Advertisement

அத்தியாயம் – 16

“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ… இதுக்கு மேல கண்ணை விரிச்சா கண்ணுக்குள்ள இருக்கிற கிருஷ்ண மணி வெளிய தெறிச்சிடப் போகுது, ஷாக்கைக் குற ரதிம்மா…”

ரிஷியின் குரலில் மீண்ட பாரதி குனிந்து கொண்டாள்.

“ச..சாரி, சார்…”

“ஐயையோ, சாரா…? அது ஏன்…?” பதறினான்.

“நீங்க இங்க முதலாளி, நான் உங்க ஊழியர்… உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட்டா சரியா இருக்காது… அதோட நேத்து நீங்க உங்க கம்பெனிக்கு வந்ததை என்னைப் பார்க்க வந்ததா நினைச்சுட்டு தேவையில்லாம கோபப்பட்டு, அதிகப் பிரசங்கித்தனமா பேசிட்டேன்… அதுக்கு தான் சாரி…”

“ஹேய், இட்ஸ் ஓகே ரதிம்மா… நீ அப்படி சொன்னதால தான நான் இன்னைக்கே ஆபீஸ்க்கு பொறுப்பெடுக்க வந்தேன்…” அவன் மெல்லிய குரலில் சொல்ல நிமிர்ந்தாள் பாரதி.

“சார், ஒரு பர்சனல் ரிக்வஸ்ட்…”

“என்ன ரதிம்மா…” என்றான் ஆவலுடன்.

“தயவுசெய்து ஆபீஸ்ல நம்ம பர்சனல் விஷயங்களைப் பேசறதோ, ரதின்னு உரிமைல கூப்பிடறதோ வேண்டாம்… இங்கே நீங்க பாஸ்… நான் உங்க அசிஸ்டன்ட், அதை மறக்காமப் பேசினா நல்லாருக்கும்…”

“ஹூக்கும், இதுக்கா இவ்ளோ ஆசையா ஓடி வந்தேன்…” வாய்க்குள் முனங்கினான்.

“என்ன சார், நான் சொல்லுறது சரிதானே…?”

“ஆமாமா, ரொம்ப சரிதான்… இனி அப்படியே பாலோ பண்ணிக்கிறேன் மேடம்…”

“மேடம் வேண்டாம், கால் மீ பாரதி…”

“பாரதீ… சரிங்க பாரதீ, நீங்க உங்க சீட்டுக்குப் போங்க பாரதீ…” அவன் சொன்னதைக் கேட்டு மனம் லேசாக புன்னகைத்தாள்.

“ம்ம்… தட்ஸ் குட், இது அழகாருக்கு…” என்றான் ரிஷி.

“ஓகே, கெளதம் சார் வெயிட் பண்ணிட்டு இருப்பார்… நீங்க இங்கே இருக்கற பைல்ஸ் எல்லாம் பார்த்திட்டு இருங்க, அவர் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்…” சொன்னவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.

“ஹூம்… பக்கத்துலயே இருப்பா, பார்க்கலாம், பேசலாம், பழகலாம்னு பல கலாம் கனவுகளோட வந்த இந்த பச்சைப் புள்ளையை பைல் பார்க்க சொல்லிட்டு, கெளதம் வேலைய முடிக்கப் போயிட்டாளே… இப்ப என்ன பண்ணறது…?”

“ஹூம்… பைலைப் பார்த்திட்டு அப்படியே அதுல சந்தேகம் கேக்கக் கூப்பிடுவோம்…” நினைத்தவன் மேஜை மீது அடுக்கி வைத்திருந்த பைல் ஒன்றை எடுத்துத் திறந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் சந்தேகம் கேட்க, பாரதியை அழைக்க வந்து சொல்லிக் கொடுத்தாள். அவளுக்கு அந்த பைலில் உள்ள விஷயங்கள் எல்லாம் இப்போது அத்துப்படி.

அவள் சொல்லி சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் அழைத்தான். இப்படி மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பாரதி டென்ஷனானாள்.

அவன் மேஜை முன்பு இருந்த நாற்காலியில் அமர்ந்தவள், “நான் இங்கயே இருக்கேன்… நீங்க முழுசா எல்லாத்தையும் படிச்சு சந்தேகத்தைக் கேட்டு முடிங்க…” என்றதும் குறும்புப் புன்னகையுடன் பார்த்துவிட்டு பைலில் கவனமானான்.

இப்போது அவளிடம் கேட்காமலே பைலில் உள்ள விஷயங்கள் புரிய அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார், நான் போகட்டுமா…? நீங்க பார்த்துக்கறிங்களா…?”

“நோ நோ, நீங்க போனா எனக்கு நிறைய கேள்வி வருது… நீங்க பக்கத்துல இருந்தா ஈசியாப் புரியுது…” சொல்லி விட்டு புருவத்தை ஏற்றி இறக்கி கன்னத்தில் குழி விழப் புன்னகைத்தவனை முறைத்தாள் பாரதி.

அதை சட்டை செய்யாமல் ரிஷி அவளையே பார்க்க அவளுக்கு ஒரு மாதிரித் தவிப்பாய் இருக்க சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“ரதி… சாரி, பாரதீ… ஒரு சின்ன ஹெல்ப்…?”

“என்னது…?”

“உங்கள எப்படி கரக்ட் பண்ணறது…?” கண்ணடித்துக் கொண்டே சிரிப்புடன் கேட்க பயங்கரமாய் முறைத்தாள்.

“சரி, சரி… உடனே காளி அவதாரம் எடுக்காத…! நானும் எப்படில்லாமோ டிரை பண்ணிப் பார்க்கறேன், எதுவும் வொர்க் அவுட் ஆகல… அதான், உன்கிட்டயே கேட்டேன்…” அவன் சொல்லவும் ஒரு நிமிடம் திகைப்புடன் பார்த்தவள் கோபப்பட்டு பிரயோசனமில்லை எனத் தோன்ற அமைதியாய் சொன்னாள்.

“உங்க அண்ணன் சொன்ன மாதிரி இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கீங்க… ஆபீஸ்க்கு வந்து பொறுப்பான இடத்துல உக்கார்ந்துட்டு, கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரிஷி… இதான் உங்களை நம்பி பொறுப்பைக் கொடுத்தவங்களுக்கு நீங்க செய்யற மரியாதையா…?” அவள் கேட்க திகைத்தான் ரிஷி.

இதெல்லாம் அவன் யோசிக்காத விஷயங்கள்… முதலில் அண்ணனை சந்தோஷப்படுத்த ஆபீஸ் வர வேண்டும், அடுத்து இப்போது பாரதியுடன் பழக இது நல்ல வாய்ப்பு என நினைத்தே ஆபிஸில் வந்து அமர்ந்திருக்கிறான்.

“பொறுப்பெல்லாம் மெதுவாப் பார்த்துக்கலாம், அதுக்கு தான கெளதம், மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் இருக்காங்க…”

“கெளதமும் என்னைப் போல உங்க ஊழியர் தான்… நீங்க சொல்லறதை செய்ய தான் நாங்க இருக்கோம், நாங்க சொல்லி நீங்க செய்யக் கூடாது…”

“ப்ச்… இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லற…” சற்று எரிச்சலுடன் கேட்டவனை அமைதியாய் பார்த்தாள் பாரதி.

“என்னை எப்படி கரக்ட் பண்ணறதுன்னு கேட்டிங்கல்ல, அதுக்கான பதில் உங்ககிட்டயே இருக்கு…”

“என்ன…? என்ன பதில்…” என்றான் கண்கள் மின்ன.

“செய்யற வேலையை கடமைக்கு செய்யாம முழு மனசோட செய்யுங்க… எடுத்துகிட்ட பொறுப்புல உங்க திறமையைக் காட்டி நல்லபடியா ஒரு புது ஆர்டரை எடுத்துக் காட்டுங்க… அதெல்லாம் தான் நீங்க என்னை இம்ப்ரெஸ் பண்ண உதவும்… அதை விட்டு இப்படி கண்ணை உருட்டி, உருட்டி சைட் அடிக்கிறதோ, கண்ணு முன்னாடியே கூப்பிட்டு உக்கார வச்சு ஜொள்ளு விடறதோ எல்லாம் எனக்கு செட்டாகாது…” அவள் சொன்னதைக் கேட்டு ரிஷி சற்று பிரமிப்புடன் பார்த்திருக்க தொடர்ந்தாள்.

“பர்சனலையும், பிசினஸையும் ஒண்ணாப் போட்டு குழப்பிக்கறது எப்பவுமே சரியா வராது, உங்களுக்கு வேணும்னா இந்த ஆபீஸ், வேலை எல்லாம் விளையாட்டா இருக்கலாம்… ஆனா எனக்கு இது கோவில் மாதிரி, இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்… அதனால என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னா இந்த வேலைல உங்க வேலையைக் காட்டுங்க, என்கிட்ட வேணாம்…” புன்னகை மாறாமல் பாரதி தெளிவாய் சொல்ல அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் சொன்னதை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருக்க பாரதி கேட்டாள்.

“என்ன பேச்சைக் காணோம்…? இப்படி எல்லாம் இம்ப்ரெஸ் பண்ணி இவளை கரக்ட் பண்ணுற அளவுக்கு இவ ஒண்ணும் வொர்த் இல்லையேன்னு யோசிக்கறீங்களா…?”

“ச்சேச்சே, உன்னை இப்படி குறைச்சலா சொல்லாத ரதிம்மா… உன் வொர்த் உனக்கு தெரியாம இருக்கலாம், ஆனா, நீ என் வாழ்க்கைல கிடைச்ச மிகப் பெரிய நம்பிக்கை… எனக்குக் கிடைச்ச பொக்கிஷம், உன்னை மிஸ் பண்ண மாட்டேன்… அதுக்கு நீ சொன்ன மாதிரி என் திறமையைக் காட்டிதான் இம்ப்ரெஸ் பண்ணனும்னா அதுவும் பண்ணுவேன்… அதுக்கு தான் என்ன பண்ணி என்னை லவ் பண்ண வைக்கலாம்னு தீவிரமா திங்கிங்…” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

“ரொம்ப எல்லாம் திங்க் பண்ண வேண்டாம்… உங்க திறமையை பிசினஸ்ல காட்டுங்க, அது போதும்… இப்ப நான் என் காபினுக்குப் போகலாமா…?”

“தாராளமாப் போங்க பாரதீ… முதல்ல எனக்கு இதெல்லாம் ஸ்டடி பண்ணி முடிக்கணும்…” என்றவனுக்கு புன்னகையைப் பரிசாக்கி நகர்ந்தாள் பாரதி. அதற்குப் பின் அவன் அங்கிருந்து நகரவும் இல்லை, பாரதியை அழைக்கவும் இல்லை. படிக்கும்போது புரியாத விஷயங்களைத் தனியே நோட்ஸ் போட்டு குறித்துக் கொண்டான். சில விஷயங்களை கம்ப்யூட்டரைத் தட்டி தெரிந்து கொண்டான்.

எடுத்திருந்த வேலையை முடித்துவிட்டு மதிய உணவுக்கு தாமதமாய் சாப்பிட எழுந்த பாரதி, ரிஷி இன்னும் கிளம்பாமல் இருக்கவே அவன் அறைக்குள் நுழைந்தாள். அங்கே அவன் இருந்த நிலையைக் கண்டவள் கடுப்புடன் அவன் கையில் தட்டினாள்.

“ரிஷி, என்ன இது… பகல்ல இப்படித் தூங்கிட்டு இருக்கீங்க…? யாராச்சும் பார்த்தா உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க…?”

உயரமும், வசதியுமாய் இருந்த சுழல் நாற்காலியில் சுகமாய் கண்ணை மூடி உறங்கிக் கொண்டிருந்தவனை கேட்டாள்.

“ச..சாரி ரதி… நேத்து நைட் தூங்காம சினிமாப் பார்த்தேன்… ரொம்ப நேரம் பைலையே படிச்சிட்டு இருந்தனா, என்னை அறியாமலே தூங்கிட்டேன் போலருக்கு…”

“சரி, லஞ்ச் டைம் முடியப் போகுது, சாப்பிடப் போகலியா…?”

“அண்ணி இன்னும் கூப்பிடலை, வீட்டுல இருந்து இன்னும் லஞ்ச் வரலன்னு நினைக்கிறேன்…”

“அவங்க கெமிக்கல் பாக்டரிக்கு எப்பவோ கிளம்பிப் போயிட்டாங்களே, ஹரி சாரும் கூடப் போனார்…”

“ஓ… அண்ணி ஏற்பாடு பண்ணிருப்பாங்க, எங்க இருந்தாலும் என்னை யோசிப்பாங்க, அவங்க என் அம்மா மாதிரி…”

“சரி, அவங்களுக்கு கால் பண்ணி முதல்ல கேளுங்க…”

“இதோ கேக்கறேன், நீ சாப்பிட்டியா…?” என்றான்.

“இல்ல, இனிதான்… நீங்க கால் பண்ணுங்க…” என்றாள். ரிஷி அழைக்க, ஐந்தாறு ரிங் ஆனபிறகே கங்கா எடுத்தாள்.

“ஹலோ, சொல்லுடா ரிஷி… எப்ப வீட்டுக்குக் கிளம்பின…? உனக்குப் பிடிச்ச மெனுவா லஞ்சுக்கு செய்ய சொல்லிருந்தேனே, திவ்யமா சாப்பிட்டு ரெஸ்ட் எடு…!”

“அச்சோ அண்ணி, நான் ஆபீஸ்ல இருக்கேன்…”

“என்னது, ஆபீஸ்ல இருக்கியா…? நீ இன்னும் வீட்டுக்குக் கிளம்பலியா…?” என்றாள் அதிசயமும், அதிர்ச்சியுமாய்.

“போங்க அண்ணி, விளையாடறீங்களா…? நான்தான் இன்னைக்கு பொறுப்பெடுத்தாச்சே, எப்படி கிளம்புவேன்…”

ரிஷியின் கேள்வியில் திகைத்தாள் கங்கா. உண்மையில் ஒரு ஆர்வத்தில் அவன் ஆபீஸ் வந்திருந்தாலும் சிறிது நேரத்தில் கிளம்பி சென்றிருப்பான் என்றே நினைத்திருந்தாள்.

“அச்சோ, நீ வீட்டுக்குப் போயிருப்பேன்னு நினைச்சு நான் எனக்கும், உன் அண்ணாவுக்கும் லஞ்ச்சை கெமிக்கல் பாக்டரிக்கு கொண்டு வர சொல்லிட்டேன்… சாப்பிட்டு உன் அண்ணனுக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு கிளம்பிப் போயிட்டார், நான் ஹெட் ஆபீஸ் வர கிளம்பிட்டு இருக்கேன்…” கங்கா சொன்னதைக் கேட்ட ரிஷி,

“சரி அண்ணி, நீங்க வாங்க… நான் நம்ம ஆபீஸ் கான்டீன்ல சாப்பிட்டுக்கறேன்…” என்றான்.

Advertisement