Advertisement

“ஹூம், அதுக்கில்ல ரதி… ஹாஸ்டல் சாப்பாடு நல்லாவே இருக்காதுன்னு தான் உனக்கு மெஸ்ல ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்டேன், நீ அதும் மறுத்துட்ட… என் உதவியை ஏத்துக்குறதுல உனக்கு என்ன தயக்கம்…?”

“நேத்துதான் நாம பிரண்ட்ஸ் ஆகிருக்கோம், அதுக்குள்ள உங்களை எதுக்கு சிரமப்படுத்தணும்னு தான்…” சொல்லிக் கொண்டே ரவா தோசைக்கு வந்திருந்தாள்.

“எனக்கென்ன சிரமம், உனக்கு ஹெல்ப் பண்ணறதுல எனக்கு சந்தோஷம் தான், நீ மறுக்கறது தான் கஷ்டமா இருக்கு”

“ஹூம்… நீங்க உதவி மட்டுமா செய்விங்க, உபத்திரவமும் சேர்ந்து தானே செய்விங்க…” என்றவள் நிதானத்துக்கு வந்திருந்ததால் பேச்சைத் தொடங்கினாள்.

“நான் என்ன உபத்திரவம் பண்ணினேன்… நேத்து நைட்டு போன்ல பேசினதுக்கப்புறம் உன் ஆபீஸ் டைம்ல கால் பண்ணி டிஸ்டர்ப் கூடப் பண்ணலியே…” என்றான் புரியாமல்.

“ஆனா, என்னைத் தேடி ஆபீஸ்க்கு வந்துட்டிங்களே…”

“ஆபீஸ்க்கா, நானா…? நாம நம்ம ஆபீஸ்க்கே போக மாட்டோம், இதுல இவ ஆபிஸ்க்குப் போனோம்னு சொல்லுறாளே…” யோசித்துக் கொண்டே பார்த்தான் ரிஷி.

“என்ன பேச்சைக் காணோம், காலைல எதுக்கு என் ஆபீசுக்கு வந்திங்க, என்னைப் பார்க்கத் தானே…?”

“உன்னைப் பார்க்கவா…?”

“பின்ன, எங்க எம்டியைப் பார்க்கவா வந்திருப்பிங்க…?” என்றவள் சட்டென்று சுதாரித்தாள்.

“நீங்க நிஜமா எதுக்கு ஆபீஸுக்கு வந்திங்க, ரிஷி…?”

“நான் எங்கயும் வரலியே…! நீ எந்த கம்பெனில வொர்க் பண்ணறன்னு கூட எனக்குத் தெரியாதே…?”

“என்ன சொல்லறீங்க..? அப்ப காலைல நான் பார்த்தது உங்க டூப்பயா…? விளையாடாம உண்மையைச் சொல்லுங்க…”

“இரு, இரு… நீ எந்த கம்பெனில வொர்க் பண்ணற…?”

“காலைல ஆபீஸ் வந்துட்டு தெரியாத மாதிரி கேக்கறிங்க… நல்லவேளை, ரிசப்ஷன்ல என்னைத் தெரியாத பொண்ணு இருந்ததால தப்பிச்சேன், இல்லன்னா நேத்து வேலைக்கு சேர்ந்த என்னைப் பார்க்க விசிட்டர் வந்தா நல்லாருக்குமா…?”

அவள் சொல்வதைக் கேட்டவன் மனம் எதையோ கணக்குப் போட உள்ளுக்குள் சட்டென்று ஒரு ஊதாப்பூ மலர்ந்தது.

“ர..தி… நீ அன்னை குரூப் ஆப் கம்பெனிஸ்ல தான் வொர்க் பண்ணறியா…?” என்றான் மலர்ச்சியுடன்.

“ஹூக்கும், என்னைத் தேடி ஆபீஸ்க்கு வந்துட்டு இப்ப தெரியாத மாதிரியே கேளுங்க…”

“இல்லமா, நான் உன்னைப் பார்க்க வரலை… எனக்கு நீ அங்க வொர்க் பண்ணறதும் தெரியாது…”

“பின்ன, எதுக்கு வந்திங்க…? எங்க எம்டியைப் பார்க்கவா…?”

“ம்ம்… ஆ..ஆமா… எம்டியைப் பார்க்க தான் வந்தேன்…”

“ப்ச், அப்ப நானாதான் சொல்லிட்டனா…?”

“ஆமா, எனிவே தேங்க்ஸ்… நாளைக்கு உன்னைப் பார்க்கவே உன் ஆபீஸுக்கு வர்றேன்…”

“அய்யய்யோ வேணாம், வேணாம்… அப்படி மட்டும் பண்ணினா அப்புறம் நான் உங்க பிரண்ட்ஷிப்பே வேண்டாம்கற முடிவுக்கு வர வேண்டி வரும்…”

“ஐயையோ, அப்படி எதுவும் பண்ணிடாதம்மா… நான் உன் ஆபீஸ் பக்கமே தல வச்சுப் படுக்கல, போதுமா…?”

“ஹூம்… இந்த பயம் எனக்குப் பிடிச்சிருக்கு…” சொல்லிக் கொண்டே அவள் சிரிக்க ரிஷியும் வாய்விட்டு சிரித்தான். வழக்கம் போல் அவன் கன்னக்குழியின் வசீகரத்தில் தனை மறக்கத் தொடங்கிய பாரதி சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டு சாப்பிடுவதில் மும்முரமானாள்.

“சீக்கிரம் சாப்பிடுங்க, ஹாஸ்டல் கேட் பூட்டிடுவாங்க…”

சொன்னவள் ஆவி பறக்கும் காபியை குடிக்கத் தொடங்க பாரதியின் அலைபேசி சிணுங்கி டிஸ்பிளேயில் வான்மதியின் எண்ணைக் காட்டியது.

“ஐயையோ, வானு கூப்பிடறா… உஸ்ஸ், கொஞ்ச நேரம் பேசிடாதீங்க…” உதட்டில் ஒரு விரலை வைத்து ரிஷியிடம் சொன்னவள் அலைபேசியை காதுக்குக் கொடுத்தாள். தன்னிடம் பழைய இறுக்கம் மறைந்து பாரதி குழந்தை போல் பேசி சண்டை போடுவதை ரசித்துக் கொண்டே புன்னகையுடன் காபி குடிக்கத் தொடங்கினான் ரிஷி.

“நாளைக்கு ஆபீஸுக்குப் போயி நான்தான் உங்க கம்பெனி ஜேஎம்டி ன்னு சொன்னா இவ எப்படி முழிப்பா…? ஆஹா, அந்தப் பெரிய கண்ணை உருட்டி முழிக்கிறதைப் பார்க்கணும் போலருக்கே… நாளைக்கே ஷாக்கைக் கொடுத்துட வேண்டியது தான்…” மனதுக்குள் நினைத்துக் கொண்ட ரிஷி அவள் பேசுவதை கவனித்தான்.

“ஹலோ, சொல்லு வானு…”

“என்னடி, வேலைக்குப் போயி ஜாயின் பண்ணதும் எனக்கு போன் பண்ணக் கூட நேரமில்லையா…? என்ன அங்க கசகசன்னு சத்தம், நீ எங்க இருக்க…? ஹாஸ்டல் வரலயா…?”

“இல்லடி வானு, இங்கே நல்ல மழை… அதான் பிரண்டோட ஹோட்டல்ல சாப்பிட வந்தேன், இப்ப கிளம்பிட்டேன்…”

“பிரண்டோடவா… அது யாருடி, நேத்து சொன்ன கெளதமா…?”

“அதெல்லாம் அப்புறம் விவரமா சொல்லறேன்… இப்ப மழை கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு, நான் ஹாஸ்டலுக்குப் போறேன்… அப்புறம் ப்ரீயாப் பேசலாம்…”

“ஹூம்… பார்த்து பத்திரமாப் போ, தனியா டாக்ஸில போகாத… ராத்திரி நேரம், கவனம்டி…”

வான்மதி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்தாள் பாரதி.

“சரிடி, நான் வந்து கூப்பிடறேன், பைடி…” என வைத்தாள்.

“என்ன…? பாரதிக்கு வான்மதின்னா பயம் போலருக்கு…”

“பயம் இல்ல, இவ்ளோ நாளா அவகிட்ட நான் எதையுமே மறைச்சது கிடையாது… உங்களோட பேச வேண்டாம்னு அவ சொல்லியும் இப்ப பிரண்டாகிட்டேன்… இதை சொன்னா திட்டுவா, அதான் சொல்லலை… ஆனா கஷ்டமாருக்கு…”

“ஓ… அப்ப அவங்கதான் நம்ம காதலுக்கு எதிரியா…?”

“என்னது காதலா…?”

“இ..இல்ல, நட்புக்கு எதிரியான்னு கேக்க வந்தேன்…”

“ஹூக்கும்… டைம் ஆச்சு, கிளம்பலாமா…?” அவள் கேட்க எழுந்தான். பில்லை கொடுத்துவிட்டு காருக்கு வந்தனர்.

“இப்பவாச்சும் மேடம் ஹாஸ்டல் பேரு சொல்லுவீங்களா…?” ரிஷி கிண்டலாய் சிரித்துக் கொண்டே கேட்க, “ஏஞ்சல் ஹாஸ்டல்…” என்றாள் புன்னகையுடன்.

“ஓ… பத்மினிக்கா வார்டனா இருக்கே, அந்த ஹாஸ்டலா…?”

“ஹூம்… லேடீஸ் ஹாஸ்டல் பத்தி எல்லாம் நல்லாத் தெரிஞ்சு வச்சிருப்பீங்களே…” என்றாள் முறைப்புடன்.

“அட, அதில்லமா, அவங்க நம்ம சூர்யாவோட அக்கா தான்…”

“சூர்யாவோட அக்காவா…?” என்றாள் திகைப்புடன்.

“அவனோட பெரியம்மா பொண்ணு, அவங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்ததே நான்தான், ரொம்ப நல்ல டைப்…”

“ம்ம்… பரவால்ல, கொஞ்சம் நல்லவராத்தான் இருக்கீங்க…”

“ஹாஹா… கொஞ்சம் தானா…? என்னை முழுசா நல்லவன்னு எப்ப ஒத்துக்குவ…?”

“குணத்தில் குத்தமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப் படலாம்… பழக்க வழக்கத்தில் தான் குற்றம் இருக்கிறது…” அவள் நக்கீரர் பாணியில் சொல்ல சிரித்தான் ரிஷி.

“அப்படி என்ன குற்றம் கண்டீர், நக்கீரரே…?”

“குடி, குடியைக் கெடுக்கும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவரா நீர்… அது என்ன அத்தியாவசியப் பொருளா, அவ்வப்போது வாய்க்குள் தள்ளிக் கொள்ள… மெல்லக் கொல்லும் விஷம் என்பது புரியாதோ உமக்கு…”

“ம்ம்… தப்புதான், எனக்கும் தெரியுது…”

“பிறகென்ன, அதை விட்டுத் தொலைக்கலாமே…”

“ம்ம்… எப்ப நீ என்னை பிரண்டா ஏத்துகிட்டயோ, இனி குடிக்க வேண்டாம்கற முடிவுக்கு வந்துட்டேன்… இனியாச்சும், பொறுப்பா, உனக்குப் பிடிச்ச போல ஒரு மனுஷனா வாழணும்னு நினைக்கிறேன்… நீ என்னை விட்டுட்டுப் போயிட மாட்ட தானே ரதி…” மனதில் உள்ள வலி முழுவதையும் குரலில் தேக்கிக் கேட்டான் ரிஷி.

“ரிஷி… என்ன இது… எதுக்குக் கலங்கறிங்க, நான் எப்பவும் உங்களுக்கு நல்ல பிரண்டா இருப்பேன்…”

“பிரண்டா மட்டும் தானா, வேற ஆப்ஷனே இல்லையா…?” அவன் பாவமாய் முகத்தை வைத்துக் கேட்க முறைத்தாள்.

“அப்படின்னு சொல்ல முடியாது, இப்பத் தோணலை…”

“எப்பத் தோணும்…?” அவன் விடாமல் கேட்க, அவனையே பார்த்தவள் நிதானமாய் சொன்னாள்.

“தெரியலை ரிஷி, இப்போதைக்கு எனக்கு நிறைய கடமைகள் இருக்கு, அதெல்லாம் முடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகும்போது உங்களை யோசிக்கறேன்… அப்ப இந்த லவ் பீல் எதாச்சும் தோணுச்சுன்னா சொல்லறேன், இப்ப என்னால காதலை யோசிக்க முடியாது…” என்றாள் தீர்மானமாக.

“ம்ம்… இது போதும்…” என்றவன், ஹாஸ்டல் வந்திருக்க காரை நிறுத்தினான்.

இறங்கியவள் அவனிடம் வந்து, “தேங்க்ஸ் ரிஷி… நான் சொல்லாமலே என் பசியறிஞ்சு சாப்பாடு வாங்கித் தந்ததுக்கு…” என்று சொல்ல அழகாய் புன்னகைத்தவன் கையசைத்துக் கிளம்பினான்.

மழையில் குளித்து சில்லிட்டிருந்த முன்கேட்டைத் திறந்து உள்ளே சென்ற பாரதியின் மனமும் குளிர்ந்திருந்தது.

“ரிஷி, நீ எப்பவோ எனக்குள்ள வந்துட்ட… உன்னோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் அப்பாவோட கையைப் பிடிச்சிட்டு இருக்கிற போல பாதுகாப்பா உணர்றேன்… ஆனா என் காதலை சொல்லறதுக்கான சமயம் இன்னும் வரலை… வரும்போது நீ ஆசைப்பட்ட போல நிச்சயம் சொல்லுவேன், அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு…” என மனதுக்குள் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள்.

பிரசவிக்க தவிக்கும்

பிள்ளையைப் பிடித்து

வைக்கும் வலிக்கு நிகரானது…

பிடித்தத்தை சொல்ல

முடியாமல் ஒளித்து

வைக்கும் காதல்…

Advertisement