Advertisement

பரவால்லமா, என்மேல உள்ள கோபத்துல உன்னைக் கல்யாணம் பண்ணாம போயிருவானோன்னு தான் நான் பயந்தேன்… நல்ல வேளையா, அப்படி எதுவும் பண்ணாம பேசின முகூர்த்தத்துல உன் கழுத்துல ஹரி தாலியைக் கட்டிட்டான்… என்ன, நான் ஜெயிலுக்குப் போன வேதனைல நம்ம அம்மாதான் சீக்கிரம் போயி சேர்ந்துட்டாங்க…”

“ம்ம்… என் அண்ணன் மேல கேஸ் போடாதீங்கன்னு நான் எவ்ளோ கெஞ்சினேன், கொஞ்சமாச்சும் இறங்கி வந்தாரா…?  பிறந்த வீட்டோட உனக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு தானே தாலியே கட்டினார்… மகன் ஜெயில்ல, பொண்ணை கட்டிக் கொடுத்ததோட அந்த சொந்தமும் போயிருச்சு, அதுலதான் அம்மா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டாங்க…” என்றாள் கங்கா.

“ம்ம்… ஹரி மட்டும் என்னைக் காரணம் காட்டி உன்னைக் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, அவனை உயிரோடவே விட்டிருக்க மாட்டேன்… உன் சந்தோஷத்துக்காக தான் ஜெயில்ல இருந்து வந்ததும் அவனை எதுவும் பண்ணாம அமைதியா நம்ம ஊருக்குப் போயிட்டேன்…”

“தெரியும்ணா… உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டு இவங்க ரெண்டு பேரையும் அப்படி கவனிச்சுக்கறேன், அதுவும் அந்த ரிஷிக்கு நான் அம்மா போலவாம்… அவன் ஒரு இடியட்டா இருக்கிறதால இத்தனை நாளா விட்டு வச்சிருந்தேன், இனி சும்மா இருக்க முடியாது… அவன் என் கை பொம்மையா இருந்தவன், பாரதியோட கை பொம்மையா மாற ரொம்ப நேரம் ஆகாது…” என்றாள் சற்று கோபத்துடன்.

“ம்ம்… பதட்டப்படாத கங்கா… இந்த விஷயத்துல நீ ரொம்ப பொறுமையா இருக்கணும், இவங்க பக்கத்துல நின்னுகிட்டே பாரதியை கதற விடணும்… ரிஷி கல்யாணம் பண்ணப் போற பொண்ணு உன் சொல் பேச்சு கேக்கற அடிமையா இருக்கணுமே ஒழிய அவனை உனக்கு எதிரா திருப்புறவளா இருக்கக் கூடாது… நீ தள்ளி நின்னபடியே உன் மேல சந்தேகம் வராம அவ மேல சந்தேகத்தை உருவாக்கணும்…”

“ம்ம்… கரக்ட் அண்ணா, அந்த பாரதியை எப்படி என் கைக்குள்ள கொண்டு வர்றதுன்னு தான் யோசிக்கறேன்…”

“ம்ம்… நான் சொல்லற போல செய்…” என்ற கணேஷ் சொல்லிய விஷயங்களை கண்கள் விரிய மனதில் பதிய வைத்துக் கொண்டாள் கங்கா.

“சூப்பர்ணா, நாம அடிச்சது தெரியக் கூடாது, ஆனா எதிராளியும் விழணும்… பிரில்லியன்ட் ஐடியா…” என்று சந்தோஷமாய் சகுனியைப் பாராட்டிய கூனி, மகன் வருவதைக் கண்டதும் பேச்சை நிறுத்தினாள்.

“அம்மா, கேம் முடிச்சுட்டேன்… நெக்ஸ்ட் எங்க போகலாம்…?”

“நெக்ஸ்ட் ரெஸ்ட், சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம்…”

“ஓகே…” ரோஷன் தலையாட்ட மூவரும் கிளம்பினர்.

********************

ஜோசியர் கிளம்பியதும் அலுவலகம் சென்ற ரிஷி பாரதியின் முகத்தை நோக்க வாடிப் போயிருந்தது. அவனைக் கண்டதும் “குட்மார்னிங் சார்…” என்றவளிடம், “என் ரூமுக்கு வா…” அதிகாரமாய் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றவனை முறைத்து விட்டு பின்னில் சென்றாள் பாரதி.

“என்ன ரதி, முகம் வாடிருக்கு…?” நேற்று எதுவுமே நடக்காத பாவத்தில் ரிஷி கேட்க முறைத்தாள் பாரதி.

“ஹாஸ்டல்ல மோட்டார் ரிப்பேர், அதான்… முகத்துக்கு தண்ணி ஊத்தாம வாடிருக்கு…” கிண்டலாய் பதில் சொல்ல, சட்டென்று சிரித்து விட்டான்.

“ஹாஹா… மேடம் கோபமா இருக்கீங்களோ…?”

“இல்ல, குளுகுளுன்னு கூலா இருக்கேன்…”

“நான் வேணும்னா ஹாட்டாக்கி தரட்டுமா…?” வில்லங்கமாய் அவன் கேள்வி கேட்க பதில் சொல்லாமல் முறைத்தாள்.

“எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க சார்… நிறைய வேலை வெயிட்டிங்ல இருக்கு…”

“ரதி, எதுக்கு இப்ப முருங்க மரத்துல ஏறி உக்கார்ந்துட்டு இருக்க… நேத்து நீ அண்ணியை அப்படி சொல்லவும் ஏதோ கோபத்துல உன்கிட்ட சொல்லாம கிளம்பிட்டேன், அதுக்காக மூஞ்சியத் தூக்கி வச்சுக்காம கொஞ்சம் இறங்கி வா மா…”

“நான் முருங்க மரத்துல ஏறி உக்கார்ந்திருக்கேனா…? அப்ப என்னை வேதாளம்னு சொல்ல வர்றீங்க, அப்படித்தானே…”

“ப்ச்… எது சொன்னாலும் இப்படி சண்டக்கோழி போல சிலிர்த்துகிட்டு நின்னா எப்படி…?”

“ஓ… என்னை சண்டக்காரின்னு வேற சொல்லுறீங்களா…?” அவள் பதிலுக்கு கோபப்பட்டுக் கொண்டே இருக்க சட்டென்று எழுந்த ரிஷி பட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலக கண்கள் விரிய அதிர்ச்சியுடன் நின்றாள் பாரதி.

“முக்கியமான விஷயம் சொல்ல வந்தா, அதிகமா பேசிட்டு இருக்க..! இனி பேசினா, பேசற உன் லிப்லயே கிஸ் பண்ணுவேன்…” ரிஷி மிரட்டலாய் சொல்ல திகைத்து அவனையே பார்த்தபடி நின்றாள் பாரதி.

“ம்ம்… இப்படி புரியுற போல சொல்லணும்…” முனங்கினாள்.

“ரதி மா, முகத்துக்கு என்ன பவுடர் யூஸ் பண்ணற, செம வாசனையா இருக்கு…” சொன்னவனை முறைக்க சிரித்தான்.

“போதும் மா… முறைக்கிற முறைப்பில கண்ணு வெளிய வந்துடப் போகுது… நான் பண்ணது தப்புதான், சாரி…”

“அவ்ளோதானே, நான் போயி வேலையைப் பார்க்கறேன்…” சொல்லி திரும்பியவளின் கை பிடித்து நிறுத்தினான்.

“ப்ச் இரு, நேத்து என் அண்ணியைப் பத்தி என்ன சொன்ன…?”

“நிறைய சொன்னேன், எதைக் கேக்கறீங்க…?”

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா, ஒத்துக்க மாட்டாங்கன்னு தானே சொன்ன…?”

“ஆமாம், கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…”

“தப்பு… சந்தோஷமா ஒத்துகிட்டாங்க, அதுவும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்னு நான் சொல்லாமலே புரிஞ்சுகிட்டு அண்ணன் கிட்டயும் சொல்லி ஒத்துக்க வச்சிட்டாங்க…”

“எ..என்னது, ஒத்துகிட்டாங்களா…?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆமா, கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு ஜோசியரைக் கூட காலைல வரவழைச்சிட்டாங்க… அவர்தான் ஒரு மாசத்துக்கு கல்யாணப் பேச்சை எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்…”

“ஓ… என்னால நம்ப முடியலியே…!” என்றாள் குழப்பமாக.

“நம்பணும் ரதிம்மா, இப்பவாச்சும் என் அண்ணி ரொம்ப நல்லவங்கன்னு நீ நம்பணும்… தேவையில்லாம இனி அவங்களைத் தப்பா பேசாத…” ரிஷி சொல்ல அதிர்ச்சி விலகாத விழிகளுடன் அவனைப் பார்த்தாள் பாரதி.

“இது எப்படி சாத்தியம்…? கங்கா என்னை ரிஷிக்கு மணமுடிக்க எப்படி சம்மதிப்பாள்…? வாய்ப்பே இல்லை,  இதில் நிச்சயம் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது…” அவள் உள்மனது கூக்குரலிட குழப்பமாய் ரிஷியைப் பார்த்தாள்.

“சரிம்மா, இப்ப நீ போயி உன் வொர்க்ஸ் பாரு, அண்ணி இன்னிக்கு ஆபீஸ் வராததால அந்த வொர்க் எல்லாம் நான்தான் முடிக்கணும்… லஞ்சுக்கு ரெண்டு பேரும் வெளிய போகலாம், அப்போ எல்லாத்தையும் விரிவா சொல்லறேன்…” ரிஷி சொல்ல நகர்ந்தாள். மனது மிகவும் குழம்பிக் கிடந்தது.

“இது எப்படி, என்னிடம் ஓப்பனாய் தன்னைப் பற்றிப் பேசிய கங்கா, என்னைக் கண்டாலே வெறுப்பை உமிழும் கங்கா, எப்படி ரிஷியைக் கல்யாணம் பண்ண சம்மதித்திருப்பாள்… அதுவும் ஹரி சாரிடமும் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறாள் என்றால் சத்தியமாய் நம்ப முடியவில்லை, நிச்சயம் இதில் ஏதோ சூழ்ச்சி ஒளிந்து கிடக்கிறது… அவளுடனான ஆட்டத்துக்கு என்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்… பார்த்து விடலாம், இறுதியில் வெல்வது என் நேர்மையா, அவள் சூழ்ச்சியா என்று…” பாரதியும் துணிந்து விட்டாள்.

அதற்குமேல் யோசிக்க நேரமில்லாமல் வேலை அவளை இழுத்துக் கொள்ள மதியம் ரிஷி ஹோட்டலுக்குப் போகலாம் என்றதும் தான் நிமிர்ந்தாள். ஹோட்டலில் அவன் வீட்டில் நடந்ததைத் தெளிவாய் சொல்ல மேலும் குழம்பினாள் பாரதி. அன்றைய நாள் வேலை பிஸியில் கழிய மாலை ரிஷியே அவளை ஹாஸ்டலில் விட்டுச் சென்றான்.

இரவு சக்தி தங்கையை அழைக்க அவளிடம் ரிஷி சொன்னதைக் கூறினாள் பாரதி.

“ம்ம்… பரவால்லியே ரிஷியோட அண்ணன், அண்ணியும் நல்லவங்க போலருக்கு… பணக்கார பந்தா இல்லாம உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்களே, ஜோசியர் சொன்ன ஒரு மாசம் கழிச்சே பேச்சைத் தொடங்கட்டும்…”

வான்மதியிடம் சொல்ல அவளுக்கும் சந்தோஷமாய் இருந்தாலும், “அந்த கங்கா எப்படி உடனே ரிஷி உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சா…?” என்ற சந்தேகக் கேள்வியைக் கேட்காமல் இல்லை.

மறுநாள் ஹரியும் கங்காவும், ஆபீசில் பாரதியை அழைத்து அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தனர்.

“உன்னைப் போல ஒரு பொண்ணு ரிஷிக்கு மனைவியா வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும் பாரதி… உன் அக்காவுக்கு முதல்ல நல்லபடியா கல்யாணம் முடியட்டும்… அதுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேட்கத் தயங்காதே…” என்ற கங்காவின் முகத்தில் எதையோ தேட முயன்ற பாரதிக்கு அவள் புன்னகையைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து வந்த நாட்களில் கங்கா நடந்து கொள்வதைக் கண்டு இது அவள்தானா, என பாரதிக்கு சந்தேகமே வந்து விட்டது.

பாரதியிடம் மிகவும் மரியாதையாய் அன்போடு நடந்து கொண்டாள் கங்கா.

ரிஷி அவளிடம், “என் அண்ணியைப் பத்தி நீ என்னெல்லாம் சொன்ன, ஆனா அவங்க உன்கிட்ட எப்படி அன்பா நடந்துக்கறாங்க, பார்த்தியா…?” எனப் பெருமையுடன் கேட்க பாரதியால் நம்பவும், பதில் சொல்லவும் முடியவில்லை. கங்காவின் உண்மையான முகத்தைக் கண்டவளுக்கு இந்த வேஷம் மனதில் பயத்தைக் கொடுத்தது.

பொய்க்கு பல நூறு முகங்கள்

உண்டு… உள்ளொன்று

வைத்துப் புறமொன்று

பேசும் நாடக முகம் அது…

ஆனால் உண்மைக்கு

என்றும் ஒரே முகம்தான்…

அது என்றும் உண்மையை

மட்டுமே பிரதிபலிக்கும்…

Advertisement