Advertisement

“மனதுக்குள் அவனை யோசிக்க சற்று பாவமாய் இருந்தது. பொய்யான அன்புக்கே இத்தனை நேசிப்பவன் உண்மையான அன்பு கிடைத்தால் எப்படி இருப்பான்…?” பொறுமையாய் தான் புரிய வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

முதன் முதலாய் அவளாய் உரிமையெடுத்து அவன் தோளில் சாய்ந்திருக்க, அவனுக்கும் நெகிழ்வாய் இருந்தது. எதுவும் பேசாமல் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“இன்னும் கோபம் போகலியா…?” கொஞ்சும் குரலில் பாரதி கேட்க, “கோபம் போயிருச்சு, வீட்டுக்குப் போகத்தான் தோணல…” என்றான் காதலில் நெகிழ்ந்த குரலில்.

“டைம் ஆச்சு, போகலாம் ரிஷி…” சொன்னவள் அவனை விட்டு காருக்குள் அமர வந்து வண்டியை எடுத்தான்.

“ரதி…!”

“ம்ம்…”

“இப்பவும் என் தோள் ப்ரீயா தான் இருக்கு, நீ சாஞ்சுக்க, நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…”

கரகரப்பான குரலில் குறும்பான புன்னகையுடன் ரிஷி சொல்ல அவனையே சிறு முறைப்புடன் பார்த்தாள் பாரதி.

அழகும், ஆண்மையுமாய், சிறு கள்ளத்தனத்துடன் சிரிக்கும் கண்களுக்குப் போட்டியாய் கன்னத்தில் விழும் சின்னக் குழியில் குடித்தனம் செய்ய எழுந்த ஆசையைக் கஷ்டப்பட்டு தவிர்த்தாள். மனதுக்குப் பிடித்த ஆண்மகனின் அருகாமையில் மனம் தவிக்க, அவனில் அடங்கவே தோன்றியது. ஆனாலும் பெண்மை தடுக்க அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி சிரித்தான்.

“அச்சோ ரதிம்மா, அப்படிப் பார்க்காத…! எனக்கு வெக்க வெக்கமா கம்மிங்… விட்டா கண்ணாலயே என்னைக் கற்பழிச்சிடுவ போலருக்கு…” சிணுங்கியவனின் கையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தாள் பாரதி.

“ச்சீ… பேச்சைப் பாரு…!”

“ஹூக்கும், அப்படியே கண்ணை உருட்டி ஆளை விழுங்குற போல பார்ப்பாங்களாம்… ஆனா, நாங்க எதுவும் சொல்லக் கூடாதாம்… எந்த ஊரு நியாயம் இது…?” அவன் சிரிப்புடன் கேட்க நாணத்தில் சிணுங்கியவள் அவன் தோளில் முகம் மறைக்க முயன்றாள். நேரம் இருட்டத் தொடங்கியிருக்க ஹாஸ்டலை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

“ரதி…! இன்னும் கொஞ்ச நேரம் தான்… நீ ஹாஸ்டலுக்குப் போயிடுவ, நான் வீட்டுக்குப் போயிருவேன்…”

“ம்ம்…”

“எனக்கு எப்பவும் உன் கூடவே இருக்கணும் போலருக்கு, பேசாம ஹாஸ்டலைக் காலி பண்ணிட்டு நீ நம்ம வீட்டுலயே வந்து தங்கிக்கறியா…?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் புன்னகைக்க சட்டென்று அவள் இடுப்பில் கிள்ள துள்ளிய பாரதி முறைத்தாள்.

“ரதி…! சேலைல உன்னைப் பார்த்ததுமே சொல்லணும்னு நினைச்சேன்… நீ அழகுல உண்மைலயே ரதிக்கு செம டஃப் கொடுக்கற தெரியுமா…?” காதலாய் ஒலித்த ரிஷியின் குரலில் நிமிர்ந்த பாரதி மென்மையாய் புன்னகைத்தாள்.

“அதான் ஹாஸ்பிடல்ல எல்லார் முன்னாடியும் என்னை அப்படி வெறிச்சுப் பார்த்துட்டு இருந்திங்களே… கொஞ்சமாச்சும் பெரியவங்க இருக்காங்கன்னு விவஸ்தை இருக்கா…? அவங்க முன்னாடி அப்படிப் பார்க்கறிங்க…”

“என் பொண்டாட்டியை நான் பார்க்கறேன்…”

“ஓஹோ, இன்னும் முறைப்படி உங்க வீட்ல எதுவும் பேசவே இல்லை… அதுக்குள்ள போண்டா, டீன்னு எல்லாம் கற்பனைய பட்டம் செய்து பறக்க விடாதீங்க, அப்புறம் வருத்தப்படப் போறீங்க…”

“ஏன்..? பேசினா மட்டும் என்ன…? என் விருப்பத்துக்கு எதிரா எங்க வீட்டுல எதுவும் சொல்ல மாட்டாங்க…”

“ம்ம்… நினைச்சுட்டு இருங்க, என்னைக் கல்யாணம் பண்ண உங்க அண்ணிகிட்ட சொல்லிப் பாருங்க, அப்புறம் தெரியும்…” கிண்டலாய் சொல்லி சிரிக்கவும் ரிஷிக்கு சட்டென்று கோபம் வர அமைதியானான். அதை உணர்ந்து கொண்ட பாரதியும் சற்றுத் தணிந்து அமைதியாய் இருந்தாள்.

“ரதி…! என் அண்ணியைத் தப்பா புரிஞ்சுட்டு பேசற… அவங்க எனக்காக எது வேணும்னாலும் பண்ணுவாங்க…”

“ஓ… நாம லவ் பண்ணறோம், கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க, அப்ப என்ன சொல்லுறாங்கன்னு பாருங்க…”

“ரதி, ஏன் என் அண்ணி விஷயத்துல மட்டும் நீ இப்படி தப்பாவே யோசிக்கற… அவங்க உன்னை என்ன பண்ணாங்க, அண்ணி ரொம்ப நல்லவங்க தெரியுமா…?”

“ம்ம்… இப்பதான் BBC நியூஸ்ல சொன்னாங்க, பார்த்தேன்…” அவள் கிண்டலாய் சொல்ல அவனுக்கு கோபம் கூடியது.

“வேண்டாம் ரதி…! என் பொறுமையை ரொம்ப சோதிக்கற…” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமலிருக்க அவளும் சமாதானிக்க முயலவில்லை.

சில நிமிடங்களில் ஹாஸ்டல் முன் வண்டியை நிறுத்த, அவள் இறங்கியதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமலே காரை எடுத்து வீட்டுக்குக் கிளம்பி விட பாரதிக்கு ஒரு மாதிரி தவிப்பாய் இருந்தது.

“ச்சே… அண்ணியைப் பத்தி எத்தனை சொன்னாலும் இந்த ரிஷி புரிந்து கொள்ள மாட்டேங்கிறானே… அந்த அளவுக்கு நேச முகமூடி அணிந்து மயக்கி வைத்திருக்கிறாள் அந்த ராட்சசி… பொறுமையாய் தான் புரிய வைக்க வேண்டும்…” என நினைத்தபடி தனது அறைக்கு சென்றாள் பாரதி.

ராத்திரி நேரத்தில் வெகுநேரம் ஷவர் அடியில் நின்றதால் குளிர் ஏறத் தொடங்க யோசனையில் இருந்த ரிஷி அதை ஆப் செய்து குளித்து முடித்து இரவு உடைக்கு மாறி உணவு உண்ண வந்தான்.

“என்ன ரிஷி, எவ்ளோ நேரம் தான் உனக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கறது, ரோஷன் வேற பசிக்குதுன்னு சொல்லத் தொடங்கிட்டான்… அதான் அவங்களை சாப்பிட உக்கார சொல்லிட்டேன்…” கங்கா சொன்னாள்.

“பரவால்ல அண்ணி…” என்றவன் அமைதியாய் சாப்பிட அமர, கங்காவுக்கு யோசனையாய் வந்தது.

“ஒருவேளை, நானும் ஹரியும் பேசிக் கொண்டது போல் இவன் பாரதியை விரும்பவில்லையோ…? அவளுக்கு உதவும் எண்ணத்தில் தான் உடன் சென்றானா…? இல்லாவிட்டால் சென்ற இடத்தில் ஏதேனும் சம்பவம் நடந்திருக்குமா…?” யோசித்தபடியே அவன் தட்டில் உணவை வைத்து பரிமாற ரிஷிக்கு பாரதியின் கலங்கிய முகமே நினைவில் நின்றது.

“ச்சே… என்னதான் கோபம் என்றாலும் ரதியை இறக்கிவிட்டு யாரோ ஒருத்தி போல் ஒன்றும் சொல்லாமல் வந்தது தவறுதான்…” ரிஷி யோசிக்க ரோஷன் அருகே வந்தான்.

“சித்து, எனக்கு நீ ஊட்டி விடறியா…?” குழந்தை கேட்க தன் நினைவுகளை ஒதுக்கியவன் அவனுக்கு ஊட்டி விட்டபடி தானும் சாப்பிட்டு முடித்தான். அதற்குப் பிறகும் ரோஷனுக்கு சித்தப்பாவிடம் நிறைய கதை சொல்ல இருக்க அவனைத் தனிமையில் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான்.

“ரோஷன், நீ போயி டீவி பாரு… எனக்கு ரிஷியோட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு…”

“போங்க டாட், எனக்கு சித்துகிட்ட சொல்ல நிறைய விஷயம் இருக்கு… நீங்க நாளைக்குப் பேசுங்க…” என்றான் மகன்.

“என்ன அண்ணா, எதுவும் முக்கியமான விஷயமா…” ரிஷி கேட்க ஹரி கங்காவைப் பார்த்தான்.

“உன் கல்யாண விஷயம் தான் ரிஷி…” என்றாள் அவள். கங்கா சொல்லவும் பாரதி சொன்னது ரிஷியின் நினைவில் வந்து போக கேட்டு விடலாமா, யோசித்தான்.

“என்ன ரிஷி, நீ யாரையாச்சும் மனசுல நினைச்சிருக்கியா…?” ஹரி கேட்க ரோஷனைப் பார்த்தான் ரிஷி.

“கண்ணா, நீ சித்தப்பா ரூம்ல போயி வீடியோ கேம் விளையாடிட்டு இரு, நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்…” எனவும், “ஐ…! வீடியோ கேம்…” என்ற குழந்தை ஓடிவிட்டான்.

“அண்ணா… அது..வந்து, நான்…”

“என்ன கங்கா, உன் புள்ளை மென்னு முழுங்கறான்…”

“டேய் ரிஷி, பட்டுன்னு உனக்கு பாரதியைப் பிடிச்சிருக்குன்னு உன் அண்ணாகிட்ட சொல்லிட வேண்டியது தானே, எதுக்கு யோசிக்கற…” கங்கா சிரித்தபடி கேட்க அதிர்ந்தான் ரிஷி.

“அ..அது வந்து, உங்களுக்கு எப்படித் தெரியும் அண்ணி…”

“என்னடா, இது என்ன பரம ரகசியமா…? அவ மேல ஒரு விருப்பம் இருக்கிறதால தான அவங்கம்மாவுக்கு ஒண்ணுன்னு சொல்லவும் நீ அவ கூடவே ஓடிப் போயி ஹெல்ப் பண்ணிருக்க…”

“ம்ம்… ஆமாடா… கங்கா கேட்கறது சரிதானே, பாரதி நல்ல பொண்ணு… உனக்குப் பிடிச்சிருந்தா எங்களுக்கு சந்தோஷம் தான், என்ன கங்கா நான் சொல்லறது…?”

“ஆமாங்க, பாரதியை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்… இந்த சின்ன வயசுல அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ புத்தி, நல்ல திறமை… நம்ம ரிஷிக்கு அவளைப் போல ஒரு பொண்ணு மனைவியா வந்தா இன்னும் பொறுப்பாகிடுவான்…” என்றாள் கங்கா முகம் நிறைய புன்னகையைக் காட்டி.

“ச்சே… என் அண்ணியை பாரதி என்னவெல்லாம் சொல்லிட்டா… ஆனா அண்ணி என்னடான்னா, எங்க கல்யாணத்தைப் பத்தி இவ்ளோ சந்தோஷமா கேக்கறாங்க…” என நினைத்தபடி அமைதியாய் இருக்க ஹரி கேட்டான்.

“என்ன ரிஷி, நீ எதுவும் சொல்ல மாட்டேங்கற…”

“உங்க ரெண்டு பேரையும் நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு அண்ணா… எனக்கு பாரதியைப் பிடிக்கும்னு நான் சொல்லறதுக்கு முன்னாடி நீங்களே அவளை எனக்கு கல்யாணம் பண்ண யோசிச்சதை நினைச்சா ரொம்பவே பிரமிப்பா இருக்கு…” சொன்னவன் சட்டென்று அண்ணியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“அண்ணி, தேங்க்ஸ் அண்ணி… எனக்கு ரொம்ப சந்தோஷம்…”

“ஹாஹா… என்னடா ரிஷி, நீ நான் வளர்த்த பிள்ளை… உனக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கும்னு இந்த அண்ணிக்குத் தெரியாதா…?” கங்கா சொல்ல அவர்கள் இருவரையும் நெகிழ்ச்சியுடன் பார்த்தான் ஹரி.

இருவருக்கும் தெரியாமல் அவள் இதழ்களில் சட்டென்று ஒரு குரூரப் புன்னகை தோன்றி மறைந்தது.

குரூரம் கொண்ட நெஞ்சம்

என்றும் தன்னை மட்டுமே

கொண்டாடுகிறது…

மற்றவர்களின் மரணத்திலும்

தனக்கான தேடல்களை

நிறுத்துவது இல்லை… பிறர்

சிலுவையில் தனக்கான நிழல்

தேடும் முகமூடி முகங்கள்…

Advertisement