அத்தியாயம் – 24

“ரோஷன், ரிஷி…! ரெண்டு பேரும் எழுந்திருங்க…” கங்காவின் குரலில் போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான் ரிஷி. அவன் மீது காலைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்த ரோஷன் “குட் மார்னிங் மம்மி…” என எழுந்து அமர்ந்தான்.

“குட் மார்னிங், நீ உன் ரூமுக்குப் போயி பிரஷ் பண்ணிட்டு பால் குடி…” மகனை அனுப்பிவிட்டு ரிஷியிடம் திரும்பினாள்.

“ரிஷி, உனக்கு ஜாதகம் பார்க்க இன்னிக்கு ஜோசியர் வர்றார், அவர் வந்துட்டு கிளம்பினதும் நீ ஆபீஸ் போனாப் போதும்… ரோஷனை நான் இன்னிக்கு வெளிய கூட்டிட்டுப் போறேன், சோ, நான் லீவு…” என்றாள்.

“ஓகே அண்ணி, எனக்கு பெட் காபி…” படுக்கையில் நெளிந்து அமர்ந்தபடி கேட்ட ரிஷியை முறைத்தாள் கங்கா.

“வேண்டாம் ரிஷி, உன்னைப் பார்த்து ரோஷனும் அதையே பண்ணுவான்… ஒழுங்கா பிரஷ் பண்ணிட்டு வா, காபி கலந்து வைக்கறேன்…” சொல்லிவிட்டு கங்கா வெளியே செல்ல ரிஷி சலிப்புடன் எழுந்தான்.

குளியலறைக்குள் நுழைந்தவன் குளித்து விட்டே ஹாலுக்கு வர பூஜையறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் கங்கா.

“ரிஷி, அஞ்சே நிமிஷம்… வந்துடறேன்…” சொன்னவள் விளக்கேற்றி ரிஷியின் ஜாதகத்தை சாமி முன்னில் வைத்துப் பிரார்த்தித்த பின்னரே நகர்ந்தாள்.

ஹாலில் அமர்ந்து பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்த ஹரி, “ரிஷி, நம்ம ஜோசியர் காலைல ஒன்பது மணிக்கே வந்துடறேன்னு சொன்னார்… அவர்கிட்ட உன் கல்யாண விஷயமா கேட்டுட்டு பாரதி வீட்டுல பேசறது தான் சரியா இருக்கும்… நீ என்ன சொல்லற…?” தம்பியிடம் கேட்டான்.

“சரிண்ணா, எனக்கு எது நல்லது, கெட்டதுன்னு என்னை விட அண்ணிக்கு தான் தெரியும்… சோ, அண்ணி சொல்லறதை அப்படியே பண்ணிடுவோம்…” என்றான் ரிஷி.

காபியுடன் வந்த கங்கா அதைக் கேட்டு புன்னகைத்தாள்.

“ரிஷி, நான் வளர்த்த புள்ளை… நம்ம என்ன நினைக்கிறமோ, அதைத்தான் செய்வான்…” கங்கா பெருமையாய் சொல்ல,

“ம்ம்… பரவால்ல, என் தம்பியை சொல் பேச்சு கேக்கற புள்ளையா நல்லாதான் வளர்த்திருக்க…” மெச்சினான் ஹரி.

காலை டிபனை நேரமே முடித்துக் கொள்ள சரியாய் ஒன்பது மணிக்கு ஜோசியர் வந்துவிட்டார். அவருக்கான அடையாளம் எதுவுமின்றி சாதாரணமாய் வேஷ்டி, சட்டையில் இருந்தார். ரிஷியின் ஜாதகத்தை விரித்து வைத்துக் கொண்டவர், சோழியை உருட்டி, விரல்களை விரித்து, ஏதேதோ கணக்கு போட்டு ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டார்.

“என்ன ஜோசியரே… என் தம்பிக்கு இப்ப கல்யாணத்துக்குப் பார்க்கலாம் தானே, எதுவும் பிரச்சனை இல்லையே…” வெகுநேரம் அவர் எதுவும் சொல்லாததால் ஹரி கேட்டான்.

நெற்றியை சுருக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடியை மேலேற்றிக் கொண்ட ஜோசியர் யோசனையுடன் பார்த்தார்.

“அதைத் தான் கணிச்சிட்டு இருக்கேன் தம்பி… இந்த ஜாதகத்தோட ராசிப்படி இப்ப கிரகநிலை கொஞ்சம் மோசமா இருக்கு… ஏழரை சனி உச்சத்துல இருக்கு, இந்த நேரத்துல சுபகாரியம் பண்ணினா நிறைய தடங்கல் வரலாம்…” அவர் சொல்ல கங்கா மனதுக்குள் பொங்கிய சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு கணவனைப் பார்க்க அவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

ரிஷி அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் நடப்பதை இயல்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன ஜோசியரே, இப்படி சொல்லறீங்க…? நாங்க கல்யாணத்துக்குப் பார்க்கலாமான்னு கேக்க தான் உங்களைக் கூப்பிட்டோம்… எப்ப இவனுக்கு கல்யாண யோகம் வருது…? சனிதிசை நடக்கும்போது கல்யாணம் வைக்கிறது சகஜம் தானே…” என்றாள் கங்கா.

“சனிதிசைல கல்யாணம் வைக்கிறது தப்பில்லை மா… ஒரு மாசத்துக்கு கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம்னு தான் சொல்லறேன்… இன்னும் ஒரு மாசத்துல குருப்பெயர்ச்சி வரப்போகுது, குருவும், சனியும் நட்பு கிரகங்கள்… இவர் ராசியில குருவோட பார்வை விழப் போகுது, அதனால ஒரு மாசம் கழிச்சு கல்யாணம் பேசினா பொருத்தமான ஜாதகம் அமையும், கல்யாணமும் தடையில்லாம நடக்கும்…”

“ஓ… சரி, எந்த திசைல இருந்து பொண்ணு அமையும்… எந்த நட்சத்திரம் உள்ள ராசிங்க எல்லாம் இந்த ஜாதகத்துக்கு சேரும்னு குறிச்சுக் கொடுங்க…”

“அதெல்லாம் குறிச்சுத் தர்றேன் மா… ஆனா ஒரு மாசத்துக்கு முன்னாடி கண்டிப்பா கல்யாணத்துக்கான எந்த முயற்சியும் எடுக்காதீங்க, அது பிரச்சனைல தான் முடியும்…”

“ம்ம்… சரி ஜோசியரே, வேற விஷயம் எல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” ஹரி கேட்டான்.

“இந்த ஜாதகம் இத்தனை நாளா குடத்துக்குள்ள போட்ட விளக்காட்டம் பிரகாசமில்லாம தான் எரிஞ்சிட்டு இருந்துச்சு, இப்ப நல்ல நேரம் தொடங்கிருச்சு, இனி வெண்ணிலா வெளிச்சம் ஊருக்கே வெளிச்சத்தைக் கொடுக்கிற போல தொட்டதெல்லாம் வெற்றில முடியும்… நினைச்சது நடக்கும், நல்ல பேர் தேடி வரும்… இதுவரை வாழ்க்கைல சந்திச்ச கசப்பெல்லாம் மாறி சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்… ஆனா, இதெல்லாமே ஒரு மாசத்துக்குப் பிறகு தான் நடக்கும்…” அவர் தெளிவாய் சொல்ல கேட்டுக் கொண்டனர்.

“பொருத்தமான ஜாதகம் தேடி நீங்க அதிகமெல்லாம் அலைய வேண்டாம், தம்பி மனசுக்குப் பிடிச்ச பொண்ணை அவரே கண்டு பிடிப்பார்… இத்தனை நாள் அவர் இழந்த சந்தோஷமும், வாழ்க்கையும் எல்லாம் அந்தப் பொண்ணால திரும்பக் கிடைக்கும்… இந்த ஜாதகத்துக்கு விடியல் தர்ற வெண்ணிலாவா ஒரு பொண்ணு வருவா…”

“ஜோசியரே, நீங்க சொல்ல வர்றது…”

“மனசாரக் காதலிச்ச பொண்ணை ஊரறிய கை பிடிக்கற யோகம் தான் இந்த ஜாதகத்துக்குன்னு சொல்ல வர்றேன்…” என்றதும் ரிஷியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி, அதை கவனித்த ஹரியின் மனதில் சந்தோஷமும், கங்காவின் மனதில் எரிச்சலும் நிறைந்தது.

“வேற ஏதாச்சும் கேட்கணுமா…?”

“இல்ல ஜோசியரே, நீங்க சொன்னதே போதும்…”

“சரி தம்பி, ஒரு மாசம் அமைதியா இருங்க… எல்லாத்துக்கும் ஒரு நல்ல விடியல் வரும், அப்ப நான் கிளம்பட்டுமா…?”

“சரி ஜோசியரே கிளம்புங்க, கங்கா…” என்றதும் அவருக்கான தட்சணையை ஒரு தட்டில் வைத்து நீட்டினாள் கங்கா. வாங்கிக் கொண்டவர் சந்தோஷமாய் கிளம்பினார்.

“என்னடா தம்பி, ஒரு மாசம் காத்திருப்ப தானே…” ஹரி கிண்டலாய் கேட்க, “இந்த ஜாதகம் பார்க்கிறதுல எல்லாம் எனக்கு பெருசா நம்பிக்கை இல்லண்ணா, ஆனா இந்த ஜோசியர் சொல்லறதைப் பார்த்தா கொஞ்சம் நம்பிக்கை வர்ற போல தான் இருக்கு…” ரிஷி புன்னகையுடன் சொல்ல, சிரித்தான் ஹரி.

“ஹாஹா… பார்த்தியா கங்கா, இவனுக்கு லவ் மேரேஜ் நடக்கும்னு சொன்னதும் ஐயாவுக்கு ஜோசியத்துல நம்பிக்கை வந்திருச்சாம்…” ஹரி தம்பியை கிண்டலடித்தான்.

அவர்களிடம் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் கங்காவின் மனதுக்குள் புயலடித்தது.

“அதற்குள் ஹரியின் அலைபேசி சிணுங்க அதில் வந்த எண்ணைக் கண்டவன், “அடடே, இன்னிக்கு ஒரு முக்கியமான கஸ்டமர்கூட மீட்டிங் இருக்கு, மறந்தே போயிட்டேன்… சரி கங்கா, நான் கிளம்பறேன்… ரிஷி நீ ஆபீஸ் போயிடு, நான் முடிஞ்சா வந்திடறேன்…” சொன்னவன் தனது அறைக்கு செல்ல ரிஷியும் கிளம்பத் தயாரானான்.

அவர்கள் சென்றதும் ரோஷனை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினாள் கங்கா. ஒரு பெரிய மாலுக்கு சென்று அவனுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்தாள்.

“கங்கா…” பின்னில் கேட்ட குரலில் ஆர்வத்துடன் திரும்ப அண்ணன் கணேஷ் நின்றிருந்தான்.

“வாண்ணா, உன்னை தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன்…”

“ஹலோ மாமா… எனக்கு வீடியோ கேம் விளையாடணும், கூட்டிப் போங்க…” ரோஷன் ஆர்வமாய் கேட்க, “வாடா மாப்ள, உனக்கில்லாததா…” என்ற கணேஷ் அவனை அழைத்துக் கொண்டு நடந்தான். அவனை விளையாட அனுப்பிவிட்டு சற்றுத் தள்ளி இருந்த நாற்காலியில் அண்ணன், தங்கை இருவரும் அமர்ந்தனர்.

“சென்னைல ஏதோ வேலை இருக்குன்னு சொன்னியே, முடிஞ்சுதாண்ணா…?”

“இல்ல மா… நேத்து ஈவனிங் ரோஷனை உங்க வீட்டுல விட்டுட்டு லாட்ஜுல ரூம் போட்டுப் படுத்தவன் தான், டயர்டுல நல்லாத் தூங்கிட்டேன்… நீ கால் பண்ணவும் தான் எழுந்தேன்… அதான், அந்த வேலையை ஈவனிங் தள்ளி வச்சிட்டு உன்னைப் பார்க்க வந்தேன்…”

“ம்ம்… சாரிண்ணா, உன் தங்கச்சிக்கு இங்கே இவ்ளோ பெரிய வீடிருந்தும் நீ லாட்ஜ்ல தங்க வேண்டிய சூழ்நிலையை நினைச்சா எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு…”

“ஹேய், இதுக்காக எல்லாம் வருத்தப்படாத கங்கா மா… நம்ம சூழ்நிலை என்னன்னு தெரியாதா…? என்மேல உள்ள கோபத்துல ஹரி உன்கிட்ட எப்படி நடந்துப்பானோன்னு தான் எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு, நல்லவேளை… உன்கிட்ட அவன் எந்த கோபத்தையும் காட்டல…”

“ம்ம்… நான் போடற வேஷம் அப்படி… அண்ணன், தம்பி ரெண்டு பேர் கிட்டயும் புல் டைம் அன்பைக் கொட்டி நடிச்சிட்டு இருக்கேன், எப்படி கோபப்படுவாங்க…”

“ம்ம்… கரக்ட் மா… தப்பு பண்ணலாம், ஆனா மாட்டிக்கற போல தப்பு பண்ணக் கூடாது… நான் அதுல தான் தவறிட்டேன், என் பிரண்டா இருந்தும் ஹரி என்னை மன்னிக்கவே இல்லை…”

“நடந்ததைப் பேசி இனி என்னாகப் போகுது…? அவருக்கு பிரண்டா இருந்தும், என்னைக் கல்யாணம் முடிக்க பேசி இருந்தும், நீங்க கம்பெனில பண்ணின மோசடியைக் கண்டு பிடிச்சதோட போலீஸ்ல புகார் பண்ணி உங்களுக்கான தண்டனையையும் வாங்கிக் கொடுத்துட்டாரே… என்னால எதுவும் பண்ண முடியாமப் போயிருச்சே…” வருந்தினாள்.