர முடியாது… அதனால நான் எப்பவாச்சும் தான் கோவிலுக்கு வருவேன், இன்னைக்கு கூட அம்மாவுக்காக விளக்கு போட வேண்டி இருந்தேன், அதான் வந்தேன்…”

“ஓ… ரொம்ப நல்லது கண்ணு, பெத்தவளைப் பார்த்துக்கறது பெரிய புண்ணியம்… உனக்கு நல்லதே நடக்கும் தாயி…”

“ரொம்ப நன்றி மா…” சொன்னவளுக்கு தொண்டைக்குள் ஏதோ அவஸ்தை தோன்ற சட்டென்று இருமினாள்.

“என்னாச்சு மா… ஏன் இருமற…?”

“ஒ..ஒரு மாதிரி தொண்டை அடைக்கிற போ..ல இருக்கு மா…” சொல்லும்போதே தொண்டை அதிகமாய் வலிப்பது போல் தோன்றியது சக்திக்கு.

“ஓ… தண்ணி குடிச்சா சரியாகிடும், இந்தா குடி…” என்றவர் தனது கூடையில் இருந்த பாட்டிலை எடுத்து நீட்ட வாங்கிக் குடித்தவளுக்கு ஒரு மாதிரி தலை சுற்ற மயக்கம் வருவது போல் இருந்தது. சட்டென்று மயங்கி சரிந்தவளை தாங்கிக் கொண்டாள் அந்தப் பெண்மணி. அவர்கள் சற்று ஒதுக்குப் புறமாய் அமர்ந்திருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. அப்பெண்ணின் இதழோரம் வெற்றிப் புன்னகை தெரிந்தது.

வார்த்தையில் விஷம் தடவி

வாளாய் குத்தும் சில முகங்கள்…

முகத்தில் நேசமணிந்து துரோகம்

இழைக்கும் சில முகங்கள்…

இனிப்பானவை எல்லாம்

என்றும் நல்லதும் அல்ல…

கசப்பானவை எல்லாம்

என்றும் கெட்டதும் அல்ல…

எல்லாம் துரோகத்தின் மாயையே…

Advertisement