Advertisement

ராணியின் நினைவுகள் கண்களுக்குள் கனவாய் விரிந்ததில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பாரதி.

“ராணி, ஏன் இப்படிப் பண்ண ராணி…? கடவுள் தந்த உயிரை மாய்ச்சுக்க உனக்கென்ன உரிமை இருக்கு… வாழ்க்கையை பேஸ் பண்ண தைரியம் இல்லாம இப்படி கோழையா செத்துப் போயிட்டியே…” கண் கலங்கினாள்.

சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து முகம் கழுவி தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாள். மனதுக்குள் ரிஷியின் முகம் தோன்றி கண்ணீருடன், “என் கால் ஊனத்தைக் காரணமா வச்சு என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே ரதி…” என்றது.

“நிச்சயம் மாட்டேன் ரிஷி, உங்களுக்குள்ள ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கு, அதை மாத்துவேன்… உங்களாலயும் எல்லாரையும் போல எல்லாம் செய்ய முடியும்கிற நம்பிக்கையை உங்களுக்குக் கொடுப்பேன்… சோர்ந்து துவண்டு கிடக்கிற உங்க வாழ்க்கையை சந்தோஷமா, உற்சாகமா மாத்துவேன்… இதெல்லாம் செய்த பிறகு தான் என் காதலை உங்களுக்கு சொல்லுவேன்… நம்பிக்கை இல்லாத எல்லாருமே ஊனம் உள்ளவங்க தான்… நம்மால முடியும்னு நினைச்சு இறங்கினா தான் சாதிக்க முடியும்… என் ரிஷியை நான் சாதிக்க வைப்பேன்…” மனதுக்குள் தீர்மானித்து கண்களை மூட சுகமாய் நித்திரை தழுவியது.

அடுத்தநாள் காலையில் அலுவலகம் சென்றதும் காத்திருந்த அலுவல்கள் அவளை இழுத்துக் கொண்டன. ஒவ்வொன்றாய் புரிந்து செய்வதற்கு நிறைய நேரம் எடுத்தது. ஆனாலும் அவளது வேகமும், திறமையும் ருக்மணியை ஆடிப் போக வைக்க கங்காவிடம் கூறினார்.

“அவளை கவனமா வாட்ச் பண்ணுங்க… தினமும் ஒன்பது மணிக்குக் குறைஞ்சு அவ வீட்டுக்குப் போகக் கூடாது… கம்பெனி கார் யூஸ் பண்ணிக்கட்டும், நல்ல சாப்பாடு, ஜூஸ், காபி எல்லாம் கொடுங்க, சோர்வடைய விட வேண்டாம்… இவ நமக்கு பெரிய மூலதனம்… புரியுதா…?”

“ம்ம்… சரி மேடம், நான் பார்த்துக்கறேன்…”

“ம்ம்… போங்க, அவ மூளையை எந்த அளவுக்கு யூஸ் பண்ணிக்க முடியுமோ, அவ்ளோ வேலையைக் கொடுங்க…”

ருக்மணி செல்ல சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்தவள் உள்ளே வந்த ரிஷியைக் கண்டதும் திகைத்து பின் புன்னகைத்தாள்.

“அட, என்ன ரிஷி… இந்த நேரத்துக்கு நீ பெட்டை விட்டு எழுந்திருச்சிருக்க மாட்டேன்னு நினைச்சேன்… நேத்து அடிச்ச சரக்கோட மப்பு தீர்ந்திருக்காதே…! விடியக் காலைல தான் வீட்டுக்கு வந்தன்னு செக்யூரிட்டி சொன்னார்… இன்னிக்கு இங்க வந்து நிக்கற…? எனக்கு முக்கியமான ஒரு வேலை இருந்ததால சீக்கிரமே கிளம்பி ஆபீஸ் வந்துட்டேன், உன்னைப் பார்க்க முடியல…?”

“ஐயோ அண்ணி, நேத்து சூர்யா வீட்டுக்குப் போயிட்டு  சினிமா பார்த்திட்டு கிளம்ப லேட் ஆகிடுச்சு, அங்கயே தூங்கிட்டோம்… மத்தபடி சரக்கெல்லாம் போடலை…”

“ஓ…! அப்படியா… சரி, நம்பிட்டேன்…”

“அட, நிஜமா தான் சொல்லறேன் அண்ணி… நேத்தே நான் பொறுப்பெடுத்துக்க கம்பெனிக்கு வரேன்னு சொல்லிட்டு,  காலைல வரலன்னு அண்ணன் ரொம்ப கோபப்பட்டார்… அதான், இன்னைக்கு நேரமாவே வந்துட்டேன்…”

“ஓ…! உன் அண்ணனைப் பார்த்துட்டு வந்தியா…?”

“இல்ல அண்ணி, அண்ணன் மார்க்கெட்டிங் செக்ஷன்ல இருக்கறதா சொன்னாங்க…”

“ம்ம்… இப்போதைக்கு மார்கெட்டிங் மேனேஜர் அடிக்கடி லீவு போடுறதால அங்கே தான் நாம அதிகம் கவனிக்க வேண்டிருக்கு, நீ அதை கவனிச்சுக்கறியா…?”

“நீங்க எந்த வேலை சொன்னாலும் சரி, அண்ணி…”

“சரி வா, உன் அண்ணனைப் பார்த்திட்டு வருவோம்…” சொன்னவள் எழுந்து கொள்ள ரிஷி தொடர்ந்தான்.

“பாரதி எந்த செக்ஷன்ல இருப்பான்னு தெரியலியே…” யோசித்துக் கொண்டே அண்ணியைத் தொடர்ந்தான்.

மார்கெட்டிங் செக்ஷனில் முன்னில் இருந்த பெரிய கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த கங்காவைத் தொடர்ந்து உள்ளே சென்ற ரிஷியின் விழிகள் பைலுக்குள் மூழ்கி இருந்த பாரதியைக் கண்டதும் சந்தோஷத்தில் விரிந்தது.

“அட, நம்ம ஆளு இங்க தான் இருக்காளா…? அண்ணி வேற என்னை இந்த செக்ஷனைப் பார்த்துக்க சொல்லுறாங்க… செம சான்ஸ் தான்…” மனதுக்குள் குதூகலித்தவன் அவளையே பார்த்துக் கொண்டு நடக்க அவளோ இவர்கள் வந்ததை கவனிக்காமல் வேலையில் மூழ்கி இருந்தாள். கங்கா அவளை கடுப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹரி இருந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கே ஹரியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க கெளதம் இவர்களைக் கண்டதும் புன்னகைத்து குட் மார்னிங் சொன்னான்.

“கெளதம், அந்த புதுப் பொண்ணை அஞ்சு நிமிஷம் கழிச்சு வர சொல்லுங்க…!” கங்கா சொல்ல தலையாட்டி நகர்ந்தான்.

“ஹாய் அண்ணா…” என்ற ரிஷியை நோக்கிப் புன்னகைத்த ஹரி, “பரவால்லியே, இன்னைக்கு ஐயா சீக்கிரம் ஆபீஸ் வந்துட்டிங்க… கங்கா, வெளிய வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குதான்னு பார்த்தியா…?”

“போங்க, புள்ளையைக் கிண்டல் பண்ணிட்டு… நீ உக்காருடா ரிஷி…” என்றவள் ஹரியின் அருகே சென்று நின்றாள்.

“அண்ணா, இப்பவும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலியா…? இனி நீங்களே, போதும் வேலை செய்தது… வீட்டுக்குப் போன்னு சொல்லுற அளவுக்கு ஆபீஸ்ல வேலை பார்க்கப் போறேன்… என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றவன் எழுந்து காலை சற்று மடக்கி, குனிந்து இருவரின் காலில் தொட திகைத்து வாழ்த்திய ஹரி எழுப்பி விட்டான்.

“நல்லாருடா ரிஷி, என்ன…? பொசுக்குன்னு இப்படி கால்ல விழுந்துட்ட… நீ பொறுப்பா நடந்துகிட்டா எங்களை விட யாரு சந்தோஷப்படப் போறா சொல்லு…”

“ஆமாண்ணே, அதான் என் அப்பா, அம்மா ஸ்தானத்துல இருக்கிற உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டேன்…” என்றதும் ஹரியின் மனம் நெகிழ, கங்கா அந்த சென்டிமென்ட் சீனை எரிச்சலுடன் பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு மாறாமல் பார்த்துக் கொண்டாள்.

“ஹரி, நம்ம ரிஷிக்கு மார்கெட்டிங்கைப் பார்த்துக்கற பொறுப்பு கொடுக்கலாம்னு நினைக்கிறேன், இங்க இப்ப சரியான ஆளு இல்லை… நீங்க என்ன நினைக்கறிங்க…”

“நீ சொன்னா சரியா தான் இருக்கும் மா… உன் புள்ளைக்கு என்ன திறமை இருக்குனு என்னை விட உனக்குத் தானே அதிகம் தெரியும்…” என சிரித்தான் ஹரி.

அதற்குள் கண்ணாடிக் கதவு தட்டப்பட்டு, பாரதியின் குரல், “மே ஐ கம்மின் சார்…” என அனுமதியை வேண்ட ரிஷியின் மனம் அவனைக் கண்டதும், அவள் திகைக்கும் காட்சிக்காய் காத்திருக்க முகத்தைக் காட்டாமல் அமைதியாய் ஹரிக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“எஸ், கம்மின்…” ஹரி குரல் கொடுக்க உள்ளே வந்தாள்.

“மேம், என்னை வர சொன்னிங்களாம்…”

“ம்ம்… உன் வொர்க் எல்லாம் எப்படிப் போகுது, கஷ்டமா இருக்கா, மேனேஜ் பண்ணிக்க முடியுமா…?” ஹரி அருகே  இருந்ததால் அடக்கியே வாசித்தாள் கங்கா.

ரிஷிக்கு பின்னில் நின்று பேசியதால் அவன் முகத்தைக் காணாத பாரதி, “வொர்க் கஷ்டமா இருந்தாலும் மேனேஜ் பண்ணிக்க முடியும் மேடம்… அதெல்லாம் பிராப்ளம் இல்லை, ஒவ்வொரு வொர்க் முடிஞ்சதும் நான் ருக்மணி மேடம் கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்கேன் மேடம்…”

“ம்ம்… குட்…”

“கங்கா, பாரதியைப் பத்தி என்ன நினைச்ச… ஷீ ஈஸ் வெரி பிரில்லியன்ட், அதோட வொர்க் கான்ஷியஸ் ரொம்ப அதிகம்… எந்த வேலைன்னாலும் சரியா பண்ணுவாங்க…”

“ம்ம்… எனக்கும் தெரியுங்க, இருந்தாலும் புதுசா வேலைக்கு சேர்ந்த பொண்ணு, வேலைல எதுவும் சிரமம் இருந்தா நாம சரி பண்ணிக் கொடுக்கணும்ல, அதுக்கு தான் கேட்டேன்…”

“ம்ம்… அதும் சரிதான்மா…”

“அப்புறம் பாரதி… இன்னைல இருந்து நம்ம ஜெஎம்டி மார்கெட்டிங்ல சார்ஜ் எடுத்துக்கப் போறார், நீதான் அவருக்கு அசிஸ்ட் பண்ணனும்… சரியா…?”

“சரி மேடம்…”

“மிஸ்டர் ஜேஎம்டி… பாரதி தான் உனக்கு அசிஸ்டன்ட், எந்த வேலையா இருந்தாலும் இவங்ககிட்ட சொல்லுங்க… என்னோட வாழ்த்துகள் டா படவா…” கங்கா சொல்ல,

“தேங்க்ஸ் அண்ணி, ஹலோ பாரதி…” என்றவன் திரும்ப ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் ஒன்றாய்த் தாக்கியது போல் அதிர்ந்து சிலையாய் நின்றாள் பாரதி. அதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அழகாய் புன்னகைத்தான் ரிஷி. அதற்குள் கங்காவுக்கு அலைபேசியில் அழைப்பு வர, “பார்த்துக்கங்க…” என்று வெளியே சென்றாள்.

“ரிஷி, இனி இந்த ரூமை நீ யூஸ் பண்ணிக்க… பாரதி, நீங்க ரெண்டு பேருமே மார்கெட்டிங்ல புதியவங்க… இப்போதைக்கு என்ன விஷயம்னாலும் என்னையோ, கெளதமையோ கன்சல்ட் பண்ணிக்கங்க… ரிஷி, என் தம்பி, கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை, இப்பதான் ஆபீஸ் பொறுப்பை எடுக்க வந்திருக்கான்… வேலை பிடிபட டைம் எடுக்கும், அதுவரை பொறுமையா கொஞ்சம் சப்போர்ட் பண்ணு மா…”

“ஓ..ஓகே சார்…” என்றாள் பாரதி சுதாரித்துக் கொண்டு.

“ஓகே, ஆல் தி பெஸ்ட் டா ரிஷி… உன் திறமையை மார்கெட்டிங்ல காட்டு…” சொன்ன ஹரியும் சென்றுவிட பாரதியின் கண்கள் இப்போது திகைப்பைப் பூசிக் கொண்டன.

மை பூசும் விழிகளில்

மையல் நான் கண்டேனே…

பொய் பேசா இதழ்களில்

புன்னகையைக் கண்டேனே…

கன்னக் குழி அழகனவன்

இதயத்தைக் கவர்ந்தானே…

கண்ணுக்குள் நின்று கொண்டு

காதலைத்தான் இசைத்தானே…

Advertisement