Advertisement

அத்தியாயம் – 19

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது ரிஷியின் ரெட் போலோ. யோசனையும், தவிப்புமாய் அருகே போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பாரதியை கவலையுடன் பார்த்தான்.

“ரதி…!”

“ம்ம்…” அவன் குரலில் திரும்பிப் பார்த்தாள்.

“அம்மாக்கு எப்ப முடியாமப் போச்சுன்னு சொன்னாங்களா…?”

“அக்கா காலைல அம்மாவை எழுப்பும்போது நினைவில்லாம இருந்திருக்காங்க, உடனே மாமாகிட்ட சொல்லிருக்கா… அவரும் அத்தையும் வந்து பார்த்து தண்ணி தெளிச்சு எழுப்ப முயற்சி பண்ணியும் அசையவே இல்லையாம்… உடனே ஆம்புலன்ஸ் வரவழைச்சு ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போனதா அக்கா சொன்னா… இப்ப கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறா, எனக்கு அம்மாவை நினைச்சா ரொம்ப பயமாருக்கு ரிஷி…”

“பயப்படாத, ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டாங்கல்ல… அம்மாக்கு எதுவும் ஆகாது, நீ காலைல இருந்து எதுவும் சாப்பிடல தானே…?”

“ப்ச்… எனக்குப் பசிக்கலை…”

“ரதி… அம்மா நமக்கு ரொம்ப முக்கியம் தான்… அதுக்காக சாப்பிடாம இருந்தா எதுவும் மாறிடப் போறதில்லை… சோர்வும், பயமும் பசியில அதிகமாகுமே தவிர தெம்பைக் கொடுக்காது… வழியில ஏதாச்சும் ஹோட்டல்ல நிறுத்தறேன், முதல்ல சாப்பிடு…”

“இல்ல லேட் ஆகும், எனக்கு முதல்ல அம்மாவைப் பார்க்கணும்…” அவள் மறுப்பாய் சொல்ல முறைத்தான்.

“சரி, ஹோட்டல்ல உக்கார்ந்து சாப்பிட்டா தானே லேட்டாகும், பார்சல் வாங்கிக்கலாம்… வண்டில சாப்பிடு…” என்றவனை அதற்கு மேல் மறுக்க முடியாமல் அமைதியானாள் பாரதி. இருவருமே முன்தினம் நடந்ததைப் பற்றி பேசாமல் தவிர்த்தனர்.

சொன்னது போல் ஒரு ஹோட்டல் முன் காரை நிறுத்தி இட்லி, வடை, தண்ணி பாட்டில் வாங்கி வந்தான். அவள் சாப்பிடாமல் அமர்ந்திருக்க அதட்டினான்.

“ரதி, ஹாஸ்பிடல் போனாலும் எப்ப சாப்பிட முடியுமோ தெரியாது, எல்லாத்தையும் பேஸ் பண்ணனும்னா தெம்பா இருக்கணும், மறுக்காம சாப்பிடு…” அவன் சொல்ல இலையைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினாள்.

சட்டென்று அன்னையின் நினைவில் கண்கள் கலங்கியது.

அவள் அம்மாவும் இப்படிதான், உடல்நிலை முடியாமல் படுக்கையில் கிடக்கும் போதும் கூட பிள்ளைகளின் வயிறு நிறைந்ததா என்பதில் கவனமாயிருப்பார். சாப்பிட்டியா என்று விசாரித்துக் கொள்வார். தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டு ஹாஸ்பிடலில் கிடக்கும் போது கூட நடப்பது எதுவாயினும் அதை எதிர்கொள்ள மன தைரியத்தோடு உடல் தெம்பும் முக்கியம் என்று சொல்லுவார்.

பாரதி கண் கலங்கியதைக் கண்ட ரிஷி ஓரமாய் வண்டியை நிறுத்தி, “சாப்பிடும் போது அழாத, ரதிம்மா…” என்றான்.

“ரி…ரிஷி, நீங்க அப்படி சொன்னதும் அம்மா சொல்லறது நினைவு வந்திருச்சு… எல்லா அம்மாக்களும், எந்த பிரச்சனை வந்தாலும் பெத்த புள்ளைங்களோட ஆரோக்கியமும், சந்தோஷமும் தானே முக்கியம்னு நினைக்கறாங்க… படுக்கைல இருந்தாலும் அம்மா எங்களோட இருக்கிறது ரொம்பப் பெரிய பலம் தெரியுமா…? அவங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா…?” மேலே பேசாமல் நிறுத்தியவள் கலங்கினாள்.

“ஹேய், நீயே எதுக்கு இல்லாததை கற்பனை பண்ணி பீல் பண்ணற, முதல்ல சாப்பிட்டு முடிச்சிட்டு உன் அக்காவுக்கு போன் பண்ணிப் பாரு…” என்றான்.

“ம்ம்… என்னால சாப்பிட முடியலை ரிஷி…”

“நீ இப்படி சொன்னா அப்புறம் நடக்கற பின்விளைவுக்கு நான் பொறுப்பில்லை, நானே ஊட்டி விட்டிருவேன்…” அவன் மிரட்டலாய் சொல்ல அந்த நேரத்திலும் மனம் லேசாகி சட்டென்று சிரிப்பு வந்தது பாரதிக்கு.

“ஆஹா நீங்க செய்தாலும் செய்விங்க, நானே சாப்பிடறேன்…” சொன்னவள் சாப்பிட்டு முடித்தாள்.

சக்திக்கு அழைத்து விசாரிக்க, அம்மாவை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருப்பதாகக் கூறியவள், “சீக்கிரம் வாடி பாரு, எனக்கு பயமாருக்கு…” என அழுதாள்.

“இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திருவோம் கா… எங்க சாரோட கார்ல தான் வர்றேன், டாக்டர் என்ன சொன்னாங்க…?” என்றாள் பாரதி.

“இப்போதைக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறாங்க… சீப் டாக்டர் கொஞ்ச நேரத்துல வந்திருவாராம், அவர் பார்த்தபிறகு தான் என்னன்னு சொல்லுவோம்னு சொல்லுறாங்க…”

“ம்ம்… மாமாவும், அத்தையும் கூட இருக்காங்க தானே…”

“இருக்காங்க, நீ சீக்கிரம் வா… அத்தான் போன்ல கூப்பிடறார், வச்சிடறேன்…” சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள். அவளிடம் பேசுவதற்காய் இரண்டு நாள் முன்தான் சத்யன் ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்திருந்தான்.

ரிஷியிடம் சொன்ன பாரதி, “அக்கா ரொம்ப பயந்திருக்கா, என்னை சீக்கிரம் வர சொல்லுறா…” என்றாள்.

“ம்ம்… இன்னும் ஒரு மணி நேரம் தான், போயிடலாம்…” சொன்னவன் சற்று வேகத்தை அதிகப் படுத்தினான்.

அங்கு அலுவலகத்திற்கு வந்த ஹரி, ஒரு புது ஆர்டர் விஷயமாய் பேசுவதற்காய் கெளதமை அழைத்தான்.

“கெளதம், அந்த நியான் என்டர்பிரைசஸ் பைல் எடுத்து வைங்க… புதுசா ஒரு பல்க் ஆர்டர் பேசிட்டு இருக்கேன், பழைய கொட்டேஷன்ஸ் கொஞ்சம் ரெபர் பண்ணனும்…”

“இப்பவே எடுத்து வைக்கறேன் சார்…”

“ம்ம்… பாரதி கிட்ட அந்த பைலைக் கொடுங்க, ரிஷி ஆபீஸ் வந்தாச்சு தானே…” என்றான் அடுத்தடுத்து.

“சார், பாரதி இன்னைக்கு லீவ் சொல்லிருக்காங்க, அம்மாக்கு உடம்பு சரியில்லேன்னு ஊருக்குப் போயிருக்காங்க…”

“ஓ… அவங்க அம்மாக்கு என்னாச்சு…?”

“சரியாத் தெரியலை சார்… ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப் போறதா கால் வந்துச்சுன்னு சொன்னாங்க…”

“ம்ம்… சரி, அவங்க பார்த்துட்டு வரட்டும், நீங்க ரிஷிகிட்ட நியான் பைலைக் கொடுத்திருங்க…” என்றான்.

“ச..சாரி சார்… ரிஷி சார் ஆபீஸ் வந்துட்டு உடனே வெளிய கிளம்பிட்டார்…” என்றான் கெளதம் தயங்கிக் கொண்டே.

“வெளிய கிளம்பிட்டானா…? எங்க போறன்னு சொன்னானா…?”

“இல்ல சார், ஆனா பாரதி அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போறதா சொன்னதும்தான் கிளம்பிப் போனார்…”

“ஓ…” என்றான் ஹரி யோசனையுடன்.

“ஓகே… நீங்க அந்த பைலை ரிஷி ரூம்ல வச்சிருங்க, நான் அப்புறம் வந்து பார்த்துக்கறேன்…” என்று ரிசீவரை வைத்த ஹரியின் மனதுக்குள் ஏதேதோ கேள்விகள் தோன்ற மொபைலை எடுத்து தம்பிக்கு அழைத்தான். அவன் அழைப்பைக் கண்டதும் தான் ரிஷிக்கு பதறியது.

“ஐயோ…! அண்ணன், அண்ணி யாரிடமும் சொல்லாமல் பாரதியுடன் கிளம்பி வந்து விட்டோமே…” என்று உரைத்தது.

“ரதி…! அ..அண்ணன் கூப்பிடறார், ஒரு நிமிஷம்…” என்றவன் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு போனை எடுத்தான்.

“ஹலோ ரிஷி…! எங்கடா இருக்க…? ஆபீசுக்கு வந்ததும் கிளம்பிட்டன்னு கெளதம் சொன்னார்…”

“ஆ…ஆமாண்ணே, நம்ம பாரதியோட அம்மாவுக்கு கொஞ்சம் சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க… அதான் பாரதி ஊருக்குக் கிளம்பவும் இந்த நிலைல அவங்களை தனியா அனுப்ப மனசில்லாம நானே கார்ல கூட்டிட்டு காஞ்சிபுரம் போயிட்டு இருக்கேன்… நம்ம ஆபீஸ்ல வேலை செய்யறவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நாம தான முன்னாடி நின்னு பார்த்துக்கணும்…” ரிஷி சொன்னதைக் கேட்டு திகைத்தான் ஹரி.

“ம்ம்… சரிதான்…”

“ச..சாரிண்ணா, அவசரத்துல உங்ககிட்டயும், அண்ணி கிட்டயும் கூட சொல்லாம வந்துட்டேன், சாரிண்ணா…”

“ஹேய் ரிஷி, இட்ஸ் ஓகேடா… நல்ல விஷயம்தான் பண்ணிருக்க… பாரதி என்னதான் எல்லா விஷயத்துலயும் தெளிவா யோசிக்கற பொண்ணா இருந்தாலும் சின்னப் பொண்ணு… பாவம், பதறிப் போயிருக்கும், இந்த மாதிரி சமயத்துல கூட ஒருத்தர் இருக்கிறது நல்லது தானே…”

“ம்ம்… கரக்ட் அண்ணா, அதான் நான் வேற எதுவும் யோசிக்காம கூட கிளம்பிட்டேன்…”

“ஹாஸ்பிடல் போயி அங்கே அவங்க அம்மாக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்து சப்போர்ட் பண்ணு, பணம் எதுவும் தேவைனாலும் ஹெல்ப் பண்ணு… பத்திரமா பார்த்துக்க…”

“சரிண்ணா, நான் பார்த்துக்கறேன்…”

“ஒரு நிமிஷம் பாரதிகிட்ட போனைக் கொடு, பேசறேன்…”

“அண்ணன் பேசணும்னு சொல்லுறார்…” ரிஷி போனை நீட்ட தயங்கிக் கொண்டே வாங்கினாள் பாரதி.

“ச..சார்…”

“பாரதி, அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாம தைரியமா இரும்மா… ஹாஸ்பிடல்ல ஏதாவது பணத் தேவைகள் இருந்தாலும் ரிஷி பார்த்துக்குவான்… இந்த நேரத்துல தயங்கிட்டு இருக்க வேண்டாம், சரியா…?”

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றவளுக்கு கண்கள் கலங்கியது.

“ஹேய், கஷ்டமான நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவறதுக்கு தானே கடவுள் பணத்தையும், மனத்தையும் மனுஷனுக்குக் கொடுத்திருக்கான்… ரிஷி உன்னை பத்திரமா கூட்டிட்டுப் போவான், கவலைப்படாம இரு சரியா…”

“ஓகே சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றவளின் குரல் மனம் நெகிழ்ந்ததில் தழுதழுத்தது.

“சீக்கிரமே அம்மாவுக்கு சரியாகிடுச்சுன்னு சந்தோஷமா கால் பண்ணி சொல்லுவ பாரு, நான் வச்சிடறேன் மா…” சொன்னவன் அழைப்பைத் துண்டிக்க ஒரு வித நெகிழ்வுடன் அமர்ந்திருந்தாள் பாரதி. ரிஷி காரை ஸ்டார்ட் செய்தான்.

“ஹரி சார் எத்தனை நல்லவர்… ரிஷியாவது என் மேல் உள்ள காதலில் உதவி செய்ய நினைத்திருக்கலாம்… ஆனால் ஹரி சார் மனதில் எத்தனை ஈரமும், அன்பும் இருந்தால் இப்படி ஆறுதலாய் பேசியிருப்பார்…” யோசிக்கும் போதே சந்தோஷத்தில் மனம் கனிய சட்டென்று அந்த நேரத்திலும் கங்காவின் முகம் நினைவில் வந்தது.

“இத்தனை நல்ல மனம் படைத்த அண்ணன், தம்பி இருவரையும் அன்பைக் காட்டி துரோகம் செய்யும் கங்காவின் முகத்திரையை எப்படி கிழிக்கப் போகிறேன்…? இவர்களை எப்படி அவளிடமிருந்து காப்பாற்றப் போகிறேன்… கடவுளே…! எல்லாம் நல்லபடியாய் முடிய நீதான் துணை நிற்க வேண்டும்…” மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

“என்ன ரதிம்மா, அண்ணன்ட்ட பேசினதும் அமைதியாகிட்ட…! அவர் எதுவும் சொன்னாரா…?”

“ப்ச்… ஹரி சார் எவ்ளோ நல்லவர்னு யோசிச்சேன்…”

“அப்ப, நான் நல்லவன் இல்லியா…?” ரிஷி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

Advertisement