Advertisement

மஞ்சரி வைத்துவிட்டு சென்ற பணத்தையே தமிழ்செல்வன் வெறித்துக்கொண்டிருக்க அதைக் கண்ட நண்டு,
“அண்ணனே…”என்று அவனை உலுக்கினான்.அதில் தன்னிலை பெற்றவன்,
“என்னாடா…”என்றான் காரமாக
“இல்ல ண்ணனே அது அது…”என்று நண்டு தயங்க மேலும் கடுப்பான தமிழ்,
“டேய் கிளம்பிடு…ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன்…திருப்பியும் வாங்கி கட்டிக்காத போயிடு…”என்று எச்சரிக்க நண்டுவோ இருந்தால் மேலும் அடிவிழும் என்று பயந்து இடத்தை காலி செய்திருந்தான்.சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவன் பின் வீட்டின் உள் நுழைந்தவன் மனதில் மஞ்சரி கடைசியாக சொன்ன உங்க அண்ணன் மருத்துவ செலவுக்கு இந்த பணம் உதவும் என்ற வாக்கியமே சென்றுக்கொண்டிருந்தது.ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஊர்வலம் வர தன் தலையை உலுக்கியவன் கண்களில் விழுந்தது அவனது தாய்,தந்தை படம் அதைக் கண்டவுடன்,
“நீங்க இருந்திருந்தா நாங்க இப்படி கஷ்டபடுவோமா…ஏன் எங்கள விட்டு போனிங்க…”என்று ஊமையாக அழுதவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
சுந்தரி,திருசெல்வம் இவர்களின் செல்ல மகன் தான் தமிழ்செல்வன்.திருசெல்வம் ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக பணிபுரிந்தார்.சுந்தரி அன்பான இல்லத்தரசி.திருசெல்வம் அமைதியின் சிகரம் என்றால் சுந்தரி படபடக்கும் பட்டாசு போல பேசுபவர்.கணவனின் மனமரிந்து செயல்படும் இல்லத்தரசி.செல்வமும் மனைவியின் மனது நோகாமல் பார்த்துக்கொள்வார்.நெடுநாட்கள் பிள்ளை இல்லாமல் இருந்தனர் சுந்தரி,திருசெல்வம் தம்பதியினர்.
குழந்தை வரம் கேட்டு பல கோவில்கள் சென்றனர்.அவ்வாறு ஒருமுறை திருப்பதி சென்ற போழுது இவர்கள் சென்ற பேருந்தில் பயணித்தவர்கள் ரமணனும் அவனது தாய் வடிவம்மை.ரமணனின் தந்தை ரத்தினம் ஒரு வருடத்திற்கு முன்பு மாரடைப்பில் இறந்துவிட்டார்.வடிவம்மை தனக்கு தெரிந்த அளவு விவசாயம் பார்த்து ரமணனை படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
ரமணனும் தாயின் நிலை அறிந்து நல்ல முறையில் படித்தான்.ரமணனின் ஐந்து வயதில் திடீர் என்று அவனக்கு டைபாயிடு வந்து படுக்க வடிவம்மைக்கு பயம் பிடித்துக்கொண்டது பல வேண்டுதலுக்கு பிறகு ரமணன் கண் திறந்தான்.அவன் பூரன குணமடைந்தவுடன் திருப்பதி வருவதாய் வேண்டுதல் செய்திருந்தார் அதனை நிறைவேற்ற இருவரும் வந்திருந்தனர்.
இயல்பிலேயே கலகலப்பாக பழகும் சுந்தரி வடிவம்மையுடன் எளிதில் பேசி பழகிவிட்டார்.சுந்தரிக்கு தன் தாயை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளும் ரமணனை மிகவும் பிடித்துவிட்டது.திருசெல்வமும் மனைவியின் மலர்ந்த முகத்தைக் காண காண மனதில் ஒரு இனம் புரியா வலி ஏற்பட தான் செய்தது முயன்று அதனை அடக்கினார்.சுவாமி தரிசனம் முடிந்து அனைவரும் கீழே வந்தனர் அப்போது வடிவம்மை  சற்று சோர்ந்து தெரியவும்,
“அம்மா…ஏன் ஒருமாதிரி இருக்கீங்க…என்ன பண்ணுது…”என்று ரமணன் கேட்க அப்பொழுது தான் வடிவம்மை நன்கு கவனித்த சுந்தரியும்,
“என்ன ஆச்சு வடிவு…தம்பி சொல்ரது போல உடம்பு முடியலையா…”என்று அக்கறையாக கேட்டார்.பலநாட்களுக்கு பிறகு தன் மீது அக்கறை காட்டும் மனிதர்களை தந்த பெருமாலுக்கு மனதால் நன்றி சொன்னவர் சுந்தரியிடம்
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…நான் நல்லா தான் இருக்கேன்…வாங்க கீழ திருப்பதிக்கு கிளம்புவோம்….”என்று கூறிக்கொண்டிருக்க அதற்குள் திருசெல்வம் அனைவருக்கும் குடிக்க இளநீர் வாங்கிவந்தார்.அதனை பருகியவுடன் சற்று தெளிந்தார் வடிவு.தன் தாயின் தெளிந்த முகத்தைக் கண்டவுடன் தான் ரமணனுக்கு மனது லேசானது.பிறந்தவுடன் தந்தையை இழந்தவனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் தாய் தான் அதனால் அதீத அக்கறை அன்பு தாயிடம்.
ரமணனைக் கண்ட சுந்தரிக்கும்,திருசெல்வத்திற்கும் தங்களுக்கும் இவனை போல ஒரு குழந்தைக்கொடு கடவுளே என்று பெருமாலிடம் வேண்டுதல் வைத்துவிட்டே வந்தனர்.கிளம்பும் முன் வடிவம்மையிடம் தங்களின் கைபேசி எண்ணைக் கொடுத்து பேசுமாறு அன்பு கட்டளையிட்டே வந்தார் சுந்தரி.வடிவம்மைக்கும் பெருமாலின் அருளால் தனக்கு ஒரு தமக்கை கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்தவர் மகிழ்ச்சியுடன் தலையாட்டினார்.ஆனால் வடிவு அறியவில்லை அவரது இந்த மகிழ்ச்சி நிலைக்க போவது இல்லை என்று.
வாழ்க்கை எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்றது இருவருக்கும்.தினமும் சுந்தரி வடிவம்மைக்கு போன் பேசிவிடுவார்.இவ்வாறு நாட்கள் செல்ல ஒரு நாள் சமையலறையில் சுந்தரி மயங்கி விழ பதறிய செல்வம் டாக்டரிடம் அழைத்து செல்ல அங்கே சுந்தரி தாயாக போவதாக  கூறினார்கள்.அதில் மகிழ்ந்த இருவரும் வடிவமமைக்கு அழைக்க அவரோ எடுக்கவில்லை.வேலையில் இருப்பார் என்று ஊகித்தவர்கள் தாங்கள் தாய்,தந்தை ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.ஒரு வாரம் சென்ற நிலையில் வடிவிடம் இருந்து போன் வராத காரணத்தால் சுந்தரி மீண்டும் அழைக்க எடுத்து பேசியவர் கூறிய செய்தியில் சுந்தரிக்கு மனது பதறியது.அவர் உடனடியாக செல்வத்திற்கு அழைத்து வடிவம்மைக்கு உடம்பு சரியில்லை எனக் கூற செல்வம் உடனடியாக கிளம்பிவிட்டார்.
வடிவம்மை நிலத்தில் வேலை செய்யும் போது திடீர் என்று மயங்கி கீழே விழந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக அவர்களது பக்கத்துவீட்டு பெண் சுந்தரியிடம் கூறியிருந்தார்.அதை கேட்டு அதிர்ந்த சுந்தரி செல்வத்திற்கு தகவல் தர அவரும் கிளம்பிவிட்டார்.சுந்தரி வெகு நாட்களுக்கு பிறகு கர்பம் தருத்திருப்பதால் அவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர் கூறியுள்ளதால் அவர் செல்லவில்லை.
சுந்தரி கூறிபடி மருத்துவமனை அடைந்த செல்வம் கண்டது வடிவம்மையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.அவருக்கு பின்தலையில் காயம் பலமாக பட்டிருக்க அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர் கூற தாயின் அருகே அமர்ந்து அழுதுக்கொண்டிருக்கும் ரமணனைக் காண காண செல்வத்திற்கு மனது வலித்தது.
வடிவம்மை கண்விழித்ததாக செவிலியர் கூற அவரைக் காண சென்ற செல்வத்திற்கு தொண்டை அடைத்தது.எப்படி கலகலப்பாக இருந்தவர் இப்படி அரைஉடம்பாக காணமுடியவில்லை அவரால்.வடிவம்மைக்கு செல்வத்தைக் கண்டவுடன் கண்களில் நீர் படலம்.ரத்த உறவுகள் கூட ஒதுங்கி இருக்க சிறிய பயணத்தில் கிடைத்த நட்பு இன்றுவரை வருகிறதே என்று மனதால் இதை கிடைக்க செய்த பெருமாலுக்கு நன்றி கூறினார்.
“உனக்கு ஒண்ணும் ஆகாதும்மா…நீ பயப்படாத…”என்று செல்வம் சற்று தேற்றும் விதமாக கூறினாலும் அவருக்கும் உள்ளுக்குள் உதறல் தான்.விரக்தியாக சிரித்த வடிவு…
“சுந்தரி…”என்று கேட்க.அவரிடம் சுந்தரி கர்பமாகியுள்ளதைக் கூற வடிவம்மைக்கு மகிழ்ச்சி.
அதற்குள் வடிவம்மைக்கு சுவாச பற்றாக்குறை ஏற்பட ரமணன் தான் பயந்து போனான்.
“அம்மா…அம்மா…”என்று அவனது அழு குரல் மருத்துவமனை முழுவதும் கேட்க செல்வமோ வடிவின் கையைப் பிடித்து,
“யம்மா…நான் இருக்கேன்ம்மா…நான் பார்த்துக்குறேன்….”என்று ரமணனை அணைத்துக் கொண்டு கூற மகனை ஒரு நல்ல இடத்தில் சேர்த்த நிம்மதியுடன் இறைவனடி சேர்ந்தார்.ஆகிற்று இதோ வடிவம்மை இறந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன.ரமணன் திருசெல்வம்,சுந்தரியிடம் இருந்தான்.வடிவின் நிலத்தில் ஏற்கனவே கடன் இருப்பதால் அதை கடன் பெற்றவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்திருந்தனர்.ரமணனால் தாயின் இறப்பை ஏற்க முடியவில்லை சுந்தரியும்,செல்வமும் தான் அவனை இயல்பாக்க திணறினர்.
சுந்தரியும்,திருசெல்வமும் ரமணனை தங்கள் மூத்த பிள்ளை போல வளர்க்க அவனும் அவர்களின் அன்பில் நெகிழ்ந்து தான் போனான்.அன்பால் ரமணனை முழுதும் மாற்றியிருந்தனர் சுந்தரி,செல்வம் தம்பதியினர்.அவர்களது சந்தோஷத்தை மேலும் கூட்டும் விதமாக பிறந்தான் தமிழ்செல்வன்.
தமிழ்செல்வன் பிறந்தபிறகு ரமணனுக்கு தான் மிகுந்த சந்தோஷம் தன் தம்பியை கொஞ்சுவது அவனிடம் விளையாடுது என்று நேரம் போவதே தெரியவில்லை. தமிழுக்கும் தன் அண்ணனிடம் கொள்ளை பிரியம்.ரமணன் அமைதியின் சிகரம் என்றால் தமிழ்செல்வன்  சேட்டைகளின் சிகரம்.ஒவ்வொருமுறையும் தவறு செய்து மாட்டும் பொழுதெல்லாம் ரமணன் தான் அவனைக் காப்பது.சுந்தரிக்கும்,திருசெல்வத்திற்கும் தன் இரு பிள்ளைகளின் சேட்டையை கண்டு மகிழ்ந்துதான் போவர்.சந்தோஷமாக சென்ற இவர்கள் வாழ்க்கை புயலில் மாட்டிய மரம் போல சிதைந்தது ஒரு விபத்தில்.
தமிழின் குடும்பத்தினர் அனைவரும் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி அதில் சுந்தரியும்,திருசெல்வமும் சம்பவ இடத்தில் உயிர் இழக்க ரமணன் கை மற்றும் காலில் அடிப்பட்டு நினைவிழந்து இருந்தான்.அன்று தமிழுக்கு தேர்வு இருந்ததால் செல்லமுடியாமல் போனது.
ரமணனுக்கு அந்த விபத்தில் வலது கால் செயலிழந்தது.அதில் இருந்தது வெற்றியின் மனதில் ஒரே குறிக்கோள் எப்படியாவது தன் அண்ணனை பழையபடி நடக்க வைக்கவேண்டும் என்பதே.பெற்றோர்கள் இழந்த நிலையில் தமிழ் மற்றும் ரமணனின் வாழ்வும் திசைமாறியது.வருமானத்திற்காக ரமணன் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கிற்கு செல்ல ஆரம்பித்தான்.ரமணன் எவ்வளவோ கூறியும் தமிழ் மேல் படிப்பை தொடராமல் அவனும் வேலைக்கு செல்வேன் என்று அடம்பிடிக்க அன்றிலிருந்து அண்ணன் தம்பி இடையே சிறிய விரிசல்.என்னதான் தம்பியின் மீது கோபம் என்றாலும்அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்கமாட்டான் ரமணன்.
தமிழ் வேலை செய்யும் இடத்து முதலாளியிடம் சிலர் தகராறு செய்ய அதில் தமிழ் அவர்களை அடித்துவிரட்டியிருந்தான்.அதில் மகிழ்ந்த அவனது முதலாளி அவனுக்கு கனிசமான தொகை தர அன்றிலிருந்து தமிழுக்கு பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல வழியாக தெரிந்தது. தான் செய்யும் வேலை தன் அண்ணனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டும் வருகிறான்.கைபேசியின் சத்ததில் நிகழ்வுக்கு வந்த தமிழ்செல்வன் ஒரு முடிவுடன் மஞ்சரிக்கு அழைத்தான்.

Advertisement