Advertisement

“என்ன அப்படி பார்க்குறீங்க? நீங்க எனக்காக தானே செஞ்சீங்க? அதுவும் நல்லதுக்காக… இப்போ எவ்வளவு லேசா உணர்றேன் தெரியுமா… என்னன்னு சொல்லத் தெரியாத துக்கம் என்னவோ என்னை தொடர்ந்துட்டே இருந்துச்சு, போலியா இருந்தாலும் இன்னைக்கு அவன் துடிச்ச துடிப்பு, அலறிய அலறல் எல்லாம் அதை துடச்சிடுச்சு. அவனோட கதறல் சங்கீதம் போல இருந்துச்சு எனக்கு. இதே வேதனையை தானே நானும் அன்னைக்கு அனுபவிச்சு துடிச்சு பதறியிருப்பேன்னு அவனை உணர வச்சீங்களே அப்போ நான் அடைஞ்ச  நிம்மதிக்கு அளவே இல்லை. ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக்.” என்று கணவனிடம் தான் நினைத்ததை சொல்லிவிட்ட திருப்தியுடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மீரா இவ்வளவு தன்மையாய் பொறுமையாய் பேசியதை ஆவேன்று தான் பார்த்து நின்றிருந்தனர் அனைவரும்.
மகளிடம் தெரிந்த மாற்றத்தில் தெளிவில் ரகுநாதன் களிப்பின் விளிம்புக்கு சென்று, “என்னாச்சு மாப்பிள்ளை?” என்று வினவ, அன்று நடந்த அனைத்தையும் சொல்லியவன், 
“மாத்திரை எல்லாம் இதில் இருக்கு, மறக்காம தினமும் குடுத்துடுங்க.” என்று மாத்திரை கவரையும்  கார் சாவியையும் வைத்துவிட்டு, தொடர்ந்து தன்னுடைய திடீர் அவசரத்தையும் சேர்த்துச் சொல்ல, அந்நேரம் சரியாக அங்கு தன் வண்டியில் வந்திறங்கினான் விக்ரம்.
அவனை வரவேற்று அமரவைத்த கார்த்திக், அவன் கொண்டுவந்திருந்த பையை வாங்கிக்கொண்டு மீரா அறைக்குச் சென்றான். அங்கே அவள் சன்னல் அருகில் நின்று எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். 
சற்றே தயங்கியவன் கதவை ஒருக்களித்து வைத்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்து, “மீரா,” என்று பரிவாய் அழைத்தான். வெளியில் அப்படி அமைதியாய் தன்மையாய் தன்னை மன்னிப்பு வேண்ட வேண்டாம் என்று பேசவும் இனி தன்னுடன் இயல்பாக இருப்பாள் என்று எதிர்பார்த்து ஆர்வமாய் அவள் முகம் நோக்க அவளோ அவனின் அழைப்பை கண்டுகொள்ளவே இல்லை.
“மீரா நான் கிளம்புறேன்.” என்று பேச்சை தொடர்ந்தான் அவளை பேசவைக்கும் பொருட்டு. ம்கூம் அவள் வாயை திறப்பேனா என்று நின்றிருந்தாள்.
“எங்கேனு கேட்க மாட்டீயா?”
“கேட்கலைனாலும் பரவாயில்ல… நான் எங்கே இருக்கேன், என்ன செய்றேன்னு தெரிஞ்சிக்குறது உன்னோட உரிமை.” என்கவும் அவள் நிலையில் ஏதோ மாறுதல். வறண்ட அதரங்களை ஈரப்படுத்தியவள் மெல்ல விழிகளை மட்டும் மேலுயர்த்தி அவனைக் கண்டாள்.
“எனக்கு மாறுதல் கிடைச்சது உனக்குத் தெரியும் ஆனால் எங்க இருக்கேனு தெரியுமான்னு தெரியல, நானாவது சொல்லியிருக்கணும். அப்போ சொல்லல இப்போ சொல்றேன். திருவண்ணாமலையில் தான் இப்போ வேலை. காவல் குடியிருப்பில் தான் தங்கி இருக்கேன். சாப்பாடு எல்லாம் மெஸ்ஸிலிருந்து வந்துரும். மற்ற எல்லா வேலைக்கும் ஆள் இருக்காங்க. இப்போ ஒரு அவசர வேலை வந்திருக்கு. நான் இப்போவே கிளம்பி அங்கே போகணும். திரும்ப எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ வரேன். அதுவரை உடம்பை பார்த்துக்கோ. மாத்திரை எல்லாம் சரியா போட்டுக்கோ. நல்லா சாப்பிடு. மனசுல தேவையில்லாததை போட்டு குழப்பி அதைப்பத்தியே யோசிக்காம என்னை பத்தி மட்டும் யோசி.” என்றுதான் சொன்னான் அவளின் இதழ்கள் ஒருவழியாய் பிரிந்து பல்லிடுகில் சிக்கி வார்த்தைகள் வெளிவந்தது.
“என்னது உங்களை பத்தி யோசிக்கணுமா? ஏன்?”
“என்ன ஏன்? நான் உன்னையும் நீ என்னையும் நினைச்சிட்டே இருக்குறது தானே நியதி?” என்று விஷமமாய் புருவம் உயர்த்தினான் கார்த்திக்.
“நான்சென்ஸ்.” என்று முகத்தை திருப்பினாள் மீரா.
“நான் சென்ஸில் தான் பேசுறேன் மீரா.” என்று அவளின் வார்த்தையை திரித்து அவளை சூடேற்றினான்.
“இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பது இதுதானா? என்ன தேங்க்ஸ் சொன்னதும் அப்படியே வந்து ஒட்டிக்கலாம், இவளை சுலபமா கவுத்துடலாம்னு நினைச்சீங்களா?” என்று எகிற, மீராவை யோசிக்காவிட்டால் எசக்குபிசக்காக தான் யோசிப்பாள் என்ற சுஜாவின் கூற்று எவ்வளவு உண்மை என்று புரிந்தது அவனுக்கு. அதையே பற்றுகோலாய் கொண்டு நிமிர்ந்து நின்றவன் திமிராய்,
“ஆமா, அப்படி தான் நினைச்சேன். என் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண நினைச்சதில் தவறொன்றும் இல்லையே?” என்றான் இதழை லேசாய் வளைத்து.
மனம் அவனின் வார்த்தைகளை சரியாய் செவியில் வாங்கி, தவறாய் யோசித்தது. புசுபுசுவென வேகமாய் மூச்சை இழுத்து விட்டவள், கழுத்து நரம்புகள் புடைக்க, பற்களை நரநரவென கடித்துக்கொண்டு அவனை நோக்கி இரண்டடி வைத்து விரலை நீட்டி, “யாருக்கு யார் பொண்டாட்டி? தாலி கட்டினதால உங்களை நான் ஏத்துக்கணும்னு ஒரு அவசியமும் இல்லை.”
“ஆனால் நான் ஏத்துக்கிட்டேன் இந்த வாழ்க்கை பயணத்தில் நீ தான் என் பொண்டாட்டி, என்கூட கடைசிவரை வரப்போகிற என்னுடைய உறவு நீதான்னு…” என்று அவளுக்கு சளைக்காமல் பதில் கொடுத்தவன் அவளைப் போலவே முன்னே இரண்டடி வைத்து அவளை நெருங்கி, “நீ ஒத்துக்கலைனாலும் இதுதான் நிதர்சனம். நானும் நீயும் இந்த வாழ்க்கையில் இணைஞ்சாச்சு. உன்னோட துக்கம் என்னையும், என்னோட களிப்பு உன்னையும் சேரும். அதை யாராலும் மாத்த முடியாது. சோ, நான் சொன்ன மாதிரி என்னை பத்தி யோசி. நம்ம வாழ்க்கையை பத்தி யோசி. நான் முன்னாடி சொன்னதை பத்தி யோசி.
உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றத்திற்கு அவன் சிறையில் இருக்கான். எந்த தவறும் செய்யாம நீ ஏன் இந்த நாலு சுவருக்குள் அடைந்து கிடக்கணும்? உன்னை சுலபமா முடக்கிடலாம்னு வன்மம் வச்சி அவன் செய்த செயலை நீ வெற்றியடைய வச்சிட்டு இருக்க.” என்றவன் சிறு இடைவெளி விட்டு,
“இன்னொன்னு சொல்லவா நீ ரொம்ப அழகு. உன்னோட தைரியம் ரொம்ப அழகு. உனக்கு நிகழ்ந்த எல்லாவற்றியும் தான்டி என் முன்னாடி நிற்குற அழகு இருக்கே அது எல்லோராலும் முடியாது, எல்லோருக்கும் வராது. மனசு திடமா இருக்கிறவங்களால மட்டும் தான் இது எல்லாவற்றையும் கடந்து வந்திருக்க முடியும். என்ன ஒன்னு நீ உனக்குள்ளேயே வளையம் போட்டுட்டு தேவையில்லாததை கற்பனை செய்திட்டு இருக்க. இழந்த புறஅழகு வேணும்னா திரும்ப வராமல் போகலாம் ஆனால் நான் சொன்ன அழகு… எங்கேயோ உனக்குள் ஒளிஞ்சிட்டு இருக்கு. அதை தட்டி எழுப்பு. உன் மேல் பிழையில்லாத போது நிமிர்ந்து நிற்க பழகிக்கோ. பாரதி சொன்னது போல…
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
இதுவும் என் அம்மா சொல்லிக்கொடுத்தது தான். நல்லா யோசி. அவன் செஞ்சதுக்கு நீ தலைகுனிஞ்சு உன்னை தண்டிச்சிக்கனுமானு யோசிச்சு முடிவு பண்ணு. நான் கிளம்புறேன்.” என்றவன் மேலும் சில அடிகள் முன்னே எடுத்து வைத்து நூழிழை மட்டுமே இடைவெளிவிட்டு அவளிடமிருந்து தள்ளி நின்று, ட்ரிப்ஸ் ஏற்றி பிளாஸ்திரி ஒட்டியிருந்த கையை தன் கரம் கொண்டு ஏந்தினான்.
விதிர்விதிர்த்து போய் அவள் என்னவென்பது போல் கேள்வி தாங்கி அவனைப் பார்க்க அவள் விழிகளுக்குள் ஊடுருவ முயன்றவன், ஏந்திய அவளது கரத்தை தன் இதழ் அருகே உயர்த்தி பார்வையை விலக்காது மென்மையாய் அந்த கரத்தில் இதழை ஒற்றி எடுத்தான்.
“பத்திரமா இரு கண்ணம்மா,” என்று சன்னக் குரலில் கிசுகிசுத்து, பிடித்திருந்த அவள் கரத்தை திருப்பி, விக்ரம் கொடுத்த பையிலிருந்து தன்னோடு எடுத்து வைத்திருந்த ஒரு அட்டைபெட்டியை அவள் உள்ளங்கையில் வைத்தான். அவன் செய்த செயலால் உடலில் ஏற்பட்ட சலசலப்பை கிரகிக்க முயன்று மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அவள் அதிர்ந்து நிற்க, அந்த அறையில் ஓரமாய் இருந்த தன் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் கார்த்திக். 
அவள் ஆணி அடித்தது போல் அவ்விடத்தை விட்டு நகராமல் மெல்ல நிதானத்திற்கு வந்து, அவன் கொடுத்துச் சென்ற பெட்டியை பிரித்துப் பார்க்க, அதில் கைக்கு அடங்காத வெள்ளி நிறத்திலொரு அலைபேசி இருந்தது. அதை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தவள் அவனைத் தேட, அவன் ஏற்கனவே விக்ரமின் பைக்கில் ஏறியிருந்தான். அவள் குடும்பமும் வாயிலில் அவனை வழியனுப்பவென நின்றிருந்தனர். அவர்கள் பின்னேயே நின்றுகொண்டு இவள் நுனி கால் ஊன்றி தலையை நிமிர்த்தி எட்டிப்பார்க்க, கார்த்திக் அனைவரிடமும் விடைபெறும் விதமாய் தலையசைத்தான். பைக் மெல்ல நகரத் துவங்க, இவளை அவன் கண்டுகொண்டானா என்று அவளுக்குத் தெரியவில்லை ஆனால் அவள் விழி முழுதும் அவன் வசமே…
“டேய், உன் ஆளு உன்னையே எட்டி எட்டி பாக்குது, நீ கண்டுக்காம வந்துட்ட?” சிறு தூரம் சென்றவுடன் வண்டியின் வேகத்தை குறைத்து விக்ரம் தன் நண்பனை கடிந்துகொள்ள,
“அதெல்லாம் கண்டுகிட்டு தான் வந்திருக்கேன். நீ வண்டியை வேகமா ஓட்டு.” என்று கார்த்திக் அந்த பேச்சை திசைதிருப்பினாலும், அவன் மனம் அவள் புறம் செல்வதை திசைதிருப்ப முடியவில்லை.
கலவையான உணர்வுகளை தாங்கி சுஜாவின் பின்னிருந்து ஆவல் மேலோங்க தன்னை எட்டி எட்டி பார்த்தவளை வண்டி கிளம்பியபின் தான் கவனித்தான் அவன். அவள் பேசிய விதத்தை வைத்து, அவள் கோவமாய் இருப்பாள் என்று அவன் கணக்கிட்டதற்கு மாறாக அவனை வழியனுப்பவென வாயில் வரை வந்தவளை பார்த்ததும் சட்டென்று அவனுக்கு எதுவும் ஓடவில்லை. மனம் ப்ரீஸ் ஆகிட, அவளை நோக்கி ஒரு புன்னகையாவது வீசலாம் என்று நினைப்பதற்குள் விக்ரம் வண்டியை வேகமாக கிளப்பியிருந்தான்.
இப்போதோ அவளை வீட்டிலேயே விட்டுச் செல்ல, அவளது நினைவுகள் மட்டும் அவனுடன் பயணித்தது. அதுவும் இன்று முழுதும் அவளுடன் இருந்திருக்கிறான் முதல் முறையாக. ஒரேநாளில் அவளது அனைத்து உணர்வுகளையும் கண்டுகொண்டது போன்றதொரு உணர்வு அவனிடத்தில். ஆனாலும் அவளை புரிந்துகொள்வது என்பது எட்டாக்கனியாகவே தெரிந்தது.
“என்ன தான்டா முடிவு பண்ணியிருக்க?” விக்ரமே மீண்டும் அமைதியைக் கலைத்தான்.
“என்ன புரியல?”
“அதுதான் இப்படியே நீ ஒருபுறம் அவங்க ஒருபுறம்னு இருந்தால் எப்படி உங்க ரெண்டு பேருக்கும் புரிதல் வரும்?”
“கொஞ்ச நாள் போகட்டும்டா… இப்போ தான் ஏதோ பீல் வரமாதிரி இருக்கு… வேவ்லேன்த் சிங்க் ஆகுது.” என்றான் இதழில் மென்மையான முறுவலை விளையாடவிட்டு.
“நல்லா வந்துச்சு போ… ரொம்ப நாள் இப்படியே இருக்காதே சொல்லிட்டேன்.”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ ஷோபா மேமை பாலோ பண்ணிக்கோ, இன்னைக்கு கூட நம்ம துறை சம்மந்தமா பேசியிருக்கேன்.” என்று கார்த்திக் தகவல் தெரிவிக்கவும் மின்னலென ஒரு யோசனை மனதில் பட்டது.
ஷோபாவிடம் பேசியபிறகு மீராவினுள் நிகழும் பெருத்த அமைதி வெளிப்படையாய் தென்பட்டது போலவே தோன்றியது. வீட்டிலிருந்து கிளம்பும் போது காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவள் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது முன்னிருக்கையில் அல்லவா அவனருகில் அமர்ந்திருந்தாள். என்னுடன் முன்னே அமரு என்றுகூட அவன் சொல்லியிருக்கவில்லை, அவளாகவே முன்னால் வந்து அமர்ந்தாள். எப்பொழுதும் அவளுடன் இணைபிரியாமல் இருக்கும் அலைப்புறுதல் எங்கேயோ சென்று ஒளிந்துகொண்டதன் விளைவுதானே அவள் நன்றி கூறியது… ஆனால் அவ்வப்போது அவளுடைய வீம்பும் வெளிப்படத் தவறவில்லையே.
அதோடு அவனுடைய இருப்பை, அவனுடனான உறவை ஏற்க மறுத்த மனம் அவனின் இருப்பை ஏற்றுக்கொள்ள பழகத் துவங்கியது போலவே தோன்றியது கார்த்திக்கிற்கு. இல்லையென்றால் தாலி கட்டியதால் அவனை ஏற்றுக்கொள்ளனுமா என்று பட்டாசாய் வெடித்தவள் அவனின் இதழ்ஒற்றலை சுலபமாக எடுத்திருப்பாளா? அமைதியாக அல்லவா அவனை பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் பேச்சினூடே கூட அவள் நுழையவில்லையே. அமைதியாகவே பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாள். அது புயலுக்கு முன்னான அமைதியா இல்லை புயலுக்கு பின்னான் அமைதியா என்று தான் அக்கணம் அவனால் கணிக்க முடிவில்லை. 
இருப்பினும் ஏதோவொரு மாற்றம், இலகல் அவளிடத்தில்… இந்த மாற்றம் அவன் இன்று வெளியே அழைத்துச்சென்று அவளது ரணங்களை அழிக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பரிசா இல்லை ஷோபாவிடம் பேசிய பின்னான தெளிவா என்ற குழப்பம் தான் தேங்கி நின்றது அவள் நினைவுகளோடு… 
  
 
 

Advertisement