Advertisement

அத்தியாயம் – 22

அன்றைய விடியல் அழகானதாய் இருந்தது.

“அம்மா… உங்களுக்கு பிரஷர் செக் பண்ண வந்திருக்காங்க…” மகள் சக்தியின் குரலில் சோர்வுடன் கண்ணைத் திறந்தார் தேவிகா. அன்று ஆஞ்சியோகிராம் செய்வதால் முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு தண்ணி கூடக் குடிக்கக் கூடாது என்றிருந்தனர். நர்ஸ் வேண்டிய பரிசோதனைகளை செய்து ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டாள்.

“அவங்க கழுத்துல காதுல இருக்கிற நகை எல்லாம் கழற்றி வச்சிடுங்க… சரியா எட்டு மணிக்கு பாத்ரூம் போக வச்சிட்டு ஹாஸ்பிடல்ல கொடுக்கிற டிரஸ்ஸை போட்டு ரெடியா இருங்க, வந்து அழைச்சிட்டுப் போவாங்க…” சொல்லிவிட்டு அவள் சென்று விட அன்னையின் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள் பாரதி.

“அம்மா, இதெல்லாம் பார்த்து பயந்துடாதீங்க… இது ஒரு ட்ரீட்மென்ட், அவ்ளோதான்…” என்ற சின்ன மகளை நோக்கிப் புன்னகைத்தவர் கையை அசைத்து ஏதோ கேட்டார்.

“என்னமா, யாரைக் கேக்கறிங்க…?”

“அ..அந்தத் த..ம்பி, எங்…கே…?” அவர் குழறலாய் பேசியதை ஒரு விதமாய் புரிந்து கொண்ட பாரதி, “ரிஷியை கேக்கறிங்களா…” என்றாள்.

ஆமென்று தலையாட்டினார் தேவிகா.

“எங்களுக்கு காபி வாங்கப் போயிருக்கார்… இப்ப வந்திருவார்…” சொல்லும்போதே பிளாஸ்க்கில் காப்பியுடன் உள்ளே வந்தான் ரிஷி.

“ரிஷி, உங்களை அம்மா கேட்டாங்க… இங்க வாங்க…” சக்தி அழைக்க திகைப்புடன் அருகே சென்றான் ரிஷி.

“அ..அம்மா… என்னைக் கேட்டீங்களா, ஏதாச்சும் வேணுமா…?” அருகே நின்று கேட்டவனின் கையை மெல்லப் பற்றிக் கொண்டவர், “அ..ம்மா இல்.ல, அத்..த…” என்றவர், பாரதியை நோக்கி கண்ணால் அருகே வருமாறு அழைக்க அவள் அக்காவை கேள்வியுடன் பார்த்துக் கொண்டு ரிஷியின் அருகே சென்றாள். அவள் கையைப் பற்றி ரிஷியின் கையில் வைக்க இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கினர்.

“என்ன பாக்கறிங்க…? நாம நைட்டு பேசினதை அம்மாவும் கேட்டிருக்காங்க… நீங்க ரெண்டு பேரும் இங்க இல்லாதபோது என்கிட்ட கேட்டாங்க, நானும் சொல்லிட்டேன்… அம்மா ட்ரீட்மெண்டுக்கு ஆஞ்சியோகிராம்க்கு போறதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா நிறுத்தி, இதுல அவங்களுக்கு விருப்பம்னு சொல்ல சொன்னாங்க…” சக்தி சொல்ல பாரதி அன்னையைத் திகைப்புடன் நோக்க அவர் கண்ணீருடன் புன்னகைத்து தலையாட்டினார்.

“பா..ரு, என..க்கு எப்ப வேணா..லும் எது..வும் ஆகலாம்… உன்..னை நேசிக்..கிறவரை வேணா..ம்னு சொல்லாத, நீங்க ரெண்டு பேரும் நல்லா..ருக்கணும்…” கஷ்டப்பட்டு குழறலாய் சொன்னவர் ஒரு கையைத் தூக்கி ஆசிர்வதிக்க,

“அம்மா…” என்று கண்ணீருடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டாள் பாரதி.

ரிஷி நெகிழ்வுடன் நின்றிருந்தான்.

“தம்..பி, பா..ரதியை நல்..லாப் பார்த்து..க்கங்க…” என்றார் அவன் கையைப் பிடித்து.

“அத்த, அவ எனக்குக் கிடைச்ச பொக்கிஷம்… நிச்சயம் என் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன், நீங்க எல்லாரும் என்னை ஏத்துகிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு… நீங்க சீக்கிரமே சரியாகி நாங்க சந்தோஷமா வாழறதைப் பார்க்க தான் போறீங்க, அத்த…” என்றான் ரிஷி.

“உங்களை இப்படிப் பார்க்கறதே பெரிய சந்தோஷம்…” என்பது போல் கையால் சைகை செய்து நெஞ்சத்தில் கை வைத்துக் காட்டியவர், “இனி செத்…தாலும் நான் நிம்ம…தியா சா…வேன்…” என்றார் புன்னகையுடன்.

“தேவி, என்னம்மா சொல்லற… நீ எதுக்கு சாகணும்…” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் கோபால கிருஷ்ணன். உடன் அஷ்டலட்சுமியும் இருந்தார்.

“அதானே, நீ சாகறதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கோம், சீக்கிரம் சரியாகி வீட்டுக்கு வரணும்னு நினைச்சுக்க தேவி…” சொன்ன அஷ்டலட்சுமி, “உங்க எல்லாருக்கும் டிபன் கொண்டு வந்திருக்கேன், சாப்பிடுங்க…” எனக் கூறி கையிலிருந்த கூடையை மேஜை மேல் வைத்தார். அவர்களைப் புன்னகையுடன் நோக்கிய தேவிகா, சக்தியிடம் கண்ணைக் காட்டி சொல்லுமாறு கூறினார்.

அவள் சுருக்கமாய் இருவருக்குள்ளும் இருந்த விருப்பத்தைப் பற்றிக் கூற, “ஓஹோ, அப்படியா விஷயம், எனக்கு அப்பவே ஒரு டவுட் இருந்துச்சு… இந்தக் காலத்துல சும்மா யாராச்சும் இப்படில்லாம் வலிய வந்து உதவி பண்ணுவாங்களான்னு… நான் நினைச்சது சரியாத்தான் போயிருச்சு, எப்படியோ நம்ம வீட்டுப் புள்ள நல்லாருந்தா சரி…” என்றார் அஷ்டலட்சுமி.

“ஆமா, எங்களுக்கும் உங்களைப் பார்த்ததுமே பிடிச்சிருச்சு தம்பி… என்னதான் பாரதிக்காக எல்லாத்தையும் பண்ணாலும், உங்ககிட்ட ஒரு ஆத்மார்த்தம் இருந்துச்சு, அதான் சக்திகிட்ட நான் விசாரிச்சு வைக்க சொல்லிருந்தேன்… உண்மைலயே பிள்ளை இல்லாத எங்களுக்கு மகனா தான் கடவுள் உங்களை அனுப்பிருக்கார்…” என்றார் கோபால கிருஷ்ணன்.

ரிஷி புன்னகைக்க பாரதிக்கு தான் தவிப்பாய் இருந்தது.

“ஏய் பாரதி, நான் என்ன சொன்னாலும் வாயடிப்ப, இப்ப எதுவும் சொல்லக் காணோம்… ரிஷி எங்க பிள்ளைன்னா நான் உனக்கு மாமியாராக்கும்… உன் அக்காவோடவே உனக்கும் கல்யாணத்தை வச்சுக்க வேண்டியது தான்…” அஷ்டலட்சுமி பதவியைக் கையிலெடுத்து கிண்டலாய் சொல்ல பாரதி நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

“அத்த, மாமா… நீங்க எல்லாரும் எங்க விருப்பத்தை ஏத்துகிட்டது சந்தோஷம் தான்… ஆனா, இப்பவே இதைப் பத்தி பேசி முடிவு பண்ண வேண்டாமே… நாங்க முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு, அதெல்லாம் முடிஞ்ச பிறகு எங்க கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்…”

“என்ன கடமை பாரும்மா, உன் அக்கா கல்யாணத்தை தானே சொல்லற… அதெல்லாம் நல்லபடியா நடக்கும்… தம்பி,  உங்களோட விருப்பம் தெரிஞ்ச பிறகு எதுக்கு லேட் பண்ணனும், சீக்கிரமே உங்க வீட்டுல இதைப் பத்தி சொல்லி பெரியவங்களை முறைப்படி எங்க வீட்டுல வந்து பேச சொல்லிடுங்க…” புன்னகையோடு சொன்னார் கோபால்.

“ஓகே அங்கிள்… எனக்கும் வீட்டுல கல்யாணப் பேச்சு எடுத்துட்டாங்க, இன்னும் ஒரு வாரத்துல என் முடிவை சொல்லணும்னு சொல்லிருக்காங்க… அதுக்குள்ளயே நீங்க எல்லாரும் எங்க விருப்பம் தெரிஞ்சு ஏத்துகிட்டது ரொம்ப சந்தோஷம், நான் உடனே வீட்டுல சொல்லிடறேன்…” என்றான் ரிஷி சந்தோஷத்துடன்.

“இருங்க ரிஷி, அவசரம் வேண்டாம்… முதல்ல என் அக்கா கல்யாணம் நடக்கட்டும்… அப்புறம் நம்ம கல்யாணத்தைப் பேசிக்கலாம்…” பாரதி தீர்மானமாய் சொல்ல யோசித்தான்.

“சரி, எங்க தேவிக்கு முடியாமப் போன கெட்டதுலயும், இப்படி ஒரு நல்லது நடந்திருக்கு, இல்லன்னா நீங்க இப்ப இங்கே வரவும், கல்யாணப் பேச்சு எடுக்கவும் வாய்ப்பே இல்லாமப் போயிருக்கும்…” என்ற அஷ்டலட்சுமி, “உங்க வீட்டுல எங்களைப் போல மிடில் கிளாஸ் பொண்ணை மருமகளா ஏத்துப்பாங்க தானே…?” என்றார் சந்தேகத்துடன்.

“அம்மா, என் அண்ணனும், அண்ணியும் ரொம்ப நல்லவங்க… என் விருப்பம் தான் அவங்க விருப்பமும்… அந்தஸ்து, பணம் காசுல எல்லாம் அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை…” ரிஷி பெருமையுடன் சொல்ல மற்றவர்கள் சந்தோஷித்தாலும் பாரதிக்கு மனதிலிருந்த கலக்கம் பெரிதானது.

“கடவுளே, இவர் இப்படி எல்லாரிடமும் நம்பிக்கையை விதைத்து, நாளைக்கு அந்த கங்கா எங்கள் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் என்னாகும், அம்மாவின் கவலை அதிகம் ஆகிவிடுமே…” யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவர்களை மேலே யோசிக்க விடாமல் ஆஞ்சியோகிராமுக்கு தயாராகச் சொல்லி சீருடையை நர்ஸ் ஒருத்தி கொண்டு வந்து கொடுக்க, அவர் சொன்னதுபோல் அன்னையைத் தயாராக்க அழைத்துச் சென்றனர். தேவிகாவின் முகத்தில் இப்போது பெரும் நிம்மதி குடி கொண்டிருந்தது.

தேவிகாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதும் அனைவரின் மனமும் அவருக்காய் வேண்டுதல் நடத்திக் கொண்டிருக்க, இரண்டு மணி நேரத்தில் நல்லபடியாக ஆஞ்சியோகிராம் முடிந்தது என்ற மகிழ்ச்சியான செய்தியை டாக்டர் கூற நிம்மதியாய் உணர்ந்தனர். மேலும் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து அவரை வார்டுக்கு அழைத்து வர சந்தோஷமாய் எதிர்கொண்டனர்.

தேவிகா கண் திறந்ததும் மகள்கள் இருவரும் கண்ணீருடன் அவரைக் கட்டிக் கொண்டனர். அன்று ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கிவிட்டு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என டாக்டர் சொல்லி இருந்தார்.

அப்போது அன்னை கௌசல்யாவுடன் பாரதியின் அன்னையைக் காண ஆசுபத்திரிக்கு வந்த வான்மதி, அறை முன்னில் அமர்ந்திருந்த ரிஷியைக் கண்டதும் அதிர்ந்தாள்.

ரிஷி அவளைக் கண்டு புன்னகைக்க, முழித்தவள், “இவன் எப்படி இங்கே…?” என யோசித்தாலும் உடன் அன்னை இருந்ததால் எதுவும் கேட்காமல் உள்ளே சென்றாள்.

தேவிகாவிடம் உடல்நிலையை விசாரித்துவிட்டு தோழியை அறைக்கு வெளியே ஓரமாய் அழைத்துச் சென்றவள், “பாரு, இங்க என்ன நடக்குது, அந்த ரிஷி எப்படி இங்கே வந்தான்…? உன் வீட்டு ஆளுங்க எல்லாரும் இருக்கும்போது ஏதாச்சும் பேசி வம்பாகிடப் போகுது… ச்சே, என்ன மனுஷனோ…? ஆசுபத்திரில கூட உன்னை விடாம துரத்திட்டு வர்றான்… நீ ஜாக்கிரதையா இரு…” படபடவென்று மெல்லிய குரலில் சொன்னவளை கவலையாய் நோக்கினாள் பாரதி.

“ப்ச்… இனி என்ன ஜாக்கிரதையா இருந்து என்ன பண்ண வானு…? நான் என்ன சொல்லியும் கேட்காம என்னை அவருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க வீட்டுல பேசி முடிவு பண்ணிட்டாங்களே…” என்ற பாரதியை அதிர்ச்சியுடன் நோக்கினாள் வான்மதி.

“என்னடி சொல்லற…? ரிஷியோட உனக்கு கல்யாணமா…?”

“ம்ம்… ஆமா வானு…” என்றவளை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்க்க பாரதி புன்னகைத்தாள்.

“ஏய் வானு, இப்படி வாயைப் பொளக்காத… என் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்துட்டு உன்னை அட்மிட் பண்ணிடப் போறாங்க… உனக்கு நிறைய விஷயம் தெரியாது, விளக்கமா சொன்னாத்தான் எல்லாம் புரியும்…” என்றவள் சுருக்கமாய் விஷயத்தை சொல்ல கண்ணை உருட்டி தோழியை  முறைத்தாள் வான்மதி.

“இவ்ளோ நடந்திருக்கு, என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சிருக்க, நண்பியாடி நீ…?” கோபமாய் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவள், “உன்கிட்ட நான் ரிஷியோட பழகறதை சொன்னா கோபப்படுவேன்னு தான் சொல்லல, இந்த கல்யாண விஷயம் நானே எதிர்பார்க்காத ஒண்ணு… அம்மாக்கு முடியாமப் போனதும், அவர் வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்ததும் எல்லாம் சேர்ந்து எங்க விஷயம் இவ்ளோ சீக்கிரம் வெளிய வந்திருச்சு…”

“பாரு, இருந்தாலும் உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலடி… அந்த ரிஷி ஒரு குடிகாரன், அவனை இப்பதானே உனக்குப் பழக்கம், அதுக்குள்ள எப்படி காதல்…?”

“இல்ல வானு, ரிஷியை எனக்கு ஒரு வருஷம் முன்னாடியே தெரியும்…! உனக்கு நியாபகம் இருக்கா… போன வருஷம் உடல் ஊனமுற்றோர் தினம் அன்னைக்கு ஒருத்தரைப் பத்தி நான் உன்கிட்ட சொன்னனே…”

“ம்ம்… யாரோ ஒருத்தர் ரொம்ப பீல் பண்ணி தன்னோட உடல் ஊனத்தால தான் பட்ட அவமானத்தையும், கஷ்டத்தையும், தன் காதலி கூட தன்னைப் பணத்துக்காக யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டுப் போனதை உருக்கமா சொன்னார், அவரைப் பார்க்க முடியலைனு சொன்னியே…?”

“ம்ம்… அந்த அவர் வேற யாருமில்ல, ரிஷி தான்… அன்னிக்கு ரெஸ்டாரண்டுல என்கிட்ட வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டப்ப அந்தக் குரல் எங்கயோ கேட்டபோல, ரொம்ப பரிச்சயமான குரலா இருந்துச்சு… ஒரு வருஷம் ஆயிட்டதால சட்டுன்னு நினைவுக்கு வரலை…”

“ஓ… அதுக்காக அவரை லவ் பண்ணுவியா…?”

“இல்ல வானு, அவர் பேசின வார்த்தைகள் ஒவ்வொண்ணும் அவ்ளோ வலியா இருந்துச்சு… அந்தக் குரலோட வலியை எப்படியாச்சும் போக்கணும்னு அந்த நிமிஷத்துல இருந்து என் மனசு தவிச்சுது… அவருக்கு ஆறுதலா இருந்து அவரை  தாழ்வு உணர்ச்சில இருந்து வெளிய கொண்டு வரணும்னு நினைப்பேன்… என்னை அறியாமலே மனசு அவரை ஏத்துகிட்டு விரும்பத் தொடங்கிருச்சு… எங்காச்சும் பார்க்க முடியுமான்னு எத்தனையோ நாள் ஏங்கிருக்கேன்… கடவுள் தான் ரிஷியை என் கிட்ட கொண்டு வந்து நிறுத்திருக்கார்…” பாரதியின் வார்த்தைகளைத் திகைப்புடன் கேட்டு நின்றாள் வான்மதி. அவளே எத்தனையோ முறை பாரதியிடம் இதைப் பற்றிக் கிண்டலடிதிருக்கிறாள்.

Advertisement