Advertisement

அத்தியாயம் – 14

அன்று மாலை பாரதி ஆபீசிலிருந்து வேலை முடிந்து கிளம்ப எட்டு மணி ஆகிவிட்டது. ஸ்டாப்ஸ் எல்லாரும் கிளம்பியிருக்க, ருக்மணியும் வேறு ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் அன்று முடித்த வேலைகளை சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள். உடல் சோர்வாக இருந்தாலும் மனதுக்குள் புரியாத புதிய வேலைகளை செய்து முடித்த உற்சாகம் இருந்தது.

பாகை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் வேலை நேரத்தில் ஆப் ஆக்கி வைத்திருந்த போனை ஆன் செய்தாள். வீட்டு லான்ட்லைன் நம்பரும், ரிஷியின் நம்பரும் மிஸ்டு காலில் இருக்க, அதுவரை ரிஷியை மறந்திருந்தவள் மனம் மீண்டும் அவனை நினைத்து சுணங்கிக் கொண்டது.

“லூஸு ரிஷி, இவர் என்கிட்ட பிரண்டா இருக்கலாம்னு கேட்டப்ப நான் வேண்டாம்னு மறுத்திருக்கணுமோ… அந்த உரிமைல தான் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துகிட்டு ஆபீசுக்கு என்னைத் தேடி வர்றதும், நினைச்ச நேரம் போன் பண்ணறதுமா இருக்காரா… ஹாஸ்டலுக்குப் போனதும் கூப்பிட்டு நல்லா டோஸ் விடணும், அப்பதான் இனி இப்படிப் பண்ணாம இருப்பார்…” யோசித்தபடி வேகமாய் பேருந்து நிலையத்துக்கு நடக்க, நன்றாய் இருட்டி இருந்தது.

மழை வருவதற்கு அறிகுறியாய் குளிர்ந்த காற்று வீச, வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் விடுப்பு எடுத்திருந்தன. சட்டென்று முழங்கிய இடியோடு ஒளிக் கீற்றலாய் மின்னித் தெளிந்த மின்னலைக் கண்டு அச்சத்துடன் நடந்தாள்.

“கடவுளே, மழை வரும் போலருக்கே… என்கிட்ட குடையும் இல்லை, சீக்கிரம் பஸ் வந்துட்டாப் பரவாயில்லை…” என யோசிக்கும்போதே மின்சாரம் வேலை நிறுத்தம் செய்து எங்கும் இருட்டைப் போர்த்திக் கொண்டது. சில யூபிஎஸ் வெளிச்சமும், கடந்து சென்ற வாகனங்களின் வெளிச்சமும் மட்டுமே அவ்வப்போது சிறிது இருட்டை விரட்டின.

கவலையுடன் மொபைலில் டைம் பார்த்து சாலையில் பஸ் வருகிறதா என பதைப்புடன் நின்று கொண்டிருந்தவளின் அருகே சட்டென்று இரு வெளிச்சப் புள்ளிகள் உற்பத்தியாகி அருகே வர யாரென்று பார்த்தவள் திகைத்தாள்.

“ரிஷி…! இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறார்…?”

“ரதி, ஏன் இவ்ளோ லேட்…? வண்டில ஏறு, நான் உன்னை ஹாஸ்டல்ல டிராப் பண்ணிடறேன்…”

“இ..இல்ல, நான் பஸ்க்கு வெயிட் பண்ணறேன், நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்ணறீங்க…?”

“பக்கத்துல ஒரு பிரண்டைப் பார்க்க வந்தேன்… வழியில மரம் முறிஞ்சு விழுந்திருக்கு, இப்போதைக்கு பஸ் வராதுன்னு சொன்னாங்க… அதான், உனக்கு கால் பண்ணி கிளம்பிட்டியானு கேக்கலாம்னு பார்த்தா சுவிட்ச் ஆப் வந்துச்சு, எதுக்கும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்றவனின் பதிலில் திகைத்தாள் அவள்.

அவன் சொன்னதைக் கேட்ட அருகே நின்ற பெண்மணி ஒருவர், “ஐயோ…! அப்ப பஸ் இப்போதைக்கு வராதா தம்பி, மழை வரும் போலருக்கு… எப்படி ஊட்டுக்குப் போறது…?” எனக் கவலையுடன் புலம்பத் தொடங்கினார்.

உடனே பாரதி, “கவலைப்படாதீங்க மா, சார் உங்களை டிராப் பண்ணுவார்…” என்று சொல்லி நக்கலாய் ரிஷியைப் பார்க்க அவன் அதிர்ச்சியுடன் அவளை முறைத்தான்.

“கோடி புண்ணியமாப் போகும் தம்பி… வீட்டுல புள்ளைங்க எனைக் காணாம பயந்துட்டு இருக்கும்… எனக்கு அடுத்த ஸ்டாப் தான், கொஞ்சம் இறக்கி விட்டுடறிங்களா…?” அவர் பாவமாய் கேட்க ரிஷிக்கு மறுக்கத் தோன்றவில்லை. சரியாய் அப்போது மழைத் துளிகளும் சடசடவென்று விழத் தொடங்க “ஏறுங்கமா, இறக்கி விடறேன்…” என்றான்.

அப்பெண்மணி வேகமாய் கார்க்கதவைத் திறந்து பின்னில் ஏறிக் கொண்டு, “என்ன கண்ணு…? இன்னும் தயங்கிட்டு நிக்கற… மழை வலுக்க முன்ன வீடு போயி சேர வேண்டாமா…? தம்பி உனக்குத் தெரிஞ்சவர் தான, சீக்கிரம் வா  மா…” என அவளையும் அழைக்க, “ஏறு ரதி…” என்றான் ரிஷி கெஞ்சலாக. அதற்கு மேல் மறுக்க மனமின்றி காரில் ஏறிக்கொள்ள காரை எடுத்தான்.

“கடவுள் தான் நல்ல நேரத்துக்கு உங்களை அனுப்பிருக்கார் தம்பி… என் புருஷன் உடம்புக்கு முடியாம வீட்டுல கிடக்குறார், நான் வேலை பாக்குற இடத்துல போயி பணத்தை வாங்கி மருந்து வாங்கிட்டு வரேன்…” அப்பெண்மணி தனது கவலையைப் புலம்பிக் கொண்டிருக்க, ஐந்து நிமிடப் பயணத்தில் அவர் சொன்ன வீட்டுக்கு முன் காரை நிறுத்தினான் ரிஷி. அதற்குள் மழை வலுக்கத் தொடங்கியிருக்க நன்றி சொல்லி இறங்கிக் கொண்டார்.

மதியம் சரியாய் உண்ணாததும், வேலையின் அலுப்புடன் மழையும் சேர்ந்து கொள்ள அதிகமாய்ப் பசிக்கத் தொடங்கியதில் சோர்ந்து அமர்ந்திருந்தாள் பாரதி.

“ரதி, என்ன ஒண்ணும் பேச மாட்டிங்கற…? உன் ஹாஸ்டல் அடுத்த ஸ்டாப் தானே…?” ரிஷி கேட்க, “ம்ம்…” என்றாள்.

அவளைக் கண்ணாடியில் பார்த்தவன், “ரொம்ப சோர்வாத் தெரியற, பசிக்குதா…?” என்றதும் திகைப்புடன் பார்த்தாள்.

“இவன் என்ன..? அம்மா, அக்காவைப் போல என் முகத்தைப் பார்த்தே பசியைக் கண்டு பிடிக்கிறான்…” நினைத்தவள் அமைதியாய் இருக்க, அவனே பேசினான்.

“இன்னைக்கு ரொம்ப லேட்டாயிருச்சா, ஆபீஸ்ல…”

“ம்ம்…”

“நீ தப்பா நினைக்கலன்னா ஒண்ணு சொல்லட்டுமா…?”

பசியின் களைப்பில் சோர்ந்திருந்தவளுக்கு அவனிடம் கோபமாய் திட்ட நினைத்தது கூட மறந்திருந்தது.

“என்ன…?”

“எனக்கு ரொம்பப் பசிக்குது, தனியா ஹோட்டலுக்குப் போயி பழக்கம் இல்ல, டின்னருக்கு நீ கம்பெனி தர முடியுமா…?”

“ஹூம், என் பசியை அவன் பசியாக சொல்லுகிறான் கள்ளன்…” என யோசிக்கையில் சிரிப்பு வந்தாலும் அவளுக்கு உடனே சாப்பிடாவிட்டால் மயக்கமே வந்துவிடும் போல இருக்கவே பிகு செய்யாமல் சம்மதித்தாள்.

அப்படியே அவன் ஆபீஸ் வந்ததைப் பற்றியும் கேட்டு நல்ல டோஸ் கொடுக்க தீர்மானித்துக் கொண்டாள்.

அவள் சம்மதித்த குஷியில் ரிஷியின் முகம் மலர, “தேங்க்ஸ் ரதி…” என்றவன் உற்சாகமாய் அடுத்து வந்த மத்திய தர ஹோட்டல் ஒன்றுக்குள் காரை நுழைத்தான்.

பாரதி முதலில் இறங்கியதும் ரிஷி காரை ஓரமாய் பார்க் செய்து வர அவன் வரும் வரை அங்கேயே காத்திருந்தாள்.

“வா ரதி…” சொன்னவன் சந்தோஷமாய் காலை இழுத்தபடி முன்னே நடக்க அவனைத் தொடர்ந்தாள் பாரதி.

சாதாரணமாய் சாப்பிட வந்தவர்களோடு, மழைக்கு ஒதுங்கியவர்களும் சாப்பிட அமர்ந்திருக்க ஹோட்டலில் கூட்டம் இருந்தது. ஒரு மேஜையில் மட்டும் சுற்றிலும் போடப்பட்டிருந்த நான்கு நாற்காலியில் இரண்டில் ஆள் இருக்க, அருகருகே இருந்த இரண்டு நாற்காலி மட்டுமே காலியாய் இருந்தது. அவர்கள் அமராமல் தயங்கி நிற்க, ஹோட்டல் சிப்பந்தி அவர்கள் அருகே வந்து, “இங்க உக்காருங்க சார்…” என்று காட்ட ரிஷி பாரதியைப் பார்த்தான்.

அவள் கண்ணாலேயே சம்மதம் சொல்ல இருவரும் அமர்ந்தனர். அவர்களுக்கு முன்னில் ஒரு கணவன் மனைவி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“ரதி, என்ன சாப்பிடற…?”  ரிஷி கேட்கவும் நிமிர்ந்தவள், “எனக்கு சிம்பிளா போதும், நீங்க சாப்பிடுங்க…” என்றாள்.

ஆர்டர் எடுக்க வந்தவரிடம், “ரெண்டு பேருக்கும் ரவா தோசை, சோலாப்பூரி, காபி, முதல்ல சாம்பார் இட்லி கொண்டு வாங்க…” என சொல்ல அவர் நகர்ந்தார்.

“ரதி, ஓகே தானே…” என்றதும் புன்னகைத்தாள். அனைத்துக் அவளுக்குப் பிடித்த அயிட்டங்கள் ஆயிற்றே. அவனுக்கு அருகில் அமர்ந்திருந்ததால் ஒரு வித அவஸ்தையுடனே அமர்ந்திருந்தாள் பாரதி. அதை கவனித்த ரிஷி முடிந்த வரை விலகி அமர்ந்திருந்தான். அதை பாரதியும் கவனித்திருக்க, மனதுக்குள் அவனுக்கு ஒரு சபாஷ் சொல்லிக் கொண்டாள்.

இவர்களுக்கு சாம்பார் இட்லி வரும்போது முன்னிலிருந்த தம்பதியர் சாப்பிட்டு முடித்திருக்க, ரிஷி எழுந்து அவளுக்கு எதிரில் சென்று அமர்ந்து கொண்டான்.

“இனி நிம்மதியா சாப்பிடு…” என்றதும் சின்னப் புன்னகையை பரிசளித்து சூடான சாம்பார் இட்லியை ஸ்பூனில் எடுத்து வாய்க்குள் விழுங்கத் தொடங்கினாள். வயிற்றின் பசி சுற்றுச் சூழல் எதையும் யோசிக்க விடவில்லை.

அவள் சாப்பிடும் வேகத்தைக் கண்ட ரிஷி, “ரதி… மெதுவா சாப்பிடு, இட்லி விக்கிக்கப் போகுது…” எனவும் சற்று நிதானித்தவள் மெல்ல சாப்பிடத் தொடங்கினாள்.

“இவ்ளோ பசியை வச்சிட்டு உக்கார்ந்திருக்க… உன் ஆபீஸ்ல இத்தனை நேரம் வேலை மட்டும் வாங்குறாங்க, சாப்பிட எதுவும் வாங்கித் தர மாட்டாங்களா…?” என்றான் அவனும் சாப்பிட்டுக் கொண்டே.

“நேத்து தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன், அதுக்குள்ள என்னை உக்காரவச்சு சோறு போட அதென்ன என் மாமனார் வீட்டுக் கம்பெனியா…?” கேட்டுக்கொண்டே விழுங்கினாள்.

Advertisement