Advertisement

“நீங்க அப்பாவி இல்லை, அடப்பாவி…!” அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி சொல்ல கை பரபரத்தது.

“என்ன ரதி…? எதுவும் சொல்லாம என்னையே பார்க்கற…? நான் அவ்ளோ அழகாவா இருக்கேன்…”

“ஹூக்கும், போதும் வழிஞ்சது… ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க…” பட்டென்று அந்தப் பேச்சுக்கு கேட்டைப் போட்டுவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டாள் ரதி.

“ஹூம் அதானே, நாமளும் எப்படி எல்லாமோ பிட்டைப் போட்டுப் பார்க்கறோம், கொஞ்சமாச்சும் இறங்கி வராளா பாரு… இந்த லட்சணத்துல அண்ணி சொன்ன போல, இவளை எப்படி ஒரு வாரத்துல லவ்வுக்கு ஓகே சொல்ல வைப்பேன்…” கவலையுடன் யோசித்துக் கொண்டே தலையை வேகமாய் குலுக்கிக் கொள்ள அதிசயமாய் பார்த்தாள் பாரதி.

“எதுக்கு இப்ப தலையைப் போட்டு இப்படி குலுக்கறிங்க…?”

“அது வேறொண்ணும் இல்ல ரதிம்மா… அம்மாவுக்காக சும்மா சின்னதா ஒரு வேண்டுதல்… அவ்ளோ தான்…” எனவும்,

“இப்படி எல்லாம் கூட வேண்டுதல் இருக்கா என்ன…?” என்று யோசனையாய் அவனையே பார்த்தாள் பாரதி.

“ஹூக்கும், இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, ஆனா என் விஷயத்துல இறங்கி வர மட்டும் மாட்டா… ஹூம், அத்தைக்கு முடியாம ஹாஸ்பிடல் சேர்த்திருக்கிற நேரத்துல இப்படி யோசிக்கிறதும் தப்பு… முதல்ல அவங்களுக்கு சரியாகட்டும், அவ வீட்டு ஆளுங்க கிட்ட நல்லவிதமா பிராக்கட் போட்டு எப்படியாச்சும் கல்யாணத்துக்கே சம்மதம் வாங்கிடனும்…”

பாரதி அவனை கவனிக்காமல் அன்னையைப் பற்றிய யோசனையில் கடிகாரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அதில் சின்ன முள் மதியம் ஒரு மணியை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும்போது, அந்த தனியார் ஹாஸ்பிடலின் முன் காரை நிறுத்தினான் ரிஷி. பாரதி இறங்கியதும் அவன் பார்க்கிங்கில் காரை விட செல்ல அவளோ ரிஷப்ஷனில் ஐசியூ எங்கே எனக் கேட்டுக் கொண்டு அந்தத் திசையில் நடக்கத் தொடங்கியிருந்தாள்.

ஐசியூ முன்பு, வரிசையாய் இருந்த பாலிமர் நாற்காலியில் மாமா கோபால கிருஷ்ணனும், அத்தை அஷ்டலட்சுமியும் கவலையுடன் அமர்ந்திருக்க கண்ணில் தளும்பும் கண்ணீரோடு நின்றிருந்த சக்தி தங்கையைக் கண்டதும் பாய்ந்து வந்து கட்டிக் கொண்டு அழுதாள்.

“அக்கா… அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு…?”

“சீப் டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு அம்மாவுக்கு ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்க, இன்னும் எதுவும் சொல்லலை…” என்றாள் சக்தி.

“வாம்மா பாரு…” என்ற மாமாவிடம், “மாமா, அம்மாக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா…? ஏதும் பிரச்சனை இல்லையே…”

“ம்ம்… சரியான நேரத்துல கொண்டு வந்துட்டதால இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிருக்காங்க… டெஸ்ட் எடுக்க வேண்டி மயக்க மருந்து கொடுத்திருக்காங்க, ரிப்போர்ட் வந்ததும் தான் என்ன பிரச்சனைன்னு சொல்லுவாங்க போலருக்கு…” என்றார்.

“கொஞ்ச நேரத்துல தேவி, கண்ணு முழிச்சிருவா, ரெண்டு பேரும் கவலைப் படாம இருங்க, நீ ரொம்ப தூரம் பஸ்ஸுல வந்திருப்ப, இப்படி உக்காரு…” என்றார் அத்தை அதிகாரமாக.

காலை சாய்த்து நடந்தபடி அவர்களிடம் வந்தான் ரிஷி. கையில் ஒரு கைப்பையோடு வந்தவன் எதுவும் சொல்லாமல் அவர்களைக் கடந்து போகாமல் அங்கேயே நிற்க அஷ்டலட்சுமி அவனை ஒரு பார்வை பார்த்தார்.

“என்னப்பா, யார் வேணும்…?” அவர் கேள்வியில் திரும்பிய பாரதி ரிஷியைக் கண்டதும், “ஐயையோ, சாரி ரிஷி… அம்மாவைப் பார்க்கற அவசரத்துல உங்கள மறந்துட்டேன்…”

“ரதி… நீ என்னை மட்டும் மறக்கல, அவசரத்துல உன் கைப்பையையும் எடுக்காம வந்திட்ட போல…” என்றவனிடம்,

“ஓ சாரி, நீங்க எதுக்கு இதெல்லாம் எடுத்திட்டு வரீங்க, கொடுங்க…” என வாங்கிக் கொண்டாள். அனைவரும் புரியாமல் பார்க்க, “மாமா… இவர் ரிஷி, எங்க ஜேஎம்டி… எம்டி சார் தம்பி…! அம்மாக்கு முடியலேன்னு சொல்லி நான் சட்டுன்னு கிளம்பினதால இவரை எம்டி சார் என்னைக் கார்ல டிராப் பண்ண சொல்லி துணைக்கு அனுப்பி வச்சார்…”

“வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி, வணக்கம் சிஸ்டர்…” மூவருக்கும் தனித்தனியே வணக்கம் சொன்னவனை அவர்களோடு பாரதியும் ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“பரவால்லியே, உன் ஜேஎம்டி ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கார்…” என்றார் அஷ்டலட்சுமி கண்களில் நிறைந்த சந்தேகத்துடன் ரிஷியைப் பார்த்துக் கொண்டே.

“ரொம்ப நன்றி தம்பி… பாரதி பதட்டமா கிளம்பி இருப்பாளே, பத்திரமா வரணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்… பெரிய உதவி பண்ணி இருக்கீங்க…” என்றார் கோபால கிருஷ்ணன்.

“அட, என்ன அங்கிள்… மனுஷனுக்கு மனுஷன் உதவறது சாதாரண விஷயம், இதுக்குப் போயி நன்றி எல்லாம் சொல்லிட்டு… நானும் உங்க மகன் போல தானே, நன்றி எல்லாம் சொல்லி பிரிச்சுப் பார்க்காதீங்க… ரதி அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு, டாக்டர் என்ன சொன்னாங்க…?” அவன் பேசுவதைக் கேட்ட சக்தி தங்கையைப் பார்த்து கண்களால் என்னவென்று கேட்க அஷ்டலட்சுமி அதிசயமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆஹா, இந்த ரிஷி எதுக்கு இப்ப ஓவர் பர்பாமென்ஸ் கொடுக்கிறான்னு புரியலியே… அக்கா வேற சந்தேகமா பார்க்கிறா…?” பாரதி மனதுக்குள் முழித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் நர்ஸ் ஒருவர் அவர்களிடம், “டாக்டர் வர சொன்னார், ரெண்டு பேர் மட்டும் போங்க…” என்றாள்.

கோபால கிருஷ்ணனுடன் பாரதி கிளம்ப, “ரதி… நீ இங்கயே இரு, நாங்க பார்த்திட்டு வர்றோம்…” என்ற ரிஷி, “வாங்க அங்கிள்…” என முன்னில் நடக்க கோபால் தொடர்ந்தார். டாக்டரின் அறையில் சீப் டாக்டரும் உடன் இருக்க அவர்கள் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

“நீங்க பேஷன்ட்டுக்கு என்ன உறவு…?”

“நான் அண்ணன் சார்… தேவிகாவுக்கு என்னாச்சு டாக்டர், ரிப்போர்ட்ல எதுவும் பிராப்ளம் இல்லையே…?”

“அப்படி சொல்ல முடியாது… அவங்களுக்கு டெஸ்ட் எடுத்ததுல இதயத்துக்குப் போற ரத்தக் குழாய்ல ரெண்டு இடத்துல அடைப்பு இருக்கு…” டாக்டர் சொன்னதைக் கேட்டு கோபால் அதிர்ச்சியுடன், “என்ன டாக்டர் சொல்லறீங்க, இதயத்துல அடைப்பா…?” என்றார் கலக்கத்துடன்.

“சார், அந்த பிளாக்கை சரி பண்ண முடியாதா…?” ரிஷி கேட்க,

“கொஞ்சம் ரிஸ்க் தான்… ஆல்ரெடி படுக்கைல ரொம்ப வருஷமா இருக்காங்க, சுகர், பிபி லெவல் கூடி இருக்கு… ஆப்பரேஷன் பண்ணறதும் கஷ்டம்…” என்றார் டாக்டர்.

“ஓ… அப்ப இதுக்கு என்ன சொல்யூஷன் டாக்டர்…?”

“பர்மனன்ட் சொல்யூஷன் கிடையாது… இப்போதைக்கு ஆஞ்சியோ பண்ணி ஸ்டென்ட் பொருத்தி அந்த அடைப்பைக் கொஞ்சம் கரைக்கப் பார்க்கலாம்…” என்றார் டாக்டர்.

“ஓ..! அப்ப அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிருங்க டாக்டர்…”

“பேஷண்டோட சுகர், பிபி லெவல் நார்மலுக்கு வந்ததும் ஆஞ்சியோ பண்ண பிக்ஸ் பண்ணிடலாம்… அதுக்கான தொகை என்னன்னு ரிசப்ஷன்ல கேட்டு கட்டிருங்க…”

“ஓகே டாக்டர், அவங்க எப்ப கண் முழிப்பாங்க…”

“இன்னும் சில நிமிஷத்துல நினைவு வந்திடலாம்…” டாக்டர் சொல்ல, “ஓகே தேங்க்ஸ் டாக்டர்…” என்ற ரிஷியுடன் கோபாலகிருஷ்ணனும் எழுந்து கொண்டார்.

“தம்பி, இதயத்துல அடைப்புன்னு சொல்லுறாங்க, எனக்கு ரொம்ப பயமாருக்கு… கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்களை வச்சிட்டு அவங்களுக்கு ஒரு நல்லதைப் பார்க்கா முடியலியேங்கற கவலை தான் என் தங்கைக்கு இப்படி ஆயிருக்கும்… பாவம் சின்ன வயசுல புருஷனை இழந்து, அந்த அதிர்ச்சில படுக்கைல விழுந்தவ, வாழ்க்கைல எந்த சுகத்தையும் அவ அனுபவிக்கல… ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணத்தைப் பார்த்திடனும்கறது தான், அவளுக்கு இப்ப இருக்கிற ஒரே கவலை… அது முடியுற வரைக்குமாச்சும் அவ உசுரு உடம்புல தங்கணும் தம்பி…” கோபால் கலங்கிய கண்களுடன் சொல்ல ஆறுதலாய் அவர் கையைப் பிடித்தான் ரிஷி.

“அங்கிள், அவங்க ஆசை நிச்சயம் நிறைவேறும்… இப்ப ஆஞ்சியோ எல்லாம் சாதாரணம் ஆயிடுச்சு, நீங்க பயப்படாம தைரியமா இருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்… லேடீஸ் டாக்டர் என்ன சொன்னாங்களோன்னு பயந்திட்டு இருப்பாங்க… நீங்க அவங்ககிட்டப் போங்க, நான் ரிசப்ஷன்ல பணம் கட்டிட்டு வரேன்…” என்றான் ரிஷி.

“வேண்டாம் தம்பி, உங்களுக்கு எதுக்கு சிரமம்…? நான் பாங்குல கட்ட வேண்டிய கடைப் பணத்தைக் கொண்டு வந்திருக்கேன், நானே கட்டிடறேன்…” சொன்னவர் கையிலிருந்த பாகைத் திறக்கப் போக தடுத்தான் ரிஷி.

“அங்கிள், என்னை உங்க மகனா நினைச்சு இந்த உதவி எல்லாம் ஏத்துக்கங்க, வேற ஒருத்தனாப் பார்க்காதீங்க…” என அழுத்தி சொல்லவும் சட்டென்று நிமிர்ந்தார். அவர் கையில் தட்டிக் கொடுத்துவிட்டு ரிசப்ஷன் நோக்கி காலை சாய்த்தபடி நடந்து போகும் ரிஷியை யோசனையாய் பார்த்தார்.

அவள் நேசிக்கும் காற்றை

சுவாசிக்கத் துடிப்பவன் நான்…

அவள் நேசக் கரங்களை என்னில்

பத்திரப் படுத்த மாட்டேனா…

எனக்குள் உருவாகி அவளில்

உருவகமாய் உருவெடுத்து

சங்கமிக்கும் இன்பக் காதல்…

Advertisement