Advertisement

காலையில் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்துவிட்ட பாரதி வேலையைத் தொடங்கியிருந்தாள். கெளதம் கொடுத்த வேலையில் கம்ப்யூட்டரில் கண்ணைப் பதித்திருந்தவள் அருகே நிழலாடவும் நிமிர்ந்தாள்.

“என்ன பாரதி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரியா மாறிடறீங்க… காபி டைம் ஆச்சு, கான்டீன் வரீங்களா…?” சிரித்தபடி கேட்டான் கெளதம்.

“அந்த மெஷின் காப்பி குடிக்கவா…? எனக்கு வேண்டாம் சாமி… காபி மேல உள்ள பிரியமே போயிடும் போலருக்கு, நீங்க குடிச்சிட்டு வாங்க…” என்றதும் சிரித்தபடி நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் அந்த வேலையை முடித்து கெளதமுக்கு அனுப்பி வைக்க, அதைப் பார்த்துவிட்டு அவன் இண்டர்காமில் வந்தான்.

“பாரதி… கொட்டேஷன் ஓகே, நம்ம பேமன்ட் டெர்ம்ஸ்ல மட்டும் சின்ன கரக்ஷன் இருக்கு… பேமன்ட் 100% அட்வான்ஸ் போட்டிருக்கீங்க, நார்மலா நாம எல்லாருக்கும் அப்படி தான் கொடுப்போம்… இவங்க ரெகுலர் கஸ்டமர்ங்கறதால கொஞ்சம் கன்ஸசன் கொடுப்போம், இவங்களுக்கு எப்பவும் 50% அட்வான்ஸ் மென்ஷன் பண்ணாப் போதும்…”

“ஓ… ஓகே கெளதம், அதை மாத்தி பிரின்ட் எடுத்திடவா…?”

“ம்ம்… பிரின்ட் எடுத்துட்டு அப்படியே எம்டி மேடம்கிட்ட அதுல சைன் வாங்கிட்டு வந்துடறீங்களா…?”

“மே…மேடம் கிட்டயா…?”

“ஆமாம், இந்த மாதிரி பெரிய ஆர்டருக்கு எல்லாம் அவங்க அப்ரூவ் பண்ணா தான் நாம கஸ்டமருக்கு கொட்டேஷன் அனுப்ப முடியும்…”

“ம்ம்… சரி, சைன் வாங்கிட்டு வரேன்…”

“குட்… வாங்க, அடுத்த வொர்க் சொல்லறேன்…”

அவன் ரிசீவரை வைத்துவிட இவளும் வைத்துவிட்டு தயக்கத்துடனே அவன் சொன்ன மாற்றத்தை செய்து, மறுபடியும் ஒரு முறை படித்துப் பார்த்து பிரின்ட் எடுத்துக் கொண்டு கங்காவின் காபினுக்கு சென்றாள்.

கதவைத் தட்டி அனுமதி கேட்க, எஸ் கம்மின் என்றது குரல்.

உள்ளே நுழைந்தவள், “குட் மார்னிங் மேம்…” என்றதும், “ம்ம்…” என்ற கங்கா, “கொட்டேஷன் ரெடி பண்ணிட்டியா…?” என்றதும் கையிலிருந்த பேப்பரை மேஜை மீது வைத்தாள்.

“ரெடி மேம்…”

அதை எடுத்துக் கொண்ட கங்கா, “நீயே ரெடி பண்ணியா, இல்ல கெளதம் ரெடி பண்ணதை எடுத்துட்டு வந்தியா…?” என்றபடி பார்வையைப் பதித்தாள்.

“கெளதம் எப்படின்னு சொல்லிக் கொடுத்தார், நான்தான் ரெடி பண்ணினேன் மேடம்…”

“ம்ம்… பரவால்லியே, வந்த உடனே பட்டுன்னு வேலையைப் புரிஞ்சுகிட்ட… நீ சரியான வேலைக்காரி தான்…” கிண்டலாய் சொல்லிக் கொண்டே அதில் கையெழுத்தைப் போட பாரதியின் முகம் சுருங்கினாலும் அமைதியாய் நின்றாள்.

நிமிர்ந்து பார்த்தவள், “இந்நேரம் நான் சொன்னதுக்கு கொடி பிடிப்பேன்னு நினைச்சேன், அமைதியா இருக்க…?” கேட்டாள்.

“நீங்க சொன்ன வார்த்தை கொஞ்சம் கடினமா இருந்தாலும் உண்மை அதானே மேடம், நான் உங்க வேலையை செய்யறவ தானே… அர்த்தம் நாம புரிஞ்சுக்கறதுல தானே இருக்கு…” என்றவளை நோக்கி தலையாட்டினாள்.

“ஓ… நீ அப்படி சொல்லற… பரவால்ல, எதை சொன்னாலும் நல்லாவே சமாளிக்கற… புத்திசாலிதான், உனக்கு வேலை எல்லாம் புரியுதா…?”

“எஸ் மேடம், கெளதம் சொல்லிக் கொடுக்கிறார்…”

“ம்ம்… அதோட இன்னும் சில வேலைகளை எல்லாம் உன் பொறுப்புல கொடுக்கலாம்னு நினைக்கிறேன்…”

“நல்லது மேடம், செய்யறேன்…” பாரதி சொல்ல,

“உனக்கான சாப்பாடு, ஜூஸ், லேட்டானா கம்பெனி கார்ல டிராப் பண்ணறது எல்லாம் கம்பெனி ஏத்துக்கும்… உன் புத்திசாலித்தனத்தை மூலதனமாக்கி உழைச்சாப் போதும்… ஓகே…! நீ உன் காபினுக்குப் போ, அவங்க உன்னை வந்து பார்த்து வேலை என்னன்னு சொல்லுவாங்க…”

“சரி மேடம்…” என்றவள் கையெழுத்திட்ட கொட்டேஷன் பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர திகைத்தாள்.

ரிஷி ரிஷப்ஷனில் அன்று லீவான மஞ்சுவுக்கு பதில் வேலையில் இருந்த ராகவியிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கண்ணாடிக் கதவின் வழியே தெரிந்தது.

திகைத்தவள் சட்டென்று மறைந்து கொண்டாள்.

“ஐயோ, ரிஷி எதுக்கு இங்கே வர்றார்… ஒருவேளை, நான் இங்கதான் வொர்க் பண்ணறேன்னு தெரிஞ்சிடுச்சோ, ஆர்வக் கோளாறுல என்னைப் பார்க்க ஆபீஸுக்கே வந்துட்டாரா…” தலையில் அடித்துக் கொண்டாள்.

“நேத்து தான் ஜாயின் பண்ணேன், அதுக்குள்ள என்னைப் பார்க்க விசிட்டர் வந்தா நல்லாவா இருக்கும்… அவன் கண்ணுல படாம காபினுக்கு ஓடிருவோம்…” யோசித்தவள் சட்டென்று பைலால் முகத்தை மறைத்துக் கொண்டு அவளது காபினுக்கு செல்ல, ரிஷி கதவைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான். சட்டென்று வேறுபுறம் திரும்பிக் கொண்டவளை கவனிக்காமல் ரிஷி கடந்து செல்ல ஒரே ஓட்டமாய் தனது காபினுக்கு ஓடினாள் பாரதி.

தனது இருக்கையில் அமர்ந்து நீண்ட மூச்சுகளை விட்டு சமாதானப்படுத்திக் கொண்டவள், “கடவுளே, இப்ப என்ன பண்ணறது… மேடம் வேற ஆபீஸ்ல இருக்காங்க, இந்த ரிஷி வேற என்னைப் பார்க்க இங்கே வந்துட்டா எப்படி சமாளிக்கிறது…?” யோசனையுடன் இருந்தவளை இன்டர்காம் சிணுங்கி கலைத்தது.

“பாரதி, சைன் வாங்கின கொட்டேஷனை கொண்டு வாங்க…” என்றது கெளதமின் குரல். அதை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அவனிடம் நீட்ட, “ஏன் ஒரு மாதிரி நெர்வஸா இருக்கீங்க, எனிதிங் ராங்…” அக்கறையுடன் கேட்டான்.

“இ..இல்ல கெளதம், ஐ ஆம் ஓகே… மேடம் எனக்கு வேற சில வேலைகளை தர்றேன்னு சொல்லி இருக்காங்க… என் காபினுக்கு அது ரிலேட்டடா யாரோ லேடி வருவாங்கன்னு சொன்னாங்க, நான் போகட்டுமா…?”

“ம்ம்… ஷ்யூர், நீங்க போங்க…” கெளதம் சொல்ல வேகமாய் தனது காபினுக்கு வந்து அமர்ந்தவளின் விழிகள் அடிக்கொருமுறை முன்னிலிருந்த பெரிய கண்ணாடிக் கதவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் பார்த்தும் அவளைத் தேடி ரிஷி வராமல் போகவே நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “நல்ல வேளை, இன்னைக்கு மஞ்சு லீவு… ராகவிக்கு நம்ம பேரு தெரியாதது நல்லதாப் போயிருச்சு…” என நினைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து “பாரதி…” என்ற அழைப்பில் திரும்பியவள் எதிரே நின்ற பெண்மணியை நோக்க, முகத்தில் சிறிதும் சிநேக பாவமோ, சிரிப்போ இல்லாத சிடுசிடு பெண்மணி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

“நான் ருக்மணி, மார்க்கெட்டிங் கோ ஆர்டினேட்டர்… இந்த வொர்க் எல்லாம் நீ பண்ணனும்…” சொன்னவள் ஒரு பெரிய பட்டியலை நீட்டினாள்.

“இது சம்மந்தமான எல்லா டேட்டாவும் உன் கம்ப்யூட்டர்ல இருக்கு, பார்த்துக்க, எதுவும் சந்தேகம் வந்தாக் கேளு… ஒரு வாரம் தான் சொல்லிக் கொடுப்பேன், அப்புறமா நீதான் செய்யணும்… உனக்குன்னு டெய்லி டார்கெட் இருக்கு, பத்து மணியானாலும் அதை முடிச்சிட்டு தான் போகணும்… அதுக்கு தனி பேட்டாவும் இருக்கு… புரியுதா…?” குரலில் ஒரு அதட்டல் தெரிந்தது.

“ம்ம்… புரியுது மேடம்…” என்றதும் அங்கிருந்து நகர்ந்தார்.

அந்தப் பட்டியலைப் பார்த்ததும் மிரட்சியாய் இருந்தது.

“இதுவரை வேலைக்குப் போகாத பெண்… எந்த ஆபீஸ் நடைமுறைகளும், வேலைகளும் தெரியாது… என்னால் இது முடியுமா…? வேண்டுமென்றே அந்த கங்கா என்னைப் பழி வாங்குகிறாளா…?” மிரண்டவள், “என்னால் முடிந்து தான் தீர வேண்டும், இந்த வேலை எனக்கு எவ்வளவு முக்கியம்…” என யோசித்தவள் தொடங்கி விட்டாள்.

முதலில் புரியாமல் ஆயாசமாய் இருந்ததில் மனம் துவண்டாலும், சில நொடிகளில் தனக்கே உரித்தான தன்னம்பிக்கை தலைதூக்க நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“வாழ்க்கைல முடியாததுன்னு ஒண்ணு இருக்கா என்ன…? மத்தவங்களால முடியற விஷயம் என்னால மட்டும் முடியாமப் போயிடுமா…? வாழ்க்கைல தினமும் நாம பார்க்காத போராட்டங்களா…? எல்லாத்தையும் கடந்து தானே வாழறோம், இதுவும் என்னால முடியும்…” என்றவள் அதைப் படிக்க முதலில் புரியாமல் இருந்த விஷயங்கள் படிப்படியாய் விளங்கத் தொடங்க தைரியம் வந்தது. ஆர்வத்துடன் படித்தாள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதும் ஒரு புதுமை தானே… வாழ்க்கை மரணம் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பித்துக் கொண்டு தானே இருக்கிறது. துணிந்து செயல்படத் தொடங்கி விட்டாள்.

மதியம் லஞ்சுக்கு கெளதம் அழைக்க ஹாஸ்டலில் இருந்து கொண்டு வந்த சாதத்தை அவனுடன் ஷேர் செய்ய, “இதுக்கு நம்ம கான்டீன் சாப்பாடே பரவால்ல, பாரதி…” என்றான்.

“நாளைல இருந்து எனக்கு லஞ்ச் கம்பெனில சாப்பிடலாம்…” என்றவள் கங்கா சொன்ன விவரங்களை சொல்ல கெளதம் ஆச்சரியப்பட்டான்.

“பரவால்லியே, வந்த அடுத்த நாளே மேடம் உனக்கு இவ்ளோ பொறுப்புகளைக் கொடுத்திருக்காங்க…”

“ம்ம்… சரியா செய்து முடிக்கணும்னு தான் என் கவலையே…”

“ம்ம்… மேடம் அவ்ளோ சீக்கிரம் பொறுப்புகளைக் கொடுக்க மாட்டாங்க, உன் மேல நம்பிக்கைல இந்த வேலைகளைக் கொடுத்திருக்காங்க… ஹூம், நீயே எனக்கு மார்கெட்டிங் மேனேஜர் போஸ்ட்க்கு போட்டியா வந்திருவ போலருக்கே…”

“சேச்சே, அந்த அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை…” பாரதி சொல்ல இருவரும் சிரித்தனர்.

தோல்வி என்பது

அவமானம் அல்ல…

அது வெற்றியின் ஆரம்பம்…

முயற்சியே மூலதனம்…

நம்பிக்கையே ஆதாரம்…

வீழ்வது எழுவதற்கே…

Advertisement