Advertisement

அத்தியாயம் – 23

“சித்து…!” போர்டிகோவில் காரை நுழைத்து வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை ரோஷன் கட்டிக் கொண்டான்.

“தங்கம்…! எப்படிடா கண்ணா இருக்கே…?”

“சூப்பரா இருக்கேன் சித்து… நீ எப்படி இருக்க…?”

“நானும் சூப்பரா இருக்கேன்டா கண்ணா… உன் எக்ஸாம் எல்லாம் எப்படிப் போச்சு…”

“ஹூம், வழக்கம் போல ரொம்ப போரிங்தான் சித்து, பெருசா எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்ல…” பத்து வயது ரோஷன் குறும்பாய் பதில் சொல்ல சிரித்தான் ரிஷி.

“ஆஹான், படவா…! சரி, எப்ப வந்த…? யார் அழைச்சிட்டு வந்தாங்க…” என்றதும் சற்று மௌனித்தான் ரோஷன். அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு மாடியில் இருந்த ஹரியும், அடுக்களையில் இருந்த கங்காவும் வெளியே வந்தனர்.

“அது..வந்து… கணேஷ் மாமா தான் கூட்டிட்டு வந்தார்…” ரோஷன் சொல்லவும் ரிஷியின் முகத்திலும் கடுமை ஏற, தயக்கமாய் அண்ணனைப் பார்க்க அவன் முகத்தில் இன்னும் கடுப்பு குறையாமல் இருந்தது. அந்தப் பேச்சை நிறுத்த கங்கா நடுவில் மூக்கை நுழைந்தாள்.

“அடடே, ரிஷி சார் வந்தாச்சா…? ஹூம், சார் ரொம்பப் பெரிய ஆள் ஆகிட்டீங்க… என்கிட்ட எதுவுமே சொல்லாம ரெண்டு நாள் காணாமப் போயிட்டீங்க…” கிண்டலாய் சொன்னவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள ரிஷி சிரித்துக் கொண்டே அவளிடம் வந்தான்.

“சாரி அண்ணி, கோச்சுக்காதீங்க… சட்டுன்னு கிளம்பினதால உங்களுக்கு சொல்ல முடியலை, அண்ணன் கால் பண்ணப்ப அவர்கிட்ட விஷயத்தை சொன்னேன், என் போன் வேற சுவிட்ச் ஆப் ஆகிட்டதால உங்களைக் கான்டாக்ட் பண்ணவும் முடியாமப் போயிருச்சு அண்ணி… அண்ணா உங்ககிட்ட சொல்லிருப்பாரே…?”

“ம்ம்… இப்ப வந்து ஆயிரம் காரணம் சொல்லு, நீ நினைச்சிருந்தா என்கிட்ட சொல்லிருக்க முடியாதா…? என்ன இருந்தாலும் நான் உனக்கு அண்ணி தானே, அம்மா இல்லியே… இந்த உரிமை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா…?” சோகமாய் முகத்தைத் திருப்பிக் கொள்ள பதறினான் ரிஷி.

“ஐயோ அண்ணி, எதுக்கு நீங்க இவ்ளோ பீல் பண்ணறீங்க…? நேத்து சொல்லாமப் போனதுக்கு உங்ககிட்ட சாரி சொல்லணும்னு தான் நான் காலைலயே போன் பண்ணேன், நீங்க ரெஸ்ட் எடுக்கறீங்கனு அண்ணன் எடுத்துப் பேசினார்… உடம்புக்கு என்னாச்சு அண்ணி, இப்ப பரவால்லியா…?” என்றான் அன்புடன்.

“ஹூம், என்னைப் பத்தி யாருக்குக் கவலை…?”

“சரி விடு கங்கா, அவன்தான் இவ்ளோ பீல் பண்ணி சொல்லறான்ல…” ஹரி சொல்லவும் தான் அமைதியானாள்.

“சரி, ஹாஸ்பிடல் எல்லாம் போயிட்டு வந்திருக்க… முதல்ல குளிச்சிட்டு வா, எப்படி இருக்காங்க பாரதி அம்மா…?”

“ம்ம்… இனி பிரச்சனை இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அண்ணி, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க… பாரதியும் என்னோடதான் வந்தா, அவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்தேன்…” என்றான் ரிஷி சற்று சுரத்தில்லாமல்.

“என்னாயிற்று, அவளைப் பற்றிக் கேட்டதும் இவன் முகம் டல் அடிக்கிறது…” அந்த நிலையிலும் கவனித்தாள் கங்கா.

“ரிஷி, குளிச்சிட்டு வா… உன்கிட்ட சில விஷயம் பேசணும்…” ஹரி சொல்ல கங்காவின் முகம் மாறியது.

“ஆமாம், இன்னிக்கு உனக்கும், ரோஷனுக்கும் பிடிச்ச அயிட்டம் எல்லாம் தான் சமைச்சிட்டு இருக்கேன், வந்து ஒரு பிடி பிடிங்க…” கங்கா சிரிப்புடன் சொல்லி நகர்ந்தாள்.

தனது அறைக்குள் நுழைந்த ரிஷி ஆயாசத்துடன் உடையைக் களைந்து எறிந்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான். மனம் பாரதி சொன்ன வார்த்தைகளில் சிக்கிக் கொண்டது. ஷவரைத் திருக ஊசியாய் பாய்ந்து வந்த தண்ணீர் சில்லென்று தேகம் துளைத்தது.

“எத்தனை அழகாய்த் தொடங்கிய பயணம்… பாரதியின் மனதில் உள்ள காதலைத் தெரிந்து, அவள் குடும்பத்தில் எல்லாரிடமும் கல்யாணத்திற்கு வரை அனுமதி பெற்று சந்தோஷமாய் இருவரும் கிளம்பிய அருமையான பயணம்… இறுதியில் எத்தனை சங்கடமாய் முடிந்து விட்டது…” யோசிக்கையில் மனம் கனக்க, பெருமூச்சுடன் எழுந்த வலியோடு கண் மூடி நின்றான் ரிஷி.

“ரதி…! இப்ப நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா…? இந்த ரெண்டு நாள்ல எவ்ளோ நடந்திருச்சு, என் பிரபோசலை நீ இன்னும் அக்சப்ட் பண்ணலியேன்னு வருத்தமா வந்தேன், இப்ப நம்ம கல்யாணத்துக்கு சம்மதத்தோட திரும்பிப் போறோம்… எல்லாத்தையும் யோசிக்கும்போது எனக்கு அப்படியே வானத்துல பறக்கிற போல இருக்கு…” என்றான் உற்சாகத்துடன்.

“ம்ம்… எப்படியோ, எங்க வீட்டுல எல்லார்கிட்டயும் நல்ல பேரை வாங்கிட்டீங்க…? செம பிளான் தான்…”

“என்ன பிளான்…? அதெல்லாம் ஒரு பிளானும் கிடையாது… உண்மைலயே உனக்கு உதவியா இருக்கணும்னு நினைச்சு தான் உன்னோட வந்தேன், எப்ப உன்னை என்னவளா நினைக்கத் தொடங்கினேனோ, அப்பவே உன்னை சார்ந்தவங்களும் என் சொந்தம் தானே…” என்றவனின் வார்த்தையில் நெகிழ்ந்தாள் பாரதி.

“ம்ம்… சரியான கேடி தான்… நான் உங்களை லவ் பண்ணறேனா இல்லியான்னு என் அக்காவை விட்டே கேக்க வச்சு சந்தேகத்தைக் கிளியர் பண்ணி இருக்கீங்க, பிராடு…”

“ஹாஹா… பின்ன…? நீ எப்ப உன் கடமையை முடிச்சு காதல் சொல்லுவியோ, அதுவரைக்கும் நான் தாடிவிட்டு காத்திட்டு இருக்கவா முடியும், என் வீட்டுல கல்யாணத்தை வேற தள்ளிப் போடணும்… அதான், உன் அக்காவையே தூது விட்டேன், நீயும் என்னை லவ் பண்ணறது தெரிஞ்சப்ப எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா…? காதல்ல தூதெல்லாம் சகஜம் டார்லிங்…” என்றவனை நோக்கி பாரதி முறைக்க, கண்ணடித்து சிரித்தான் ரிஷி.

“ஹூம், கள்ளன்…! நினைச்சதை சாதிச்சிட்டீங்கல்ல…”

“ஏன்…? உனக்கு இதுல சந்தோஷம் இல்லியா…?” என்றவனின் பார்வை அவளைத் துளைக்க பதில் சொல்ல முடியாமல் நாணத்துடன் குனிந்து கொண்டாள் பாரதி.

“ரதி…!”

“ம்ம்…” அவளது குரல் கிறக்கமாய் புதிதாய் ஒலித்தது.

“ரதிம்மா…! உன்னைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும், உனக்கு என்னெல்லாம் பிடிக்கும், பிடிக்காது… சொல்லேன்…”

“எனக்கு பாரதியாரைப் பிடிக்கும், அதனால தமிழ் ரொம்பப் பிடிக்கும்… நேர்மையா, உண்மையா பழகறவங்களைப் பிடிக்கும், எல்லாருக்கும் நம்மால முடிஞ்ச வரை உதவி செய்யணும்னு நினைப்பேன்…” அவள் அடுக்கிக் கொண்டே செல்ல செல்லமாய் முறைத்தான் ரிஷி.

“அம்மா தாயே… நீயென்ன..? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சத்தியம், தர்மம்னு தொடங்கிட்ட… இதெல்லாம் எல்லாருக்கும் பிடிக்கிற பொதுவான விஷயங்கள்… உனக்கு பர்சனலா என்ன பிடிக்கும்னு சொல்லு…?”

“அதான் நீங்களே சொல்லிட்டிங்களே…” சிரித்தவள் குறும்புத் தனமாய் அவனைப் பார்க்க யோசித்தவன் புன்னகைத்தான்.

“உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா…?”

“கணக்கெல்லாம் தெரியாது ரிஷி… என் அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்… அவர்கிட்ட எப்பவும் ஒரு தைரியம் இருக்கும், எல்லாருக்கும் நம்மால முடிஞ்ச உதவியை செய்யணும்னு நினைப்பார்… அவரோட இருக்கும் போது எந்த யோசனையும், பயமும் இல்லாம ரொம்ப நிம்மதியா, பாதுகாப்பா உணர்வேன்… அவர் இறந்த பின்னாடி எப்பவும் ஒரு மாதிரி வெறுமையா, பயமா இருக்கும்… உங்களோட இருக்கும்போது அப்பாகிட்ட தோணின அதே செக்யூரிட்டி பீல் தோணுது… ஆனா, இதெல்லாம் தோணறதுக்கு முன்னாடியே நீங்க என் மனசுக்குள்ள வந்துட்டிங்க, அதான் எனக்கே நம்ப முடியலை…” புன்னகையுடன் சொன்னாள்.

எதுவும் சொல்லாமல் அவளை பிரமிப்புடன் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ரிஷி.

“ஒரு குழந்தைக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை அதோட கைல இருந்து பறிச்சுகிட்டா எவ்வளவு வேதனைப்படும்… அதோட உலகமே முடிஞ்சு போன போல நினைக்கும்… உங்க முறிஞ்சு போன காதலைப் பத்தி நீங்க சொன்னப்ப எனக்கு அப்படி தான் தோணுச்சு… உங்களுக்குள்ள பதிஞ்சு போன தாழ்வு மனப்பான்மையை நீக்கி, இதைத் தாண்டியும் உலகம் இருக்குன்னு சொல்லணும் போலத் தோணுச்சு… நீங்க அந்த நிகழ்ச்சில பேசிட்டு இருக்கும்போது மைக்ல உங்க குரலைத் தான் கேட்டேன்… அந்தக் குரல்ல இருந்த வலியைப் போக்கணும்னு மனசு துடிச்சுது… நான் உங்களைப் பார்க்க வர்றதுக்குள்ள நீங்க கிளம்பிட்டிங்க…”

“ம்ம்… நீ பேசும்போது நான் பார்த்தேன்… அதைக் கேட்கும்போது மனசுக்கு ரொம்ப ஆறுதலா பீல் பண்ணேன்… அந்த பீல் எப்பவும் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்… பட், அந்த நேரத்துல வேற சிலரோட பேச வேண்டி இருந்ததுல உன்னைப் பார்க்க முடியாமப் போயிருச்சு…” ரிஷி வருத்தமாய் சொல்ல பாரதி புன்னகைத்தாள்.

“அதான், இப்பப் பார்த்துட்டமே…”

“இந்த ஸ்வீட்டான நேரத்தை ஏதாச்சும் ஸ்வீட்டோட கொண்டாடினா நல்லாருக்குமே…? என்ன சாப்பிடற…?”

“எனக்கு ஸ்வீட் அவ்ளோவா பிடிக்காது, சாக்கலட் போதும்…” பாரதி சொல்ல வழியில் ஒரு கடையில் காரை நிறுத்தி வாங்கி வந்தான் ரிஷி. சென்னையை நெருங்கி இருக்க வழியில் ஒரு கோவில் வந்தது.

“ரிஷி, கோவிலுக்குப் போகணும் போலருக்கு, போகலாமா…?”

அவள் ஆசையாய் கேட்க தலையாட்டியவன், அந்த சின்னக் கோவிலின் ஓரமாய் வண்டியை நிறுத்த இறங்கினர்.

மாலை நேர பூஜைக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க முன்னில் பூ, பழம் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

“நான் கோவிலுக்கெல்லாம் போனதே இல்ல ரதிம்மா… சின்ன வயசுல அம்மாவோட போனேன்னு நினைக்கறேன்… அவங்க போன பிறகு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லாமப் போயிருச்சு… தண்ணி அடிச்சிட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கற எனக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்…? எப்படி சாமி கும்பிடனும்னு கூடத் தெரியாது…” வருத்தமாய் சொன்னான் ரிஷி.

“ஏன்..? உங்க அண்ணி நல்ல விஷயம் எதையும் கத்துத் தரலியா…? தண்ணி அடிக்கறது, ஊர் சுத்தறது மாதிரி தப்பான விஷயங்களை மட்டும் தான் கத்துக் கொடுத்தாங்களா…? அதெப்படி, அவங்களுக்கு தெரியறதைத் தானே கத்துக் கொடுக்க முடியும்…?” பாரதி அமைதியாய் ஆனால் கிண்டலான குரலில் கேட்க ரிஷி கொதித்தான்.

“ப்ச்… வேண்டாம் ரதி…! இப்ப என் அண்ணியை எதுக்கு தப்பாப் பேசற…?” முகம் சிவக்க கோபமாய் கேட்டான் ரிஷி.

“அப்பா…! எவ்ளோ கோபம் வருது…” சிரித்து அவன் கோபத்தைத் தணிக்க முயல குறையவில்லை.

“என் அண்ணியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்…? நீ எனக்கு முக்கியம் தான், அதுக்காக என் அண்ணியை நான் நேசிக்கிறது குத்தம்னு சொல்லுவியா…?”

“ச்சேச்சே… நேசிக்கிறது தப்புன்னு நான் எப்பவும் சொல்ல மாட்டேன் ரிஷி… யாரை நேசிக்கிறோம்னு தெரியாம கண் மூடித்தனமா நேசிக்கிறது தான் தப்புன்னு சொல்லறேன்…”

“போதும் நிறுத்து… நான் வெளிய இருக்கேன், நீ சாமி கும்பிட்டு வா…” சொன்னவன் அவள் பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென்று வெளியே சென்றுவிட திகைத்தாள் பாரதி. தனியே சென்று அவனுக்கும் சேர்த்து பிரார்த்தித்து விட்டு வெளியே வர காரில் சாய்ந்து நின்றிருந்தான் ரிஷி.

“ரிஷி…! என் மேல கோபமா…?”

“ப்ச்… உன்னை என் உசுரா நினைக்கிறேன் ரதிம்மா… அதுக்காக ஒரு அம்மா போல என்னைப் பார்த்துக்கற அண்ணியை என்னால தூக்கிப் போட முடியாது… என்ன காரணமோ, உனக்கு அவங்களைப் பிடிக்கல, நீ இப்படி அவங்களைக் கேவலமா பேசும்போது எனக்கு ரொம்ப வலிக்குது…” அவன் வேதனையுடன் சொல்ல எதுவும் பேசாமல் அவன் அருகே சென்று தானே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பாரதி.

Advertisement