Advertisement

*8*
தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப் பார்த்தான். ஒன்றுக்கும் அவள் மசியாது போக, தாமதியாது தனக்கு நன்கு தெரிந்த ஷோபாவிடம் அழைத்து வந்துவிட்டான். அவர்களின் முதல் சந்திப்பில் ஏற்பட்டது போல் இப்போதும் பேனிக் அட்டாக்காக இருக்குமோ என்று வரும் வழி முழுதும் உள்ளம் பதறியது.
தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்று தன்னைத்தானே குற்றம்சாட்டிக் கொண்டவன் நடந்த அனைத்தையும் அந்த உளவியல் மருத்துவரிடம் சொல்லிவிட்டான். மீராவுக்கு முதலுதவி செய்து ட்ரிப்ஸ் போட்டுவிட அவள் இன்னும் தூக்கத்தில் தான் இருந்தாள். மதியம் உண்ணக் கூட செல்லாமல் அவள் அருகில் அமர்ந்து ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் கார்த்திக். 
காலையே சென்றவர்கள் மதியமாகியும் வரவில்லை என்றதும் சுஜா பதறி அவனுக்கு அழைத்தபோது அவனது குற்றவுணர்ச்சி இன்னுமே மேலோங்கியது. மீராவை பத்திரமாக அழைத்துச் செல்லும்படி ராகவ் கூறியபோது அவன் சொன்னதென்ன, இப்போது அவன் செய்து வைத்திருக்கும் காரியம் என்ன? என்னவென்று சொல்லுவான்? மனம் தவறு செய்த எண்ணத்தில் தவிக்க தாங்கள் வர தாமதமாகும் என்றுமட்டும் சுஜாவிடம் தகவல் சொன்னான். அதன்பின் மீரா தூக்கம் கலையவே வெகுநேரம் ஆகிவிட, ஆதவன் கூட தன் வேலை முடிந்து சென்றுவிட்டார். மாலை ஷோபா தனக்கிருந்த அப்பாயின்ட்மென்சை முடித்துவிட்டு மீராவிடம் பேச அழைத்துச் சென்றவர்தான், ஒருமணி நேரம் ஆகிவிட்டது இன்னமும் ஆலோசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“சார், மேம் உங்களை கூப்பிடுறாங்க.” என்று ஒருவர் வந்து அவனின் நினைவை கலைக்க, வேகமாக எழுந்து அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான். சென்றவனின் விழிகள் மீராவை ஆவலாய் தேடியது.
“என்ன ஏ.சி.பி. நாக் அவுட்டா?” என்று ஷோபா கேலியாய் துவங்க அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
“ஓகே காம் டவுன். அவங்க அப்சர்வேஷனில் இருக்காங்க. உங்ககிட்ட சில விஷயங்கள் பேச வேண்டியதிருக்கு. முடிஞ்சதும் அவங்களை நீங்க கூட்டிட்டு போகலாம்.” என்றவுடன் அவன் முகம் தெளிந்து பின் குழப்பத்தை பூசிக்கொண்டது.
“தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க செஞ்ச இந்த விஷயம் அவங்களுக்கு சாதகமா மாறியிருக்கு. அவங்க மனசில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. இதனால ஒரேடியா இன்னைக்கே எல்லாம் சரியாகிடுன்னு அர்த்தம் இல்லை. அவங்க மனசை அழுத்திட்டு இருந்த பாரம் வெளியே வந்திருக்கு. தன்னோட நிலைமைக்கு காரணமானவனை போலியாக இருந்தாலும் ஏதோ ஒருவிதத்தில் தானே தண்டிச்சிட்டோங்கிற திருப்தி வந்திருக்கு. தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவனை எதுவுமே செய்ய முடியலையேன்னு மருகிட்டு இருந்த அவங்க மனசு லேசாகிருக்கு. ஏமாற்றம் மட்டுப்பட்டிருக்கு. இது ஒரு பாசிட்டிவ் சைன். மனசில் பாரம் கூட கூட எண்ணங்கள் எல்லாமே வேண்டாத குப்பையாகயே மாறிடுது. இப்போ மீரா அதை எல்லாம் வெளியே கொட்டி இருக்காங்க.”
“ஏன் மயங்குனா டாக்டர்? எனிதிங் சீரியஸ்?” பயப்படும்படியாய் இல்லாமல் நல்ல தகவலே ஷோபா சொல்லியிருந்தாலும் அவனுக்கு இருந்த கலக்கம் குறைந்தபாடில்லை.
“உணர்ச்சிகள் முட்டிமோதி வெளியே வரும் போது நார்மலா இருக்குறவங்களே ரொம்ப டிஸ்டர்ப் ஆவாங்க. மீரா ஏற்கனவே அழுத்தத்தில் இருக்காங்க அந்த அழுத்தம் அவங்க எனர்ஜி லெவலை குறைச்சிடும். அதுதான் அவங்க மயங்கிட்டாங்க. அதோட தெம்பில்லாம இருக்காங்க, அதுக்கு தான் ட்ரிப்ஸ் போட்டது. நவ் கம்மிங் டூ தி பாயிண்ட், இனி தான் நீங்க அவங்களை நல்லா கவனிச்சிக்கனும். உங்க திருமணம் எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க மீரா. சோ இந்த விஷயத்தில் கொஞ்சம் சிக்கல் வர வாய்ப்பு இருக்கு. அவங்க தெளிவான மனநிலையில் உங்களை கல்யாணம் செய்துக்கல… அதுவே நாளை உங்களுக்குள்ள பிரச்சனையா வரலாம். அதையும் சமாளிக்க நீங்க தயாரா இருக்கணும்.”
“கண்டிப்பா… என்னால அவளுக்கு எந்த உளைச்சலும் வராத மாதிரி பார்த்துக்க முயற்சி செய்றேன்.”
“இதுவரைக்கும் அவங்க மனநிலையில் சீரான முன்னேற்றம் தெரியுது. இப்போ நீங்க செய்ய வேண்டியது எல்லாம் அவங்க தனி ஆள் இல்லைனு நீங்க சொல்லி புரிய வைக்கணும் இல்லையா செயலில் காட்டணும் உனக்கு நான் இருக்கேன்னு. அதோடு உங்களோட பாசத்திற்கு முன்னாடி அவங்க குறை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, எது நடந்தாலும் அவங்க குடும்பம் அவங்களுக்கு துணையாக இருப்பாங்கனு உங்க செயல்கொண்டு அவங்களே உணரனும்.
குறிப்பா உங்களுடைய பங்கு ரொம்பவே அவசியம். அவங்க வாழ்க்கை அவங்களுடைய தனிப்பட்டது மட்டுமில்லை அது உங்களையும் சேர்ந்தது, சார்ந்தது சோ எதுவென்றாலும் அதன் தாக்கமும், பாதிப்பும் உங்கள் இருவரையுமே சாரும்னு நீங்களும் உணரனும் அவங்களுக்கும் உணர்த்தனும். அவங்களை அவங்களாவே ஏத்துப்பீங்கனு நம்பிக்கை கொடுக்கணும். அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு அவங்க உணர்ந்தால் தான் அவங்களால உங்ககூட ஒன்றி வாழமுடியும்.
அவங்களும் நம்மை போல சாதாரண சகமனிஷி தான்னு அவங்க மனசில் நல்லா பதியனும் அப்போ தான் வெளியிடத்தையும், அதில் ஏற்படும் சிக்கல்களையும் எதிர்கொள்ள பழகிக்குவாங்க. அவங்களை ஊக்கப்படுத்துங்க. உங்க பேச்சு அவங்களுக்கு பிடிச்ச விஷயம் நோக்கி அவங்களை தள்ளனும். அவங்க காரணமே இல்லாம கோபப்பட்டா நீங்களும் பதிலுக்கு கோபப்படாம நிலைமையை எளிமையா கையாள பழகிக்கோங்க. இப்போதைக்கு இதை மனசில் வச்சிகோங்க, அடுத்த வாரம் திரும்ப ஒரு செஷன் கூட்டிட்டு வாங்க, சீக்கிரமே சரி செய்திடலாம்.” என்றவர் மருந்து சீட்டில் எழுதும் போது தான் கவனித்தார் கார்த்திக்கிடமிருந்து எந்தவித எதிர்கேள்வியும் வராது இருப்பதை.
எழுதுவதை நிறுத்திவிட்டு அவனின் குழம்பிய முகத்தை கண்டவர் அவன் அகம் படித்தவராய், “என்ன குழப்பம் கார்த்திக்? எதுவா இருந்தாலும் கேட்டு தெளிவு செய்துக்குறது நல்லது.” என்ற அவரது உந்தலில் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தவன், “நீங்க சொன்னதை எல்லாம் கேட்கும் போது மலைப்பாய் இருக்கு. எப்படி அவளுக்கு இது எல்லாத்தையும் புரிய வைக்கப்போகிறேன்னு தெரியலை.”
மெல்ல நகைத்தவர், “முன்னரே திட்டம் வகுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, செயல்வடிவம் கொடுத்து செயல்படுத்த இது ஒன்னும் உங்க கேஸ் இன்வெஸ்டிகேஷன் இல்லை ஏ.சி.பி சார். இது எல்லாமே உணர்வுகள் உணர்ச்சிகள் சம்மந்தப்பட்டது. அதுவும் சாதாரண மனிதரின் குமுறல்கள் இல்லை நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்து மனதளவில் அநாதரவாய் நிற்கும் பெண்ணுடையது. நான் காட்டச் சொன்ன ஆறுதலும் பாசமும் இயல்பாய் வரவேண்டியது. அதை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது. சோ நான் சொன்னதையெல்லாம் உங்களோட அன்றாட செயலில் இயல்பா வெளிப்படுத்த முயற்சி செய்யுங்க. என்றுமே உங்க வார்த்தைகள் அவங்களுடைய புறஅழகை சாடுவதா இருக்கக்கூடாது. அவங்களும் நம்மைப் போலன்னு நினைங்க. இது எல்லாத்துக்கும் முதல்ல நீங்க மனசளவில் தயாராகிக்கோங்க.” என்றவர் தன் எழுத்தை தொடர்ந்துகொண்டே,
“முன்னாடி யார்கிட்ட ட்ரீட்மென்ட் எடுக்குறாங்கன்னு தெரியல. சோ நான் புது டேப்லெட்ஸ் எழுதுறேன். இதையே தொடர்ந்துகோங்க. நிறைய எல்லாம் இல்லை. மனஅழுத்தத்துக்கும் சத்துக்கும் தான் மாத்திரை. கொஞ்ச நாள் எடுத்தா போதும். ஸ்கிப் பண்ணாம சாப்பிட சொல்லுங்க.” என்று அந்த சந்திப்பை முடிக்கும்விதமாய் பேசியவர் மீண்டும் தொடர்ந்து, 
“இப்போ நீங்க இங்க வொர்க் பண்ணலையா கார்த்திக்? மீரா சொன்னாங்க நீங்க ஒருவாரம் கழிச்சு நேற்று தான் வந்தீங்கன்னு. ஆனால் அவங்களுக்கு நீங்க எங்க இருக்கீங்கனு தெரியல.” என்று கேட்கவும் அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டவன்,
“ஆமாம் மேம். திருவண்ணாமலைக்கு மாறுதல் ஆகிட்டேன். ஒருவாரமா அங்க தான் இருக்கேன். நாம முன்னாடி பேசின மாதிரி பெண்கள் விழிப்புணர்வு சம்மந்தமா நடத்தும் கூட்டங்களை இப்போ பொறுப்பில் இருக்கும் ஏ.சி.பியோட சேர்ந்து நீங்க நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்.” என்று துறை சார்ந்த வேண்டுகோளையும் மரியாதை நிமித்தமாய் சேர்த்தே வைத்தான்.
“கண்டிப்பா… அது என்னுடைய கடமை… அண்ட் நீங்க மீராவை உங்ககூட இப்போதைக்கு திருவண்ணாமலை கூட்டிட்டு போறது அட்வைசபில் இல்லை. இன்னும் கொஞ்ச நாள் ஆனதும் அப்புறம் உங்ககூட கூட்டிட்டு போங்க.” என்று கூடுதல் அறிவுரையும் வழங்கி அந்த சந்திப்பை முடித்தார் ஷோபா. அவரிடம் இன்முகமாய் நன்றியுடன் விடைபெற்றவன், மீரா தெளிந்தவுடன் அவளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
காரை இயக்கத் துவங்கியவுடன் அவன் அலைபேசி அழைப்பு வந்திருப்பதை சத்தமாய் உணர்த்த, அதை வேகமாக அமைதியாக்கியவன் தன் அருகில் கண்மூடி சாய்ந்திருக்கும் மீரா விழித்துவிட்டாளோ என்பது போல் பார்க்க, அந்த சத்தத்தில் விழித்தவள் அவனை பார்த்து, “ஏன் என்னை பார்க்குறீங்க? போன் வந்தால் எடுத்து பேசவேண்டியது தானே?”
அவளின் வார்த்தைகளுக்கு கட்டுண்டவன் போல் அலைபேசியை ஏற்றுப் பேச, மறுமுனையில் என்ன செய்தி வந்ததோ அவன் முகம் கறுத்தது. மீரா அவன் பேச துவங்கியதுமே கண்களை  மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்துகொண்டாள். அவனோ அவளையே நோட்டமிட்டபடி பேசிவிட்டு இன்னும் ஒன்றிரண்டு அழைப்புகள் விடுத்து யாருக்கோ தகவல் சொல்லிவிட்டு காரை கிளப்பினான். மனம் முழுதும் அடுத்து என்ன என்ற சிந்தனையே… ஷோபாவிடம் பேசியபிறகு தானுமே அவளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று புரிந்தது.
“மீரா வீட்டுக்கு வந்துட்டோம்.” என்று சிலமணி நேர பயணத்திற்கு பின் கார்த்திக் அவளை எழுப்ப, வெறுமென கண்களை மட்டும் மூடியிருந்தவள் சத்தமின்றி இறங்கிக் கொண்டு உள்ளே நுழையாமல் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
காரை அதனிடத்தில் நிறுத்தியவன் வாசல் கதவையும் சாற்றிவிட்டு அவள் அருகில் வந்து, “ஏன் இங்கேயே நிற்குற? உள்ளே போக வேண்டியது தானே?” என்று வினவ, 
புருவம் சுருக்கியவள், “தெரியல… நீங்க வந்ததும் சேர்ந்து உள்ளே போகலாம்னு தோணுச்சு. அதுதான் இங்கேயே நின்னுட்டேன்.” என்க, அவளது பதிலில் தலை சுற்றித்தான் போனது அவனுக்கு. அவனுடன் வரமாட்டேன் என்று காலையில் முரடுபிடித்ததென்ன இப்போது பேசுவது என்ன?
தலையை சிலுப்பிக் கொண்டவன் ஒருநொடி தயங்கி பின், “சரி வா போகலாம்.” என்று முன்னே செல்ல,
“உங்களுக்காக நான் இங்க காத்திட்டு இருக்கேன். நீங்க என்ன என்னை விட்டுட்டு முன்னாடி போறீங்க?” என்று அவனின் வேகநடைக்கு அணைபோட, ‘இதுவேறையா?’ என்று எண்ணத் தான் தோன்றியது அவனுக்கு.
அதற்குள் அவனை நெருங்கியிருந்தவள், “இப்போ ஏன் நிக்குறீங்க? நான் தான் வந்துட்டேனே,”
‘என்னதான்டி வேணும் உனக்கு?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது கார்த்திக்கு. இருந்தும் அதை அவளிடம் காட்ட முடியுமா என்ன? செல்லலாம் என்பது போல் அவன் கையசைக்க ஒருவழியாய் சண்டைக்கு முற்றுபுள்ளி வைத்து இருவரும் ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர். அதைக் கண்ட குடும்பத்தினருக்கு அதுவரை இருந்த தவிப்பு மறைந்து களிப்பு பிறந்தது.
மாறாக கார்த்திக்கிற்கு குற்றவுணர்வு தலை தூக்கியது. கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து அல்லவா அழைத்து வந்திருக்கிறான்.
எவரும் பேச துவங்குவதற்கு முன்னரே கார்த்திக் முந்திக்கொண்டு, “கோவிலுக்கு போறோம்னு சொல்லித்தான் அழைச்சிட்டு போனேன். ஆனா அப்புறம் ஏதேதோ நடந்துட்டு. நான் ஏதோ நினைச்சு செஞ்சது எங்கேயோ போய் முடிஞ்சிடுச்சு. டாக்டரை பார்த்துட்டு கன்சல் பண்ணிட்டு வந்தோம்.”
“இப்போ என்ன எல்லோர்கிட்டேயும் மன்னிப்பு படலம் வாசிக்க போறீங்களா?” என்று கறாராய் குறுக்கிட்டவளை கார்த்திக் மட்டும் இல்லை மற்ற அனைவருமே விசித்திரமாய் தான் பார்த்தனர்.

Advertisement