கங்கா ரிஷியிடம் பேசிவிட்டு தங்கள் அறைக்கு வரும்போது ஹரி மெல்லிய குறட்டையுடன் உறங்கியிருந்தான். அவனை எரிச்சலுடன் பார்த்தவள், மேஜை மீதிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டாள்.
“ச்சே… இந்த ரிஷியை இத்தனை நாளா நம்ம கைக்குள்ள வச்சிருந்தோம்… இப்ப அவன் யோசிக்கிறதும், பேசறதும் பார்த்தா கை விட்டுப் போயிருவான் போலருக்கே… வாழ்நாள் முழுதும் தண்ணியப் போட்டு, ஊரு சுத்தி பொழுதைக் போக்கிடுவான்னு நினைச்சா இப்ப ஆபீஸ் வரேன்னு சொல்லறான், இது சரியான தொடக்கமாத் தோணலியே…” யோசித்தவளின் முகம் வெறுப்பைக் காட்டியது.
“ஏதோ பொண்ணுகிட்ட கமிட் ஆன போல சொன்னானே, யாரு அந்தப் பொண்ணு…? ஒருவேளை, அவளுக்காகதான் தன்னை மாத்திக்க நினைக்கிறானோ…” புகைந்தாள்.
“யோசி கங்கா, யோசி…! இல்ல, அதுக்கெல்லாம் விடக் கூடாது… இந்த சாம்ராஜ்யத்துக்கு நான் மட்டும் தான் மகாராணியா இருக்கணும்… இந்த ரிஷியும், அவன் பொண்டாட்டியா வர்ற பொண்ணும் எனக்கு அடிமையா தான் இருக்கணும், அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசி…” தன் கூனி புத்தியை தட்டி விட்டுக் கொண்டாள்.
“இப்பவும் அந்தக் குருடன் என்னை அம்மா போல தான் நினைக்கிறான்… இந்த நினைப்பு மாறுறதுக்கு முன்னாடி அவனை நம்ம வழிக்கு கொண்டு வந்தாகணும்… அவன் லவ் பண்ணுறது பணக்கார வீட்டுப் பொண்ணா இருந்துட்டா கஷ்டம், அது கன்பர்ம் ஆகறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்… நம்ம பேச்சைக் கேக்குற ஒரு அழகான ஏழைப் பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா, புதுப் பொண்டாட்டி மோகத்துல இவனை வீட்டுலயே கொஞ்ச நாள் முடக்கிக் போட்டுடலாம்…” யோசனையுடனே படுக்கையில் சாய்ந்தாள் கங்கா.
மறுநாள் காலையில் ஹரி டிபன் சாப்பிட அமர கங்கா அவன் தட்டில் இட்லி, கிச்சடியுடன் சட்னி வைத்தாள்.
“என்ன கங்கா, உன் வளர்ப்புப் புத்திரன் நேத்து அவ்ளோ சீரியஸா ஆபீஸ் வரேன், பொறுப்பு எடுத்துக்கறேன்னு எல்லாம் சொன்னான், இப்ப ஆளைக் காணோம்…! வழக்கம் போல இழுத்துப் போத்திட்டு தூங்கறானா…?”
“காலைலயே குழந்தைய ஒண்ணும் சொல்லாம சாப்பிட்டு கிளம்பற வழியைப் பாருங்க… அவன் நேத்து ஏதோ திடீர் ஞானோதயத்துல சொல்லிருப்பான்… சின்னப் பையன், தூங்கட்டும் விடுங்க…” சொன்ன கங்கா அவன் தட்டில் மேலும் ஒரு இட்லியை வைத்தாள்.
“ஹூம்… நீ இப்படி சின்னப் பையன்னு சொல்லி கொஞ்சிட்டே இரு… ஏதோ புத்தி வந்து யோசிக்கிறான்னு நினைச்சேன், அப்படி இல்லைன்னு காட்டிட்டான்…”
ஹரி சற்று கோபத்துடன் சொல்லிவிட்டு பாதி டிபனில் எழுந்து கொள்ள கங்காவுக்கு கோபமாய் வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
வேலைக்கு வந்த பெண் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க அவளிடம் பிளேட்டைக் கொடுத்துவிட்டு புதிதாய் இறக்கிய டிக்காஷனில் பில்டர் காபி கலந்து எடுத்துக் கொண்டு ரிஷியின் அறைக்கு சென்றாள்.
வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்து உள்ளே செல்ல இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான் ரிஷி. போர்வையை விலக்கி கோப்பையை அவன் நாசியருகே கொண்டு செல்ல மணத்தை இழுத்தபடி கண் திறந்தான்.
“ஹூம்… குட்மார்னிங் அண்ணி, காபி ஸ்மெல் தூக்குது…”
“ம்ம்… இந்தா, சூடா காபி குடி…” என்றவள் ஓரமாய் இருந்த டீப்பாய் மேல் காபிக் கோப்பையை வைத்தாள்.
“ஒரே நிமிஷம் அண்ணி…” என்றவன் பாத்ரூமுக்குள் சென்றுவிட்டு சீக்கிரமே வந்தான்.
“என்ன வாயைக் கொப்பளிச்சுட்டு வந்துட்டியா… டர்ட்டி பாய், எவ்ளோ டைம் சொன்னாலும் பல்லு விளக்கிட்டு காபி குடிக்கிறதில்லை…” செல்லமாய் கடிந்து கொண்டே காபியை எடுத்து நீட்ட சிரித்துக் கொண்டே வாங்கி குடித்தான் ரிஷி.
“தேங்க்ஸ் அண்ணி…”
“ஆமா ரிஷி, நேத்து என்ன உலக அதிசயமா தண்ணி அடிக்காம வீட்டுக்கு வந்திருக்க…”
“சும்மாதான் அண்ணி, வேண்டாம்னு தோணுச்சு…”
“உன் அக்கவுண்டுக்கு அம்பதாயிரம் ரூபாய் டிரான்ஸ்பர் பண்ணிருக்கேன், இந்த மாச செலவுக்கு போதும் தானே…”
“வாவ், சூப்பர் அண்ணி… நான் கேக்காமலே எனக்கு வேண்டியதைப் பார்த்துப் பண்ணறீங்க பாருங்க… கிரேட்..! டைம் என்ன ஆச்சு…” கேட்டவன் சுவரில் கண்ணைப் பதித்துவிட்டு அதிர்ந்தான்.
“ஓ காட், இட்ஸ் கெட்டிங் லேட்… என்னை நேரமா எழுப்பி விட சொல்லி இருந்தனே அண்ணி… இன்னைக்கு ஆபீஸ் போகணும்ல, அண்ணா என்ன நினைப்பார்…”
“ம்… அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும் ரிஷி…”
“என்ன பேசணும், சீக்கிரம் சொல்லுங்க… அண்ணி…!”
“ரிஷி… நான் இப்படிப் பேசறேன்னு தப்பா நினைக்காத… முன்னமே ஒருத்தி உன்னை லவ் பண்ணிட்டு உன் கால் குறையைக் காரணம் காட்டி வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா… இப்ப யாரோ இன்னொருத்தியை லவ் பண்ணறேன்னு சொல்லற, அவளும் உன்னோட பணத்தை மட்டும் யூஸ் பண்ணிட்டு விட்டுட்டுப் போக மாட்டான்னு என்ன நிச்சயம்…” கங்கா கேட்கவும் ரிஷியின் முகம் சட்டென்று கறுத்து வாடிப் போனது.
“அ..அண்ணி, இவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல…”
“ஹூம்… என்னத்த சொல்லுறது…? கடவுள் மட்டும் உனக்கு இப்படி கால்ல ஒரு குறையைக் கொடுக்காம இருந்திருந்தா நீயும் இப்ப எல்லார் மாறியும் ஆபீஸ், பொண்டாட்டி, குழந்தைன்னு செட்டில் ஆகிருப்ப… எந்தப் பொண்ணாச்சும் மனசார இந்தக் குறையை ஏத்துகிட்டு கல்யாணத்துக்கு சம்மதிப்பாளா…? அப்படியே நம்ம பணத்தைப் பார்த்து சம்மதிச்சாலும் வாழ்நாள் முழுக்க உதவியா இருப்பாளோ, உபத்திரவம்னு உதறிட்டுப் போவாளோ…? அதை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு… இன்னொரு தோல்வியை உன்னால தாங்கிக்க முடியுமா ரிஷி…”
அவள் கேள்வியில் நொறுங்கிப் போனவனாய் கண்களில் கலக்கத்துடன் நிமிர்ந்தான் ரிஷி.
“உனக்கு யாராச்சும் சும்மா கிண்டல் பண்ணாலே தாங்க முடியாது… நீ இப்ப ஆபீஸுக்கு வர்றேன்னு சொல்லற, ஒருவேளை, நீ நடக்கறதைப் பார்த்து யாராச்சும் கிண்டல் பண்ணினா தாங்கிக்க முடியுமா…? எனக்கு யோசிச்சுப் பார்க்கவே கஷ்டமாருக்கு…”
“அண்ணி…” அவன் அதிர்ச்சியுடன் நோக்கினான்.
“நீ எந்த ஆபீஸ் டென்ஷனையும் மனசுல ஏத்திக்காம ப்ரீயா இருக்கட்டும்னு தான் உன்னை நான் ஆபீஸ் வர சொல்லி கம்பெல் பண்ணாம இருந்தேன்… உனக்கு எது சந்தோஷத்தைத் தருதோ அதைப் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சேன்… யாரும் கிண்டல் பண்ணி நீ வேதனைப் படறதை என்னால தாங்கிக்க முடியாது… என்னடா, அண்ணிக்கு நாம ஆபீஸ் வர்றது பிடிக்கலையா, இப்படிப் பேசறாங்கன்னு நீ என்னைத் தப்பா நினைக்கலியே…?” சோகமாய் முகத்தை வைத்துக் கேட்டாள்.
“ஐயோ, அப்படில்லாம் ஏதும் நினைக்க மாட்டேன் அண்ணி… நீங்க எனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கீங்க, நான் தப்பு செய்தாலும் அண்ணனுக்குத் தெரியாம காப்பாத்தி இருக்கீங்க… என் நல்லதுக்கு தான் நீங்க சொல்லுவீங்க, என் அம்மாவுக்கும் மேலா உங்களை நினைக்கிறேன் அண்ணி…”
“அப்படின்னா, நீ லவ் பண்ணற பொண்ணை எனக்குப் பிடிச்சா மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்… நம்ம வசதிக்கும், அந்தஸ்துக்கும் சமமான பொண்ணா இல்லன்னா கூடப் பரவால்ல… உன்னைப் புரிஞ்சு எங்களை அனுசரிச்சு நடந்துக்கற பொண்ணா இருக்கணும்… ஒருவேளை நீ லவ் பண்ணற பொண்ணு அப்படி இல்லன்னா, நான் பார்க்கிற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்…”
“அண்ணி…! நீங்கதான் என் லவ்வுக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நினைச்சேன்… நீங்களே இப்படி சொன்னா எப்படி அண்ணி…?”
“உன் காதலை விட எதிர்காலம் எனக்கு ரொம்ப முக்கியம்…”
“அண்ணி, உங்களுக்கு இந்த சந்தேகமே வேண்டாம்… நான் லவ் பண்ணற பொண்ணுக்கு நீங்க சொல்லுற எல்லா தகுதியும் இருக்கு… பணம், காசு இல்லன்னாலும், சக மனுஷங்களை மதிக்கத் தெரிஞ்சவ, மத்தவங்க உணர்வுகளை நல்லாப் புரிஞ்சுக்குவா… என்னையும் புரிஞ்சிட்டு என் காதலை ஏத்துக்குவான்னு நம்புறேன்… நீங்கதான் எங்களை வாழ்த்தி, சப்போர்ட்டா இருக்கணும் அண்ணி…” ரிஷி சொல்லவும் சற்று புன்னகைத்தாள் கங்கா.
“ரிஷி, நீ இவ்ளோ தூரம் சொல்லற, பார்ப்போம்… அந்தப் பொண்ணு உன் காதலுக்கு சம்மதிப்பாளான்னு… என் வாழ்த்துகள், உனக்கு எப்பவும் இருக்கும்…”
“தேங்க்ஸ் அண்ணி…”
“சரி, நீ குளிச்சு சாப்பிடு… நான் ஆபீஸ் கிளம்பறேன்…”
“அண்ணியா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்… அப்புறம் வர்றதை பேஸ் பண்ண வேண்டியது உன் பொறுப்பு…” சொல்லிவிட்டு வெளியேறியவள், “இவ்ளோ சொல்லியும் இந்தா லூஸுப் பையன் ஆபீஸ் வரேன்னு சொல்லுறானே… ரெண்டே நாள்ல நிறைய வேலையைக் கொடுத்து அவனை அலறடிச்சு ஓட வைக்கணும்…” இதழில் குரூர சிரிப்புடன் தனது அறைக்கு சென்றவள் தயாராகி அவளது காரில் கிளம்பினாள்.