Advertisement

விந்தையடி நீ எனக்கு…1
“குன்றத்திலே குமரனக்கு கொண்டாட்டம் அங்கே
குவிந்தம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வாணை திருமணமாம்-திருபறங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்….”
என்ற முருகனின் பாடல்  அந்த தெரு முழுவதும் கேட்டது. சென்னையில் அடித்தட்டு மக்கள் வாழும் இடம்.காலையில் அவர்களது அன்றாட வேலைகளை தொடங்க பல பேருக்கு இந்த கோவில் பாடல் தான் அலாரம் என்றுக் கூட கூறலாம்.அப்படி பட்ட இடத்தில் ஒரு வீட்டில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை தலை முதல் கால் வரை போர்வை இழுத்து போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.மற்றவர்களுக்கு சூரிய உதயம் காலை ஆறு மணி என்றால் அவனுக்கு பதினோறு மணி.அதுவரை அவனை யாரும் எழுப்ப முடியாது தப்பிதவறி யாராவது எழுப்பினால் அவனது மிதிகளை வாங்குவது உறுதி.அதற்கு பயந்தே அந்த வீட்டின் பக்கம் செல்லக்கூட அந்த தெரு வாசிகள் அஞ்சுவர்.
அவர்களுக்கு இருக்கும் பயம் இதோ இவனுக்கு இல்லை போல,
“வாக்கா…நம்ம அண்ணன் தான் நான் முன்னாடியே உங்கள பத்தி சொல்லிட்டேன் நீ பயப்படாம வா…”என்று பெரிய மனிதன் போல அவர்களை அழைத்து வந்துக்கொண்டிருந்தான் பன்னிரெண்டு வயதே ஆன நண்டு என்று அழைக்கப்படும் நாராயணன்.அவனுடன் ஒருவள் பயமின்றி சென்றாள் என்றால் மற்றொருவளோ நடுங்கிக்கொண்டே சென்றாள்.சந்து பொந்து என்று  நண்டு நுழைந்து செல்ல இவர்களால் தான் அந்த பாதைகளில் நடக்க முடியவில்லை.இருவரில் ஒருவள்,
“ஏன்டி மஞ்சு சொன்னா கேளுடி…எனக்கு என்னமோ பயமா இருக்கு…”
“நீ இப்ப வாய மூடிக்கிட்டு வர போறியா இல்லையா…”என்றாள் மஞ்சு என்று அழைக்கப்படும் மஞ்சரி.அவளை வெறுத்து போன பார்வை பார்த்தாள் கவிதா.மஞ்சரியின் உயிர் தோழி.மஞ்சரி மேல் தட்டுக்கே உரிய உடல்வாகும்,முகமும் கொண்டவள்.அவளது கண்களில் ஒரு திமிர் எப்போதும் குடி கொண்டிருக்கும்.அவளது அழகில் மயங்கி கல்லூரியில் பாதி பேர் இவள் பின்னால் சுற்றுவது மஞ்சரிக்கு சற்று கர்வத்தைக் கொடுத்தாலும்,அவளது மனதில் இருப்பவன் ஒருவனே அவளது சொந்த அத்தை மகன் ஆஷிக்.சிறுவயதில் தன் அன்னை தந்தையால் விதைக்கப்பட்ட காதல் விதை இதோ இன்று வளர்ந்து விரிச்சகமாகியுள்ளது.அவனின்றி அவள் எதுவும் இல்லை என்பது அவளுக்கு திண்ணம்.
சிறு வயதிலிருந்தே அஷிக் உனக்கு தான் என்றே மஞ்சரியை வளர்த்திருந்தனர் அவளது பெற்றோர்.அவளும் அஷிக்கின் மீது அளவுகடந்த காதலை வளர்த்திருக்க ஆனால் இரு தினங்களுக்கு முன் தன் பெற்றோர் கூறிய செய்தியில் அவளது உலகமே இருண்டது போன்ற உணர்வு.தன்னவன் என்று மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தவனுக்கு திருமணம் என்ற செய்தியில் அவளது காதல்,ஆசை,கனவு அனைத்தும் கலைந்தது போன்ற உணர்வு.இதனால் பெற்றோரிடம் சண்டையும் போட்டுவிட்டாள் ஆனால் பலன் தான் இல்லை.அவர்களும் என்ன செய்வார்கள் ஜாதக பொருத்தம் சிறியாக இல்லை என்று ஆஷிக்கின் அன்னை அகிலா கூறிவிட்டார்.அதை பற்றி பேச சென்ற மஞ்சரியின் பெற்றோர் தியாகராஜன்,அமுதாவிடமும் இதே காரணத்தைக் கூற அவர்கள் எவ்வளவு கூறியும் அகிலா மனம் இறங்கவில்லை.அதில் தன் தங்கையின் மீது வருத்தமே தியாகராஜனிற்கு.
அகிலாவிற்கு ஜோதிடம்,ஜாதகம் போன்றவைகளில் நம்பிக்கை ஜாஸ்தி அதனால் தான் அவர்களது குடும்ப ஜோதிடர் மஞ்சரியின் ஜாதகம் பொருத்தம் சற்று குறைவு என்றும் அதனால் ஆஷிக்கின் தொழில் வளர்ச்சி குறையும் என்றும் கூறியவுடன் அகிலாவிற்கு பயம் பிடித்துக்கொள்ள தன் அண்ணன் மகளின் விருப்பம் அறிந்தும் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்தது.ஆனால் அகிலாவிற்கு தெரியவில்லை மஞ்சரி ஆஷிக்கின் மீது வைத்துள்ள காதல் அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும் என்று.
மஞ்சரிக்கு ஆஷிக்கின் மீது உள்ளது வெறும் காதல் மட்டும் கிடையாது அதையும் தாண்டி வெறி என்றே கூறலாம்.சிறு வயதில் இருந்தே தான் கேட்டது அனைத்தும் கிடைத்து பழக்கப்பட்டவளுக்கு இன்று தான் கேட்டது,ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே என்ற கோபம்,ஆத்திரம் அவனுக்காக எதையும் செய்ய தூண்டியது.ஆஷிக்கிடம் பேசலாம் தான் தாயின் சொல்லே வேதவாக்கு என்று சொல்பவனிடம் சொல்லி புரியவைப்பது கடினம் என்று மஞ்சரிக்கு நன்கு தெரியும்.தொழிலில் தனித்து முடிவெடுப்பவன் வீடு மற்றும் தன் வாழ்கையில் தாயின் முடிவு தான் இறுதி என்பான்.அதனால் ஆஷிக்கிடம் பேசுவது வீண் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாள் மஞ்சரி.
கடந்த இருதினங்களாக மஞ்சரியின் பெற்றோரும் அவளிடம் ஆஷிக் இல்லை என்றால் அவனை விட இருமடங்கு வசதி படைத்தவனை உனக்கு பார்த்து திருமணம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள்,ஆனால் மஞ்சரி எதற்கும் செவிசாய்க்கவில்லை.அவளது மனஅழுத்தைக் கண்ட அமுதா கதறியே விட்டார்.தியாகராஜனோ மகளிடம்,
“மஞ்சும்மா…மனசுவிட்டு அழுதுடுடா…எல்லாம் சரியா போயிடும்…உன்னை வேணாம் சொன்னவங்களுக்காக நீ ஏன்டா கலங்குற…உனக்கு இவனைவிட நல்ல இடமா அப்பா உனக்கு பார்குறேன்…”என்று கூற அனைத்தையும் கேட்டவள் தன் பெற்றோரிடம்,
“அம்மா…அப்பா…நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால என் மனச மாத்திக்க முடியாது…ஆஷிக் இல்லாம நான் இல்ல…அத முதல்ல நீங்க புரிஞ்சுக்குங்க….இந்த கல்யாணம் நடக்காது…நான் நடக்கவிடமாட்டான்…”என்று அகங்காரமாக கூற மகளின் கண்களில் தெரிந்த வெறித்தனதில் பெற்றோர் இருவரும் அதிர அமுதாவோ தியாகுவிடம்,
“என்னங்க இவ இப்படி பேசுறா…நீங்க கொஞ்சம் சொல்லுங்க…”என்று பதட்டமாக கூற தியாகு,
“மஞ்சு…என்ன பேச்சு இது கல்யாணத்தை நிறுத்துறேன் அது இதுனு நீ பேசறது நல்லாயில்லை…உன்ன வேண்டாம்னு சொன்னவன் கிட்ட போய் கெஞ்ச போறியா….வேண்டாம் டா…என் பொண்ணு யார் கிட்டேயும் கெஞ்ச வேண்டாம்…நான்..”என்ற தியாகுவின் பேச்சை பாதியில் நிறுத்திய மஞ்சரி,
“அப்பா…நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணத்தை நான் நிறுத்தமாட்டேன்…ஆனா தானா நிக்கும்…அப்புறம் என்ன சொன்னீங்க உங்க பொண்ணு வாழ்க்கை பிச்சை கேட்க போறாளா??நெவர்…உங்க தங்கச்சி தான் என்கிட்ட அவங்க மகனுக்காக வாழ்க்கை பிச்சை கேட்க போறாங்க…நீங்க பொறுத்திருந்து பாருங்க இந்த மஞ்சரி யாருன்றத…”என்று ஆணவமாக கூறிவிட்டு செல்ல தியாகுவும்,அமுதாவும் அதிர்ந்து நின்றனர்.
பின் இரு நாட்கள் மஞ்சரியின் செயல்பாட்டை கவனித்த தியாகு அவள் எப்போதும் போலவே இருக்கவும் மகள் மனதில் என்ன செல்கிறது என்று அறிய மகளிடம்,
“மஞ்சும்மா…அன்னக்கி நீ பேசினது…”என்று கூறும் முன் மஞ்சரி,
“அப்பா…நீங்க எப்பக்கேட்டாலும் என்கிட்டே ஒரே பதில் தான் இந்த கல்யாணம் நடக்காது…”என்றாள் தெளிவாக.
“என்னம்மா நீ எப்படி சொல்ர…அந்த கல்யாண பொண்ணு பேரு என்ன நித்திலா அவக்கிட்ட ஏதாவது சொன்னியா…”என்று புரியாமல் கேட்க தந்தை தன் வாயால் விஷயம் அறிய முற்படுகிறார் என்று தெரியாத அளவிற்கு மஞ்சரி ஒன்றும் மக்கு கிடையாதே அவரது எண்ணம் அறிந்தவள்,
“ஓ..அவ பேரு நித்திலா வா…ம்ம் நல்லா தான் இருக்கு…”என்றாள் எதுவும் தெரியாத மாதிரி அவளது பதிலில் குழம்பிய தியாகு புரியாமல் மஞ்சரியைப் பார்க்க,
“அப்பா…நீங்க நினைச்ச பதில் என்கிட்டேந்து வராது..அப்புறம் என்னை கண்கானிக்கிறத விட்டுட்டு உங்க தங்கச்சி பையன் கல்யாண வேலையை பாருங்க…”என்று கூறிவிட்டு செல்ல தியாகுவிற்கு தான் மகளின் பதிலில் மனது கனத்தது.தன் தங்கையிடம் ஏதாவது கூறலாம் என்றால் அதற்கும் மகள்,
“நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்…அதை நீங்க இந்த கல்யாண விஷயத்தில செஞ்சீங்க…நீங்க உங்க பொண்ண உயிரோட பார்க்க முடியாது…”என்று அவள் மிரட்டியதே நினைவிற்கு வர ஒரு தந்தையாய் மகளை கண்டித்தவர் இறுதியில் கெஞ்சியும் பார்த்துவிட்டார் ஆனால் பலன் தான் இல்லாமல் போனது மகளிடம்.
“யக்கா…என்ன யோசனை இது தான் எங்க அண்ணன் வீடு…வா…”என்ற நண்டுவின் குரலில் நிகழ்வுக்கு வந்த மஞ்சரி,
“ஆங்…சரி ஆனா வீட்ல இல்லையா வீடு பூட்டியிருக்கு…”என்று வீட்டின் பூட்டை பார்த்துக்கொண்டே மஞ்சரி கேட்க நண்டுவோ,
“அதுவா அண்ணன் இப்ப தூங்கற டையம் அதான் யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனு வெளில பூட்டிட்டு தூங்குவாரு…”என்றவன் தன் கொண்டு வந்த சாவியால் கதவை திறந்து உள்ளே செல்ல மஞ்சரியும்,கவிதாவும் வெளியிலேயே நின்றனர்.அந்த வீட்டை சுற்றிலும் புதர்மன்டிக் கிடந்தது.அந்த வீட்டைக் கண்டலே ஏதோ பேய் வீடு போல இருக்க மஞ்சரியோ தான் வந்த காரியம் எப்படியாவது ஈடேற வேண்டும் என்ற யோசனையில் இருக்க கவிதோ இந்தபுள்ள பண்ற வேலைக்கு நம்மளையும் சேர்த்து பரலோகம் அனுப்பிடும் போல வீட்ட பார்த்தாலே பேய் வீடு மாதிரி இருக்கே…இதுல உள்ள போனவனையும் காணும் என்று பயத்தில் பிதற்றிக்கொண்டு இருக்க,
“அய்யோ…அம்மா…”என்ற அலரியபடி  நண்டு உள்ளே இருந்து வர கவிதாவோ,
“அய்யோ பேய்…”என்று அலரியபடி மயங்கினாள்.மஞ்சரியோ என்ன நடக்கிறது என்று உணரும் முன் அவள் முன்னே ஏதோ பாத்திரம் ஒன்று விழ பயந்து பின்னே நகர சற்று நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல மாற செய்வதரியாது நின்றாள்.

Advertisement