Advertisement

அதுக்கில்லை சார்… இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…
சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு செய்து பண்டமாற்று முறையைப் போல தங்களுடைய காதலியையோ மனைவியையோ மாற்றிக்கிட்டு(swap) செஞ்சு உல்லாசமா இருக்கானுங்க. அந்த பெண்களும் எல்லாத்தையும் தெரிஞ்சி தான் வராங்க. எவ்வளவு அருவருப்பான செயல்… இப்போ அவனுங்களை வளரவிட்டால் நாளைக்கே இதில் புரளும் பணத்தை கண்டு வெகுளிப் பெண்களை குறிவைத்து அவர்கள் வாழ்க்கையையே சிதைச்சிடுவாங்க. உல்லாசம், மேலை நாட்டு கலாச்சாரம் என்று சீரழியவென அந்த ரிசார்ட்டிற்கு செல்லும் பெண்களால் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கும் ஆபத்து. உல்லாசம் எனும் பெயரில் கிளம்பியிருக்கிற இவங்க எல்லாம் தங்களோடு சேர்த்து இந்த சூழ்நிலையையும் அசிங்கமாக்கிட்டு இருக்காங்க.என்றவனால் என்ன முயன்றும் எழும் குரோதத்தை தவிர்க்க முடியவில்லை. 
ஒருபுறம் முன்னேற வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் நேர் சிந்தனை கொண்ட அப்பாவிப்பெண்கள் பலர் அவலைகளாக மாறி வருகிறார்கள். மறுபுறமோ பகட்டில் புரளும் பெண்கள் சிலர் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டு பெண்குலத்திற்கே கரும்புள்ளியாகிறார்கள். இந்த இரு மாறுபட்ட பெண்களையும் ஒரே கோணத்தில் பார்க்கும் வக்கிர ஆண்கள் சுலபமாய் வெகுளிகளை கட்டாயமாக தங்கள் வசப்படுத்தி அவர்களை சீரழிக்கிறார்கள். இந்த இரண்டு சாரரை தவிர்த்து வெகுளிக்கும் அதிமேதாவிக்கும் இடையில் வாழ்க்கையை வரையறுக்க முடியாமல் குழம்பி தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்கிறார்கள் சிலர். இதெற்கெல்லாம் தீர்வு தான் என்ன? எதையும் தராசில் வைத்து பார்க்கும் தெளிவானப் பார்வை. படிப்பு மட்டும் அதை கொடுத்துவிடும் என்று நம்புவதை விட, நடைமுறை இன்னல்களை எதிர்கொள்ளும் யுக்திகளை மனதில் பதிக்க வேண்டும். அதற்கான புரிதலை அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும்… அதற்கு தன்னால் முடிந்த ஏதாவது செய்திட வேண்டும். கூடியமட்டில் தன் வீட்டில் தனக்கு உரிமைப்பட்டவளையாவது தெளிவாக்கி முன்னேற்றிவிட வேண்டும் என்று பல எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொண்டது. 
பரந்து விரிந்திருந்த அந்த விசாலமான இடத்தில் வண்ண விளக்குகள் பல ஒளிர்ந்து அவ்விடத்தையே அழகூட்டிக் கொண்டிருக்க, இரவின் இனிமையில் அவ்விடம் வெளியிலிருந்து பார்க்கும் போது அமைதியாகவே இருந்தது. வாயிலிலேயே இறங்கிக்கொண்ட கார்த்திக் சற்று தள்ளி காவல் வண்டியில் காத்திருந்த காவலாளிகளை வரச்சொல்லி அழைக்க, பத்து பேர் கொண்ட குழு ஒன்றாய் அந்த ஆடம்பர விடுதியினுள் நுழைந்தனர். அந்த விடுதியின் காவலாளி அவர்களை உள்ளே அனுமதியாமல் தடுக்க, அவனை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தவர்கள் நேரே அந்த விடுதியின் நிர்வாகியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து, அங்கிருந்த பிரத்யேக பப்பிற்குள் நுழைய வெளியே இருந்த அமைதிக்கு மாறாக அவ்விடமே அலறிக்கொண்டிருந்தது. ஆட்டமும் பாட்டமும் கலைக்கட்டியிருக்க முகம் சுழிக்க வைக்கும் நடனங்களும் அரங்கேறிக்கொண்டிருந்தன. 
சார்… இப்போ என்ன செய்யலாம்?” அறை முழுதும் பெரும்புள்ளிகள் பலர் தங்களை மறந்து மோன நிலையில் மூழ்கியிருக்க அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முனைந்து கொண்டிருந்த கார்த்திக், தன்னுடைய சக அதிகாரியின் கேள்வியில் பார்வையை இழுத்துப்பிடித்து நிறுத்தினான்.
இப்போவே பாதி பேர் அரை மயக்கத்தில் தான் இருக்காங்க. எல்லோரையும் அள்ளி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான். விடுதிக்கும் சீல் வச்சிடலாம்.என்று பதில் கூறியவனுக்குமே தெரிந்திருந்தது விடிந்ததுமே இவர்கள் எல்லாம் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி வெளியே வந்துவிடுவார்கள் என்று… மேலும் இந்த விடுதியும் மீண்டும் இக்கூத்தை தொடர வாய்ப்பிருக்கிறது என்றும் தெரியும்… எப்படியும் வெளிவந்து விடுவார்கள் என்பதற்காக பிடிக்காமல் இருக்க முடியாதே… 
பிடுங்க பிடுங்க முளைக்கும் களைகளை களையெடுக்காமல் விட்டால் அது பெருகி சுற்றி இருக்கும் அனைத்தையும் நாசமாக்கிவிடும், அதற்காகவேனும் இப்போது இதை பிடுங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிதர்சனம் அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் என்ன தெரிந்து என்ன பயன் அவன் எதிர்பார்க்காத ஒன்று கண்ணில் பட்டுவிட மனம் முழுதும் ஸ்தம்பித்து ரணமாகியது.
மது ஒருகையில் மாது மறுகையில் என்று அவ்விடத்தின் மூலையில் சுப்பிரமணியம் அமர்ந்திருக்க, எந்தவொரு பிள்ளையும் காண சகிக்க விரும்பாத அக்காட்சியை கண்டதும் கார்த்திக்கின் உடல் கூசியது. கோபுர உச்சியில் இருந்தவர் என்றோ கீழிறங்கியிருக்க, இன்றோ எழமுடியா பாதாளம் பாய்ந்து தரம்தாழ்ந்து போனார் மகனின் எண்ணங்களில்… 
அதற்குள் அவனை நோக்கி வேகமாக வந்த மற்றொரு காவல் அதிகாரி சுப்பிரமணியனை காட்டி, “அவருடைய பினாமி விடுதி தான் சார் இது. அதோடு இந்த ஸ்வாப் கலாச்சாரமும் இவர் மேற்பார்வையில் தான் நடக்குது.என்று சொல்ல, கார்த்திக் விதிர்விதிர்த்துப் போனான். 
அனைவரையும் போலவே தந்தையை முன்மாதிரியாக அவன் நினைத்திருக்க, அவனுக்கு முன் அவர் போட்டதெல்லாம் வேஷம் என்ற உண்மை கசக்கத்தான் செய்தது. அதோடு அருகில் இருந்தவனாலேயே இவரின் இந்த முகத்தை அறிய முடியாது போனது அவனின் செருக்கை அடக்கியது. இன்னும் என்ன கொடுமையெல்லாம் திரைமறைவில் அரங்கேறியதோ… என்ற நினைப்பே வறட்சியை ஏற்படுத்த, கனத்த மனதுடன் அனைவரையும் காவலில் எடுக்க சொல்லிவிட்டு, மேலும் செய்ய வேண்டிய காரியங்களை அறிவுறுத்திவிட்டு சுப்பிரமணியனின் கண்ணில் படாமல் அவ்விடுதியை விட்டே நகர்ந்தான் கார்த்திக். 
சுயவாழ்க்கையையும் காவல் வேலையையும் ஒன்றிணைத்து ஒன்றுக்கு ஒன்று சலுகை கொடுத்து இடம்கொடுக்க மாட்டேன் என்ற அவனது கொள்கை அந்த நொடி அடிபட்டு போனது. தன் அன்னையின் அருகில் மட்டுமே காண விரும்பிய ஒருவர் மதி கெட்டு திரியும் நிழற்படம் அகக்கண்ணில் வந்த கணமெல்லாம் வலித்தது. வலித்துவிடுமே என்று பயந்து முதல்முறை அவருடைய முகத்திரை கிழிந்தவுடனேயே அவரை பற்றி விசாரிக்காமல் விட்டதுதான் இன்று அடுத்த அதிர்வில் கொணர்ந்து நிறுத்தியுள்ளது என்பதும் புரிந்தே இருந்தது அவனுக்கு.
விடுதியை விட்டு வெளியே வந்தவன் கால் போன போக்கில் நடந்தான். நிசப்தம் அவனின் நினைவுகளை கலைக்காமல் ரணத்தை கீறிவிட, எண்ணங்கள் ஒருவாரம் பின்னோக்கி சென்றது. 
ராகவ் பேசிவிட்டு சென்றவுடன் விக்ரமுடன் பேசிக்கொண்டிருந்த போது திடுமென உங்களை திருவண்ணாமலைக்கு மாற்றல் செய்திருக்கிறோம் என்ற fax வந்ததுமே இது வரதனின் வேலையாகத்தான் இருக்கும் என்று யூகித்திருந்தான் அவன். 
இது கண்டிப்பா அந்த வரதன் வேலையா தான் இருக்கும். இப்போ தானே ராகவ் வந்து பேசிட்டு போனாரு… எங்கே அவர் நம் உதவியை நாடிடுவாரோ என்ற பயம். உங்க அப்பாவுடைய கம்பெனி பெயரை வைத்தும் வேற ஏதோ செய்றான் அதான் அவனுடைய தில்லாலங்கடி வெளியே தெரிஞ்சிடக் கூடாதுன்னு இந்த வழக்கில் நீ முழுமூச்சாய் இறங்கும் முன்னமே உன்னை மாற்றிட்டாங்க.என்று கார்த்திக் எண்ணியதையே விக்ரமும் சொன்னான். 
அதுவும் உடனே நான் திருவண்ணாமலை போய் பொறுப்பை ஏத்துக்கணுமாம்… நாம நினைத்த மாதிரி சில்லறை ஆள் இல்லை இந்த வரதன். ஏதோ பெரிய சதி நடக்குது.என்று கார்த்திக் யோசனைக்கு செல்ல, விக்ரம், “இன்னைக்கே போகனுமா என்ன… இந்த வாரத்திற்குள் வரதனை கண்டுபிடிச்சிட்டு அப்புறம் அங்கே போயேன்.
அது முடியாது. இன்றைக்குள் நான் அங்கே போகணும். எல்லாம் திட்டம் போட்டு தான் செய்திருக்காங்க. நான் போய் அங்கே ஜாயின் பண்ணிட்டு இரவே ராகவை பார்த்து பேசுறேன். இனிதான் அவங்க சுதாரிப்பா இருக்கணும். கான்ஸ்டபிள் ஒருவரை அவங்க வீட்டுக்கு காவலுக்கு அனுப்பு விக்ரம்.என்று விக்ரமிற்கு சில யோசனைகளை வழங்கிவிட்டு, தந்தையிடம் சொல்லிக்கொண்டு சென்னை அலுவலகத்தில் இருந்து விடுபட்டு நேரே சொந்த காரில் திருவண்ணாமலை கிளம்பிச் சென்றான். சென்றவன் அங்கே பொறுப்பை ஏற்றுக்கொண்ட கையோடு யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் அனைவரின் பார்வையிலிருந்தும் மறைந்து வெளியே வண்டி சொல்லி மீராவின் வீட்டில் வந்து இறங்க, காத்திருந்தது அதிர்ச்சி… 
அவன் சொல்லியபடி எந்தவொரு காவல் அதிகாரியும் மீராவின் வீட்டுக்கு காவல் இல்லை. ஆங்காங்கே சிதறியபடி சந்தேகப்படும்படியான ஆட்களே நின்றிருந்தனர். உடனே விக்ரமை அழைத்துக் கேட்க, அவனோ ஒரு காவலாளியை அனுப்பி வைத்ததாய் சொல்ல, நொடிப்பொழுதில் அவனுக்கு ஏதோ புரிவது போல இருக்க, விபரீதம் உணர்ந்து வீட்டினுள் நுழைந்தான் கார்த்திக்.
அங்கே அடுத்த அதிர்ச்சி… ராகவ் காயத்துடன் நிற்க, அந்த குடும்பமே பதட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தது. வெள்ளை வேட்டி சட்டையில் வரதன் அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருக்க,
ராகவ்,” என்று கார்த்திக்கின் விளிப்பில் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் புறம் திரும்ப, வரதனை கண்ட கார்த்திக்கிற்கு அடுத்த அதிர்வு.
நீங்க இங்கே என்ன செய்றீங்க அப்பா?” கார்த்திக்கின் குரல் அவனுக்கே கேட்காத அளவு ஒலிக்க, வரதன் என்கிற சுப்பிரமணியன் கார்த்திக்கின் வரவை அந்த நேரம் எதிர்பாராது திகைத்து விழித்தார்.
நீ எப்படி இங்க?” சுப்பிரமணியத்தின் குரலில் அதிர்வும், நடுக்கமும் ஓடியது. மாற்றலாகி போனவன் சென்னை திருப்புவதற்குள் இந்த குடும்பத்தை காலி செய்துவிட வேண்டும் என்பது தானே அவரது திட்டமே… 
ஓ… இதுதான் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதா?” என்று மீராவின் குரல் திடுமென ஆங்காரமாய் ஒலிக்க தற்காலிகமாக அதிர்ச்சிகள் பின்னே சென்றன.
மீராவின் பார்வை கார்த்திக்கிடம் நிலைக்க, அவனோ புரியாத பாவனையுடன், “என்ன சொல்ற நீ?”
அப்பாவும் பிள்ளையும் நல்லாவே நடிக்குறீங்க…என்றவள் பார்வை தீண்டத்தகாதவையை நோக்கும் கண்ணோட்டத்துடன் தந்தையையும் , மகனையும் வட்டமிட்டது.
இங்க என்ன தான் நடக்குது? அப்பா நீங்க இங்கே இந்த நேரத்தில் என்ன செய்றீங்க? இவங்களை முன்னரே தெரியுமா உங்களுக்கு? வரதன் யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று தந்தையிடம் கார்த்திக் கேள்விகளை அடுக்க, பதில் மீராவிடமிருந்து வந்தது.
என்ன அருமையா நடிக்குறீங்க இரண்டு பேரும்… அப்பா வயது வித்தியாசம் பார்க்காம என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி மிரட்டுவாராம்… புள்ளை அக்கறைப்பட்டு எனக்கு உதவுறேன்னு மறுவழியா வருவாராம்… என்ன பித்தலாட்டம் இது? எதுக்கு இந்த நாடகம்? நானும் என் குடும்பமும் உங்களுக்கு அப்படி என்ன கெடுதல் செய்துட்டோம்னு இப்படி எங்களை ஏமாற்ற கிளம்பி இருக்கீங்க? என்ன தான் வேணும் உங்க இரண்டு பேருக்கும்?” மீராவே களத்தில் இறங்கி ஆங்காரமாய் கத்த, இதற்கு மேலுமா நிலைமை புரியாமல் போகும் கார்த்திக்கிற்கு… 
அடிபட்ட பாவத்துடன், அடக்கப்பட்ட ஏமாற்றத்தை சமாளித்து, தொண்டையில் உருள எழும் உருண்டையை விழுங்கி, வலித்த மனதுடன் தந்தையை நோக்கியவன், “எனக்கும் அம்மாக்கும் நல்ல மரியாதை கொடுத்துட்டீங்க…என்றதை தவிர வேறெதுவும் பேசவில்லை கார்த்திக். 
சுப்பிரமணியனோ மகனின் பேச்சில் விக்கித்து நின்றார். நிலைமை எல்லைமீறி இருக்க, அதை இழுத்து பிடிக்கக்கூட அதிர்வில் எந்த யோசனையும் வரவில்லை அவருக்கு… 
மகள் வயதுள்ளவளை மணமுடிக்க சொல்லி கேட்டதிலேயே அவரின் போலி கலைந்துவிட, அடாவடி செய்யும் வரதனும், அதற்கு நேர்மாறாய் தன் மீது அன்புமழை பொழிந்த சுப்பிரமணியனும் ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டினாலும், விழி எதிரே விரிந்திருக்கும் உண்மை அனல் இல்லாமலே அனலாய் கார்த்திக்கை பொசுக்கியது. 
அந்த உண்மை மீரா வீட்டினர் முன் அவனை தலைகுனியச் செய்ய, கைகளை கூப்பியவன், தந்தையின் செயலில் கூசி, “மன்னிப்பு கேட்கக் கூட அருகதை இல்லாத தவறை இவர் செய்திருக்கார். இனி இவரால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராமல் பார்த்துக்கிறது தான் இதற்கு பிராயச்சித்தமா இருக்கும்னு தோணுது. அதோடு உங்க வீட்டு பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பதும் என் பொறுப்பு.என்று வாய்வார்த்தையாய் கூட மன்னிப்பு யாசிக்காது நிகழ்ந்தவற்றை நேர்படுத்துவதாய் வாக்கு கொடுத்தான்.
இத்தனை வருடம் தன் குடும்பத்தினரிடமிருந்து மறைத்து வைத்திருந்த வரதன் என்ற அடையாளம் மீரா குடும்பத்தால் தெரியவந்தது சுப்பிரமணித்தினுள் பிரளயத்தை ஏற்படுத்த, வஞ்சமும் கொஞ்சமல்ல மிகுதியாகவே தொற்றிக்கொண்டது.

Advertisement