Advertisement

அத்தியாயம் – 21

கங்காவின் கையில் இருந்த செல்லில் கணேஷ் காலிங் என ஒளிர்ந்து கொண்டிருக்க இதழில் புன்னகை மலர்ந்தது.

“எஸ்… அண்ணாகிட்ட இதைப் பத்தி சொன்னா சூப்பரா ஒரு ஐடியா கிடைக்கும்…” புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள் கங்கா.

“ஹலோ அண்ணா…”

“ஹலோ கங்கா மா… ஹரி பக்கத்துல இல்லியே, நீ தனியா தானே இருக்க…”

“ஆமாண்ணா, எப்படியும் நீ கால் பண்ணுவேன்னு தெரியும்… அதான் சில விஷயம் எல்லாம் உன்கிட்ட பேசிட்டு தூங்கப் போகலாம்னு வெயிட்டிங்…”

“ம்ம்… நாளைக்கு நீ சொன்ன போல காலைல ரோஷனை ஹாஸ்டல்ல பிக்கப் பண்ணி, டாக்ஸில கோவை வந்து அங்கிருந்து பிளைட்ல சென்னை அழைச்சிட்டு வந்துடறேன் மா… நீ கவலைப் படாம இரு…”

“சரிண்ணா, உன்கிட்ட பொறுப்பைக் கொடுத்தா சரியா முடிச்சிருவேன்னு எனக்குத் தெரியாதா…? என் கவலை அதில்லை, இது வேற விஷயம்…”

“என்ன விஷயம் மா…”

“ஒரு நிமிஷம்…” என்றவள் ஹரியின் அறையை எட்டிப் பார்த்துவிட்டு ரிஷியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சுருக்கமாய் பாரதி பற்றியும், ரிஷி நடந்து கொண்டதையும், பாரதியை இந்த வீட்டு மருமகளாக்க வேண்டுமென்ற ஹரியின் எண்ணத்தையும் சொல்லி முடித்தாள்.

பொறுமையாய் அவள் சொல்லி முடிக்கும்வரை கேட்டுக் கொண்ட கணேஷ், “நீ சொல்லறதைப் பார்த்தா பாரதியை உனக்குப் பிடிக்கலை, அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கும்னு தோணுது… ஒருவேளை, அவ ரிஷிக்கு மனைவியா வந்துட்டா உனக்கு இடைஞ்சலா இருக்கும்னு நினைக்கறியா கங்கா மா…?”

“ம்ம்… ஆமாண்ணா அதேதான், அந்த பாரதி நாம நினைக்கற போல இல்லை… இவங்களைப் போல பாசத்தைக் காட்டி எல்லாம் ஏமாத்த முடியாது, அவ கொஞ்சம் புத்திசாலி… என்னோட பழகின சில நாள்லயே என்னைப் பத்தி மோப்பம் பிடிக்கத் தொடங்கிட்டா, அது மட்டும் இல்லாம அவகிட்டயே நான் என்னைப் பத்தி ஓப்பனா சொல்லிருக்கேன்… அவ மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா என்னைப் பத்தின விஷயங்களை அலசி ஆராய்ஞ்சு வெளிய கொண்டு வராம இருக்க மாட்டா… ஹரி வேற அவளை நாளைக்கே ரிஷிக்கு பேசி முடிச்சிடலாம்கற அளவுக்குத் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டார்… அதான் கொஞ்சம் பயமாருக்கு…”

“என்ன கங்கா மா, நேத்து முளைச்ச காளானுக்கெல்லாம் யோசிச்சு கலங்கிட்டு இருக்க… அந்த சொத்து முழுசும் உனக்கும் உன் புருஷன், பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது… நான் அத்தனை அவமானத்தையும் தாங்கிட்டு உன் புருஷன் முன்னால வராம இருக்கிறது நீ நல்லாருக்கணும்னு தான… இந்த ரிஷியை நாம விட்டு வச்சது கூட அவன் உன் அடிமையா உன் பேச்சைக் கேட்டுட்டு இருக்கறதால தான்… அப்படி இருக்கும்போது இந்த அண்ணன் உனக்கு ஒரு பிரச்சனை வர விட்டிருவேனா…? நீ நான் சொன்ன போல செய்…” என்றவன் சில விஷயங்களை சொல்ல கவனமாய் கேட்டுக் கொண்டாள் கங்கா.

அவர்கள் பேசுவது மகாபாரத சகுனியும், ராமாயணத்தில் கூனியும் ஒன்றாய் பேசுவது போல் இருந்தது.

“புரிஞ்சுது அண்ணே, நாளைக்கு அவர்ட்ட ஏதாச்சும் சொல்லி காஞ்சிபுரம் போறதைத் தடுத்திடறேன்…”

“ம்ம்… முதல்ல அதைப் பண்ணு, நான் நாளைக்கு வந்ததும் நேர்ல மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்…”

“சரிண்ணா, இவர் தான் நீங்க வரீங்கன்னு சொன்னதுல இருந்து குதிச்சிட்டு இருக்கார், அவரை சமாளிக்கிறதுக்குள்ள போதும்னு ஆகிடுச்சு, அதுக்கு நடுவுல இந்த பாரதி டென்ஷன் வேற…” சலித்துக் கொண்டாள் கூனி.

“ஹரியைப் பத்தி யோசிச்சு கவலைப்படாத கங்கா மா… அவன் இல்லாதப்ப நான் உன்னை வந்து பார்க்கறேன்… சென்னைல எனக்கு ஒரு வேலை இருக்கு, அதோட இப்ப உன் வேலையும் சேர்ந்துகிச்சு… எல்லாத்தையும் முடிச்சிட்டு தான் கோவை கிளம்புவேன்…” ஆறுதல் சொன்னான் சகுனி.

“சரிண்ணா, இந்த பாரதியை முளைலயே வெட்டிருக்கணும், தேவை இல்லாம நானே பெருசா வளர விட்டுட்டேன், நீ சொன்ன போல மொத்தமா வேரோட பிடுங்கிருவோம்…”

“ம்ம்… இந்த தில்லு தான் என் தங்கச்சிக்கு அழகு… போயி நிம்மதியாத் தூங்கு, நாளைக்கு பார்ப்போம்…”

“சரிண்ணா, குட்நைட்…” என்றவள் நிம்மதியுடன் அழைப்பைத் துண்டித்து மௌனமாக்கிவிட்டு வெளியே வந்தாள்.

*****************************

ரிஷி ஆசுபத்திரி வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கண் மூடியிருக்க அன்னையின் அறையிலிருந்து வெளியே வந்த பாரதி அவனை வருத்தமாய் பார்த்தாள்.

“ப்ச்… அத்தனை தடவை சென்னை கிளம்ப சொல்லியும் கிளம்பாம, சரி… நைட்டு எங்காச்சும் ரூம் போட்டுத் தங்குங்கன்னு சொல்லியும் கேக்காம, இப்ப இப்படி உக்கார்ந்து தூங்கனும்னு இவருக்கு என்ன தலை எழுத்து… இதெல்லாம் பண்ணாத்தான் நான் உங்களை லவ் பண்ணுவேன்னு நினைக்கறிங்களா ரிஷி…?” தண்ணி எடுக்க பாட்டிலுடன் சென்றவள் யோசித்தபடி ரிஷியைப் பார்த்துக் கொண்டிருக்க அவளை சக்தி கவனித்து விட்டாள்.

அவர்கள் வந்ததில் இருந்து சக்தியும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். “எந்தக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த இத்தனை குறைந்த நாட்களில் வேலை செய்பவரின் அன்னைக்கு ஏதாவது என்றால் பதறியடித்து உடன் வருவார்கள்…?” ரிஷி, பாரதி தம்மில் வேறு ஏதோ ஒரு கனக்ஷன் இருக்கிறது எனப் புரிந்து கொண்டிருந்தாள்.

அதற்குத் தகுந்தவாறு அவன் இரவும் சென்னை கிளம்பாமல் ஆசுபத்திரியில் இவர்களுக்குத் துணையாக தேவுடு காக்க வேண்டுமென்று என்ன அவசியம். “அத்தையும், மாமாவும் வயதானவர்கள், வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கட்டும்… ஆண் பிள்ளையாய் நான் இங்கு இருக்கிறேன்…” என இவர்கள் குடும்பத்தில் அவனாகவே முடிவெடுக்கும் உரிமை எதனால், எப்படி வந்திருக்கும்… யோசித்தவளுக்கு சில விஷயங்கள் புரிந்தாலும் பாரதியின் வாயிலிருந்து விஷயம் வராமல் எதையும் முடிவு செய்யவும் அவளால் இயலவில்லை. சக்தி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, பாரதி தண்ணி எடுப்பதற்காய் நகரவும் யோசித்தபடி அன்னையின் அருகே சென்று அமர்ந்தாள். நார்மல் வார்டுக்கு மாறி இருந்தனர்.

உறங்கிக் கொண்டிருந்த அன்னையின் நெற்றியில் இதமாய் வருடியவள், “எனக்குத் தெரியும் மா… உன் மனசு முழுசும் எங்களைப் பத்தி யோசிச்சு தான் கவலைப்பட்டுட்டு இருக்கு… வாய்விட்டு எதையும் சொல்ல முடியாம உனக்குள்ளயே போட்டு புழுங்கிட்டு தான இப்ப முடியாமப் போயிருச்சு… இனி ஆபத்தில்லன்னு டாக்டர் சொன்னாலும் நாளைக்கு நல்லபடியாய் ஆஞ்சியோ முடியணும் மா, எந்த நல்லது, கெட்டதுன்னாலும் நீங்க கூட இருக்கறது தான் எங்களுக்கு சந்தோஷம்…” சொல்லிக் கொண்டே எதிரில் சோபாவில் அமர்ந்தாள். தண்ணி பாட்டிலுடன் வந்த பாரதி அதை மேஜை மீது வைத்துவிட்டு அக்காவின் மடியில் தலை வைத்துப் படுக்க, இளையவளுக்கு இதமாய் தலை கோதினாள் சக்தி.

“பாரு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டி…”

“என்ன பேசணும் கா…?”

“நான் கேட்டா உண்மையை சொல்லுவியா…?”

“உன்கிட்ட எதுக்குக்கா, நான் பொய் சொல்லப் போறேன்…” பாரதி சொல்ல அன்னையை நோக்கினாள் சக்தி. அவர் நல்ல உறக்கத்தில் இருக்க மெல்லிய குரலில் கேட்டாள்.

“அந்த ரிஷி உண்மைல யாரு…?”

அக்காவின் கேள்வியில் திகைத்தவள் எழுந்து அமர்ந்தாள்

“எதுக்கு அவரைப் பத்திக் கேக்கற…? நான்தான் சொன்னனே, அவர் எங்க ஜேஎம்டி…” என்றாள் பாரதி அவசரமாக.

“அவ்ளோ தானா…?” என்றவள் தங்கையை உன்னிப்பாய் நோக்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பாரதி.

“ஆ..ஆமா, வேறென்ன…?”

“பாரு, இங்க பார்… நீ அந்தப் பையனை லவ் பண்ணறியா…?”

“என்னாச்சுக்கா உனக்கு, இப்படில்லாம் கேள்வி கேக்கற…?”

“சும்மா பேசி மழுப்பாத… எனக்கு உலக அறிவு இல்லாம இருக்கலாம், அதுக்காக எதுவுமே தெரியாத முட்டாள்னு நினைச்சுக்காத… நீ அவரை லவ் பண்ணறியா, இல்லியா…?” பாரதி அமைதியாய் இருக்க சக்தி தொடர்ந்தாள்.

“எந்தப் பையன், தன்னோட கம்பெனில வேலை செய்யற ஒருத்திக்காக இந்த ராத்திரி நேரத்துல, கொசுக்கடில இப்படி ஆசுபத்திரி வராண்டாவுல உக்கார்ந்திருப்பான்…”

“அது… அவர் நமக்கு உதவி செய்யற எண்ணத்துல…” எனத் தொடங்கியவள் அக்காவின் கிண்டலான, நம்பாத பார்வையில் முடிக்காமல் நிறுத்தினாள்.

“சொல்லு, உனக்கே இது கொஞ்சம் ஓவரா ஏத்துக்க முடியாம தானே இருக்கு… அது மட்டும் இல்லை, அவர் உன்னைப் பார்க்கிற பார்வைல அவ்ளோ லவ் தெரியுது, மாமாவை ட்ரீட்மெண்டுக்கு பணம் கட்ட வேண்டாம்னு சொல்லி இவரே எல்லா செலவையும் பண்ணிட்டு இருக்கார்… அவர்கிட்ட என்னை உங்க பிள்ளையா நினைச்சுக்கங்கன்னு அடிக்கடி சொல்லிருக்கார், அதுக்கு என்ன அர்த்தம்…?”

“என்ன அர்த்தம்…?”

“மாமாக்குப் பிள்ளைன்னா உனக்கு முறை மாப்பிள்ளை தானே… அதுக்கு தான் இப்படி சொல்லிருப்பாரோன்னு மாமாக்கு ஒரு சந்தேகம்… அவரும் உன்கிட்ட இவரைப் பத்தி விசாரிக்க சொல்லிட்டு தான் போனார்…” சக்திப் பிரியா சொல்ல பாரதி சற்று அதிர்ந்து தான் போனாள்.

“ஆஹா இந்த லூசு ரிஷி, ஒரே நாள்ல எல்லார் மனசுலயும் இப்படி டவுட் வர்ற அளவுக்கு அப்பட்டமா தன்னைக் காட்டிட்டு இருக்கானே, இப்ப அக்காகிட்ட என்ன சொல்லி சமாளிக்கிறது…” யோசித்தாள்.

“பாரு, நம்மளைப் பத்தின கவலை தான் அம்மாவோட இந்த நிலைக்குக் காரணம்… உன்னோட மனசுல என்ன இருக்கோ, மறைக்காம சொல்லு, என்கிட்ட சொல்லறதுக்கு என்ன மா…?”

“அ..க்கா… உனக்கு என்ன தெரியனும்….?”

“நீங்க ரெண்டு பேரும் விரும்பறீங்களான்னு தெரியணும்…?”

“ரிஷி என்கிட்ட புரபோஸ் பண்ணிருக்கார், பட் நான் இன்னும் ஒத்துக்கலை…” தயங்கிக் கொண்டே சொல்லி விட்டாள்.

“ஏன்…? ரிஷியை உனக்குப் பிடிக்கலியா…?”

“அது..வந்து… உனக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி, அம்மாவைப் பொறுப்பா பார்த்துக்கணும்… அதுக்கப்புறம் தான் என்னைப் பத்தி யோசிக்கணும்னு எப்பவோ முடிவு பண்ணி வச்சிருக்கேன்… அதுக்கு என்னோட காதல், கல்யாணம் எதுவும் குறுக்கே வந்துடக் கூடாதுன்னு தான் அவர் காதலை நான் ஏத்துக்காம இருக்கேன்…”

“ஓ… அப்ப பொறுப்பும், கடமையும் உனக்கு மட்டும் தான் இருக்குன்னு நினைக்கற, அக்காவா உன் எதிர்காலத்தைப் பத்தி எனக்கு எந்த அக்கறையும் இருக்கக் கூடாதா…?”

“அக்கா, ஏன்க்கா…? நான் அப்படியா சொன்னேன்…?”

“நீ அப்படி சொல்லல தான், ஆனா எனக்கும் பொறுப்பு இருக்குன்னு மறந்திட்டுப் பேசற…”

பாரதி அமைதியாய் இருக்க சக்தியே கேட்டாள்.

“என் கேள்விக்கு இன்னும் பதில் வரல…”

“சரி, சொல்றேன், எனக்கு ரிஷியை ரொம்பப் பிடிக்கும்… இன்னைக்கு நேத்தில்ல, ஒரு வருஷமா அவரை மனசுல சுமந்திட்டு இருக்கேன்… அவரும் என்னை லவ் பண்ணறது தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு… ஆனா எனக்கான கடமைகளை முடிக்காம ஏத்துக்க விரும்பல, அதே போல அவருக்கும் சில கடமைகள் இருக்கு… அதை அவர் முடிக்கிற வரைக்கும் என் காதலை சொல்லக் கூடாதுன்னு இருக்கேன்…” உணர்ச்சிவசப்பட்டு மனதிலுள்ள எல்லாத்தையும் அக்காவிடம் கொட்டிவிட்டாள் பாரதி.

அவர்கள் பேச்சு சத்தத்தில் உறக்கம் கலைந்த தேவிகாவின் செவிகளில் மகள்கள் பேசுவது கேட்க, தான் உணர்ந்ததைக் காட்டிக் கொள்ளாமல் கண் மூடி படுத்திருந்தார்.

நாற்காலியில் அமர்ந்திருந்த ரிஷிக்கு கொசு கடித்ததில் உறக்கம் கலைந்திருக்க, இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு  அறைக் கதவைத் திறக்க வந்தவன் காதில் அவர்கள் பேசுவது விழுந்திருக்க பாரதியின் பதிலைத் தெரிந்து கொள்வதற்காய் அவனும் அப்படியே கதவை முழுவதும் திறக்காமல் நின்றிருந்தான். பாரதி சொன்ன பதிலைக் கேட்டதும் உள்ளம் எகிறி குதித்தது. அடுத்து சக்தியின் குரல் ஒலிக்க,  கேட்பதற்காய் காத்திருந்தான் ரிஷி.

“பாரு, ரிஷி நல்லவராத்தான் தெரியறார்… நிச்சயம் உன் சாய்ஸ் தப்பாப் போகாது, ஆனா அவரோட ஊனம் உனக்கு பிரச்சனை இல்லையா…?”

“அக்கா, என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி கேக்கறது கஷ்டமா இருக்குக்கா… உடல் ஊனத்தை நான் பெருசா நினைக்கிறவ கிடையாதுன்னு உனக்கே தெரியும்… மனசுல ரிஷி ரொம்ப நிறைவானவர்… எல்லாருக்கும் கொடுக்கணும், எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைக்கிற நிறைவான மனசு அவருக்கு இருக்கு, நான் அதைத்தான் பார்க்கறேன்… அவரோட மனசுல தன்னோட குறை ஒரு பெரிய வலியா இருக்கு… அதுக்கு நான் ஒத்தடமா இருப்பனே ஒழிய எப்பவுமே அதைக் குறையா நினைக்க மாட்டேன்…”

“ம்ம்… ரொம்ப தெளிவா சொல்லிட்ட பாரு, நாளைக்கே நான் ரிஷி கிட்ட இதைப் பத்திப் பேசட்டுமா…?”

“ஐயோ, எதுக்குக்கா அவசரப்படற, முதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்… அம்மா உடம்பு தேறி வரட்டும், அப்புறம் என்னைப் பத்தி யோசிக்கலாம்…”

“இல்ல பாரு, உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போறது தெரிஞ்சா அம்மா நிம்மதியா இருப்பாங்க, சீக்கிரமே குணமாகிடுவாங்க… சரி, ரிஷி வசதியான குடும்பமா இருக்காரே, அவங்க வீட்டுல உங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா…” சக்தி கேட்க பாரதி திகைத்தாள்.

சட்டென்று மனதுக்குள் கங்காவின் முகம் வந்து போக, “யார் சம்மதித்தாலும் அந்த கங்கா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாள்…” எனத் தோன்ற அச்சம் நிறைந்தது.

ஆனால் அவளது அச்சத்தை வளர விடாமல் கதவைத் திறந்து உள்ளே வந்த ரிஷியை சகோதரியர் இருவரும் திகைப்புடன் நோக்க புன்னகையுடன் அவர்களிடம் வந்தான்.

“ரி..ரிஷி, நீங்க தூங்கலியா…? தண்ணி வேணுமா…?” பாரதி அவன் கேட்டிருப்பானோ என்று பதட்டமாய் கேட்க, தண்ணி பாட்டிலை எடுத்தவன் அவளிடம் நீட்டினான்.

“குடி… உனக்கு தான் இப்ப தண்ணி வேணும்…” எனப் புன்னகைக்க பாரதி சக்தியைப் பார்த்துக் கொண்டாள்.

“வாங்க ரிஷி, நாங்க பேசினதைக் கேட்டிங்களா…?” சக்தி அவனிடம் கேட்க புன்னகைத்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி, இத்தனை நாளா இவ மனசுல நான் இருக்கேனா, இல்லியான்னு போராட்டமா இருந்துச்சு… இப்ப உங்க கேள்வியால அந்த டவுட் தீர்ந்திடுச்சு… எங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களான்னு தான கேட்டிங்க, நிச்சயமா சம்மதிப்பாங்க… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இவளை எப்படி என் காதலை ஏத்துக்க வச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறதுன்னு பயந்துட்டே இருந்தேன்… அதான் உங்ககிட்ட சொல்லி கேக்க சொன்னேன்… நீங்களும் நழுவப் பார்த்தவளை விடாம கேள்வி கேட்டு பதிலை வாங்கிட்டிங்க, ரொம்ப தேங்க்ஸ் அண்ணி…” என்றவனை பாரதி அதிர்ச்சியாய் பார்க்க சக்தி புன்னகையுடன் இருவரையும் பார்த்தாள்.

“அடப்பாவி, ஒரே நாள்ல என் அக்காவுக்கு உன் அண்ணியா பிரமோஷன் கொடுத்து உனக்கு சாதகமா நடந்துக்க வச்சுட்டியே… உன்னை…” என்றவள் அவன் முதுகில் ஒன்று போட சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான் ரிஷி.

அவர்கள் பேசுவதைக் கேட்டபடி படுத்திருத்த தேவிகாவின் மனதும் நிம்மதியாக, சக்தி ரிஷியிடம் அவன் குடும்பத்தைப் பற்றிய பொதுவான விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, பாரதி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருவரையும் முறைத்தபடி உம்மென்று அமர்ந்திருந்தாள்.

காலை அழகாய் விடிந்தது.

அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டும் எழாமல் அப்படியே படுத்திருந்தாள் கங்கா. வெகு நேரம் அது அடித்துக் கொண்டேயிருக்க ஹரி எழுந்து விட்டான். கடிகாரத்தைப் பார்க்க மணி ஏழு ஆகியிருந்தது.

“கங்கா, எழுந்திரு மா… சீக்கிரம் கிளம்பி காஞ்சிபுரம் போகணும்னு சொல்லி இருந்தேன்ல…” ஹரி மனைவியை எழுப்ப அவளோ சோர்வுடன் முனங்கினாள்.

“முடி..யலங்க… ரொம்ப டயர்டா இருக்கு…” சொன்னவள் தொண்டையை செருமி இருமிக் கொண்டாள்.

“என்ன கங்கா, திடீர்னு என்னாச்சு…? என்ன பண்ணுது…?”

“உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட போல வலிக்குது… சளி பிடிச்சிட்டு தொண்டை வலிக்குது…” கண்ணைத் திறக்க முடியாத போல் சிரமப்பட்டு சொல்ல வருந்தினான் ஹரி.

“அச்சோ, ரொம்ப முடியலியா…? நான் வேணும்னா டாக்டரை வர சொல்லட்டுமா…” அக்கறையாய் கேட்டான்.

“இல்..லங்க, வாரம் பூரா ஓடிட்டே இருக்கோம்… அலுப்பா இருக்கு, நல்லாத் தூங்கி எழுந்தா சரியாகிடும்…”

“ம்ம்… இன்னைக்கு பாரதி வீட்டுல பேசிடலாம்னு நினைச்சேன், உனக்கு முடியல… இப்ப என்ன பண்ணறது…?”

“உடம்புக்கு முடியாதவங்களை இந்த நிலைமைல பார்க்கப் போக வேண்டாம்… ஆல்ரெடி ஆஞ்சியோ பண்ணப் போறாங்க, என்னால ஏதாச்சும் இன்பெக்ஷன் ஆயிட்டா கஷ்டம்… இன்னொரு நாள் பேசிக்கலாங்க…”

“ம்ம்… அதும் சரிதான்… சரி, நீ ரெஸ்ட் எடு… நான் வாக்கிங் போயிட்டு வந்துடறேன்…” சொன்னவன் பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ள அவளது நயவஞ்சக இதழ்களில் வெற்றிப் புன்னகை மிளிர்ந்தது.

உன் சம்மதத்திற்காய் நான்

காத்திருந்த நொடிகள் எல்லாம்

முள்மேல் தவமிருந்த வலிகள்…

இல்லையென்று நீ மறுத்திருந்தால்

என் காதல் மூச்சற்றுப் போயிருக்கும்…

இப்பிறவியிலே… ஆமென்ற

வார்த்தையிலே மறுபிறப்பொன்றை

நீ கொடுத்தாய் காதலிலே…

Advertisement