ரிஷி மதியம் வீட்டுக்கு உணவு உண்ண சென்றவன் திரும்ப ஆபீஸ் வரவில்லை. பாரதியும் மாலை சீக்கிரமே கிளம்பிவிட்டாள். இரவெல்லாம் பாரதிக்கு யோசனையாய் இருந்தது. ரிஷியை நினைத்து கவலையாய் இருந்தது.
“ச்ச்சே… நான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனோ…? இத்தனை வருஷமா ரிஷி அண்ணி மேல வளர்த்து வச்ச நம்பிக்கையை நேத்துப் பழக்கமான நான் சொன்னா உடனே எப்படி மாத்திக்க முடியும்… பொறுமையா புரிய வைக்காம மொட்டையா இப்படி சொன்னதால தான் ரிஷிக்கு கோபம் வந்திருக்கும், இப்ப என்ன பண்ணலாம்…?” யோசித்தவள் மொபைலை எடுத்தாள்.
“ரிஷிக்கு கால் பண்ணிப் பார்க்கலாமா…? எடுப்பாரா…?” இதுவரை பாரதி அவளாய் அவனுக்கு அழைத்ததில்லை. தயக்கத்துடனே அவன் எண்ணுக்கு அழைத்தாள். அடித்து ஓயும் நேரத்தில் அழைப்பு ஏற்கப்பட்டு ரிஷியின் குரல் சற்றே குழறலாய் கேட்டது.
“ஹல்லோ…”
“நான் பாரதி பேசறேன்…”
“பாரதீ… இல்ல, என் ரதி…! ஹாஸ்டல் போயிட்டியா…?” அந்த போதையிலும் ரிஷி அக்கறையுடன் அவளை விசாரிக்க மனம் நெகிழ்ந்தாள் பாரதி.
“நான் ஹாஸ்டல்ல தான் இருக்கேன், நீங்க எங்க பார்ல இருக்கீங்களா…?” அதட்டலாய் கேட்டாள்.
“ஹேய், அத விடு… நான் ஒரு யூஸ்லெஸ், நீ எதுக்கு கால் பண்ண..? அதச் சொல்லு…”
“இப்படி குழறலாப் பேசறீங்க, உங்ககிட்ட என்ன பேசறது…? நான் நாளைக்குப் பேசறேன்…”
“ஹேய்ய்ய்… நோ, வச்சிடாத… ஐ ஆம் ஸ்டடி மேன்…”
“ஸ்டடி வார்த்தைல மட்டும் இருந்தாப் போதாது… உங்க நடத்தைலயும் இருக்கணும், உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கல, வச்சிடறேன்…” சொன்னவள் கனத்த மனதுடன் அழைப்பைத் துண்டிக்க அடுத்த நிமிடம் அவன் அழைத்தான். அவள் எடுக்காமலிருக்க மீண்டும் அழைத்தான்.
சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் துளிர்க்க காரணம் என்னவென்று புரியவில்லை. அது அவன்மேல் கொண்ட நம்பிக்கை தகர்ந்து போனதால் வந்த கண்ணீர்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “இல்லை… நான் அழ மாட்டேன்… என் ரிஷி நான் சொன்ன விஷயத்தின் வீரியம் தாங்காமல் வேதனையில் குடித்திருக்கலாம், அதற்காக அவனை வெறுத்துவிட முடியாது… அவனுக்குப் புரிய வைக்க வேண்டும், அந்த ராட்சசியின் மாய வலையிலிருந்து அவனை மீட்க வேண்டும்… எத்தனை காலம் தான் ஒருத்தியால் நடிக்க முடியும், இத்தனை காலம் அவளது சுயரூபம் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்… இனி முடியாது, அவள் முகத்திரையைக் கிழிக்கும் நேரம் வந்துவிட்டது… ஆதாரத்துடன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும், பார்த்து விடுகிறேன்…” தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டாலும் மனசாட்சி கேலி செய்தது.
“நீ ஒரு சாதாரணப் பெண், அவளை அண்டிப் பிழைப்பவள்… அவள் பண முதலை, பிசினஸில் ஒரு சாம்ராஜ்யத்தையே தன் காலடியில் வைத்திருப்பவள், அவளை எதிர்த்து உன்னால் என்ன செய்துவிட முடியும்…” என்றது.
“உண்மைதான்… என்னிடம் பணமும், பதவியும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நேர்மை இருக்கிறது…! மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் மனது இருக்கிறது… ஹரி சாரும், ரிஷியும் மிகவும் நல்லவர்கள், அவர்களை கங்காவின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும்…” உறுதி கொள்ளவும் தான் மனம் சமாதானமானது.
“இனி ரிஷியிடம் பொறுமையாக தான் பேச வேண்டும்… பசுத்தோல் போர்த்திக் கொண்டு நல்லவளாய் உலா வரும் கங்காவின் வேஷத்தை நிதானமாய் தான் கலைக்க வேண்டும், அதற்கு ரிஷியின் துணையும் எனக்குத் தேவை… முதலில் நான் சொல்லுவதை அவர் காது கொடுத்துக் கேட்க வைக்க வேண்டும்…” தீர்மானித்துக் கொண்டாள்.
ரிஷி அப்போதும் அலைபேசியில் அவளை அழைத்துக் கொண்டிருக்க எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ரிஷி பாவம்…! தாய் தந்தை இல்லாததால் அண்ணியின் பொய் அன்பை உண்மையென்று கொண்டாடுகிறான்… அவளும் அதை உபயோகித்து அவனை நாசம் செய்யப் பார்க்கிறாள்… பொய்யான அன்புக்கே அத்தனை சக்தி இருக்கும்போது என் அன்பு அவனை வாழச் செய்யாதா என்ன…? விட மாட்டேன்…! என் ரிஷியை அவள் கை பொம்மையாய் இருக்க விட மாட்டேன்… ஆனால் எப்படி…? என்ன செய்து அவனை மீட்கப் போகிறேன்…?” அதற்கு விடை கிடைக்காவிட்டாலும் மனதில் நம்பிக்கை வந்தது.
ரிஷி அப்போதும் அழைத்துக் கொண்டிருக்க புன்னகைத்தாள்.
“என் மீது கோபப்பட்டு மதியமே ஆபீஸ்ல இருந்து கிளம்பிப் போய், இப்ப தண்ணியும் அடிச்சிட்டு நான் போன் பண்ணதும் எடுத்துப் பேசறதைப் பாரு… தன் கோபம் மறந்து என் கோபம் போக்க இவ்ளோ டைம் கால் பண்ணறார்… ஹூம், என்ன இருந்தாலும் உன் கோபத்தை விட என் மேல வச்சிருக்கிற அன்பு அதிகம்தான்… ஆனா நான் போன் எடுக்க மாட்டேன்…” வெகுநேரம் அழைத்தும் அவள் எடுக்காததால் ரிஷி வருத்தத்துடனே வீட்டுக்குக் கிளம்பினான்.
ஒன்பது மணிக்கு ரிஷி வீட்டுக்கு வராததால் கங்கா சந்தேகத்தில் ருக்மணிக்கு அழைத்து விசாரித்திருந்தாள். ரிஷி மதியம் சென்றவன் ஆபீஸ் வரவேயில்லை, பாரதி மாலை நேரமே கிளம்பி விட்டாள் எனவும் சந்தோஷத்துடன் ரிஷிக்கு அழைக்க, அவன் பாரில் இருக்கிறேன்… வர லேட்டாகும் எனவும் குஷியானது கங்காவுக்கு.
ஹரி பத்து மணிக்கே உணவு முடிந்து படுக்க சென்றிருக்க ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த கங்கா சுவர் கடிகாரம் ஒலிக்கவும் அதைப் பார்க்க, பதினொன்று என்றது. அதைக் கண்டதும் மனம் உற்சாகத்தில் துள்ளியது.
“நல்ல வேளை, இந்த ரிஷி ஆபீஸ்ல பொறுப்பெடுத்ததும் முனைப்பா அதைக் கவனிக்க ஆரம்பிச்சிருவானோன்னு கொஞ்சம் பயந்து போயிட்டேன்… அது தப்பு அண்ணி, நான் திருந்த மாட்டேன், நானொரு குடிகாரன்னு இன்னைக்கு மறுபடி நிரூபிச்சுட்டான்… இப்பதான் நிம்மதியாருக்கு…” என்றவள் டீவியில் பார்வையைப் பதிக்க அதில் ஒரு வில்லி கதாபாத்திரத்தைக் கண்டதும் கேலியாய் சிரித்தாள்.
“எப்படித்தான் இந்த டைரக்டருங்க எல்லாம் வில்லி ரோலுக்கு சீன் வைக்கிறாங்களோ, எல்லாம் ஓபனா சாலஞ்ச் பண்ணி பழி வாங்கறேன்னு சொல்லிட்டு பல்பு வாங்கிட்டு திரியுதுங்க, நம்ம எல்லாம் பொறப்புலயே வில்லி… எவ்ளோ அழகா, அன்பா நடிச்சு வீட்டையும், உலகத்தையும் ஏமாத்திட்டு இருக்கோம்… யூஸ்லெஸ் பெல்லோஸ், ஐடியா வேணும்னா என்கிட்ட கேளுங்கடா…” என சொல்லிக் கொண்டே எரிச்சலுடன் டீவியை அணைத்துவிட்டு மொபைலை எடுக்க வாசலில் கேட் திறக்கும் ஓசையைத் தொடர்ந்து கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். ரிஷி சற்றுத் தள்ளாட்டமாய் உள்ளே வந்து கொண்டிருந்தான். ஹாலில் இருந்தவளை கவனிக்காமல், சாப்பிடாமல் அறைக்கு சென்று விட்டான்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு பத்து நிமிடங்கள் கழித்து அவனது உணவை ஹாட் பாக்ஸில் வைத்து எடுத்து வந்தாள்.
“அண்ணி, நீங்க ரொம்ப நல்லவங்க, எனக்கு அம்மா மாதிரி, உங்களை யாராச்சும் தப்பா சொன்னா என்னால தாங்க முடியுமா…? அதான் குடிச்சேன்…” அவன் சொல்லவும் கங்காவின் மனதுக்குள் பாரதியின் முகம் வந்து போக கடுப்பாய் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.
“யாரு, என்னை என்ன சொல்லிடப் போறாங்க, அப்படியே என்னைப் பிடிக்காம யாராச்சும் ஏதாச்சும் சொன்னாலும் நீ நம்பிடப் போறியா என்ன…? உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா…? பத்து மாசம் வயித்துல சுமக்கலைனாலும் இத்தன வருஷமா உன்னை என் பிள்ளையா மனசுல சுமந்திருக்கேன்… அப்படி எல்லாம் மத்தவங்க சொல்லுறதை என் புள்ளை நம்பிடுவானா என்ன…?”
“கரக்ட் அண்ணி, யார் உங்களை எது சொன்னாலும் நான் நம்பவும் மாட்டேன், சொன்னவங்களை சும்மாவும் விட மாட்டேன்… ஆனா, அவங்க இப்படி சொல்லுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை…”
“பாரதி இப்படி சொன்னது தெரிஞ்சா அண்ணிக்கு அவளைப் பிடிக்காம போய்டும்… அப்புறம் அவளைத்தான் நான் லவ் பண்ணுறேன்னு சொன்னா கல்யாணத்துக்கு சம்மதிக்கறது கஷ்டம், சோ… சொல்ல வேண்டாம்…” என நினைத்தான்.