Advertisement

அத்தியாயம் – 20

மற்ற அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு அன்று மெயின் பிராஞ்சுக்கு தாமதமாய் தான் வந்தாள் கங்கா. ஹரியையும், ரிஷியையும் விசாரிக்க, ஹரி யாருடனோ பிசினஸ் மீட்டிங்கிற்கு கிளம்பி சென்றதாகக் கூறினர். ரிஷி காலையில் அலுவகத்திற்கு வந்ததுமே கிளம்பி விட்டதாக அறிந்தவள் மனது குதூகலித்தது.

“பயபுள்ள, நேத்து ஈவனிங் தான் குடிக்கப் போனான்… இன்னிக்கு என்னடான்னா காலைலயே பாருக்குக் கிளம்பிட்டான் போல…” என நினைத்தவள்,

“அத்தனை தூரம் சொல்லியும் ரிஷி கிட்ட என்னைப் பத்தி சொல்ல டிரை பண்ணிருக்காளே பாரதி… அவளை சும்மா விடலாமா…?” யோசித்தவள் ருக்மணிக்கு அழைத்தாள்.

“அந்த பாரதியைக் கூட்டிட்டு என் ரூமுக்கு வா…”

“பாரதி இன்னைக்கு லீவு மேம், அம்மாக்கு உடம்பு முடியலன்னு ஊருக்குப் போயிருக்கா…”

“ஓ… எஸ்கேப் ஆயிட்டாளே…” என யோசித்தவள்,

“சரி, அவ எப்ப ஆபீஸ் வந்தாலும் என்னைப் பார்த்துட்டு சீட்டுக்குப் போனாப் போதும்னு சொல்லிடு…” என்று விட்டு ரிசீவரை வைத்தாள். அதற்கு மேல் அவர்களைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் வரிசையில் காத்திருந்த வேலைகளை  கவனிக்கத் தொடங்கினாள்.

மாலை ரிஷியை அழைக்க அவன் அலைபேசி சுவிட்ச் ஆப் என்றது. ஹரியை அழைக்க அவன் வீட்டில் இருப்பதாகக் கூறவே காரில் வீட்டுக்குக் கிளம்பினாள் கங்கா.

நடுவில் அலைபேசி சிணுங்கவே மகன் ரோஷனின் எண்ணைக் கண்டவள் சந்தோஷத்துடன் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு செல்போனைக் காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ, தங்கம்… எப்படிடா கண்ணா இருக்க, எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதின…?”

“ஐ ஆம் பைன் மம்மி, வாட் அபவுட் யூ, டாட், அண்ட் ரிஷி சித்தப்பா… எக்ஸாம்ஸ் எல்லாம் சூப்பர்பா பண்ணிருக்கேன், இன்னைக்குதான் லாஸ்ட் எக்ஸாம்…” என்றான்.

“ஓ… சூப்பர் டா கண்ணா… இங்க எல்லாரும் நல்லாருக்கோம், அப்ப நாளைக்கே மாமாவை ஸ்கூலுக்கு வர சொல்லவா… அவரோட கார்ல கோவை போயி அங்கிருந்து ஈவனிங் பிளைட்ல சென்னை வந்துடறியா…?”

“ஓகே மம்மி… பட் கணேஷ் மாமாவைப் பார்த்தா டாட் கோபப் படுவாரே…?” என்றான் ரோஷன்.

“அதெல்லாம் நான் அப்பாட்ட சொல்லிக்கறேன்… நீ கிளம்ப ரெடியா பாக் பண்ணி வச்சிரு…”

“டன் மம்மி, பை…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க தாயின் பெருமிதத்துடன் மொபைலை வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் கங்கா.

ஹால் சோபாவில் அமர்ந்து காபி குடித்தபடி டீவியில் பார்வையைப் பதித்திருந்த ஹரி கங்காவின் கார் சத்தத்தைக் கவனித்தான். சில நிமிடத்தில் உள்ளே வந்த கங்கா கணவனைக் கண்டதும் புன்னகைத்தாள்.

“ஹரி, ரோஷன் கால் பண்ணான்… இன்னையோட அவனுக்கு எக்ஸாம் முடிஞ்சுதாம்…”

“ஓ வெரி குட், குழந்தையைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு…”

“ஆமாங்க, அதான் நாளைக்கு காலைல அவனை என் அண்ணனோட கிளம்பி சென்னை வர சொல்லிட்டேன்…” கங்கா சொல்ல ஹரியின் முகம் மாறியது.

“என்னது…? அந்த நம்பிக்கை துரோகி கூடவா…? அதெல்லாம் தேவையில்லை, வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்…”

“ப்ச்… இன்னும் எத்தனை காலம் தான் என் அண்ணனை இப்படி சொல்லி விலக்கி வைக்கப் போறீங்க, அவரை மன்னிக்கவே மாட்டீங்களா…?”

“எதுக்கு, மன்னிக்கணும்… தப்பு செய்தா மன்னிக்கலாம், துரோகத்துக்கு எப்பவுமே மன்னிப்பு கிடையாது…”

“நீங்க என்னவோ சொல்லுங்க, ஆயிரம் இருந்தாலும் அவர் என் அண்ணன்… ரத்த சொந்தம்…! என் பிள்ளைக்குத் தாய்மாமன், அப்படி எல்லாம் விலக்கி வச்சிட முடியாது…”

“கங்கா…! நான் எது சொன்னாலும் மறுக்காம சம்மதிக்கிற நீ உன் அண்ணன் விஷயத்தில் மட்டும் என் பேச்சைக் கேக்கவே மாட்டேங்கற… இது சரியில்லை…”

“ப்ளீஸ் ஹரி… உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை செய்ய எனக்கும் விருப்பம் இல்லை தான், என்ன பண்ணுறது…? எனக்குன்னு இருக்கிற ஒரே பிறந்தவீட்டு சொந்தம் என் அண்ணன் மட்டும் தானே… எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும், தயவு செய்து அவரை மன்னிச்சு ஏத்துக்கங்க…”

“முடியாது கங்கா… உனக்கு வேணும்னா உன் அண்ணன் பெருசா இருக்கலாம், ஆனா எனக்கும் என் குடும்பத்துக்கும் அவன் பண்ணின துரோகத்தை எந்த காலத்துலயும் என்னால மன்னிக்கவே முடியாது… அவனை இந்த ஜென்மத்துல நான் மறுபடி பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்…” கோபமாய் சொன்னான் ஹரி.

“சரி, நீங்க கோபப்படாதீங்க… இந்த ஒரு முறை மட்டும் அவன் ரோஷனை அழைச்சிட்டு வரட்டும்… உங்க கண்ல படாம அப்படியே அவனை ஊருக்கு அனுப்பிடறேன்… ப்ளீஸ் ஹரி…” கங்கா பாவ முகத்துடன் கெஞ்சி கேட்டாள்.

“உன் இஷ்டத்துக்கு என்னமோ பண்ணு…” சொன்னவன் எழுந்து தோட்டத்துக்கு சென்று விட்டான்.

“ச்சே, எத்தனை வருஷம் ஆனாலும் அண்ணனை மட்டும் இவர் மன்னிக்கவே மாட்டேங்கறாரே… இப்ப கோபத்துல வேற போயிருக்கார், சமாதானம் பண்ணனும்…” யோசித்தபடி தனது அறைக்கு சென்றவள் குளித்து அடுக்களைக்கு வந்தாள். உதவிக்கு இருந்த பெண்ணிடம் ராத்திரிக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கி வைக்க சொன்னவள் ஒரு காபியைக் கலந்து கொண்டு கணவனைத் தேடி சென்றாள்.

செடிகளுக்கு நடுவே இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து வெறுமனே கண்ணை மூடி இருந்தான் ஹரி.

“ஹரி… எதுக்கு இந்த குளிர்ல இங்க உக்கார்ந்திருக்கிங்க…”

“ப்ச்… சும்மா தான்…”

“இந்த ரிஷி ஏதாச்சும் சொன்னானா…? கால் பண்ணா சுவிட்ச் ஆப் வருது…” என்றபடி கணவன் அருகே அமர்ந்தாள்.

“அவன் ஒரு வேலையாப் போயிருக்கான், வந்திருவான்…”

“அதென்ன எனக்குத் தெரியாம ஒரு வேலை…? என்கிட்ட சொல்லாம ரிஷி எங்கயும் போக மாட்டானே…”

“இப்ப போயிருக்கான்… அவனும் சுயமா யோசிச்சு ஏதாச்சும் பண்ணணும்ல, எவ்ளோ நாள் தான் நீ சொன்னதையே கேட்டு தலையாட்டிட்டு இருப்பான்…” கணவனின் பேச்சில் திகைத்து அதிர்ந்து போனாள் கங்கா.

“எ..என்னங்க சொல்லறிங்க, நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்… ரிஷி எங்கன்னு தான கேட்டேன்…”

“ம்ம்… என் தம்பியை நான் பார்த்துக்கறேன், நீ போ…”

ஹரி கோபம் வந்தால் மட்டுமே என் தம்பி, உன் அண்ணன் என்று பிரித்துப் பேசுவான்… இப்போது கோபத்தின் உச்சியில் அமர்ந்து கொடி பிடிக்கிறான் எனப் புரியவே அதற்கு மேல் எதுவும் கேட்காமல் எழுந்து சென்று விட்டாள் கங்கா.

“ஹூக்கும், கோபத்துல வேதாளம் முருங்கமரத்துல ஏறி உக்கார்ந்திருக்கு, உங்களை எப்படி மலை இறக்கறதுன்னு எனக்கா தெரியாது…”

யோசித்தபடி அடுக்களைக்குள் நுழைந்தவள், “இந்த ரிஷி எப்ப பார்ல இருந்து வருவானோ, சீக்கிரம் சமையலை முடிப்போம்…” என கணவனை மலை இறக்குவதற்காய் அவனுக்குப் பிடித்த உணவுகளை சமைத்து முடித்தாள்.

அறையில் லாப்டாப்பை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த ஹரி, அருகில் நிழலாடவும் நிமிர்ந்தான்.

“என்னங்க, உங்களுக்குப் பிடிச்சதா சமைச்சு வச்சிருக்கேன், ஆறிடப் போகுது… சாப்பிட வாங்க…”

“ம்ம்… என்றவன் லாப்டாப்பை மூடி வைத்து எழுந்து கொள்ள சட்டென்று அவனை அணைத்து முத்தமிட்டாள் கங்கா. முதலில் விலக்க முயன்றவன் பிறகு புன்னகையோடு அவளிடம் அடங்கி தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“என் மேல கோபம் போகலியா…?” கொஞ்சலாய் கேட்டவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “இப்படி எல்லாம் பண்ணினா கோபம் எங்க இருக்கும், அதெல்லாம் போயிடுச்சு…” என்றான்.

அவனது மார்பில் மேலும் ஒட்டிக் கொண்டவள், “நீங்க கோபமா இருந்தா என்னால தாங்கிக்கவே முடியாது ஹரி… எனக்கு உங்களை அவ்ளோ பிடிக்கும், எப்பவும் நீங்க என்கிட்ட அன்பா சிரிச்சுட்டே பேசுங்க ப்ளீஸ்…” கொஞ்சலாய் சொன்னவள் மீண்டும் அவனை முத்தமிட்டாள்.

“ஹூம்… இப்படி எல்லாம் கிடைக்கும்னா எப்பவும் கோபப் பட்டுகிட்டே இருக்கலாம் போலருக்கே…” ஹரி குறும்புடன் சொல்லி கண்ணடிக்க நாணத்துடன் அவனை குத்தினாள்.

“ஹூக்கும், ரொம்பதான்… சரி வாங்க சாப்பிடுவோம்…” சொன்னவள் அவன் கரம் பற்ற அருகே இழுத்தான் ஹரி.

“அதென்னவோ, உன் அண்ணன் பத்தின பேச்சு வந்தாலே எனக்கு கோபத்தை அடக்க முடியல… நான் எவ்ளோ சொல்லியும் நீ அவன் விஷயத்துல மட்டும் மாறவே மாட்டேங்கற, அதான் எனக்குப் பிடிக்கல…”

“சரி, மறுபடி அந்தப் பேச்சு எதுக்கு… நாளைக்கு ரோஷனை அவன் அழைச்சிட்டு வந்து விட்டுப் போகட்டும்… உங்க கண்ணுல படாம அப்படியே திரும்ப அனுப்பிடறேன்… இப்போ சாப்பிட வாங்க, ப்ளீஸ்…” கெஞ்சலாய் கங்கா சொல்லவும் அவள் கரத்தைப் பற்றியபடியே நடந்தான் ஹரி. கணவனுக்குப் பரிமாறிவிட்டு கங்காவும் அவன் அருகே ஒரு தட்டுடன் சாப்பிட அமர்ந்தாள்.

“நாளைக்கு நம்ம ரோஷன் இந்நேரம் நம்மோட இருப்பான், அவனை ரொம்ப மிஸ் பண்ணறேன்…” கங்கா சொல்ல,

“ம்ம்… நீதான் அவனை இங்கயே படிக்கட்டும்னு சொன்னாக் கேக்காம ஊட்டில விட்டிருக்க… சின்னப் பசங்களா இருக்கும் போது நம்மோட இருக்கணும்னு தானே அவங்களுக்கும் ஆசை இருக்கும்…”

“எனக்கும் அவனைக் கூடவே வச்சுக்கனும்னு தான் ஆசைங்க, நாம எல்லாரும் வேலை, வேலைன்னு நேரம் காலம் இல்லாம ஓடிட்டு இருக்கோம்… அவனைப் பார்த்துக்க சிரமமா இருக்கும், அதும் இல்லாம அவனை இப்பவே நம்மளை விட்டு தனியா விட்டு பழக்கினா தான் நாளைக்கு பாரின்ல படிக்கப் போகும்போதும் பிள்ளை ஈசியா மேனேஜ் பண்ணிப்பான்…” என்றாள் கங்கா.

“ஹூம், என்னமோ சொல்லற… பெத்த உன்னை விட வேற யாருக்கு அவன் மேல அக்கறை இருந்துடப் போகுது…”

“ம்ம்… ஆமாங்க, ரோஷன் இப்பவே எவ்ளோ அழகா இங்லீஷ் பேசறான், கேட்டுட்டே இருக்கலாம் போலருக்கு…”

“ம்ம்… இங்க உள்ள புள்ளைங்களும் இங்லீஷ் பேசத்தான செய்யறாங்க…” ஹரி சொல்லவும் கங்கா முறைக்க,

“சரி, சரி… உன் விருப்பம் போலப் பண்ணு…” என்றான் ஹரி.

“ம்ம்… ரிஷி எங்க போனான்னு சொல்லுங்க, எனக்கு அவன் ஒரு கால் கூடப் பண்ணலை…” மீண்டும் தம்பியைப் பற்றி மனைவி வருத்தமாய் சொல்ல ஹரி நெகிழ்ந்தான்.

“கங்கா, நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்… ரிஷி காஞ்சிபுரம் போயிருக்கான்…” எனவும் அதிர்ந்தாள் கங்கா.

“காஞ்சிபுரமா, எதுக்கு…? என்கிட்ட சொல்லவே இல்லை…”

“அது காலைல பாரதி அம்மாவுக்கு கொஞ்சம் சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணறதா சொன்னாங்க, அந்த சூழ்நிலைல பாரதியைத் தனியா அனுப்ப வேண்டாம்னு அவளை ரிஷியே அழைச்சிட்டுப் போயிருக்கான்…”

“என்ன, ரிஷி பாரதியோட போயிருக்கானா…?” அதிர்ச்சியில் அவள் முகம் சிவந்தது. அதை கவனிக்காத ஹரி,

“ஆமா… நம்ம ஜோசியர் கிட்ட அவன் கல்யாண விஷயமாப் பேச சொன்னனே, பேசினியா…” என்றான் மனைவியிடம்.

“இன்னைக்கு கால் பண்ணேன்… திங்கள் காலைல வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருக்கார்…”

“ம்ம்… கங்கா, நீ நம்ம பாரதியைப் பத்தி என்ன நினைக்கற…?”

“அதென்ன நம்ம பாரதி…” முகத்தை சுருக்கி கங்கா கேட்க, “சரி, பாரதியைப் பத்தி என்ன நினைக்கறன்னு சொல்லு…”

“அவளைப் பத்தி நினைக்க என்ன இருக்கு…? கொடுக்கிற வேலையை பொறுப்பா முடிக்கிற அளவுக்கு புத்திசாலி… வேற ஒண்ணும் அவளைப் பத்தி நான் யோசிக்கலை, நீங்க எதுக்கு அவளைப் பத்தி கேக்கறீங்க…”

“அது ஒண்ணும் இல்லமா, என்னைப் பொறுத்தவரை பாரதி நல்ல புத்திசாலி… எந்த வேலையைக் கொடுத்தாலும் புரிஞ்சு செய்யற திறமை இருக்கு, இதெல்லாத்தையும் விட மத்தவங்களை மதிச்சு நடந்துக்குவா… இல்லையா…?”

“சரி, அதுக்கு இப்ப என்ன…?”

“இரு சொல்லறேன்… நீயும் மிடில் கிளாஸ்ல இருந்து வந்தவ, இந்தக் குடும்பத்தை சொந்த குடும்பமா நினைச்சு, ஆபீஸ் வேலையையும் ஷேர் பண்ணி எங்களையும் நல்லபடியா பார்த்துகிட்டு எவ்ளோ அழகா மேனேஜ் பண்ணிக்கற…”

“என்னங்க சொல்லறீங்க, இது என் குடும்பம் தானே…?”

“ஆமாம்மா, நான் அதுக்கு சொல்லலை, உன்னைப் போல பாரதியும் மிடில் கிளாஸ் பொண்ணு… குடும்ப சூழலைப் புரிஞ்சு நடத்துக்கற நல்ல பொண்ணு…” கணவன் தன்னை பாரதியுடன் ஒப்பிட்டுப் பேச கங்காவின் முகம் மாறியது.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க…? ஓபனா சொல்லுங்க…”

“அது ஒண்ணும் இல்லமா, நாம ஏன் நல்ல பொண்ணை நம்ம பக்கத்துல வச்சுகிட்டு வேற ஒரு நல்ல பொண்ணை ரிஷிக்குத் தேடணும்…? பாரதியையே ரிஷிக்குப் பேசி முடிச்சிட்டா என்ன…?” கணவனின் கேள்வியில் நிலை குலைந்து போனவள் அதிர்ச்சியில் அவனையே பார்த்தாள்.

“என்னமா..? நான் சொல்லறது சரிதானே…” ஹரி மீண்டும் அவளிடம் கேட்க அதிர்ந்த முகத்தை இயல்பாய் மாற்றிக் கொண்டு அவனைப் பார்த்தாள் கங்கா.

“இங்க பாருங்க, இது நீங்களும் நானும் மட்டும் முடிவு பண்ணற விஷயம் கிடையாது… ரிஷிக்கு அவளைப் பிடிக்கணும், அந்தப் பொண்ணு வீட்டுல இதுக்கு ஒத்துக்கணும்… கம்பெனிக்கு வேலைக்கு வந்த பொண்ணை திடீர்னு நம்ம வீட்டுக்கு மருமகளா வான்னு சொன்னா நல்லாவா இருக்கும்… உங்களுக்கு ஏன் இப்ப இப்படில்லாம் தோணுது…” என்றாள் கடுப்பை மறைத்துக் கொண்டு.

“காரணம் இருக்கு மா, நம்ம ரிஷிக்கு பாரதி மேல ஒரு ஈடுபாடு இருக்குமோன்னு தோணுது… பாரதியைப் பார்த்தப்ப அவன் கண்ணுல ஒரு ஆர்வம் தெரிஞ்சுது… அவன் பொதுவா எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறவனா இருந்தாலும் பாரதிக்குத் துணையா அவளை வீட்டுக்கே அழைச்சிட்டு போனதை யோசிக்கும்போது இது அதுதான்னு தோணுது…”

உள்ளுக்குள் உறைந்து போன கங்கா அதிர்ச்சியை வெளியே காட்டாமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டாள்.

“ஒருவேளை, இவர் சொல்லுவது போல் இருக்குமோ…? பாரதி அதிக நேரம் வேலை செய்யும்போது இவனுக்கு வலித்ததும், அவளுக்காய் பரிந்து பேசியதும் எல்லாம் அவள் மேல் கொண்ட ஈடுபாடினால் தானா…? அவன் காதலிக்கிறேன் என்று சொன்னது பாரதியைத் தானா…?” கங்காவின் மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் பேரலையாய் பொங்கியது.

“என்ன கங்கா, அமைதியா இருக்க…? நான் சொன்னது சரிதானே… பாரதி, ரிஷிக்கு நல்ல சாய்ஸ் தானே…?” ஹரி மனதுக்குள் முடிவு செய்தவன் போலக் கேட்க கங்கா என்ன சொல்லுவது எனப் புரியாமல் திணறினாள்.

“நா..நான் என்ன சொல்லுறது… இதெல்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவு பண்ணக் கூடிய விஷயமில்லை, ரிஷி வந்ததும் பேசிட்டு முடிவு பண்ணுவோம்…” கங்கா சொல்ல ஹரி மறுப்பாய் தலையாட்டினான்.

“இல்ல கங்கா, நல்ல விஷயத்தை தள்ளிப் போட வேண்டாம்னு நினைக்கறேன்… பாரதியோட அம்மாவுக்கு நாளைக்கு ஆஞ்சியோ பண்ணறாங்க, நாம காலைல நேர்ல அவங்களைப் போய் பார்த்திட்டு வந்தா என்ன…?”

“ரிஷி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாம அவசரப் படறமோன்னு தோணுதுங்க… அவன் ஒரு ஹெல்ப்பிங் மைண்டுல பாரதிக்கு உதவக் கூட கூடப் போயிருக்கலாமே… அதும் அவங்கம்மா முடியாம இருக்கிற சூழ்நிலைல இப்படியெல்லாம் நாம போயி பேசறது சரியும் இல்லை…”

“இதுல என்ன இருக்கு…? போவோம், பேசற சூழ்நிலை இல்லன்னா, அவங்கம்மாவைப் பார்த்திட்டு ஆறுதல் சொல்லிட்டுக் கிளம்பி வந்திருவோம்…” ஹரி தனது எண்ணத்தில் உறுதியாய் பேச கங்காவுக்கு திகிலானது.

“கடவுளே…! இவர் ஒரு விஷயத்தை நினைச்சா முடிக்காம விட மாட்டாரே… இப்ப எப்படி இந்த விஷயத்தை தடுக்கிறது…” கங்கா யோசித்துக் கொண்டிருக்க ஹரி எழுந்தான்.

“கங்கா, நாளைக்கு சண்டே தானே, காலைல சீக்கிரம் ரெடியாகிரு… மதியம் அங்கிருந்து கிளம்பிட்டா ரோஷன் வர்றதுகுள்ள நாம வீட்டுக்கு வந்திடலாம்…” சொன்ன ஹரி சென்று விட கங்கா திகைப்புடன் அமர்ந்திருந்தாள்.

“ஹரி முடிவு செய்து விட்டார்… இனி என்ன செய்வது…?” யோசித்தவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“ரிஷி அங்கே இன்னும் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறான்… அவன் போனில் சார்ஜ் இல்லாமல் எப்படிப் பேசுவது…? பாரதி…! அவளிடம் பேசினால் என்ன…?” யோசித்தவள் வேண்டாம் என முடிவுக்கு வந்தாள்.

“ஹரி இதில் இத்தனை ஈடுபாட்டுடன் இருக்கும்போது நாம் இதை வேறு விதமாகத்தான் டீல் செய்ய வேண்டும்… முதலில் இந்த ரிஷியின் மனதில் உள்ளதைக் கண்டு பிடிக்க வேண்டும்… அவனிடம் எப்படிப் பேசுவது…?” யோசனையுடன் அவளும் எழுந்தாள்.

சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு ஹாலில், கையில் அலைபேசியுடன் உலாத்திக் கொண்டிருந்தவளின் மனது அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் துள்ளியது.

அகத்தில் புதைத்துக் கொள்ளாத

அரிதாரமற்ற கோபம் கூட

அழகுதான்… அவை

வஞ்சத்தை வளர்ப்பதில்லை…

நம் பலகீனத்தில்

அடிக்கத் தெரிந்தவர்கள்

நாம் அதிகம் நம்பியவர்களே…

Advertisement