Advertisement

“என்னடி பார்க்காமலே காதல், லெட்டர்ல காதல், போன்ல காதல்னு போயி குரலை மட்டும் காதலிச்சு அவரை எங்க போயி தேடப் போற… கேட்டமா, வருத்தப்பட்டமா, விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பமான்னு இல்லாம மைக்ல பேசின ஒருத்தரோட குரலை மனசுக்குள்ள ரிபீட் பண்ணி எக்கோ வாங்கிட்டு உக்கார்ந்திருக்க…” எனக் கேட்டிருக்கிறாள்.

அப்போதெல்லாம் பாரதி தோழிக்கு எதுவும் பதில் சொல்லாமல் புன்னகையுடன் கடந்து விடுவாள். அந்தப் புன்னகைக்குப் பின் இப்படி ஒரு விருப்பம் இருந்திருக்கும் என வான்மதியும் யோசிக்கவில்லை.

“பாரு, அப்ப இருந்தே ரிஷியை விரும்பறியா…?” என்றவளின் கேள்விக்கு அமைதியாய் தலையாட்டினாள் பாரதி.

அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்வதற்காய், ஒட்டுக் கேட்பது அநாகரீகமான செயல் என்று தெரிந்தும் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் எனக் கேட்டுவிடத் துணிந்து ரிஷி அவர்களுக்குப் பின்னில் இருந்த ஒரு தூணுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். அவர்கள் பேசுவதைக் கேட்ட ரிஷியின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. இதற்கு மேல் அங்கே நின்றால் அவர்கள் கவனித்து விடுவார்கள் என நினைத்தவன் மெல்ல நகர்ந்து அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

சில நிமிடங்களில் அவர்கள் பேசி முடித்துத் திரும்ப அவனிடம் வந்தாள் வான்மதி.

“பாரு எல்லாம் சொன்னா… ஒரு சில விஷயங்கள்ல எனக்கு உங்க மேல கோபம் இருக்கு, சில விஷயங்களை மாத்திகிட்டா நீங்களும் அவளுக்கு பொருத்தமானவர் தான்… எனிவே, ரெண்டு பேருக்கும் என் வாழ்த்துகள்…” என்றாள்.

“தேங்க்ஸ் வான்மதி… உங்க கோபம் ரொம்ப நியாயமானது, நிச்சயம் என்னை மாத்திகிட்டு நூறு சதவீதம் உங்க பிரண்டுக்குப் பொருத்தமானவா இருக்க டிரை பண்ணுவேன்…”

“எனக்கு அது போதும், பாரதி போல ஒயிப் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்… அதே போல உங்களைக் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனும்னு எங்களை நினைக்க வைக்க வேண்டியது உங்க கடமை… ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க…” என்று சொல்லி செல்ல சற்றுத் தள்ளி நின்று பார்த்திருந்த பாரதியை நோக்கி யாருக்கும் தெரியாமல் கண்ணடித்தான் ரிஷி.

சட்டென்று சிவந்தாலும் சுற்றிலும் நோக்கியவள் அவனை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள். வான்மதியும், அன்னையும் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டனர்.

ரிஷியுடன் காலை டிபனை சாப்பிட்டு முடித்தனர்.

“பாரு, நேத்து வந்ததுல இருந்து இங்கயே இருக்கீங்க, நீங்க மூணு பேரும் வீட்டுக்குப் போய் குளிச்சு வேற உடை மாத்திட்டு வாங்க… நானும், அத்தையும் இங்க இருக்கோம்…” கோபால கிருஷ்ணன் சொன்னார்.

“இல்ல, அது சரியா வராது அங்கிள்… நான் இவங்களை வீட்டுல டிராப் பண்ணிட்டு பக்கத்துல எங்காச்சும் லாட்ஜ்ல ரூம் போட்டு ரெஸ்ட் எடுத்திட்டு மதியம் வர்றேன்…” ரிஷி சொல்ல பெருமையுடன் அவனைப் பார்த்தார் அஷ்டலட்சுமி.

“பரவால்லியே, வயசுப் பொண்ணுங்க கூட உங்களை எப்படி வீட்டுக்கு அனுப்புறது, அக்கம் பக்கம் பார்த்தா ஏதாச்சும் நினைப்பாங்களோன்னு யோசிச்சேன்… நீங்களே அதுக்கு ஒரு தீர்வு சொல்லிட்டீங்க தம்பி…” என்றார் மெச்சுதலுடன்.

அவர்கள் மூவரும் கிளம்பி சென்றதும் கோபாலும், அஷ்டலட்சுமியும் தேவிகாவிடம் வந்தனர்.

“தேவி, உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்கு தானே…?” அண்ணனின் கேள்விக்கு சந்தோஷமாய் தலையாட்டினார்.

“ம்ம்… உன் நல்ல மனசுக்கு ரெண்டு பொண்ணுங்களும் நல்லா இருப்பாங்க, இனியாச்சும் அவங்களைப் பத்தி கவலைப்படாம நிம்மதியா இரு…” என்றார்.

ரிஷி, சகோதரியரை வீட்டில் இறக்கிவிட்டு மாற்று உடை இல்லாததால் வழியில் சிம்பிளாய் ஒரு டீ ஷர்ட், உள்ளாடை, டவல் வாங்கிக் கொண்டவன் லாட்ஜில் ரூம் எடுத்தான். அணைந்து கிடந்த செல்லை சார்ஜரில் போட நினைத்தவன் சார்ஜர் இல்லாததால் எரிச்சலானான்.

“ச்சே… நேத்து காலைல வந்தது, இது வரைக்கும் அண்ணிக்கு ஒரு போன் பண்ணி சொல்லலை, என்ன நினைப்பாங்க…” யோசித்தவன், “சரி, ஆசுபத்திரிக்கு போகும்போது பாரதி நம்பர்ல இருந்து கால் பண்ணி சொல்லிக்கலாம்…” என நினைத்தபடி படுத்தவன் நன்றாய் உறங்கிப் போயிருந்தான்.

வீட்டில் குளித்து அனைவருக்கும் சிம்பிளாய் மதிய உணவை சமைத்து எடுத்துக் கொண்டு ரிஷியின் எண்ணுக்கு அழைத்த பாரதி அவனது நம்பர் சுவிட்ச் ஆப் என்றதால் எப்படித் தொடர்பு கொள்வது எனத் திகைத்தாள். அழைத்துப் பார்த்து ஓய்ந்தவள் சக்தியிடம் சொல்ல, இருவரும் ஆட்டோவில் ஆசுபத்திரிக்கு கிளம்பினர்.

“ரிஷி எங்கே…?” எனக் கேட்ட மாமாவிடம் அவர் போன் “சுவிட்ச் ஆப்… வந்திருவார்…” என்று சொன்னாலும் அவனைக் காணாமல்பாரதியின் மனம் தவித்தது.

“எந்த லாட்ஜ்ல ரூம் போட்டார்னும் தெரியல, டைம் ஆச்சு, இன்னும் சாப்பிட வரலை, ஒருவேளை நைட் தூங்காததால ரூம்ல தூங்கிருப்பாரோ…” என நினைத்துக் கொண்டாள்.

மாமாவும், அத்தையும் சாப்பிட்டு முடிக்க தேவிகாவுக்கான எளிய உணவை மருத்துவமனையிலேயே கொடுத்திருந்தனர்.

“பாரு… உனக்கு எப்ப மா, ஆபீஸ் போகணும்…?”

“நாளைக்கு காலைல அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணதும் கிளம்பலாம்னு இருக்கேன் மாமா…”

“அது பத்து மணி ஆகிடும் மா, அதுக்கப்புறம் கிளம்பினா நீ நாளைக்கும் ஆபீஸ் போக முடியாதுல்ல…! ரிஷி எப்ப கிளம்பறேன்னு சொன்னாரா…?”

“சொல்லல மாமா, அவரை இன்னைக்கே சென்னை கிளம்ப சொல்லிடலாம்… அவரை எதுக்கு சிரமப்படுத்தணும்…”

“ம்ம்… அதும் சரிதான், இனிதான் பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரே, அப்ப நீயும் அவரோடவே கிளம்பிட வேண்டியது தானே…”

“ம்ம்… ஆமா பாரு, ரெண்டு பேரும் சென்னை தானே போறீங்க, நாளைக்குக் கிளம்பறதுக்கு பதிலா இன்னைக்கே ரிஷியோட கிளம்ப வேண்டியது தானே…” என்றாள் சக்தி.

“இந்த ரிஷியை ஏன் இன்னும் காணோம்…” கடவுளே..! பழக்க தோஷத்தில் ஏதாச்சும் பார் உள்ள போயிடக் கூடாதே…” என அவள் மனம் வேண்டிக் கொள்ள, “ச்சே… அந்த அளவுக்கு அவர் ஒண்ணும் குடிக்கு அடிமை இல்ல, குடிக்க மாட்டார்…” என மூளை சமாதானம் செய்தது.

“ம்ம்… முதல்ல இந்த குடியை நிறுத்த ஏதாச்சும் பண்ணனும்…” அவள் யோசனையில் இருக்க அவள் எண்ணத்தின் நாயகன் கதவைத் திறந்து உள்ளே வந்தான். புது டீஷர்ட்டில் பளிச்சென்று இருந்தான்.

“வாங்க தம்பி, டைம் வேற ஆச்சு… சாப்பிட உங்களைக் காணமேன்னு நினைச்சோம்…”

“நான் ஹோட்டல்லயே சாப்பிட்டு வந்துட்டேன், அங்கிள்…” என்றவனின் பார்வை பாரதியைக் கண்டதும் மலர்ந்தது. எப்போதும் சுரிதாரில் இருப்பவள் இன்று சேலையை உடுத்திருந்தாள். அவன் தன்னையே பார்த்து நிற்பதை உணர்ந்த பாரதி, சட்டென்று பேச்சை மாற்றினாள்.

“ரிஷி, உங்களுக்கு எத்தன முறை கால் பண்ணேன், போன் சுவிட்ச் ஆப் வருதே…”

“என் போன் நேத்திருந்து சுவிட்ச் ஆப் தான் பாரதி, ஹோட்டல்ல சார்ஜ் போடப் பார்த்தா அங்கேயும் இந்த போனுக்கு செட் ஆகுற சார்ஜர் இல்லை… உன் போனை ஒரு நிமிஷம் கொடு, வீட்டுக்கு கால் பண்ணிட்டு வந்துடறேன்…” ரிஷி கேட்க தன் செல்லை நீட்டினாள் பாரதி.

“ஆஹா, என் நம்பரைப் பார்த்ததும் அந்த கங்கா ஏதாச்சும் பேசப் போறா… ரிஷிக்கு அண்ணி பத்தி புரிய இது ஒரு சான்ஸ் தான்…” என நினைத்துக் கொண்டவள் அவன் போனுடன் வெளியே செல்ல பின்னிலேயே சென்றாள். ரிஷி அண்ணிக்கு அழைக்க அது அடித்து ஓயும் நேரத்தில் எடுக்கப்பட்டு ஹரியின் குரல் கேட்டது.

“ஹலோ பாரதி, சொல்லு மா… அம்மாக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சுதா…?” என்றான் ஹரி.

“அண்ணா, நான் ரிஷி பேசறேன்… என் மொபைல் சார்ஜர் எடுக்கல, சோ, என் போன் இன்னும் சுவிட்ச் ஆப்ல தான் இருக்கு… இங்கே பாரதி அம்மா நல்லாருக்காங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொல்லிருக்கார்… அண்ணி எங்கே அண்ணா… அங்க இல்லையா…?”

“கங்காவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல, காலைல இருந்து படுத்திருந்தா இப்பதான் கொஞ்சம் பரவால்லன்னு குளிக்கப் போனா… மொபைல் ஹால்ல இருந்துச்சு, நான் எடுத்தேன்…”

“ஓ… அண்ணிக்கு என்னாச்சு, டாக்டரைப் பார்த்திங்களா…?” அவன் கலக்கமாய் கேட்க அருகே நின்ற பாரதி கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

“இல்லப்பா, ரெஸ்ட் எடுத்தாப் போதும்னு சொன்னா, கொஞ்ச நேரத்துல ரோஷன் வீட்டுக்கு வந்திருவான்… நீ எப்ப கிளம்பற, பாரதியையும் உன்னோட அழைச்சிட்டு வர்றியா…”

“ம்ம்… இப்பவே கிளம்பலாம்னு நினைக்கறேன் அண்ணா…”

“சரி ரிஷி, பத்திரமா வாங்க… வச்சிடறேன்…” சொன்ன ஹரி அழைப்பைத் துண்டிக்க பாரதியிடம் சொன்னான் ரிஷி. “ரதி, இனி இங்கே அத்தைக்குப் பிரச்சனை இல்லைல்ல, நாம இப்பவே சென்னை கிளம்பலாமா…?”

“நீங்க கிளம்புங்க ரிஷி, நான் காலைல வர்றேன்…” பாரதி சொல்லவும் அவன் முகம் வாடியது.

“ஏன்மா, காலைல இனி கஷ்டப்பட்டு பஸ்ல வரணுமா, இப்ப என்னோடவே வரலாம்ல…” என்றான் வருத்தமாக. அவளை அங்கே விட்டுச் செல்ல அவன் மனம் சம்மதிக்கவில்லை.

அதைக் கேட்டபடி வந்த சக்தி, “ஆமா பாரு, நீயும் அவரோட கிளம்பு… இங்க நாங்க எல்லாரும் இருக்கோம்ல, உனக்கு அங்க வேலை நிறைய இருக்குமே…” என்றாள். யோசித்த பாரதியும் சம்மதிக்க இருவரும் விடை பெற்று கிளம்பினர்.

எங்கும் தேடித் பார்க்கிறேன்

உனக்காய் நான் விதைத்த

காதல் பூங்கவிதைகளை…

உலகின் இயற்கை முழுதும்

கலந்தே மலர்ந்திருக்கிறது…

காணும் யாவிலும் கவிதையாய்

காற்றின் தொடுகையில்

மனம் சிலிர்க்கிறது… நீ

எனக்கானவள் என்று…

Advertisement