Advertisement

*9*
“அம்மு சாப்பிட வா… சீக்கிரம் மாத்திரை போட்டுட்டு தூங்கனும்.” என்று அம்புஜம் வாயிலில் கணவன் விடைபெற்று சென்ற தடத்தையே பார்த்து நின்ற மகளை கூப்பிட, உள்ளே நுழையாமல் தலையை மட்டும் திருப்பியளோ கேள்வியாய், “அவங்க சாப்பிட்டாங்களா?”
மகள் யாரைக் கேட்கிறாள் என்று புரியாமல், “இங்கே தானே எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க, நீ யாரை கேட்குற?” என்று உணவு மேசையை காட்ட,
பார்வையை தாழ்த்தி, “ஒன்னுமில்லை,” என்று முனகியவள் உணவு மேசைக்கு வந்து தனக்கான உணவை தட்டில் நிரப்பிக்கொண்டு அமைதியாக அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.
“என்ன ராகவா அவளா ஏதோ கேள்வி கேட்டா அப்புறம் அவளாவே போயிட்டா?” மகளின் செய்கைககள் புதிதாய் இருக்க, ஒன்றும் கணிக்க முடியவில்லை ரகுநாதனால்.
“அவள் கார்த்திக்கை பத்தி கேட்டுட்டு போறான்னு நினைக்கிறேன். நாம எல்லோரும் இங்கே தானே இருக்கோம். அவர்தான் சாப்பிடாம கூட கிளம்பிட்டாரு.” என்று யூகமாய் கூறினான் ராகவ்.
“அப்படித்தான் இருக்கும்.” என்று ஆர்வத்துடன் சுஜாவும் ஒத்தூத,
“நாம எதிர்பார்க்காதது தான் எதிர்பாரா நேரத்தில் எப்போதுமே நடக்குது. இது எங்கே போய் முடியப்போகுதோ… சுஜா மறக்காம உன்னுடைய மாத்திரை சாப்பிட்டுட்டு மீராவுடையதையும் அவளுக்கு கொடுத்துடு.” என்று அம்புஜம் தன் அன்றாட புலம்பலுக்கு பின் மாத்திரையை நினைவூட்ட, அமைதியில் கழிந்தது அந்த உணவு நேரம்.
அங்கு அறையினுள் மீராவோ சாப்பிடும் எண்ணமின்றி அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு கதவு, ஜன்னல் என காற்று புகும் வழிகளை அடைத்ததோடு மட்டுமில்லாமல் வெளிச்சம் வரும் பாதைகளையும் தேடிபிடித்து மூடிவிட்டு கட்டிலில் சரிந்தாள். இருள் சூழ்ந்தால் நித்திரை எழும் எனும் அவளது கணக்கு பொய்க்கும் வண்ணம் அவள் மனம் திறந்தவெளியாய் அவனை பற்றியே சிந்தித்தது. அருகில் இருந்த தலையணையை எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டவள் மனக்கண்ணில் அவன் உருவம் தான் நிழலாடியது. அவன் பேச்சாகட்டும் செயலாகட்டும் ஏதோ ஒன்று அவளை கட்டிப்போடுவதை உணர்ந்தாள் பெண். அதுவே அவனிடம் முரடுபிடிக்க வைக்க, அதற்கு அவன் கொடுக்கும் பதிலில் உள்ளம் மீண்டும் வசியப்பட்டு அவன் புறமே செல்கிறதே… 
‘என்ன சொன்னாரு? நான் அழகா?’ என்று அவனது வார்த்தைகளில் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு உருபோட, கைகள் தானாக நீண்டு லைட் சுவிட்சை தட்டியது. இருள் நீங்கி ஒளி பரவ, அவள் அறையில் இருந்த கண்ணாடி முன் சென்று நின்றாள். எவ்வித போலி பூச்சுமின்றி அவளது பிம்பத்தை அப்படியே அச்சுபிசகாமல் அது பிரதிபலிக்க பார்வையை கூர்மையாக்கியவள் கண்ணாடியையே உற்று நோக்கினாள்.
கன்னம் ஒட்டிப்போய் வாடிய மலராய் பொலிவிழந்த முகத்தில் ஆங்காங்கே கீறல் விழுந்தது போன்று சுருங்கிய கருமை பூசிய தோள்கள். விரல்கள் தானாக உயர்ந்து அந்த இடத்தை மெல்ல வருட, நினைவுகள் பின்னோக்கி சென்று மாசற்று இருந்த அவளது பழைய முகத்தையும் இப்போது இருக்கும் வதனத்தையும் ஒப்பிட்டு பார்க்க, விழிகள் தானாய் கண்ணீரை சுரந்தது. உவப்புநீரின் உபயத்தால் பிம்பம் கலங்கலாய் தெரிய விரல்கள் மெல்ல கீழிறங்கி தாடை தாண்டி கழுத்தும் தோள்பட்டையும் இணையும் இடத்தில் மற்றொரு முடிச்சு போன்று இழுத்துக் கொண்டிருந்த மேல்தோளில் வந்து நிற்க, ஏதோ அப்போது தான் அமிலம் உடலில் கொட்டியது போன்ற வலி அகப்புறத்தில். நடுங்கும் விரல்கள் மேலும் கீழிறங்கி புடவையை கலைந்து கழுத்துக்கு கீழ் அமிலம் விட்டுச் சென்ற வடுவின் தடத்தை பின்பற்றி இடப்பக்க மார்பில் சென்று நிற்க, எவ்வளவு முயன்றும் தொண்டைக்குழியில் எழும் பெருங்கேவலையும் தவிர்க்க முடியவில்லை; இந்த அமிலவீச்சால் எதிர்கொண்ட அவமானத்தையும் மறக்க முடியவில்லை.
கொஞ்ச நஞ்ச பார்வைகளா? பேச்சுக்களா? புறம் விகாரமாகிட நீ எங்களைப் போல சாதாரணமானவள் இல்லை என்று பார்வையாலேயே அவளை தள்ளிவைத்த கூட்டம் ஒருபுறம், இப்படி ஆகிவிட்டதே என்று பரிதாபப் பார்வைகள் ஒருபுறம், இவள் தான் அவனுக்கு காதல் வலைவீசி மடக்கிவிட்டு காரியம் முடிந்தவுடன் கழட்டி விட்டிருப்பாள், ஏமாற்றியவளை பழிவாங்கவென ஏமாந்தவன் அமிலம் வீசிவிட்டான் என்று பெண்களை மட்டுமே எல்லாவற்றிற்கும் குறைசொல்லும் கூட்டம் ஒருபுறம், அதுபோக தெரிந்தவர்களே தீண்டத்தகாதவள் போல நடத்தியது மட்டுமில்லாமல் உறவுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை தங்கள் கற்பனை வளம் கொண்டு புனைந்து அதை அக்கம்பக்கம் பகிர்ந்து திரித்துப் பரப்பப்பட்ட காதல் கதைகள் ஒருபுறம் என்று அவள் பட்ட இன்னல்கள் ஏராளம்.
அதெல்லாம் இப்போது நினைவு வந்து தொலைக்க, அது தந்த அழுத்தம் தாளாமல் உடல் நடுங்க உள்ளம் தடதடத்து வியர்வு அரும்புகள் குழுமி அவளை நனைத்திருக்க கால்கள் நிற்க திராணியற்று மடங்கி கீழே சரிந்தாள் மீரா. விம்மல் வெடித்துக் கிளம்ப அது எங்கே வெளியே கேட்டுவிடுமோ என்ற பதட்டத்தில் கைகள் இரண்டும் தானாக அவள் இதழ்களை மூடியது. அவளுக்கு மட்டும் ஏனிந்த வேதனையும் துக்கமும்? ஒருவனின் விருப்பை மறுத்ததற்கு பரிசு அமிலம் என்றால் பெண்ணின் ஆசாபாச உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? மறுப்பு சொல்லும் உரிமை இல்லையா? இல்லை மறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தான் ஆண்களுக்கு இல்லையா?
எது எப்படி என்றாலும் அவளின் முகத்தை சிதைக்க அவனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அவளும் அவனைப் போலவே ஆறறிவு கொண்டு படைக்கப்பட்ட மனித இனம் தானே? அது ஏன் இவனைப் போன்ற சில மூடர்களுக்கு புரிவதில்லை? ஐந்தறிவு கொண்ட வாயற்ற ஜீவன்கள் எதுவும் தேவையற்று மற்ற உயிரினங்களின் மேல் பாய்ந்து வேட்டையாடாது. ஆனால் பகுத்தறிந்து கொள்ளவென ஆறறிவுடன் படைக்கப்பட்ட மனிதன் மட்டுமே ஏன் மிருகமாகிறான்? சகபாலினத்தை ஏன் அடக்கி ஆளத் துடிக்கிறான்? அவனை விட அவள் கீழ் என்று நம்ப வைத்தது யார்? இருபாலினமும் ஒன்று என்று புரியவைக்கத் தவறியது யார்? என்று எண்ணங்கள் தறிகெட்டு ஓட, தனிமை அவளது காயங்களை கீறிவிடவே ஆவலாய் இருந்தது. அதை உணர்ந்தானோ என்னவோ அவளது சரிபாதியானவன் அழைத்திருந்தான் ராகவின் அலைபேசிக்கு…
“மீரா சாப்பிட்டாளா ராகவ்?”
“சாப்பிடுறேனு எடுத்துட்டு ரூமுக்கு போயிட்டா…” என்று ராகவ் பதில் கொடுக்க,
ஓரிரு நொடி தயக்கம் மறுபுறம், பின் கார்த்திக், “அவகிட்ட போன் கொடுக்க முடியுமா?” என்று வேண்ட,
“இதோ கொடுக்கிறேன்,” என்றவன் அவள் அறைக்கதவை தட்ட அந்த அரவமெல்லாம் எங்கே மருகி இறுகி போயிருக்கும் மீராவின் மனதில் பதியப்போகிறது.
“இன்னைக்கும் ரூமை திறக்க மாட்டீங்குறாளே,” என்று மெல்ல அவனுக்குள் பேசியது மறுபுறம் கார்த்திக்கிற்கு கேட்க, பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.
“ஏன் என்னாச்சு? மயங்கிட்டாளா? கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன்.” என்று கார்த்திக் பதற,
“நீங்க கவலைபடாதீங்க, அவள் அப்செட் ஆனால் இப்படி தான். நான் பார்த்துக்குறேன்.” என்று ராகவ் சமாதானம் சொன்னாலும் அதெல்லாம் ஏற்கவில்லை கார்த்திக்.
“இல்லை… நீங்க என்னனு சீக்கிரம் பாருங்க. நான் லைனிலேயே இருக்கேன்.” என்று கார்த்திக் பதற, அந்த இக்கட்டிலும் மச்சினனின் பதறளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் பரிவையும் கண்டு புன்னகைத்தான் ராகவ்.
“அம்மு… கார்த்திக் உன்கிட்ட பேசனுமாம். கதவைத் திற.” என்று இம்முறை ராகவ் வேகமாகவே கதவைத் தட்ட, கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு உடையை சரிசெய்து கொண்டு கதவை திறந்தாள் மீரா.
கதவை திறந்தவள் அவனையும் உள்ளே விடாது அவளும் வெளியே செல்லாது அறை வாயிலிலேயே நின்று, “என்ன ராகவ்?” என்று இயல்பாய் இருப்பதாய் அவள் காட்டிக்கொண்டாலும் அவள் குரலில் பிசிறு தட்டியது. அதை வெளிக்காட்டாது ராகவ் தன் அலைபேசியை அவளிடம் நீட்ட, குழப்பமாய் அதை வாங்கி காதில் வைத்து ஹலோ என்றாள் மீரா.
“என்னடா அழுதியா?” என்று மென்மையாய் கார்த்திக் கேட்கவும் குரல் கம்மியது அவளுக்கு. 
“இல்லையே.” என்று மீரா கடினப்பட்டு இயல்பாய் பதில் கூற,
“பொய். அழுதிருக்க நீ… உன் குரலே காட்டிக்கொடுக்குது. சரி விடு சாப்பிட்டியா?” மனசஞ்சலத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெளிவாகவே புரிய, அதை மேலும் கீறி காயப்படுத்த மனமின்றி பேச்சை மாற்றினான்.
“ம்…”
“என்ன ம்? சாப்பிடல தானே நீ?” என்று கார்த்திக் அதட்டலாய் கேட்க, மீராவும் தன் பங்குக்கு வேகமெடுத்தாள்.
“ஆமா அதுக்கு என்ன இப்போ?” ஏனோ அவனிடம் சண்டையிடவென ஆர்வமாய் சிலிர்த்திருப்பாள் போல, குரல் தெம்பாய் ஒலித்தது. 
“போய் சாப்பிடு முதல்ல.”
“எனக்கு வேண்டாம்…” 
“என்ன வேண்டாம்? குழந்தை மாதிரி அடம்பிடிக்காத.” என்று அவனும் அரட்டினான்.
அவளும் பிடிவாதமாய், “எனக்கு வேண்டாம்னா வேண்டாம் தான்.”
“எனக்கு இப்போ என் பொண்டாட்டி சாப்பிட்டுதான் ஆகணும்.” என்றான் கார்த்திக்கும் அழுத்தமாய். இருவரும் தங்களின் நிலையிலிருந்து கீழே இறங்குவதாய் இல்லை. இருவருக்குமே இந்த வீம்பு பேச்சுக்கள் சுவாரசியத்தை கொடுக்க, உரையாடலை முடிக்கும் எண்ணமும் எழவில்லை.
“என்ன கட்டாயப்படுத்துறீங்களா?”
“அக்கறையில் சொல்றேன்.”
“உங்க அக்கறை ஒன்னும் எனக்கு தேவையில்லை.”
“அப்படீன்னா நீயாவே போய் சாப்பிடு. நீயே உன்னை கவனிச்சிக்கிட்டா நான் ஏன் இதெல்லாம் கேட்கப் போறேன்?” 
“சரியான பிடிவாதக்காரர் நீங்க. பேசி பேசியே என்னை மடக்குறீங்க உசுப்பேத்துறீங்க.” என்று கோபத்தில் விரல்களை பிரித்து மடக்கி அவனிடம் பேச்சை வளர்க்கவென விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தாள் மீரா.
இதழ்கள் வளைய அவளின் பிடிவாதத்தை ரசித்தவன், “பிடிவாதக்காரி பொண்டாட்டியா வாய்ச்சா புருஷனும் சில விஷயங்களுக்கு பிடிவாதம் பிடிச்சாதான் பொண்டாட்டியை மலை இறக்க முடியும்.” 
“நான் ஒன்னும் பிடிவாதக்காரி இல்லை.”
“ஆஹான்… நான் என் பொண்டாட்டியை சொன்னேன், நீ ஏன் தானா வந்து ஆஜர் ஆகுற?”
“நான் தானே உங்க பெண்டாட்டி,” என்று இவள் சண்டக்கோழியாய் துள்ள, கார்த்திக் மறுபுறம் வாய்விட்டு சிரித்தான்.
“பாருடா! யாரோ கொஞ்ச நேரம் முன்னாடி தாலி கட்டியதற்காக எல்லாம் என்னை புருஷனா ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாங்க, ஆனால் இப்போ நான் தான் உங்க பொண்டாட்டின்னு சொல்றாங்க,” என்று அவள் கேலி பேசவும்தான் இவளுக்கு தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.
‘அச்சச்சோ… என்ன பேசி வச்சிருக்கேன் நானு?’ என்று மனம் முரண்ட,
“நான் சாப்பிடப் போறேன். பை.” என்று அழைப்பை சட்டென துண்டித்து அலைபேசியை ராகவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் ஓடிவிட்டாள் மீரா.
செவியில் இன்னுமே அவனின் சிரிப்புச் சத்தம் கேட்க, இதயத்துடிப்பு அதிரடியாய் எகிறி முகம் சூடாக, அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் நாணத்தில் வளைந்து புன்னகைத்து விளையாடியது.
மனதை அடைத்துக்கொண்டிருந்த பாரம் இருந்த தடம் தெரியாமல் அமிழ்ந்துவிட, கார்த்திக்கிடம் பேசிய பேச்சுக்களே அவளுள் ஓடியது. அதே நினைவுகளுடன் எடுத்துவந்த உணவினை உண்டுவிட, சுஜா மாத்திரையோடு உள்ளே நுழைந்தாள்.
“ஹே இது ஏது புது போன்?” தான் வந்த வேலையை விட்டுவிட்டு கட்டிலில் கிடந்த புது அலைபேசியை கையில் எடுத்துப்பார்த்தாள் சுஜா.
அசுவாரசியமாய் அவளின் வியப்பை கண்ட மீரா சங்கடத்துடன், “அவங்க வாங்கிக் கொடுத்தாங்க அண்ணி.”
மீராவின் பதிலில் புருவத்தை மெச்சுதலாய் உயர்த்திய சுஜா அதை மேலும் தூண்டித்துருவ விரும்பாது, “மாத்திரை எடுத்துட்டு வந்திருக்கேன். சாப்பிட்டுடியா மீரா?”
“கொடுங்க அண்ணி.” என்று அவளாகவே வாங்கி மாத்திரையை விழுங்கினாள்.

Advertisement