Advertisement

அத்தியாயம் – 17

எட்டு மணி வரை பாரதி கம்ப்யூட்டரில் பிஸியாய் இருக்க, கவலையுடன் தனது அறையிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி எழுந்து அவளிடம் வந்தான்.

“பாரதி… மணி எட்டாச்சு… போதும், நிறுத்திட்டு கிளம்பு…”

“இது மேடம் கொடுத்த வேலை, நீங்க எப்படி என்னை போக சொல்ல முடியும்… நான் முடிச்சிட்டு கிளம்பிக்கறேன், நீங்க கிளம்புங்க…”

“ப்ச், சொன்னாக் கேளு பாரதி… நான் அண்ணிகிட்ட சொல்லிக்கறேன், நல்ல மழை வரும் போலருக்கு, ரொம்பவே இருட்டிடுச்சு, முதல்ல நீ கிளம்பு…” அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள். அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த ருக்மணியிடம் வந்தான் ரிஷி.

“ஏன் பாரதிக்கு மட்டும் இவ்வளவு வேலை…? வேணும்னா இன்னும் ரெண்டு ஸ்டாப்ஸ் எடுத்துக்கலாமே…”

“சாரி சார், இது மேடம் கொடுத்த வொர்க்… நான் என்ன பண்ண முடியும்…?” ருக்மணி கை விரிக்க அண்ணிக்கு போன் செய்தான் ரிஷி.

“என்னடா ரிஷி, பார்ல இருக்கியா… உன் அண்ணன் வரதுக்குள்ள வீட்டுக்கு வந்திருவ தானே…” என்றாள் கங்கா.

“அண்ணி, நான் ஆபீஸ்ல இருக்கேன்…”

“என்னது, இன்னும் ஆபீஸ்ல இருக்கியா…? அப்படி என்ன உனக்கு அங்கே வேலை…”

“எனக்கு வேலை ஒண்ணும் இல்ல, ஆபீஸ்ல எல்லாரும் கிளம்பின பின்னாடியும் இந்த பாரதி மட்டும் வேலை செய்துட்டு இருக்காங்க, கேட்டா நீங்க கொடுத்த வேலையை முடிக்காம வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு சொன்னதா சொல்லுறாங்க… என்ன அண்ணி, இது…? எதுக்கு அவங்களுக்கு மட்டும் இவ்ளோ வொர்க் கொடுத்திருக்கீங்க…”

அவன் சொல்ல, கோபத்தில் முகம் சிவந்தது கங்காவுக்கு. ஆனாலும் குரலில் காட்டாமல் அமைதியாய் பேசினாள்.

“ஓ… அந்தப் பொண்ணு இன்னுமா வொர்க் பண்ணிட்டு இருக்கு… நிறைய பென்டிங் வொர்க்ஸ் இருந்துச்சு, அதை லிஸ்ட் அவுட் எடுத்து அவகிட்ட கொடுத்தோம்… அதுல இருக்கிற வேலை எல்லாம் ஒவ்வொண்ணா முடிச்சுக் கொடுன்னு தான் நான் சொல்லி இருந்தேன்… ஒட்டுக்கா முடிச்சுக் கொடுன்னு சொல்லவே இல்லையே…”

“ஓ… அதானே பார்த்தேன், என் அண்ணி இப்படி சொல்ல மாட்டாங்களேன்னு நினைச்சேன்… கல்யாணமாகாத பொண்ணு, இந்த நேரத்துல ஆபீஸ்ல இருந்தா நல்லாவா இருக்கு…! நீங்க அந்த ருக்மணிக்கு கால் பண்ணி பாரதியை அனுப்ப சொல்லுங்க அண்ணி, நான் சொன்னா அவங்களும் கேக்க மாட்டறாங்க…”

“என்னது…? நீ சொல்லி ருக்மணி கேக்கலியா… நீ அந்த கம்பெனியோட ஜேஎம்டி னு அவளுக்கு மறந்து போச்சா…? சரி, கிளம்பி வா… நான் அவளுக்கு கால் பண்ணறேன்…”

“ம்ம்… சரி அண்ணி…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க கங்காவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

“ரிஷி ஆபீஸ்க்கு வந்த முதல் நாளே அவனைக் கைக்குள்ள போட்டுக்கப் பார்க்கிறாளா இந்த பாரதி… இது சரியில்லையே, அவ வேலை செய்தா இவன் எதுக்குத் துடிக்கிறான்… அவன் பாருக்குப் போயி தண்ணியடிச்சிட்டு இருப்பான்னு நினைச்சா இன்னும் ஆபீஸ்ல கிளம்பாம உக்கார்ந்திருக்கான்… இப்படியே விட்டா சரியாகாதே…” யோசனையுடன் அறைக்குள் குறுக்கும், நெடுக்குமாய் நடந்தாள்.

“இப்போதைக்கு ரிஷிக்கு நம்மளைப் பத்தி எந்த டவுட்டும் வரக் கூடாது, முதல்ல ருக்மணிக்கு போன் பண்ணுவோம்…” என நினைத்தவள் அலைபேசியை எடுத்தாள்.

அண்ணியிடம் பேசிவிட்டு பாரதியிடம் வந்த ரிஷி, “பாரதி, எல்லாம் எடுத்து வை… அண்ணிகிட்ட சொல்லிட்டேன், நீ கிளம்பு… நாளைக்குப் பார்த்துக்கலாம்…” என்றான்.

“எப்படி இருந்தாலும் இதெல்லாம் முடிச்சு தானே ஆகணும், நான் பண்ணறேன்…” என்றவளைக் கோபமாய் முறைத்தான்.

“நான் இங்க ஜேஎம்டி… என் பேச்சுக்கு மரியாதை கொடுத்து இப்ப நீ கிளம்பப் போறியா இல்லியா…?” ரிஷியின் குரல் சற்று உயர அதற்குள் ருக்மணி ஓடி வந்தாள்.

“ஏம்மா, சார்தான் சொல்லுறார்ல நீ கிளம்பு… கங்கா மேடம் கால் பண்ணி உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க…” என்றாள்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எல்லாம் எடுத்து வைத்தவள் பாகை எடுத்துக் கொண்டு நடந்தாள். மணி எட்டரை ஆகியிருக்க மழை பெய்யத் தொடங்கியிருந்தது.

“பாரதி நில்லு, நான் கார்ல டிராப் பண்ணறேன்…” சொன்னபடி பின்னிலேயே வந்தான் ரிஷி. அவர்கள் செக்ஷனைத் தாண்டி ரிஷப்சனுக்கு வந்த பாரதி வெளியே மழையின் வேகத்தைக் கண்டு திகைத்து நின்றாள். அவள் வேகத்துக்கு நடக்க முடியாமல் பின்னில் வந்த ரிஷி சோபாவில் இடித்துக் கொண்டு தடுமாறி விழப் போக சத்தத்தில் திரும்பியவள் அதிர்ந்து ஓடி வந்தாள்.

“ஐயோ ரிஷி, பார்த்து வரலாம்ல…”

“அதான், கூப்பிடக் கூப்பிட நிக்காம ஓடுறியே… என் நொண்டிக் காலை வச்சுட்டு என்னால வேகமா நடக்க முடியுமா…?” அவன் கேள்வியில் கலங்கிப் போனாள்.

“ச..சாரி ரிஷி… நான் ஒரு கோபத்துல…”

“எதுக்கு கோபம், நான் என்ன பண்ணேன்… கூப்பிட்டே இருக்கேன், போயிட்டே இருக்க… இங்கயே வெயிட் பண்ணு, நானே கார்ல உன்னை ஹாஸ்டல்ல டிராப் பண்ணறேன்…” அதிகாரமாய் சொல்ல அமைதியாய் இருந்தாள். ரிஷி காரை எடுத்து வர ஏறிக்கொண்டாள்.

“இனியாச்சும் இப்படி அன்டைம் வரைக்கும் வேலை செய்யாம நேரத்துக்கு கிளம்பப் பாரு…”

“ம்ம்… கால்ல அடி ஒண்ணும் இல்லையே…?”

“இருந்தா மட்டும், ஒத்தடம் கொடுக்கவா போற…” கோபமாய் சொன்னவனை வேதனையுடன் பார்த்தவள் அமைதியானாள். உண்மையில் ரிஷிக்கு கால் நன்றாகவே வலித்திருந்தது, காட்டிக் கொள்ளாமல் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

எப்போதும் அவளிடம் உற்சாகமும், குறும்புமாய் பேசிக் கொண்டிருப்பவன் அமைதியாய் இருக்கவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“கால் ரொம்ப வலிக்குதா, ரிஷி…”

“ப்ச்… அதைப்பத்தி உனக்கென்ன, உனக்கு உன் கோபம் தானே பெருசு…” அமைதியாய் ஸ்டீயரிங்கைத் திருப்பியவன் ஹாஸ்டல் முன் காரை நிறுத்த இறங்காமல் கேட்டாள்.

“ரொம்பப் பசிக்குது, டின்னருக்கு கம்பெனி தருவீங்களா…?” அவள் கேட்டதை நம்ப முடியாமல் பார்த்தவன், “என்ன, என்ன கேட்ட…?” என்றான் புரியாமல்.

“மழை பெய்தாலே எனக்கு ரொம்பப் பசிக்கும், இப்ப ரொம்பவே பசிக்குது, சாப்பிட்டு வரலாமா…?” குழந்தை போல் கேட்டவளை நோக்கி புன்னகைத்தான்.

“பர்ஸ்ட் டைம் நீயா ஒண்ணு வேணும்னு கேட்டிருக்க, போகலாம்…” என்றவன் காரை எடுத்தான். பத்து நிமிடப் பயணத்தில் ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் வர நிறுத்தினான். இருவரும் உள்ளே நுழைந்து ஓரமாய் இருந்த மேஜை ஒன்றின் எதிரெதிரே அமர்ந்தனர். வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

“ரிஷி, இப்ப கால்ல வலி பரவால்லியா…?”

“ம்ம்…”

“உங்களைப் பத்தி எதுவுமே சொன்னதில்லை, சொல்லுங்க கேக்கறேன்…” அவளை அதிசயமாய் பார்த்தவன் சொல்லத் தொடங்கினான். சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர்.

“எனக்கு பெருசா சொல்ல எதுவுமில்லை… அப்பா, அம்மா நான் ஸ்கூல் படிக்கும்போதே இறந்துட்டாங்க, அண்ணன் தான் எல்லாமா இருந்து பார்த்துகிட்டார்… அப்புறம் அண்ணி, அவங்கதான் அம்மா இல்லாத குறை தெரியாம நல்லாப் பார்த்துகிட்டாங்க… எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு என்னை விட அவங்களுக்கு தான் தெரியும்… என்னை தன் சொந்த மகனைப் போல நினைக்கறாங்க…”

“ம்ம்… அவங்க பேசறதும், நடந்துக்கிறதும் பார்த்தா அப்படி நினைக்கத் தோணலியே…” மனதுக்குள் யோசித்தாலும் எதுவும் அவனைக் கேட்கவில்லை. அதற்குள் ரிஷியின் அலைபேசி சிணுங்க நண்பன் ஒருவன் அழைத்தான்.

“டேய் ரிஷி, எங்கடா ரெண்டு நாளா பார் பக்கம் உன்னைக் காணோம்… வீட்டுக்குப் போனா உன் அண்ணி நீ ஆபீஸ் போயிட்டதா சொல்லுறாங்க… நீ உடனே கிளம்பி நம்ம பாருக்கு வா… நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கோம்…”

“டேய், இந்த நேரத்துலயா…?”

“ஏன், எப்பவும் இந்த நேரத்துல இங்க தானே இருப்போம்.. உன் அண்ணி கூட வருத்தப்பட்டாங்க, ரிஷி உங்களோட ஜாலியா இருக்கட்டும்னு நினைச்சா அவன் ஆபீஸ்ல உக்கார்ந்து கஷ்டப்படறான்னு, கிளம்பு கிளம்பு… சீக்கிரம் பாருக்கு வா…” போதையில் அதிகாரம் செய்தான் அவன். பாரதி அருகே இருந்ததால் எதிர்ப்புறம் பேசுவது எதிரொலித்து தெளிவாகக் கேட்க முகம் சுளித்தாள்.

“டேய், வைடா… நான் அப்புறம் பேசறேன்…” சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு பாரதியைப் பார்த்தான்.

“பிரண்ட்ஸ் கூப்பிட்டாச்சு போல, கிளம்பணுமா…?”

“ச்சேச்சே, அவங்க கிடக்கறாங்க குடிகாரப் பசங்க… யாராச்சும்  திருந்திட்டாப் பொறுக்காதே… உடனே வா, வான்னு கூப்பிட வேண்டியது, நீ ஒண்ணும் தப்பா நினைக்காத ரதிம்மா… நான் போக மாட்டேன்…” என்றான் ரிஷி.

“நான் எதுக்கு தப்பா நினைக்கப் போறேன், உங்க விருப்பம்…”

“உன் விருப்பம் தான் என் விருப்பம்… சரி, உன்னைப் பத்தி எதுவும் சொல்லலியே…” என்றான்.

பாரதி அவள் குடும்ப சூழல் பற்றியும், அக்கா சக்திக்கு அத்தை மகனுக்கு கல்யாணம் பேசி நாள் குறித்ததையும் கூற ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான்.

Advertisement