Advertisement

“சேச்சே, பாரதி எதுவும் சொல்லலை அண்ணி, இது வேற ஒருத்தங்க… நீங்க சொன்ன போல உங்களைப் பிடிக்காத ஒருத்தங்களா தான் இருக்கணும்… அவங்கள உங்களுக்குத் தெரியாது, தெரியவும் வேண்டாம்…” ரிஷி சொல்ல நமட்டு சிரிப்பு சிரித்தாள் கங்கா.

“என்னடா பையா, என்கிட்டயே பாரதியைக் காப்பாத்த பொய் சொல்லறியா…? வேற யாருக்கு என்னைப் பத்தி தெரிஞ்சுடப் போகுது… நீ சொல்லாம மறைக்கறத பார்த்தா உனக்கு அவ மேல ஒரு விருப்பம் இருக்கும் போலருக்கே…” யோசித்தாள்.

“என்ன ரிஷி, அந்த பாரதி ஏதாச்சும் சொன்னாளா…?” கங்காவின் கேள்விக்கு ரிஷி அமைதியாய் இருக்க, அவளே தொடர்ந்தாள்.

“சொல்லிருப்பா…! அவ ஒரு ராங்கிக்காரி… அவளுக்காக என்கிட்ட நீ பரிஞ்சு பேசி என்னாச்சு, இப்ப உன் மூக்குடைச்சாளா…? அவ சொல்லறதை எல்லாம் பெருசா தலைக்கு ஏத்திக்காத…” என்றாள் பரிவுடன்.

“அவ ராங்கிக்காரின்னா நீங்க வேலைக்கு எடுப்பீங்களா…?”

ரிஷியின் கேள்வியில் சற்று திகைத்த கங்கா சமாளித்தாள்.

“முட்டாள்…! அவ புத்திசாலி, அவ மூளையை நான் பிசினஸ்க்கு யூஸ் பண்ணிக்கறேன்… உனக்கு அவ அழகுல மோகம் இருந்தா நெருங்கிப் பழகு… ஜாலியா அவளோட பொழுது போக்கு, அது உன் சாமர்த்தியம்…”

“அண்ணி, அவ அந்த மாதிரிப் பொண்ணில்ல…” சட்டென்று பதட்டமாய் சொன்னான் ரிஷி.

“எதுக்குப் பதறுற… அவ அப்படி இல்லன்னு உன்கிட்ட சொன்னாளா…? உன்னைப் போல பசங்களுக்கு பெண்களோட அழகான உடம்பு மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்… அதைத் தாண்டியும் பல விஷயங்கள் இருக்கு… முட்டாள் தனமா நடந்துக்காம அந்த மிடில் கிளாஸ் கர்விகிட்ட ஒரு முதலாளி போல நடந்துக்கப் பாரு… அவளுக்காக யோசிக்கறதோ, உபகாரம் பண்ணறதோ எல்லாம் இனி வேண்டாம்… இல்லைனா, நாளைக்கு அவ உன்னையும் அவமானப்படுத்த தயங்க மாட்டா… இதுக்கு தான் நீ ஆபீஸ் வந்து கஷ்டப்படாம, இதை எல்லாம் தலைக்கு ஏத்திக்காம ஜாலியா இருன்னு சொன்னேன்… நான் உன் அண்ணியா சொல்லலை, உன் அம்மாவா சொல்லறேன்… சாப்பிட்டு தூங்கு, நாளைல இருந்து ஜாலியா பழைய ரிஷியா இரு… குட் நைட்…” சொல்லிவிட்டு சென்று விட்டாள் கங்கா.

ஹாட் பாக்ஸைத் திறந்தால் மணத்தில் அதிகமாய் பசித்தது. ஆனாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை.

“அண்ணி ஏன் இன்னைக்கு இவ்ளோ பேசறாங்க, என்னை கூட அசிங்கப் படுத்துற மாதிரி பேசறாங்க… ஒருவேளை, எனக்கு ரதி மேல உள்ள ஈடுபாடை அவங்களும் கவனிச்சிருப்பாங்களோ…? ஒருவேளை ரதியும் என்னை தப்பா நினைக்கிறாளோ…? அதான் என் காதலைப் புரிஞ்சுக்காம ஏத்துக்காம இருக்காளா…? அண்ணியை வேற இப்படி சொல்லறா…? என்னையும் ஒருவேளை தப்பாப் புரிஞ்சு வச்சிருப்பாளா…?” யோசித்து தலை கனத்தது.

உடை மாற்றி கட்டிலில் அமர அலைபேசி சிணுங்கியது. பாரதியின் எண்ணைக் கண்டவன் அதுவரை உள்ள வருத்தம் எல்லாம் பரிதியைக் கண்ட பனியாய் விலக உற்சாகத்துடன் எடுத்து காதில் வைத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.

“ஹலோ ரிஷி, நான் பாரதி பேசறேன்…”

“ம்ம்…”

“ஐ ஆம் சாரி ரிஷி, என் மேல கோபமா இருப்பீங்க… நான் உங்க மனசைப் புண் படுத்தணும்னு அப்படி சொல்லலை, நான் சொன்னதுக்கு பீல் ஆகியிருந்தா மன்னிச்சிருங்க…”

“எவ்ளோ டைம் கால் பண்ணேன், நீ ஏன் எடுக்கலை…?”

“அதுதான் உங்க வருத்தமா…? நீங்க போதைல இருக்கும்போது நான் பேச விரும்பலை, அதான் கொஞ்சம் தெளியட்டும்னு இப்ப கால் பண்ணேன்…”

“அண்ணி என் மேல எவ்ளோ அக்கறையா இருக்காங்க தெரியுமா…? ஆனா, நீ அண்ணியை என்னெல்லாம் சொன்ன…? ரொம்ப கஷ்டமாருக்கு… இனி ஆபீஸுக்கே வர வேண்டாம்னு தோணுது…” என்றான் வருத்தத்துடன்.

“ஐயோ ரிஷி, அப்படி எல்லாம் யோசிக்காதீங்க…? நீங்க ஆபீஸ் வரணும், உங்களுக்கான பாதையை உருவாக்கி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும்… இல்லன்னா எல்லாமே கை விட்டுப் போயிடும்…”

“நீ என்ன சொல்லற, எது கைவிட்டு போயிடும்…”

“ஒரு போன்ல எல்லாத்தையும் சொல்லிட முடியாது… உங்க அண்ணி மேல உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை அப்படியே இருக்கட்டும், நீங்களா புரிஞ்சுக்கற வரைக்கும் நான் எதுவும் சொல்லலை… என்னால நிறைய பேச முடியலை, ஆனா ஆபீஸ்க்கு மட்டும் வராம இருந்துடாதீங்க… வச்சிடறேன்…”

பாரதி பேசியது ரிஷிக்கு குழப்பமாய் இருந்தாலும் அவளாகவே அழைத்தது மனதுக்கு இதமாய், சந்தோஷமாய் இருந்தது. இப்போது பசிக்கவே வயிறு நிறைய சாப்பிட்டுப் படுத்தவன் மனது லேசாகி இருந்தது.

மறுநாள் சனிக்கிழமை, காலையில் வேகமே ஆபீஸ் போக தயாராகி ரிஷி வர ஹரி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“குட் மார்னிங் அண்ணா, அண்ணி…”

“குட் மார்னிங்டா ரிஷி, நேரமே கிளம்பிட்ட… ஆபீஸ் தானே…” ஹரி கேட்க, “அவன் பிரண்ட்ஸ் பார்க்க கிளம்பிருப்பான் நினைக்கிறேன், இல்ல ரிஷி…” கேட்டுக் கொண்டே அவனுக்கு பிளேட்டை வைத்தாள் கங்கா.

“இல்ல அண்ணி, ஆபீசுக்கு தான்…”

“ஓ…” என்றவளின் முகம் சட்டென்று நிறம் மாறி மீண்டது.

“வெரிகுட் ரிஷி, நீ இப்படி பொறுப்பா இருக்கணும்னு தான் என்னோட ஆசை… நம்ம அப்பா, அம்மா இருந்திருந்தா உன்னை இப்படி பார்த்து சந்தோஷப் பட்டிருப்பாங்க…”

ஹரி சொல்லவும் சட்டென்று பெற்றோரின் நினைவில் ரிஷியின் முகம் வாடியது.

“ம்ம்… காலைல நானே அவங்களை நினைவு படுத்தி உன்னை மூட் அவுட் பண்ணிட்டேன், சரி அத விடு…! அப்புறம் ஆபீஸ் வொர்க் எல்லாம் புரிஞ்சுக்கத் தொடங்கிட்டியா…? பாரதி ஹெல்ப் பண்ணறாங்க தானே… எல்லாம் புரிஞ்சு நீயா சீக்கிரமே ஒரு புது ஆர்டர் எடுக்கணும்… அதான், அண்ணனோட ஆசை…”

“சரிண்ணா, பண்ணறேன்…”

“என்ன கங்கா…? உன் பிள்ளை எப்படி பொறுப்பானவனா மாறிட்டான், பார்த்தியா…?”

“அவன் நான் வளர்த்த பிள்ளைங்க, அப்படியெல்லாம் சோடை போயிருவானா..? உங்களுக்கு தான் பயம்…”

“ஹாஹா… உன் அண்ணிக்குப் பெருமையப் பார்த்தியா…? கங்கா… இப்படியே உன் பையனை சும்மா விட்டு வச்சா சரியா வருமா…? சீக்கிரமே இவனுக்கு ஒரு கால் கட்டு போட்டாத்தானே இன்னும் பொறுப்பு கூடும்…”

“ஆ..ஆமாங்க, சீக்கிரமே இவனுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணத்தைப் பண்ணி வச்சா தான் நம்ம கடமை முடிஞ்சு நிம்மதியா இருக்க முடியும்…”

“ம்ம்… சரியா சொன்ன மா… நம்ம ஜோசியரை வர சொல்லு, கேட்டுட்டு பொண்ணு பார்த்துடலாம்…”

“சொல்லறேங்க…” என்றாள் கங்கா வெளியே சிரிப்புடன்.

“அண்ணா, அதுக்குள்ள என் கல்யாணத்துக்கு என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் ப்ரீயா இருந்துட்டுப் போதுமே…?”

“ப்ரீயா இருந்த வரைக்கும் போதும் டா படவா… சில விஷயங்கள் எல்லாம் காலாகாலத்துல நடந்தா தான் நல்லது… அண்ணனும், அண்ணியும் உன் நல்லதுக்கு தானே சொல்லுவோம், மறுக்காம கல்யாணத்துக்கு ரெடியாகப் பாரு…” சொன்ன ஹரி சாப்பிட்டு எழுந்தான்.

அவன் சென்றதும் அண்ணியிடம் திரும்பிய ரிஷி, “அண்ணி, அண்ணன் என்ன திடீர்னு கல்யாணப் பேச்சைத் தொடங்கிட்டார், நான் உங்ககிட்ட சொல்லிருக்கேன்ல…”

“சொன்ன சொன்ன, உன் லவ்வுக்கு சம்மதம் கிடைக்கிறதுக்கு வெயிட் பண்ணா அப்புறம் மூக்குல பல்லு முளைச்ச பிறகு தான் கல்யாணம் வச்சுக்க முடியும்… இன்னும் ஒரு வாரம் தான் டைம், அதுக்குள்ள நீ லவ் பண்ணற பொண்ணு யாருன்னு சொல்லற… எனக்கும் அதுல விருப்பம்னா, அந்தப் பொண்ணு ஓகே… இல்லேன்னா நான் சொல்லுற பொண்ணைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்…” என்றாள் கங்கா தீர்மானமாக.

“ஒரு வாரத்துக்குள்ள அந்த ராட்சஸி என் காதலுக்கு சம்மதிப்பாளா…?” யோசித்தவனுக்கு திகிலானது.

“அண்ணி… ப்ளீஸ், இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க, ஒரு வாரம் ரொம்ப கம்மி…” கெஞ்சினான்.

“அடேய், நீ என்ன படிச்சு எக்ஸாம் எழுதியா பாஸ் பண்ணப் போற…? பிடிச்ச பொண்ணுகிட்ட லவ்வை சொல்லப் போற, அவ, எஸ் ஆர் நோ சொல்லப் போறா, விஷயம் முடிஞ்சுது… சரி, நான் பாக்டரிக்கு கிளம்பறேன், சாப்பிட்டு எழுந்திரு…” சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

யோசனையுடனே ஆபீஸ் வந்த ரிஷிக்கு அன்று இன்னொரு ஏமாற்றம் காத்திருந்தது. பாரதி விடுமுறை எடுத்திருந்தாள். விசாரித்த போது அம்மாவுக்கு சட்டென்று உடம்புக்கு முடியாமல் போனதால் கிளம்பியதாக கெளதம் கூறினான்.

“ச்ச்சே… இந்த ரதிக்கு அம்மாக்கு முடியலைன்னு எனக்கு போன் பண்ணி சொல்லத் தோணிருக்கா பாரு, இப்பவும் என்னை யாரோ ஒருத்தனா தான் நினைக்கத் தோணுது…” கடுப்புடன் தனது இருக்கையில் அமர்ந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனே பாரதிக்கு அழைத்தான். எடுத்தவள் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது.

“ஹலோ ரிஷி… காலைல அம்மா திடீர்னு பேச்சு மூச்சில்லாம, மயங்கிட்டாங்களாம் அவங்களை உடனே  ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம், நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்…” சொல்லும்போதே அவள்  அழுகையை அடக்கிக் கொள்ள முயல்வது புரிந்தது.

“ஹேய்… டோன்ட் வொர்ரி ரதிம்மா, அம்மாக்கு எதுவும் ஆகாது… நீ இப்ப எங்கிருக்க…?”

“நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல காஞ்சிபுரம் பஸ்ல கிளம்பிருவேன்…”

“ஓகே… இந்த சிச்சுவேஷன்ல நீ தனியா ஊருக்குப் போக வேண்டாம்… நான் கார் எடுத்திட்டு வரேன், நீ பஸ் ஸ்டாண்டுல வெயிட் பண்ணு…”

“இ..இல்ல வேணாம் ரிஷி, உங்களுக்கு எது வீண் சிரமம்…”

“ரதி, டூ… வாட் ஐ சே… நான் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்…” சொன்னவன் வேகமாய் கிளம்பினான்.

நம்ப முடியாத

பேரதிர்ச்சியின்

நிகழ்வொன்றில் தான்

கண்டு கொள்ள முடியும்…

முதுகிற்குப் பின்னே

ஈடேறும் துரோகங்கள்…

Advertisement