Advertisement

“அட, அதெல்லாம் வேண்டாம்… நீ வெளிய போயி நல்ல ஹோட்டல்ல லஞ்ச்சை முடிச்சிட்டு வா, கான்டீன்ல சாப்பிட்டா கௌரவமா இருக்காது…” என்றாள் கங்கா.

“சரி அண்ணி, வச்சிடறேன்…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, “இதுதான் உன் அண்ணியின் டக்கா…” என்பது போல் பாரதி பார்க்க, “பாவம் அண்ணி… நான் வீட்டுக்குப் போயி சாப்பிடுவேன்னு எனக்குப் பிடிச்ச மெனுவா சமைக்க சொல்லிருக்காங்க, நான்தான் போகாம விட்டுட்டேன்…” எனவும் எதுவும் சொல்லாமல் பார்த்தாள்.

“சரி, இப்ப லஞ்சுக்கு வீட்டுக்குப் போறீங்களா…?”

“சேச்சே, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ இந்த பைலை எல்லாம் கரைச்சு குடிக்கணும்… பக்கத்துல ஹோட்டல்ல சாப்பிட சொல்லி அண்ணி சொன்னாங்க, நீயும் கம்பெனிக்கு வர்றியா…?” என்றான் ஆர்வமாக.

அதற்குள் கெளதம் அங்கே லஞ்ச் பாகுடன் வந்தவன், “என்ன சார், நீங்க இன்னும் லஞ்சுக்குப் போகலியா… பாரதி, நாம சாப்பிடப் போகலாமா…?” என்றான்.

“கெளதம், நானும் இன்னைக்கு உங்களோட லஞ்சுக்கு ஜாயின் பண்ணிக்கலாமா…?” ரிஷி கேட்க, பாரதி அவனை வியப்புடன் நோக்க, “ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு சேராது, அதான் கான்டீன்ல சாப்பிடலாம்னு நினைக்கறேன்…” ரிஷி சமாளிப்பாய் சொல்ல அவள் எதுவும் கேட்கவில்லை.

மூவரும் கான்டீனுக்கு சென்று சுமாரான உணவை சாப்பிட்டுவிட்டு காபினுக்குத் திரும்ப கங்கா அங்கே வந்து கொண்டிருந்தாள். கெளதம் அவனது அறைக்கு சென்றிருக்க, கம்ப்யூட்டரில் எதையோ டைப்பிக் கொண்டிருந்தாள் பாரதி.

அவளைப் பார்த்தபடி பைலில் மூழ்கியிருந்த ரிஷியின் அறைக்குள் நுழைந்தவள், “ரிஷி, சாரிடா… நீ இங்க இருக்கறதை மறந்தே போயிட்டேன், சாப்டியா…?” என்றாள்.

“பரவால்ல அண்ணி, நீங்க வேணும்னு என்னை மறப்பீங்களா என்ன…? நான் சாப்பிட்டேன்…”

“ம்ம்… என்ன…? பைலும், கையுமா உக்கார்ந்துட்ட… எக்ஸாம் எதுவும் எழுதப் போறியா என்ன…?” என்றாள் கிண்டலுடன்.

“அதை ஏன் கேட்கறீங்க, எனக்கு அசிஸ்டண்டா ஒரு பொண்ணைப் போட்டீங்களே, அது பேரென்ன… பாரதியா…? பைரவியா…? இது புல்லா படிச்சுப் பாருங்கன்னு எனக்கு ஆர்டர் போட்டுட்டுப் போயிருச்சு, அதான் படிக்கிறேன்…” என்றான் விளையாட்டாக.

“என்னது, பாரதி உனக்கு ஆர்டர் போட்டாளா…?” சட்டென்று கடுமையாய் மாறியது கங்காவின் முகம்.

“பாரதி, உடனே ஜெஎம்டி ரூமுக்கு வா…” இண்டர்காமில் குரல் கொடுக்க அவள் பதட்டமாய் உள்ளே வந்தாள்.

“எ..எஸ் மேடம், கூப்பிட்டீங்களா…?”

“என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல, நீ யாரு இவனுக்கு ஆர்டர் போட…” கங்கா கடுப்புடன் கேட்க பாரதியின் முகம் சுருங்கிப் போனது. அதைக் கண்டு பதறிப் போனான் ரிஷி.

“ஐயோ அண்ணி, நான் விளையாட்டுக்கு சொன்னேன்… பாரதி ஆர்டர் எல்லாம் போடலை, இந்த பைலைப் படிச்சுப் பார்த்தா புரியும்னு தான் சொன்னாங்க…”

“அப்படியே இருந்தாலும் இவ யாரு அதை சொல்ல… உனக்கு பிடிச்சதை நீ செய்துட்டு ஜாலியா இரு, எவ்ளோ பணம் வேணுமோ கேளு, கிளப்புக்கு போ, பாருக்கு போ… நல்லா செலவு பண்ணி சந்தோஷமா இரு… இங்க எந்த வேலையும் பார்க்கணும்னு அவசியம் இல்ல, உனக்கும் சேர்த்து தான் நாங்க கஷ்டப்படறோம்… நீ எதுக்கு இவ சொன்னதுக்காக இதெல்லாம் படிச்சு கஷ்டப்படற…?” என்றாள் கோபத்துடன்.

அவள் சொன்னதை பாரதி அதிர்ச்சியுடன் கேட்டு நிற்க, “இல்ல அண்ணி, அது வந்து… இங்க என்ன வேலைன்னு எனக்குத் தெரிஞ்சுக்கணும்னு தான் பாரதி…” சொல்ல வந்தவனை இடையிட்டவள்,

“நீ சும்மாரு ரிஷி… அவ வேலை என்னவோ அதை மட்டும் பார்க்க வேண்டியது தானே, நீ என்ன பண்ணினா இவளுக்கு என்ன…? நீ சொல்லுற வேலையைத்தான் அவ செய்யணுமே ஒழிய, அவ சொல்லுறதை நீ கேக்கனும்னு அவசியம் இல்லை… இனி இப்படி அதிகப் பிரசிங்கித்தனமா தலையிடற வேலை வச்சுக்காத, போ…” என்றாள் உறுமலுடன்.

“ச..சாரி மேடம்… சாரி சார்…” உடைந்து போன குரலில் சொன்ன பாரதி அவர்கள் முன் கண் கலங்க விரும்பாமல் சட்டென்று அங்கிருந்து சென்று விட்டாள். ரிஷி நடந்ததை நம்ப முடியாமல் அதிர்ந்து அமர்ந்திருக்க கங்கா வேலை முடிந்தது என்று அவளது அறைக்கு சென்று விட்டாள்.

அண்ணி சென்றதும் ரிஷி பாரதியை இண்டர்காமில் அழைக்க அவள் எடுக்கவில்லை. காலைத் தாங்கிக் கொண்டு பாரதியைத் தேடி அவனே காபினுக்கு வர, அங்கே அவள் இல்லை. இரண்டு நிமிடம் அங்கேயே அவன் நிற்க, ஈர முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொண்டு வந்தாள் பாரதி.

சிவந்து கலங்கிய கண்கள் அழுதிருக்கிறாள் என்பதைச் சொல்ல அவனுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.

“பாரதி, ஒரு நிமிஷம் என் ரூமுக்கு வா…” சொல்லிவிட்டு அவனது அறைக்கு செல்ல வந்தவள் குனிந்து நின்றாள்.

“ரதி, என்னமா இது… நீ எவ்ளோ தைரியமான பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தேன், இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி கலங்கிப் போயி நிக்கற… ஐ ஆம் வெரி சாரி, நான் விளையாட்டுக்கு சொன்னதை அண்ணி தப்பா எடுத்துட்டு உன்கிட்ட கோபப்பட்டுட்டாங்க…”

“பரவால்ல சார், நீங்க இதுக்கெல்லாம் என்கிட்ட சாரி சொல்லனும்னு இல்ல, வேற எதுவும் சொல்லணுமா…?”

“உனக்கு என்மேல கோபம் இருக்குன்னு புரியுது… அண்ணி கொஞ்சம் ஓவராதான் ரியாக்ட் பண்ணிட்டாங்க, அவங்களுக்கு எப்பவும் என் மேல பிரியம் ஜாஸ்தி, என்னை சொந்தக் குழந்தை போலப் பார்த்துப்பாங்க, அந்தப் பிரியத்துனால தான் உன்மேல கோபப்பட்டுட்டாங்க… ப்ளீஸ், தயவுசெய்து என்னை மன்னிச்சிரு ரதிம்மா…”

“சார், என்கிட்ட சாரி கேட்டு கஷ்டப்படுத்தாதீங்க… உங்களுக்கு எது சரின்னு தோணுதோ, பண்ணுங்க… இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன்…”

“என்ன ரதிம்மா, அவ்ளோதானா…? ஒரு சின்ன விஷயத்துக்கு தூக்கிப் போட்டுப் பேசற… அண்ணி என்னவோ சொல்லிட்டுப் போகட்டும், நீ சொல்லுற போல நான் செய்வேன்…”

“பார்க்கலாம், இப்ப வேற எதுவும் சொல்லறதுக்கு இல்லன்னா, நான் என் காபினுக்குப் போகலாமா, எனக்கு நிறைய வேலை இருக்கு… இன்னைக்கு என் டார்கெட் முடிக்கலேன்னா நான் ஆபீஸ்ல இருந்து கிளம்ப முடியாது…”

“டார்கெட்டா..? என்ன டார்கெட்…?”

“தினமும் இவ்ளோ வேலை முடிச்சாகனும்னு உங்க அண்ணி, சாரி எம்டி மேடம் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருக்காங்க… இன்னிக்கு நீங்க என்னைக் கூப்பிட்டே இருந்ததால அதுல எதையும் ஒழுங்கா முடிக்க முடியல, நான் போகலாமா…?” கிளம்ப குறியாய் இருந்தாள்.

“ம்ம்… போ, அப்படியே அது என்னென்ன வேலைன்னு எனக்கு லிஸ்ட் அனுப்பு, நான் டீம் வியூவர்ல வரேன்…”

“ம்ம்…” என்றவள் நகர்ந்தாள்.

பாரதிக்கு கொடுத்திருந்த வேலைகளின் லிஸ்டைப் பார்த்தவன், “ரதி, இவ்வளவும் நீ எப்படி தனியா முடிக்க முடியும்… நானும் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா…?”

“ஐயோ, வேண்டாம் சார், நீங்கதான் எனக்கு வேலை கொடுக்கணும்… என் வேலையை நீங்க செய்யக் கூடாது, நீங்க என்னைத் தேவையில்லாம கூப்பிடாம இருந்தாலே போதும், நான் பார்த்துக்குவேன்…” என்றுவிட அவனுக்கு கவலையாய் இருந்தது.

“இத்தனை வேலைகளை இவள் எப்படி தனியே செய்து முடிக்க முடியும், அதுவும் டார்கெட் முடித்தால் தான் கிளம்ப முடியும் என்றால்…” யோசித்தான்.

மாலை வேலை முடிந்து வழக்கம் போல் அனைவரும் கிளம்பத் தொடங்க ஆறு மணிக்கு கெளதமும் கிளம்பி விட ருக்மணி பாரதியிடம் வந்தார்.

“இன்னிக்கு எவ்ளோ வொர்க் முடிச்சிருக்கேன்னு எனக்கு ரிப்போர்ட் பண்ணவே இல்லியே…”

“இப்பதான் ஒவ்வொரு வேலையும் முடிக்கத் தொடங்கிருக்கேன், இதோ அனுப்பறேன் மேடம்…” என்றவள் முடித்த வேலைகளை அனுப்பி வைத்தாள். ரிஷி அவனது அறையிலிருந்து பாரதியை கவனித்துக் கொண்டிருக்க, அவளோ கம்ப்யூட்டரிலும், கையில் உள்ள பைலிலும் மட்டுமே கவனத்தைப் பதித்திருந்தாள்.

இன்டர்காமில் ருக்மணிக்கு அழைத்த ரிஷி, “ஆபீஸ்ல எல்லாரும் கிளம்பியாச்சு, ஏன் இன்னும் பாரதி மட்டும் கிளம்பலை…” என்றான்.

“அது வந்து சார்… மேடம் அவங்களுக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருக்காங்க, அந்தப் பொண்ணு இன்னும் முடிக்கல, அதான் இப்ப பண்ணிட்டு இருக்கு…” என்றார்.

“சரி, எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி வேணுமே, கிடைக்குமா…” என்றான்.

“கடைல வாங்கிட்டு வர சொல்லறேன் சார்…” என்ற ருக்மணி செக்யூரிட்டியிடம் காபி வாங்கி வருமாறு அனுப்பினார். சிறிது நேரத்தில் செக்யூரிட்டி காபி பிளாஸ்க்குடன் அவனது அறைக்கு வர, “வச்சிருங்க, நான் எடுத்துக்கறேன்…” என்று கூறிவிட அவர் சென்று விட்டார்.

சூடான காபியை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு பாரதியிடம் வந்த ரிஷி, “பாரதி, இந்த காபியைக் குடிச்சிட்டு வொர்க் பண்ணுங்க…” எனவும் “சாரி சார், நான் மெஷின் காபி குடிக்க மாட்டேன்…” என சோர்வுடன் நிமிர்ந்தவளுக்கு ஒரு காபி மிகவும் தேவையாகவே இருந்தது.

“இது பில்டர் காபி…” ரிஷி சொல்லவும் திகைத்து, “தேங்க்ஸ்…” என்று வாங்கிக் கொண்டாள்.

அதை ருக்மணி கவனித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ரிஷி, “ஆபீஸ் டைம் முடிஞ்சு வொர்க் பண்ணுறவங்களுக்கு காபி, ஜூஸ் ஏதாச்சும் கொடுக்கலாம்ல…” என்றான்.

“இங்கே மெஷின் காபி இருக்கிறதால வேணும்கறவங்க எடுத்துக் குடிச்சுக்குவாங்க, இவங்களுக்கு மட்டும் பில்டர் காபி வாங்கிக் கொடுக்க முடியாதுல்ல, சார்…” எனவும் எதுவும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றான். ஆனால் மனம் அமைதியடையாமல் அவளுக்காய் ஏதாவது செய் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

எனக்காக கலங்கி நீ

கண்ணீர் விடும்

தருணங்களில்

எல்லாம் சிறகொடிந்த

பறவையின் வலியை

என் தோள்களில் உணர்கிறேன்…

Advertisement