Advertisement

“கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல… நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“என்ன ஒண்ணுமில்லாதவளா… என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும் ரகுநாதன் கொதித்துக் கொண்டு முன்னே வந்தார். ஆனால் அவர் இருந்த இடத்தை விட்டு அசையவுமே அவர் கழுத்திற்கு கத்தி வந்தது வரதன் ஆளிடமிருந்து… 
குடும்பம் முழுதும் பதறும் முன்னே கார்த்திக் அந்த ஆளை இழுத்து வெளியே தள்ளி இருக்க, அந்த குடும்பத்திற்கு அரணாய் நின்றவன் அனல் பார்வையுடன், “இந்த குடும்பத்துக்கு உங்களால ஏதாவது தொந்தரவு வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன். அப்படியே ஏதாவது செய்ய முயற்சி செஞ்சாலும் அது என்னை குறிவைப்பதற்கு சமம்.” என்று வரதனிடம் சீற, மீராவிற்கு இருப்பு கொள்ளவில்லை.
“இப்படி சினிமா வசனம் எல்லாம் பேசினால் உங்களை அப்படியே நம்பிடுவோமா… எவ்வளவு மனஉளைச்சல் கொடுத்திருப்பீங்க ரெண்டு பேரும்…” வரதனின் செயலில் கார்த்திக்கையும் சேர்த்து பேச, குற்றமற்ற கார்த்திக்கின் மனது அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
“இப்படி சினிமா வசனம் எல்லாம் பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனக்கு தெரியாமல் என் குடும்பத்திலிருந்து உங்களுக்கு பிரச்சனை வந்திருக்கு. காவல் அதிகாரியாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னோட கடமை அதைத்தான் நான் செய்யுறேன். இதை நம்ப கடினமா இருந்தாலும் இதுதான் உண்மை.” என்று கார்த்திக் தன் தரப்பை விளக்க, பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே சென்றது.
“டேய் நீ என்ன என்னை குற்றவாளியாகவே முடிவு செய்துட்டீயா? இந்த பொண்ணு சொல்வதை நம்பி என்னையே தப்பா நினைக்குற?” வரதன் இப்போது சுப்பிரமணியனாக பேச, மசியவில்லை மகன்.
“இவ்வளவு பேச்சுக்கள் நடக்குது ஆனால் உங்கள் தரப்பு நியாயமா இதுவரை ஒத்த வார்த்தை கூட வரலையே? அப்புறம் எப்படி உங்களை நம்புவது?” காவலன் தோரணையில் பேசினாலும் தந்தை இதையெல்லாம் மறுத்து தனக்கு சாதகமாய் ஏதோவொரு ஆதாரம் காட்டிட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும், ஆதங்கமும் மகனாய் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது. 
“நியாயம் இருந்தால் தானே வரும்?” எள்ளலாய் மீராவை முந்திக்கொண்டு ராகவ் முன்னே வர, ராகவை எதிர்கொள்ளவே சங்கடமாய் இருந்தது கார்த்திக்கிற்கு. காலையில் ராகவிற்கு கொடுத்த நம்பிக்கை வாக்குறுதிகள் என்ன இப்போது அவனே அவன் தந்தையால் குற்றவாளி கூண்டில் நிற்பதென்ன… 
“வார்த்தை தடிக்குது, தொலைச்சி கட்டிடுவேன் உங்க எல்லோரையும்.” வரதனாய் ராகவை மிரட்ட, இவரின் இந்த இருவேடத்தை காணத்தான் சகிக்கவில்லை அங்கிருந்தவர்களுக்கு.
“என்ன உங்க முன்னாடியே உங்க அப்பா இப்படி மிரட்டுறாரு நீங்க பார்த்துட்டு சும்மா இருக்கீங்க? இது தான் நீங்க எங்களை பாதுகாக்கும் லட்சணமா?” எதற்கும் அடைப்படாத காட்டாறாய் மீரா தன்னுள் புதைந்திருந்தவற்றை தட்டி எழுப்பியிருக்க, உணர்ச்சிகள் உச்சாணிக்கொம்பில் உயர்ந்து அவளை ஆட்டுவித்தது. 
அவளின் வார்த்தைகள் கார்த்திக்கையும் உணர்ச்சிக் குவியலில் இழுக்கவே செய்தது. பெற்றவரையே எதிர்க்கும் நிலை வருமென்று தெரிந்திருந்தால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் பழகி இருப்பான். கண்களில் இருந்து நீர் வழிந்துவிடுமோ என்ற பயம் கூட எட்டிப்பார்க்க, அதை கவனித்திருந்த சுப்பிரமணியம் நாவடக்கம் இழந்தார்.
“ஏய் என்ன வாய் நீளுது? நீ ரோட்டில் நடந்து போனால் உன்னை ஏறெடுத்து பார்க்க நாதியில்லை. நீயெல்லாம் என் பையனை பேசுறீயா?”
இதற்கு தன்னை உத்தமன் என்று சொல்லிக்கொள்ளும் அவரின் மகன் ஏதேனும் சொல்லுவானா என்பது போல மீரா கார்த்திக்கை பார்க்க, அவன் அதிர்ந்து நின்றிருந்தான். தந்தையின் வார்த்தைகள் அழுக்காய் வந்து இதுவரை பார்த்ததில்லை அவன். பெண்களை மதிக்கவே அவனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க, தந்தை செயல் அதற்கு முற்றிலும் மாறாய் இருந்தது. அன்னை வளர்ப்பில் தந்தையை பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கிறோம் என்ற நிதர்சனம் அவனை அயர்விற்கு இழுத்துச்செல்ல அதிலிருந்து சட்டென்று வெளிவர முடியவில்லை.
“மரியாதையா பேசுங்க. எங்க வீட்டிற்கே வந்து எங்க பொண்ணையே தவறா பேசறீங்க.”
“உண்மையத் தானே சொல்றேன். நாலனா பெறக்கூட வக்கிள்ளாதவளை எவன் திரும்பிப் பார்ப்பான்? கடைசிவரை வீட்டுக்குள்ளே அடைஞ்சி புழுங்கப்போறவ பெரிய பதவியில் இருக்கும் என் பையனை பேசுவாளா? வெளில போய் பாரு, ஒருத்தன் மதிக்க மாட்டான், மதிப்பு என்ன பார்வைகூட உன்மேல விழாது, அப்படியே விழுந்தாலும் அது மரியாதையா விழாது.” என்று வரதனின் அழுக்குகள் வெளிவர, மீராவின் தன்மானம் வெகுவாய் சீண்டப்பட்டது. 
என்ன தவறு செய்துவிட்டாளென இந்த பேச்சுக்கள்? இந்த எலக்காரங்கள்? மரியாதையற்ற கீழான பார்வைகள்? அவமரியாதை எல்லாம்? வெட்கமே இல்லாமல் வரதன் நடுவீட்டில் நின்று இவ்வளவு பேசும் போது எதில் குறைந்துவிட்டாள் இவள்?அழகை மட்டும் இழந்ததற்கு இத்தனை பேச்சுக்கள் என்றால் இந்த அழகற்றவளை எதற்கு மணக்க கேட்க வேண்டும்? தன்னம்பிக்கை இழந்து ஊமையாகியிருப்பவளை எப்படியும் வளைக்கலாம், அடிமையாக்கி வைத்திருக்கலாம் என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? அதற்கு தானே வலியச் சென்று தலை கொடுத்ததை என்னவென்று சொல்ல? என்று சிந்தனைகள் செல்ல, இன்னொன்றும் தோன்றியது. அவரது பேச்சிற்கு நிச்சயம் ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று தோன்றிய கணம், பார்வை கார்த்திக்கிடம் சென்றது.
அழகில்லை என்று கீழாய் பார்த்தவரின் கண்ணெதிரே அவரின் மகனுடன் இருந்தால் அதை தினம் தினம் அவர் பார்த்து ரசிக்கும் தண்டனை எப்படியிருக்கும்? அவரது மொழியில் அனுதினமும் அவர் மகனே அவளை ஏறெடுத்து பார்த்து வாழும் வாழ்க்கை அமைந்தால் என்ன செய்வார் இந்த மனிதர்? அவளோடு அவர் மகனின் பெயரும் அனைத்திலும் அடிபட்டு அவள் மீது படரும் பார்வைகளில் பாதி அவன் மீதும் விழுமல்லவா? அப்போது முகத்தை எங்கே சென்று ஒளித்துக்கொள்வார்? என்னை திருமணம் செய்ய விழைந்தார் அல்லவா இப்போது அவர் மகனுக்கு மனைவியானால் என்ன செய்ய முடியும் இந்த கேடுகெட்டவரால்? அவளோடு சேர்த்து அவர் மகனும் நன்றாக அனுபவிக்கட்டும், என்ற  விபரீத எண்ணங்கள் வர, அதற்கு  மேல் யோசிக்காமல் கார்த்திக்கிடம் விரைந்து அவன் எதிரில் சென்று நின்று கூர்மையாய் பார்த்தாள்.
அவளை ஏறெடுத்து பார்க்க திராணியற்று குனிந்த தலை நிமிராத கார்த்திக், “சாரி. உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சி தான் உதவுறேன்னு சொன்னேன். ஆனால் பிரச்சனையும் தொந்தரவும் என்  தரப்பிலிருந்தே  வரும்னு நினைக்கல.” என்க, ராகவும், ரகுநாதனும் வரதனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.
“இப்போவும் நல்லது செய்யலாம். செய்வீங்களா?” என்று மீரா கேட்க, நிமிர்ந்து அவளின் கண்களை பார்த்தவன் நம்பிக்கையுடன், “கண்டிப்பா எதுனாலும் செய்றேன். என்ன செய்யணும்?”
எப்படி கேட்க என்று வார்த்தைகளை தேடியவள், “என்ன கல்யாணம் செய்துக்கோங்க.” என்று வேண்டலாய் அல்லாது முடிவாய் சொல்ல, அனைவரின் கூச்சலும் ஒருசேர அதிர்வில் நின்று, விழிகள் இவர்கள் புறம் திரும்பியது.
“மீரா என்ன செய்ற நீ?” என்ற அவள் குடும்பத்தினரின் கேள்விகள் எல்லாம் காதிலே விழவில்லை. வரதன் கத்துவது இருவர் காதினிலும் விழவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
உன் முடிவென்ன என்று மீரா அவனை பார்த்திருக்க, இப்படி இவள் கேட்பாள் என்று எதிர்பார்த்திராதவன் ஒருநொடி அதிர்ந்து பின் சிந்தனைக்கு செல்ல, மறுப்பதற்குத் தோன்றவில்லை அவனுக்கு. தந்தை செய்த செயலுக்கு பிராயச்சித்தம் செய்த மாதிரியும் இருக்கும், அவரின் கண்ணெதிரிலே அவளை உயரிய இடத்தில் வைத்து மரியாதையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டி அவரின் எண்ணங்களை பொய்த்த மாதிரியும் இருக்கும் என்று எண்ணியவன் பதிலை மொழியாய் சொல்லாது செயலில் காட்டினான். அனைவரும் உணரும் முன்னரே  வரதன் கொண்டுவந்திருந்த மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தினில் கட்டி அவளது வாழ்க்கையில் இணைந்துகொண்டான் கார்த்திக்.
வரதன் சுப்பிரமணியனாய் பதறியதோ, மீரா குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்ததோ எதுவும் கருத்தில் பதியவில்லை. நிமிர்ந்து தன்னிடம் தாலி வாங்கிக்கொண்டவள் கரத்தினை தன்னுள் பொதித்துக் கொண்டவன், “எப்போதுமே நான் உனக்கு துணையிருப்பேன்.” என்றது தான் அவளிடம் விடைபெறுவதற்கு முன் அவன் பேசியது. 
மீரா அமைதியாய் அவனைத் தான் பார்த்திருந்தாள். பதட்டமோ ஐயமோ படபடப்போ என்று எதுவுமின்றி நிம்மதியாய் உணர்ந்தவள் வரதன் புறம் ஒரு வெற்றிப் புன்னகை வீச, கொதித்துவிட்டார் அவர்.
“என் பையன் வாழ்க்கையையே நாசமாக்கிட்டல்ல…”
“போதும் நிறுத்துங்க. உங்க போலி கலைஞ்சி ரொம்ப நேரம் ஆச்சு. உங்களையே நம்பி இருந்ததற்கு என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சிட்டீங்க. இனியும் கொஞ்சமாச்சும் மகன் என்று என் மேல பாசமிருந்தால் இந்த குடும்பத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் நான் தான் உங்களுக்கு முதல் எதிரி. கிளம்புங்க இங்கிருந்து.” என்று அவரை பிடித்து வெளியே இழுத்து அவரின் காரினுள் ஏற்றி அனுப்பியவன், வாயிலில் அதிர்வுடன் நின்ற மீராவின் குடும்பத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, 
“இனி அவர் நிழல் கூட உங்க மேல விழாத மாதிரி நான் பார்த்துக்கறேன். உங்க பொண்ணு வாழ்க்கையில் உங்க சம்மதம் இல்லாமல் நுழைந்தது தப்புதான். ஆனால் அதை நினைத்து என்றுமே நீங்க கவலைப்படுகிற மாதிரி நடந்துக்க மாட்டேன். எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு திரும்ப ஊருக்கு போகணும். ட்ரான்ஸ்பெர் கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரம் திரும்ப வரேன்.” என்று  பதில் எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான். 
கிளம்பியவன் முதலில் அழைத்தது விக்ரமிற்கு தான். நடந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டவன் தன் தந்தை மீரா வீட்டிற்கு எதுவும் தொந்தரவு  தராதபடி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு,  துறையிலிருந்து தன் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை மீரா வீட்டிற்கு கொடுக்குமாறு மாற்றிவிட்டு அங்கிருந்து மனம் நொந்து, விட்டேற்றியாய் கிளம்பினான். மாற்றலுக்கு ஏற்பாடு செய்ததே வரதனாகிய அவர் தான் என்பதனால் தான் சரியாக மாற்றல் ஆர்டர் கைக்கு கிடைக்கும் நாளான இன்று மட்டும் காலை வீட்டினில் அவனுக்கு பார்த்து பார்த்து சிற்றுண்டி பரிமாறி அவனுடன் நேரம் செலவழித்தாரா என்ற சந்தேகமும் வர, இத்தனை வருடங்கள் பாசத்தை கொட்டியதும் பொய்யோ என்று தான் நினைக்கத் தோன்றியது மகனுக்கு.
எதுவோ துரத்துவது போல அதிலிருந்து தப்பிக்க ஓடி ஓடி களைத்து ஒருவாரத்திலேயே அயர்த்து போனவன் ஒருவழியாய் மீராவை பார்க்க திருவண்ணமலையிலிருந்து சென்னை சென்றான். இந்த பயணத்தில் மருந்துக்கும் இத்தனை வருடம் தன்வீடாய் இருந்த பங்களாவை பற்றி நினைக்கவுமில்லை, அங்கு செல்லவுமில்லை. 
மீரா வீட்டிலிருந்தபடியே அவசரமாய் மீண்டும் திருவண்ணாமலைக்கு கேஸ் விஷயமாய் வந்து வரதனை அந்த விடுதியிலேயே பார்க்க, மனம் மீண்டும் விட்டுபோயிற்று. இத்தனை வருடம் அவருடைய போலித்தன்மை தெரியாமல் வளர்ந்தது தன்னுடைய முட்டாள்தனமா இல்லை அவர் புத்திசாலியாய் காய்நகர்த்தி நடித்தரா என்று புரியாத நிலையில் இனியும் அவரின் பின் என்னென்ன ரகசியங்கள் மறைந்திருக்கிறது என்று அறியாமல் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான். 
முடிவு எடுத்தாகிவிட்டது தான் ஆனால் பாசம் வைத்த நெஞ்சம் துரோகத்தை எண்ணி எண்ணி விம்ம, வரதன் என்ற போலி எதற்கு? வரதன் உண்மையா இல்லை சுப்பிரமணியன் உண்மையா? எதற்காக இந்த பித்தலாட்டம்? என்று கேள்வி பட்டியல் நீண்டுகொண்டே போனது. மனம் அமைதியற்று தவிக்க தேற்றுவார் தான் யாருமில்லை… 
விந்தையிலும் விந்தையாய்… வாழ்க்கையின் முரணாய் தந்தை அதர்மத்தின் உருவாய் இருக்க, மகன் அவர்களை தட்டிக்கேட்கும் சத்ரியனாக வளர்க்கப்பட்டுவிட்டான். அதன் பலனாய் தந்தை செய்யும் காரியங்களை செமிக்க முடியாமல் மகன் துக்கம் அனுபவிக்க, தந்தையோ அதை உணர்ந்த மாதிரியே தெரியவில்லை. தன்னை கைது செய்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வரதன், பலருக்கு அழைப்புகளை பறக்கவிட முனைந்து தோற்க, மகன் கூட அந்த ஊரினில் தான் இருக்கிறான், அவன் தலைமையில் தான் இந்த கைது நடக்கிறது என்ற உண்மை புரியும் நிலையில் இல்லாமல் மதுவின் வீரியத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார். 

Advertisement