Advertisement

அத்தியாயம் – 15

தனது அறைக்கு வந்த பாரதி ஒரு குளியலைப் போட்டு வருவதற்குள் அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. வேகமாய் நைட்டிக்குள் நுழைந்து வெளியே வந்தவள் அலைபேசியை நோக்க வீட்டு எண்ணைக் காட்டியது.

“அச்சோ, அக்கா என்னைக் கூப்பிட்டு கிடைக்கலேன்னா பயந்திருப்பாளே…” யோசனையுடன் அவளே அழைத்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டு சக்தியின் பதட்டமான குரல் கேட்டது.

“ஹ…ஹலோ, பாரு…?”

“அக்கா, நாந்தான் பதறாதே…!”

“ஏண்டி இவ்ளோ லேட், நேரத்துல கூப்பிட்டப்ப சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க, இப்ப எடுக்க மாட்டிங்கற…”

“சாரிக்கா, வேலை பிஸில போனை ஆப் பண்ணிட்டேன், இப்ப நீ கூப்பிடும்போது பாத்ரூம்ல இருந்தேன்…”

“ஓ… வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையே…?”

“ஹாஹா, என்ன பிரச்சனை…? ஒண்ணும் இல்லக்கா…”

“ம்ம்… நான் பயந்திட்டேன்…! அம்மா வேற நீ பேசினியான்னு கேட்டுட்டே இருக்காங்க, தினமும் ஆபீஸ் விட்டு வந்ததும் உன்னைக் கால் பண்ணனும்னு சொல்லிருக்கேன்ல…”

“இப்ப நானே உன்னைக் கூப்பிடதான் வந்தேன், அதுக்குள்ள நீ கூப்பிட்ட… இன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம்க்கா, முடிச்சிட்டு ஹாஸ்டல் வர லேட்டாகிடுச்சு…”

“ஹூம், ரொம்ப சிரமமா இருக்கா பாரு…?”

“அதெல்லாம் இல்லக்கா, பழகிட்டா ஈசிதான்…”

“ம்ம்… நீ சாப்பிட்டியா… ?”

“ஹூம், மழைல செமப்பசி… நல்லா சாப்பிட்டேன்….”

“புது இடம், புது வேலை… பழகற வரைக்கும் சிரமமா தான் இருக்கும்… பொறுமையா, ஒண்ணுக்கு நாலு தடவை யோசிச்சு பண்ணு, சீக்கிரமே புலப்பட ஆரம்பிச்சிடும்…”

“ம்ம்… சரிக்கா, நீங்கள்லாம் சாப்பிட்டாச்சா…? மாமா வீட்டுக்கு வந்துட்டாரா…? நம்ம எட்டு லட்சுமி என்ன சொல்லுறாங்க…?”

“ம்ம்… எல்லாம் ஆச்சுடி, மாமாவும் நீ கால் பண்ணியான்னு கேட்டார், அத்தை தான் இப்ப என்னைக் கால் பண்ணிப் பார்க்க சொன்னாங்க…”

“ம்ம்… அத்தைக்கு திடீர்னு நம்ம மேல பாசம் பொங்குது…”

“அவங்க இயல்பா நல்லவங்க தான் பாரு… நமக்காக கொஞ்சம் செலவு அதிகமாகவும் மூஞ்சியைக் காட்டிட்டு இருந்தாங்க, இப்ப உன் சம்பளம் வரப் போகுதுன்னு தெரியும்ல, அதான் சரியாகிட்டாங்க…”

“ம்ம்… நீ சொல்லறதும் சரிதான்க்கா, அப்புறம் அத்தான் கால் பண்ணாரா…? திலகா அத்தை எதுவும் சொல்லலியே…?”

“நேத்து நைட் கால் பண்ணார்டி… அத்தைக்கு தான் கல்யாணத்துக்கு சீரெல்லாம் சரியாப் பண்ணுவமோன்னு கொஞ்சம் குறையாவே இருக்கும் போலருக்கு…”

“ம்ம்… பார்த்துக்கலாம்க்கா, நீ ஒண்ணும் கவலைப்படாத… அம்மாக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…?”

“அம்மா அப்படியே தான் இருக்காங்க, ஆனாலும் கொஞ்சம் நிம்மதியாருக்காங்க…” என்றாள் சக்தி.

“ம்ம்… சரிக்கா, நான் வச்சிடட்டுமா…? எல்லாரையும் கேட்டதா சொல்லு, அம்மாவை கவலைப்படாம இருக்க சொல்லு…”

“ம்ம்… அம்மாக்கு நீ தனியா அங்க கஷ்டப்படறது தான் கொஞ்சம் வருத்தமாருக்கு… ஆனாலும் உனக்கு வேலை முக்கியம், அதனால ஏதும் சொல்ல முடியலை… நீ உடம்பைப் பார்த்துக்க, பத்திரமா இரு….”

“சரிக்கா, உங்க பொண்ணைப் பத்தி யோசிச்சு கவலைப் படாதீங்க… நான் நேரத்துக்கு உங்க பாரதியைத் தூங்க வச்சு, சாப்பிட வச்சு, பத்திரமா பார்த்துக்கறேன்…” சிரித்துக் கொண்டே அவள் சொல்ல சக்தியும் சிரித்தாள்.

“உன் குறும்புப் பேச்சை நான் ரொம்ப மிஸ் பண்ணறேன்டி…”

“நானும் உன்னை சீக்கிரமே சத்யன் அத்தானுக்கு மிசஸ் பண்ணறேன், அப்பதான் நீ என்னை மிஸ் பண்ண மாட்ட…?”

“ஹஹா, குறும்பி… சரி, போயி தூங்கு, குட் நைட்…” எனவும் பதிலுக்கு குட்நைட் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

காலையிலிருந்து அன்று நடந்தது அத்தனையும் மனதுக்குள் ரீவைன்ட் செய்து பார்க்க அந்த நாளை மிகவும் நிறைவாகக் கடந்ததாகவே உணர நிம்மதியுடன் உறங்க சென்றாள்.

சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றாள்.

உடல் உறக்கத்தில் இருந்தாலும் உணர்வுகள் விழித்திருக்க, இதயமும், மூளையும் மட்டும் அதன் வேலைகளை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தது. மூளையில் உள்ள நரம்புகள் ஏற்கனவே நடந்த நிகழ்வு ஒன்றை மீண்டும் உயிர்ப்பித்துக் கனவாய் காட்சிப்படுத்த, அவளது இதழ்கள் ஏதோ முணுமுணுக்க, முகம் பயத்தில் சுழிந்து நெற்றியிலும், கழுத்திலும் பொடியாய் வியர்வை கசகசக்கத் தொடங்கியது.

“ர..ராணி…! நில்லு, சொன்னாக் கேளு…” பர்ஸ்ட் இயர் படிக்கும் பாரதி சிவப்பு சுரிதாரில், ஒரு பெண்ணைப் பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்தாள். நின்ற அப்பெண்ணின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“இல்ல பாரு, என்னைத் தடுக்காத… யாருக்கும் வேண்டாம எதுக்காக இந்த உயிரை சுமந்துட்டு இருக்கணும், எனக்கு வாழவே பிடிக்கலை…”

“அதுக்காக உயிரை விடுறது ஒண்ணு தான் வழியா… தற்கொலைங்கறது மிகப் பெரிய கோழைத்தனம்னு உனக்குத் தெரியாதா…? நம்ம வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நாமதான், மத்தவங்க இல்ல… முதல்ல அந்த பூச்சி மருந்து பாட்டிலைத் தூக்கிப் போடு…” தலைக்கு மேல் பாட்டிலை உயர்த்திப் பிடித்தபடி தொண்டைக்குள் சரித்துக் கொள்ள தயாராய் நின்ற தோழியை சமாதானப் படுத்தியபடி அவளை மெல்ல நெருங்கினாள் பாரதி.

“இல்ல, நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது, நான் பூமிக்கு வேண்டாத பாரம் தான்…”

“ப்ச்… அப்படி சொல்லாத ராணி… ஊனமா இருக்கிற எல்லாரும் உயிரை விட்டுட்டு தான் இருக்காங்களா, எத்தனையோ பேர் இந்த உலகத்துல தனக்கான பாதையைத் தேடிகிட்டு நல்லபடியா வாழலியா…?” அடுத்த அடியை எடுத்து வைத்தவள் சற்று நெருங்கியிருந்தாள்.

“வீட்டுல, வெளியில, உறவுல, பிரண்ட்ஸ் கிட்ட, ஸ்கூல்லன்னு எத்தனை அவமானப் பேச்சு… எங்க போனாலும், நொண்டிக்காலின்னு கிண்டலா கூப்பிடும்போது செத்துடலாம் போல இருக்கும்… எதுக்கு இந்த பிறப்புன்னு ஒவ்வொரு நாளும் கடவுள் கிட்ட சண்ட போட்டுட்டு இருக்கேன்… இனியும் என்னால இந்த குறையை ஏத்துகிட்டு வாழ முடியல… அப்பாவும், சித்தியும்தான் என்னைக் குறையாப் பார்க்கறாங்கன்னா என் அத்தான் கூட இப்படி என்னை ஏமாத்துவார்னு நினைக்கலை…” தேம்பினாள்.

சட்டென்று அவளை நெருங்கி கையிலுள்ள பாட்டிலை பாரதி தட்டி விட ராணி மேலும் அழத் தொடங்கினாள்.

“நான் பிறந்தப்ப எல்லாரையும் போல நல்லாத்தானே இருந்தேன்… அப்ப என் அம்மாவும் மாமாவும், எனக்கும் அத்தானுக்கும் பெருசானதும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணினாங்க… அப்புறம் எனக்கு நாலு வயசுல போலியோல கால் செயல்படாம போகவும் மாமாவுக்கு யோசனை ஆகிருச்சு, என் அம்மா இறந்ததும் அந்தப் பேச்சை எடுக்கறதே பிடிக்கல… ஆனாலும் அத்தான் என்கிட்ட அன்பா தானே பழகினார்… அவருக்காச்சும் என்னைப் பிடிக்குதேன்னு மனசைத் தேத்திகிட்டு இருந்தா, உனக்கு கால் நொண்டின்னு தான் பரிதாபப்பட்டு பழகினேன்… கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல, நான் என் மாமா பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு மனசாட்சி இல்லாம சொல்லிட்டார்… இதுக்கு மேல நான் எதுக்காக, யாருக்காக உயிரோட இருக்கணும்…”

“இருக்கணும் ராணி, யாருக்காக இல்லன்னாலும் நீ உனக்காக உயிரோட இருக்கணும், உண்மைல ஊனம் உனக்கில்லை… வார்த்தை சுத்தம் இல்லாத, சொன்னதை எப்படி வேணும்னாலும் மாத்திப் பேசுற அவங்க மனசுல தான் ஊனம்… அவங்க முன்னாடி நீ நிமிர்ந்து வாழ்ந்து காட்டனும்…! யாரும் உன்னைக் கொண்டாடலன்னாலும் நீ படிக்கிற படிப்பு உனக்கு உயர்வைத் தரும், வாழ்க்கைல வெற்றியைத் தேடித் தரும்… மனம் தளராம அதுல மட்டும் கவனத்தை வை…” பாரதி சொல்லவும் தாங்க முடியாமல் அவள் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள் ராணி.

“ராணி… போதும் அழுதது, வா… வீட்டுக்குப் போவோம்…” என்றவள் கைத்தாங்கலாய் தோழியைப் பிடித்துக் கொள்ள, தனது போலியோவால் சூம்பிப் போன, ரப்பராய் மரவித்திருந்த காலை இழுத்துக் கொண்டு கைக்கடியில் மரத்தடியை தாங்குக்குப் பிடித்துக் கொண்டு அழுதபடியே எழுந்து சிரமத்துடன் நடந்தாள் ராணி.

“ராணி, இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு, யாருக்காகவும் நாம, கடவுள் கொடுத்த வாழ்க்கையை அழிச்சுக்கக் கூடாது…”

“ம்ம்…”

அப்போது சம்மதித்தவள் அன்று இரவே மனதின் வலி தாங்காமல் கை நரம்பைக் கட் செய்து உயிரை மாய்த்துக் கொள்ள காலையில் விவரமறிந்து துடித்துப் போனாள் பாரதி.

“ராணீ…!” அலறியபடி தோழியின் வீட்டுக்கு சென்றவளுக்கு அவளது உயிரற்ற சடலம் தாங்க முடியா வேதனையைக் கொடுத்தது. மனிதனுக்கு மனிதன் தான் மிகப் பெரிய எதிரி… விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் பரிகசித்துக் கொள்வதில்லை, வார்த்தைகளால் புண்படுத்துவதில்லை… மனிதன் அறிவில் மட்டுமல்ல, அறிவீனத்திலும் மிக உயர்ந்தவன் என்று சிரிப்பது போல் தோன்றியது பாரதிக்கு.

எல்லாரின் கேலிப் பேச்சிலிருந்தும் விடுபட்டு வேறு உலகத்தில் நிம்மதி தேடி ராணி பயணப்பட்டுவிட்டாள். ஆனாலும் அவள் இறப்பின் வலி தந்த தடம் மட்டும் இன்னும் பாரதியின் மனதில் ஆறா ரணமாய் வலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்குப் பிறகு ஊனமுற்றோருக்கு வலிய சென்று உதவுவதோடு, அவர்களை ஊக்கப் படுத்தும் வகையில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்காய் அந்த மாதிரி இல்லங்களுக்கு செல்லத் தொடங்கினாள். அப்படி ஒன்றில் தான் ரிஷி அவளைப் பார்த்ததும்.

Advertisement