Advertisement

அதை வியப்புடன் கண்ட சுஜா, நமட்டு சிரிப்புடன், “அவங்க சாப்பிடல,”
அவள் சொல்வது புரியாமல் கண்களை சுருக்கியவள், “என்ன சொல்றீங்க அண்ணி?”
வெளிய சாப்பிடுறதுக்கு முன்னாடி நீ கேட்ட கேள்விக்கான பதில்.என்று புதிரிட்டுவிட்டு நகர்ந்துவிட, மீராவுக்கு சட்டென சுஜா என்ன சொல்லிவிட்டுச் சென்றால் என்று புரிந்தது. 
மனம் கேளாமல் உடனேயே கட்டிலில் கிடத்தியிருந்த புது அலைபேசியை உயிர்ப்பித்தவள் அதில் யாருடைய தொலைபேசி எண்ணும் இருக்கிறதா என்று பார்க்க, அவசர எண்களை தாண்டி கார்த்திக் என்ற பெயரில் ஒரு நம்பர் மட்டும் இருந்தது. யோசிக்கவெல்லாம் இல்லை அடுத்த நொடி அந்த எண்ணிற்கு அழைத்துவிட்டாள் மீரா. அழைப்பு சென்ற இரண்டொரு ரிங்கில் அவன் எடுத்துவிட,
ஹே… புது நம்பர் ஆக்டிவேட் ஆகிடுச்சா?” என்று தான் பேச்சையே துவங்கினான் கார்த்திக்
சாப்பிட்டுட்டு என்ன வேலை இருந்தாலும் செய்யுங்க. மதியமும் நீங்க சாப்பிடல.என்பதுதான் அவளது பதிலாய் இருந்தது.
அவளின் அக்கறையிலும் கனிவிலும், தன்னை கவனித்திருக்கிறாள் என்ற நிதர்சனத்திலும் மனம் லேசாகிவிட, பயணித்துக் கொண்டிருந்த காரின் இருக்கையில் சாய்வாய் அமர்ந்த கார்த்திக், “அக்கறை எல்லாம் பலமா இருக்கு?” என்று இயல்பாய் பேச்சை வளர்த்தான்.
நீங்களே உங்களை கவனிச்சிக்கிட்டா நான் ஏன் இதெல்லாம் கேட்கப் நகைக்?” என்று அவனின் பதிலையே திருப்பிக் கொடுத்தாள் மீரா.
நல்லா காப்பியடிக்குற, பரிட்சையிலும் இப்படித் தானா?”
ஹலோ… நான் யூ.ஜில கோல்ட் மெடலிஸ்ட் ஆக்கும்,” என்று பெருமை பேசினாள் பெண்.
அப்படியா? ஆனால் பார்த்தால் அப்படி தெரியலையே.படிப்பின் மீது அவளுக்கு ஆர்வம் இருக்க வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்தவன் அவளின் மனதை படிப்பின் புறம் திசை திருப்பவென அவளிடம் வம்பு செய்தான் அந்த போலீஸ்காரன்.
என்ன தெரியல?” என்று கேட்டாள் உர்ரென்று.
இவ்வளவு நல்லா படிக்குறவ எப்படி பைனல் எக்ஸாம்ஸ் மட்டும் எழுதாம இருப்பாளாம்?” என்று பேச்சோடு பேச்சாய் கேட்டுவிட, அமைதியாகிவிட்டாள் மீரா.
மீரா இருக்கீயா லைனில்?”
அவளின் முனகலே பதிலாய் வந்தது.
நீ ஏன் மீதி இருக்கும் பரிட்சையை எழுதக்கூடாது?”
ஏன் எழுதணும்?” என்று விதண்டாவாதம் செய்தாள் மனைவி.
என்ன கேள்வி இது? இன்னமுமே பலருக்கு மேல்படிப்பு எட்டாக்கனியா இருக்கு. ஆனால் கோல்ட் மெடல் வாங்கியவள் படிப்பை முடிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இங்க பாரு, படிப்பு வேலைக்கு போய் சம்பாரிக்கிறத்துக்காக மட்டுமில்லை, நம்மை நாமே செதுக்கி நம்மை வாழ்க்கை தரத்தை உயர்திக்கவும் நம்மை சுற்றி இருக்குற சுற்றத்தை பேணுறதுக்கும் ரொம்ப முக்கியம். எக்ஸாம் எழுதி டிகிரி கையில வாங்குனதும் நீ வேலைக்கு போகணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அது உன் விருப்பம் பட் பாதியில் நிற்கும் உன்னோட படிப்பை நீ முடிச்சு தான் ஆகணும். இதை நான் வற்புறுத்துறதா நினைச்சாலும் சரி, அக்கறையில் சொல்றேன்னு நினைச்சாலும் சரி.என்க, ஏனோ ஒவ்வொரு முறையும் அவனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டாள் பாவை.
நான் எழுதுறேன்.
குட். அதுக்கு என்ன செய்யணும்னு விசாரிச்சு வை. நான் வந்ததும் ஒருநாள் காலேஜ் போய் பரிட்சைக்கு அப்ளை செய்துட்டு வந்துறலாம்.என்று அவன் சொன்னதும், அவளிடம் பழைய வீம்பு திரும்பிட, 
நீங்க ஒன்னும் வரவேண்டாம்.என்று கழுத்தை நொடித்துக்கொண்டாள் மீரா. 
ஏனாம்? நீங்க தனியா போகப்போறீங்களோ?” என்று சாவகாசமாய் கேட்டான் அவன். அவளுடன் மல்லுகட்டுவது சுவாரசியமாய் இருக்க, காற்றை கிழித்துக்கொண்டு கார் அதிவேகமாய் விரைந்தாலும் சன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் அவனுக்கு பேய்க்காற்று கூட தென்றலாய் தெரிந்தது.
நான் ராகவ் கூட போவேன்.
எதுக்கு சும்மா சும்மா அவரை தொந்தரவு செய்யுற? ஒன்னு நீயா போ, இல்லைனா நான் வந்து கூட்டிட்டு போறேன்.
அவன் என் அண்ணன், நான் எப்போ கூப்பிட்டாலும் அவன் வருவான். அவனுக்கு இதெல்லாம் தொந்தரவு இல்லை.அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினாளா இல்லை தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டினாலா என்பதை அவளே அறியவில்லை.
அதை நீ சொல்லக்கூடாது, அவர் சொல்லணும்.
அவன் சொன்னா ஒத்துப்பீங்களா?”
என்ன ஒத்துக்கணும்?” என்றான் வேண்டுமென்றே.
போங்க… வேணும்னே என்கிட்ட மல்லுக்கு நிக்குறீங்க.என்றவளுக்கு எங்கிருந்து தான் சிணுங்களும், உரிமையும் சரளமாய் வந்ததோ அவனைக் கவுக்கவென…
அப்படியே நின்னுட்டாலும். நேரம் ஆச்சு நீ போய் தூங்கு மீரா. மணியாகுது.
அவனிடம் விதண்டாவாதம் செய்தவள் தன்னுடைய காரியத்தையும் மறக்கவில்லை, “நீங்க மறக்காம சாப்பிடனும்.என்று கண்டிப்பு காட்ட,
நீ சொன்ன பிறகு அப்பீல் ஏது! காலையில் கூப்பிடுறேன், நீ இப்போ நல்லா தூங்கு, என்னை நினைச்சிகிட்டே…என்றவன் அழைப்பை துண்டித்துவிட, அவனின் அகமும், புறமும் இலகுவாகி அந்த ரணகளத்திலும் குதூகலமாக இருந்தது. 
அவனின் உணவு விஷயத்தில் அவள் காட்டிய அக்கறை அவன் நெஞ்சை வருடிச் சென்றது. இவ்வளவு விரைவில் இயல்புத்தன்மை அவர்களுக்குள் வரும் என்று அவன் நினைத்ததுகூட இல்லை. ஆனால் வந்திருந்தது, எப்படி என்று தான் தெரியவில்லை. அவளுடன் சரிக்கு சமமாய் சிறிய விஷயத்திற்கு வாதாடுவது கூட பிடித்திருந்தது. இருப்பினும் மனதின் ஒரு ஓரத்தில் இதெல்லாம் இவள் சுயநினைவில் தான் செய்கிறாளா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை; கூடவே அவள் இயல்பு நிலைக்கு திரும்பியபின் இதேபோல அவனிடம் நடந்துகொள்வாளா என்ற அச்சமும் இடம்பெற தவறவில்லை.
இவனைப் போலவே பல மைல்கள் தொலைவில் இருந்த மீராவும் அவனுடன் பேசிய களிப்பில் காரணமின்றி நகைத்துக் கொண்டிருந்தாள். மனம் அதன்போக்கில் அவன் வசம் தஞ்சமாகியிருக்க இறக்கையில்லாமல் வானில் பறப்பது போன்றிருந்தது. அதே உணர்வுடன் கண்ணாடி முன்பு சென்று நிற்க, இப்போதோ ஆசையுடன் கழுத்தில் பிரண்ட மாங்கல்யத்தை தடவிப்பார்த்து சிலிர்த்துக் கொண்டாள். பிழையாய் தெரியும் அவளது இடப்பக்க கன்னங்கள் கூட அந்தக்கணம் தைரியத்தின் அடையாளமாய் தெரிந்தது. அவன் சொல்லிச் சென்ற அழகிற்கான அர்த்தம் புரிவதாய் இருந்தது. அகம் அழுக்கற்று அழகாய் இருக்க புறம் எப்படி இருந்தால் என்ன? அதை யார் அங்கீகரித்தால் என்ன? அங்கிகரிக்காவிட்டால் என்ன? அவளுக்குத் தெரியுமே அவள் எப்படிப்பட்டவள் என்று… அதற்கு மேல் மற்றவர்கள் சான்று கொடுக்க வேண்டுமா என்ன?
அவனுடன் பேசியதன் தாக்கம் நேர்மறை சிந்தனைகளாய் அவளிடம் எதிரொலித்தது. அதையே தான் சுஜாவும் தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் அண்ணனோட மீராவையும் திருவண்ணாமலை அனுப்பிட்டா என்ன?”
ஏய் இப்போ தான் ஏதோ கார்த்திக்கை ஏத்துக்க ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள எப்படி அனுப்புறது? அவள் இன்னுமே சரியாகலை சுஜா.என்று மறுத்தான் ராகவ்.
அண்ணன்கூட இருந்தால் சீக்கிரம் சரியாகிடுவான்னு தோணுது. அவள் பேசுனதை நீங்க கவனிச்சீங்களா இல்லையா?” என்றதும், ராகவ் சற்று முன் கார்த்திக் அழைத்தபோது நடந்த பேச்சை நினைவு கூர்ந்து,
கவனிச்சேன் தான். நான் முதலில் கதவை தட்டும் போது அவள் திறக்கல, கார்த்திக் பேச விருப்பப்படுறாருனு சொன்னவுடனேயே கதவை திறந்துட்டா.
சுஜாவும் தான் கவனித்தவற்றை சொன்னாள், “அதுக்கு முன்னாடி அழுதிருப்பாள் போல, முகம் எல்லாம் சோர்வா இருந்துச்சு. ஆனால் அண்ணன்கிட்ட பேச ஆரம்பிச்சதும் அவள் முகம் தெளிஞ்சிடுச்சு.
அவர்கூட ஏதோ ஏட்டிக்குப்போட்டியாய் வாயடிச்சி மாட்டிகிட்டா போலிருக்கு. பேசிட்டு இருக்கும் போதே ஒரு மாதிரி அசடு வழிஞ்ச சிரிப்போட போனை கட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டு ஓடிட்டா. நான் இதுவரை அவளை இதுமாதிரி பார்த்ததே இல்லை.என்று ராகவும் தூர இருந்து தான் கவனித்து கணித்தவற்றை கனிவுடன் பகிர்ந்தான்.
இதிலிருந்தே தெரியலையா? அவளுக்கு ஒரு மாற்றம் வேணும், அந்த மாற்றம் கார்த்திக் அண்ணன் தான். அவங்களுக்குள்ள ஒத்துவருமான்னு நாம கவலைப்பட்டுட்டே இருக்கிறதுக்கு பதிலா அவளை அங்கு அனுப்பி தான் பார்ப்போமே. புது உறவில் கவனம் போகும் போது தானாய் பழைய வடு மறைய வாய்ப்பிருக்கு. அதோடு புது சூழலும் புது மனிதர்களும் அவளுக்கு ஒரு மாற்றமா இருக்குமே. இங்கே இருந்தால் பழசையே நினைச்சிட்டு இருப்பா, இந்த இடமும் அவளுக்கு அதை நியாபகப்படுத்திட்டே இருக்கும்.
இருந்தாலும் எனக்கு மனசு ஒப்பல சுஜா. கல்யாணம் தான் எப்படியோ ஆச்சு ஆனா அவங்க வாழ ஆரம்பிக்கிறப்போ அம்மு முழுமனசோட இதை ஏத்துக்கிட்டதா இருக்கணும்.என்று ராகவ் தலையை சிலுப்ப, அவன் தோளில் சாய்ந்து அவன் இடையை கட்டிக்கொண்டவள், 
சரி இப்போதைக்கு அனுப்ப வேண்டாம். அண்ணன் அவளுக்கு போன் வாங்கி கொடுத்துட்டு போய் இருக்காங்க. சோ அவங்க கொஞ்சம் பேசி பழகட்டும் அப்புறம் நாம அனுப்புவோம்.என்று தற்காலிகமாய் அதற்கு முற்றுபுள்ளி வைத்தாள் சுஜாவும்.
***
சில மணிநேர பயணத்திற்கு பிறகு காரின் பின்புற இருக்கையில் அமர்ந்து இரவு உணவு உண்டுகொண்டு வருபவனை திரும்பிப்பார்த்த ஓட்டுனர்,
சார், திருவண்ணாமலை நெருங்கிட்டோம். எங்கே போகணும்னு சொன்னா போயிடலாம்.
இங்க அப்படியே ஓரமா நிறுத்துங்க,” என்றவன் சாப்பிட்டுமுடித்து மீதமிருந்ததை பொட்டலாமாய் மடித்தவன் கார் நின்றவுடன் இறங்கி அதை தூரவீசி கைகழுவி விட்டு, மீராவுக்கு முதலில் தான் இரவு உணவு உண்டதை குறுஞ்செய்தியாய் அனுப்பினான். பிறகு யாருக்கோ அழைத்து தகவல் கேட்டுவிட்டு வண்டியை அருகில் இருந்த சுங்கச்சாவடிக்கு விடச்சொன்னான்.
எங்க போகணும்னு சொல்லுங்க சார் அங்கேயே கொண்டுபோய் விட்டுறேன்.என்று அந்த ஓட்டுனர் அதிக உரிமை எடுத்துக்கொள்ள முயல, கார்த்திக் முறைத்த முறைப்பில் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டு அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டான். அங்கே ஏற்கனவே இருசக்கர வாகனம் வைத்துகொண்டு நின்ற ஒருவன் இவனை நோக்கி வந்து கார்த்திக்கிற்கு சல்யூட் அடித்து அவன் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கிக்கொண்டான்.
எல்லோரும் பொஷிஷனில் இருக்காங்களா? எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது.காவலதிகாரி தோரணை வந்துவிட விரைப்பாய் கேள்வி எழுப்பினான் கார்த்திக். 
எல்லோரும் ரெடி சார். நீங்க வந்ததும் உள்ளே போகத்தான் எல்லோரும் காத்திருக்காங்க.என்று பதில் கொடுக்க, கார்த்திக் நேரத்தை பார்த்தான், மணி பதினொன்றை தாண்டியிருந்தது. 
இந்த விஷயம் வெளியில் கசியலையே?” என்று கேட்டு மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு, “இதுதான் சரியான நேரம். என்னை ரெசார்ட்டில் டிராப் பண்ணிட்டு நீங்க ஸ்டேஷன் போய் தேவையான ஏற்பாடு எல்லாம் செய்யுங்க.என்றவன் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னே ஏறிக்கொண்டு அவன் குழுவில் இருக்கும் இன்னொருவரை அலைபேசியில் அழைத்து,
நான் வந்துட்டே இருக்கேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கே இருப்பேன். நம்ம திட்டப்படி ஜேமர் ஆன் பண்ணிடுங்க. ரிசார்ட்டில் இருந்து எந்த ஒரு அழைப்பும் வெளியே போகக்கூடாது உள்ளேயும் வரக்கூடாது. அவங்களை நாம சுற்றிவளைக்கிறோம்னு எக்காரணம் கொண்டும் அவங்களுக்கு தெரியக்கூடாது. உள்ளே இருக்கிறவங்க எல்லோருமே பெரிய ஆளுங்க, சோ இப்போதைக்கு மீடியாக்கு நியூஸ் கொடுக்க வேண்டாம். தேவைப்பட்டால் காலையில் ஒரு பிரெஸ் மீட் வச்சிக்கலாம். நம்ம டிப்பார்ட்மெண்ட் போட்டோகிராப்பர் வந்துட்டாரு தானே?”
நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சாச்சு சார். போட்டோகிராப்பரும் வந்துட்டாரு. சாட்சிக்காக எடுக்கப்படும் போட்டோ நம் கைக்கு கிடைக்கும்வரை அவர் நம்ம கஷ்டடி தான். வெளில எதுவும் லீக் ஆகாது.என்று மறுமுனையில் இருந்து பதில் வர, அவர்களின் திட்டத்தில் திருப்தியுற்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு மனதில் மீண்டுமொரு முறை செய்ய வேண்டியதை கணக்கிட்டுக் கொண்டான். 
சார், வந்து… இப்போ ரெய்டு போகும் இடத்தில் பெரிய புள்ளிகள் தான் அதிகம். அதோட அந்த ரிசார்ட்டை நடத்துபவரும் அரசியல் பின்புலம் உள்ள ஆளு.என்று அவனை அழைத்துக்கொண்டு செல்லும் அதிகாரி தயங்க,
அதெல்லாம் பார்த்தால் நாம வேலை செய்யமுடியாது. ரிசார்ட் என்கிற பெயரில் சமூகத்தை சீரழிக்கும் வேலையில் இறங்கியிருக்காங்க, இவங்களோட பலத்துக்கு பயந்து அப்படியே விடச் சொல்றீங்களா?” என்று கார்த்திக் கடுமை காட்ட, அந்த ரிசார்ட்டில் நடக்கும் கேவலம் அவனை அருவருப்பாக்கியது.

Advertisement