Advertisement

 

“சூப்பர், சீக்கிரமே கல்யாணமானா நமக்கு நல்லது தானே…”

 

“நமக்கு என்ன நல்லது…”

 

“இல்ல, நம்ம ரூட் கிளியர் ஆகிடுமே…” ரிஷி சொல்ல முறைத்தவள், “உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்… அக்கா கல்யாணம் நல்லபடியா முடியனுமேன்னு எனக்கு கவலையா இருக்கு…” என்றாள் பாரதி.

 

“எதுக்கு கவலை ரதிம்மா… ஒருவேளை, பினான்ஷியலா எதுவும் பிராப்ளம்னாலும் என்கிட்ட சொல்லு, ஒரு நண்பனா உனக்கு உதவ வேண்டியது என் கடமை…”

 

“அதெல்லாம் எதுவும் வேண்டாம், சரி… டைம் ஆச்சு… கிளம்பலாமா…?” என எழுந்து கொண்டாள். அவளை ஹாஸ்டலில் விட்டு வீட்டுக்கு கிளம்பினான் ரிஷி. வீட்டுக்கு அழைத்து பேசிவிட்டு வான்மதிக்கும் போன் செய்தாள் பாரதி. அவளிடம் ரிஷியைப் பற்றி சொல்ல மனது நினைத்தாலும் இப்போதைக்கு வேண்டாமென்று சொல்லாமல் விட்டாள்.

 

காலையில் நேரமே ஆபீஸ் வந்தவள் வேலையில் முனைப்பாக சிறிது நேரத்தில் ரிஷியும் வந்துவிட்டான்.

 

அவனுக்கு விஷ் செய்தவர்களுக்கு பதில் விஷ் செய்து கொண்டே வந்தவன் பைலில் மூழ்கி இருந்தவள் காபின் முன் நின்று “குட்மார்னிங் பாரதி…” எனவும் வேகமாய் நிமிர்ந்தவள், “கு..குட்மார்னிங் சார்…” என்றாள்.

 

ரிஷி தனது அறைக்கு செல்ல கெளதம் வந்து அன்றைய வேலைகளைப் பட்டியலிட்டான். சில விஷயங்களுக்கு ரிஷி ஐடியா கொடுக்க திகைத்து கேட்டுக் கொண்டான்.

 

“பாரதியை வர சொல்லுங்க…” எனவும் நகர்ந்தான். உள்ளே வந்த பாரதியிடம் சில மெயில் ஐடிகளைக் கொடுத்து கம்பெனியின் விவரங்களை அனுப்புமாறு கூறினான். ரிஷி, அடர் சாம்பல் நிற புல் ஹேன்ட் ஷர்ட்டும் சாண்டல் நிற பான்ட்டும் அன்றைக்கு அணிந்திருக்க அழகாய் இருந்தான்.

 

பாரதி அவனைக் குறுகுறுவென்று புன்னகையுடன் பார்க்க புருவத்தைத் தூக்கி என்னவென்று கேட்டான் ரிஷி.

 

“இந்த டிரஸ் காம்பினேஷன் சூப்பரா இருக்கு… யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட்…” என்றவளை வியப்புடன் நோக்கிப் புன்னகைக்க, பதிலுக்குப் புன்னகைத்து வெளியேறினாள்.

 

ஒரு கொட்டேஷனைத் தயார் செய்து கையெழுத்து வாங்க கங்காவின் அறைக்கு வந்த பாரதி அவள் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு தயங்கி வெளியே நின்றாள். கதவு லேசாய் திறந்திருக்க அவள் பேசியதைத் கேட்டவளின் முகம் அதிர்ச்சியில் வெளிறியது.

 

“இங்க பாருங்க கதிர், நீங்க முதல்ல சம்மதிச்சிட்டு இப்ப மாத்திப் பேசினா எப்படி…? நீங்க கேட்ட பணம், பொண்ணு எல்லாமே ஏற்பாடு பண்ணிக் கொடுத்தும் ஆர்டரை எங்களுக்குக் கொடுக்க முடியாதுன்னு சொல்லறீங்க…?”

 

எதிர்ப்புறம் ஏதோ சொல்ல, “உங்க அப்பாவை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு… அதையும் மீறி எங்களுக்கு ஆர்டர் கிடைக்கலேன்னா உங்களுக்கு தான் கஷ்டம்… உங்களோட லீலைகள் அடங்கின பென் டிரைவ் என்கிட்ட இருக்கு, அதை நெட்ல விட்டா என்னாகும்னு யோசிச்சுப் பாருங்க, அப்புறம் உங்க பிசினஸ் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டிடும், யோசிச்சுப் பண்ணுங்க…” மிரட்டலாய் கூறினாள்.

 

“உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் டைம், அதுக்குள்ளே எங்க ஆர்டர் ஓகே ஆகணும்…” சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் கங்கா. வெளியே கேட்டு நின்ற பாரதிக்கு தேகம் நடுங்கியது. சிறிது நேரம் அங்கேயே நின்று படபடப்பு குறைந்ததும் கதவைத் தட்டி உள்ளே சென்றாள்.

 

“என்ன…?”

 

“ச…சைன் வேணும் மேடம்…”

 

“அதுக்கு எதுக்கு வாயில டைப்படிக்கற, கொண்டா…” என்ற கங்கா அவள் கையிலிருந்த கொட்டேஷனை வாங்கி அதில் கண்ணைப் பதித்தாள்.

 

“இது யாரு சொல்லி ரெடி பண்ண…”

 

“ரிஷி சார் சொன்னார் மேம்…”

 

அவள் சொல்லவும் வியப்புடன் மீண்டும் பார்த்தவள் மனதுக்குள் ஆச்சர்யப்பட்டாள்.

 

“பரவால்லியே, நல்ல முன்னேற்றம்… நல்ல ரேட்டுல கோட் பண்ணிருக்கானே…” யோசித்துக் கொண்டே முழுவதும் படித்து முடித்தவள், கையெழுத்திட்டு நீட்டினாள். வாங்கிக் கொண்ட பாரதி, “நான் வர்றேன் மேடம்…” எனக் கூற அவளையே பார்த்திருந்த கங்கா, “நில்லு…” என்றாள்.

 

“எ..எஸ் மேடம்…”

 

“நேத்து ரிஷி கிட்ட என்னைப் பத்தி என்ன சொன்ன…?”

 

“நான் எதுவும் சொல்லலை மேம், அவர்தான் எல்லாரும் போன பிறகும் நான் ஏன் வேலை செய்யறேன்னு கேட்டார், அதான் நீங்க வொர்க் கொடுத்தீங்கன்னு சொல்ல வேண்டியதாப் போயிருச்சு…”

 

“லுக் பாரதி… நீ வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு… எதுக்கு உனக்கு மத்தவங்களை விட அதிகமா வேலை கொடுக்கிறேன்னு உனக்குள்ள ஒரு கேள்வி இருக்கும்… என்னை எதிர்த்து பேச எல்லாரும் யோசிப்பாங்க, நீ கூலா அத்தனை பேரு முன்னாடி அவமானப் படுத்தின, உன்னை எனக்கு முதல்ல பார்த்தப்பவே பிடிக்கலை, என்ன பண்ணறது…? என் ஹஸ்பன்ட் ரெகமண்டேஷன், வேலைக்கு சேர்ந்துட்ட…” சிடுசிடுப்பாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“அவரைக் கைக்குள்ள போட்டுகிட்ட போல இப்ப என் கொழுந்தனாரையும் கைக்குள்ள போட்டுக்கப் பார்க்கறியா… அவன் ஒரு முட்டாள், அவனுக்கு குடிக்கவும் அழகான பொண்ணுங்களை ரசிக்கவும் தான் தெரியும், இவ்ளோ நாளா ஆபீஸுக்கு வராதவன் இப்ப எதுக்கு சரியா ஆபீஸ் வரான்னு நினைக்கற… உன் அழகைப் பார்த்து ரசிக்கவும், உன்னோட ஜாலியா பொழுதைக் கழிக்கவும் தான்… அப்படி அவன் நினைச்சாலும் நான் தடுக்க மாட்டேன்…”

 

“ச்சீ, என்ன பேசறீங்க… அவருக்கு அண்ணியாவா பேசறீங்க, அவர் அப்படி இல்ல, நானும் மானங்கெட்டவ இல்ல…”

 

“ஓ… நீ அவனுக்கு சர்டிபிகேட் கொடுக்கறியா…? அவன் என்னோட கை பொம்மை மாதிரி, நான் ஆட்டுவிக்கற போல தான் ஆடுவான்… அவனை உன் கைக்குள்ள கொண்டு வந்து ஆட்டுவிக்க நினைச்சா நான் சும்மாருக்க மாட்டேன்… அவனுக்கு அட்வைஸ் பண்ணறது, வேலை செய்யணும்னு ஆர்டர் போடுறது, இதெல்லாம் விட்டுட்டு உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…” அடக்கப்பட்ட குரலில் பாம்பைப் போல் சீறினாள் கங்கா.

 

பாரதி கங்காவின் பேச்சில் அதிர்ந்து போனவளாய் வாய் பேச முடியாமல் அமைதியாய் நிற்க, “உனக்கு கொடுத்த வேலைகளை சரியா முடி… சும்மா சொல்லக் கூடாது, நல்லாவே வேலை செய்யற, ஆனா அந்த புத்தியை வேலையோட நிறுத்திக்க… நாம பேசினதைப் பத்தி ரிஷிகிட்ட சொல்லலாம்னு மட்டும் நினைக்காத, யார் சொன்னாலும் அவன் நம்ப மாட்டான்… நீ போகலாம்…” என்றாள்.

 

வெளியேறியவள் பெருமூச்சுடன் தனது காபினுக்கு வந்தாள்.

 

“கடவுளே…! இந்த கங்கா பேசறதைப் பார்த்தா ரொம்ப மோசமானவளா இருப்பா போலருக்கே… ரிஷி என்னடான்னா அண்ணியை, ஆஹா, ஓஹோன்னு சொல்லறான்… ஹரி சாரும் மனைவியைப் பெருமையாப் பேசறார்… இவங்களுக்கு எல்லாம் தெரியாத இன்னொரு முகம் கங்காக்குக் இருக்குன்னு எப்படி புரிஞ்சுப்பாங்க…” யோசனையுடன் அமர்ந்திருந்தவளை இன்டர்காம் அழைத்தது.

 

ரிஷிதான் பேசினான்.

 

“அண்ணி என்ன சொன்னாங்க, நான் தான் கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன்னு தெரிஞ்சதும் சந்தோஷப் பட்டாங்களா…? இருப்பாங்க, என் வளர்ச்சியைப் பார்த்து முதல்ல சந்தோஷப்படறது அண்ணி தானே…” தானே கேட்டு, பதிலும் சொல்லிக் கொண்டான் ரிஷி.

 

அவனுக்கு என்ன சொல்லுவதென்று புரியாமல் பாரதி அமைதியாய் இருக்க, “சரி, அதை மெயில் பண்ணிட்டு வா… அடுத்து ஒரு வேலை சொல்லறேன்…” என்றான் அவன். ரிசீவரை வைத்துவிட்டு கொட்டேஷனை ஸ்கேன் செய்தவள் மனம் நிலையில்லாமல் தவித்தது.

 

“ச்சே, ரிஷியைப் பற்றி கங்கா எத்தனை கேவலமாய்ப் பேசினாள், தன் மகனைப் போல் நினைக்கும் ஒருவனை, ஒருத்தியால் கேவலமாகப் பேச முடியுமா…? அப்படியானால் ரிஷியை அவள் உண்மையாய் நேசிக்கவில்லையா…? இப்போது என்ன செய்வது… ரிஷியை இவளிடமிருந்து காப்பாற்ற வேண்டுமா…? நான் அண்ணியைப் பற்றி சொன்னால் ரிஷி நம்புவானா…? இல்லை கோபப்படுவானா…?” யோசித்தாள். ஒருவழியாய் ஸ்கேன் செய்து மெயில் அனுப்பிவிட்டு ரிஷியின் அறைக்கு சென்றாள்.

அவள் முகத்தைக் கண்டதுமே கேட்டு விட்டான் ரிஷி.

 

“என்னாச்சு ரதிம்மா, உன் முகம் வாடியிருக்கு… அண்ணி திட்டினாங்களா…?” என்றவனை வேதனையுடன் நோக்கினாள்.

 

“ரிஷி, நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க…”

 

“தப்பா நினைக்கற அளவுக்கு நீ என்ன சொல்லப் போற…”

 

“உங்க அண்ணி நீங்க நினைக்கற போல நல்லவங்க இல்லை, அவங்க நடிக்கிறாங்க…” பாரதி சொல்லவும் சட்டென்று ரிஷியின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

“பாரதி…! யாரைப் பத்தி என்ன சொல்லற…?” குரல் உயர்ந்தது.

 

“உண்மையைத்தான் சொல்லறேன் ரிஷி, கொஞ்சம் நான் சொல்லறதைப் பொறுமையாக் கேளுங்களேன்…”

 

“வேண்டாம், என் அண்ணியைப் பத்தி ஒரு வார்த்தை தப்பாப் பேசின, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்… அவங்க என் தெய்வம், என் அம்மா…! எனக்கு நல்லதை மட்டுமே நினைக்கிறவங்க, இதை மட்டும் வேற யாராச்சும் சொல்லி இருந்தா நடக்கிறதே வேற, நீ உன் காபினுக்குப் போ…” என்றான் கோபத்துடன்.

 

அவனை அப்படிக் காண பாரதிக்கே பயமாய் இருந்தது. கதவு சாத்தியிருந்ததால் வெளியே கேட்கவில்லை. ரிஷிக்கு எப்படி புரிய வைப்பது என்ற கவலையுடன் வெளியேறினாள் பாரதி.

 

நம்பிக்கை துரோகம்

நம்பாதவர்களிடம் இருந்து

கிடைப்பதல்ல…!

நாம் யாரை அதிகம்

நம்பினோமோ,

அவரிடமிருந்து

மட்டுமே கிடைக்கிறது…

Advertisement