Advertisement

கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது.
முழு கை கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் கழற்றப்பட்டு, நடையில் ஒரு நேர்த்தி இல்லாமல் ஏனோதானோவென்று வந்த பாண்டியன் பொத்தென்று மீரா எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். கண்கள் அவளை மொய்க்க, கார்த்திக்கின் கைமுஷ்டிகள் இறுகியது.
“மீரா, இவனைத் தெரியுதா?” அவளுக்கு பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை என்று கார்த்திக் அறிமுகப்படுத்த எத்தனித்த நேரம் குரோதத்துடன் நாற்காலியை வேகமாக பின்னே தள்ளிவிட்டு எழுந்தாள் மீரா. அதுவே அவன் யார் என்று தெரிந்து கொண்டாள் என்பதை விளக்கியது.
உயிர்நாளத்திலிருந்து வெகுண்டெழுந்த இரத்த அணுக்கள் அவளது ஒவ்வொரு செல்லுக்கும் அணுவணுவாய் உஷ்ணத்துடன் பரவியது. மேல் வரிசை பற்கள் கீழ் வரிசையில் உள்ள பற்களுக்கு கொடுத்த அழுத்தத்தில் அவள் முகம் செம்மை பூசிக்கொண்டு, உடல் நடுங்க அவள் கழுத்திலும் கரத்திலும் இருந்த நரம்புகள் புடைத்துக்கொண்டு வெளியே தெரிந்தது. அவளை மேலும் உசுப்பும் விதமாய்,
“நல்லா பாரு. அவன் எப்படி இருக்கான்னு. சிறையில் இருந்தாலும் எவ்வளவு சுகமாக இருக்கான்னு பாரு. நீ என்னடான்னா உன்னை மறைச்சுகிட்டு ஏமாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே ஒடுங்கி இருக்க. அமிலம் வீசி தண்டனைக்கு காத்திருக்கும் இவனே இவ்வளவு தெனாவட்டா இருக்கும்போது உனக்கென்ன?” என்ற கார்த்திக்கின் வேகம் மிகுந்த வார்த்தைகள் அவளுக்குள் ஒரு எரிமலையையே உருவாக்கிக் கொண்டிருந்தது. கரங்களை அழுத்தமாக மேசையில் ஊன்றியவள் தன்னையே குறுகுறுவென பார்க்கும் அந்த பாண்டியனை கண்டு வெறியாகிக் கொண்டிருந்தாள்.
“என்ன சவுக்கியமா கண்ணு? என்னோட கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கீயே…” என்று மீராவை கண்டு இளித்தபடி எழுந்த பாண்டியனின் முகத்தில் ஒரு குத்து விடவேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கி, கண்களில் தேங்கியிருந்த அனலுடன் மீராவிடம் திரும்பிய கார்த்திக்,
“அந்த சின்ன பாட்டிலில் சல்பியூரிக் ஆசிட் இருக்கு. அது தோளில் லேசா ஒரே ஒரு டிராப் பட்டா போதும் அந்த இடம் அப்படியே கருகி நாசமாகிடும்.” என்று கார்த்திக் சொன்னதுதான் தாமதம், அந்த பாட்டில் மூடி தெறித்து தரையை தொடும் முன்னரே அதிலிருந்த நிறமற்ற அமிலம் எதிர் இருந்த பாண்டியன் முகத்தை பதம் பார்த்திருந்தது.
பாண்டியன் கதறி, விம்மி துள்ளிக் குதிக்க, மீரா நாற்காலியிலேயே சரிந்து விழுந்து அவன் கதறலுக்கு இணையாக அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவலை மறைக்காமல் வெளிப்படுத்தி வெடித்துச் சிதறினாள். அறை முழுதும் சில்லுசில்லாய் கண்ணாடி நொறுங்குவது போல் நொறுங்கிய அவளது இதயம் இழந்ததை எண்ணி விம்மி துடிக்க, கோரமாய் பிரதிபதித்தது அதன் ஒலி. தொடர் கேவலில் அவள் உடல் குலுங்கி நடுங்க கார்த்திக் தாமதிக்காது அவள் தோளையும் முதுகையும் அழுந்த பற்றி மெல்ல வருடினான். அவ்வளவு தான் அத்தனை மாதம் தேக்கி வைத்திருந்த அத்தனையும் கட்டவிழ்த்து விட்டது போல் வெளியே கொட்டினாள் மீரா.
“ப்ரண்ட்ஸ் கூட அன்னைக்கு நடந்ததை எல்லாம் பேசி அரட்டை அடிச்சிட்டு கலாய்ச்சிட்டு வந்தேன். ராகவும் வெளில நிக்குறேன்னு போன் பண்ணான்… காரோட வந்திருக்கான்னு தெரிஞ்சு சந்தோஷமா காலேஜை விட்டு வெளிய வந்தப்போ திடீர்னு என்ன நடந்துச்சுன்னே தெரியலை. உயி…உயிரே போனமாதிரி ஒரு வலி, எரிச்சல். யாரோ என்னை தீயில் தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சு…. அந்த… அந்த வலி… இப்போ நினைச்சாலும் வலிக்குது. கண்ணாடியில என் முகத்தை பார்த்தா எனக்கே… பயமாக இருக்கு…
பக்… பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லாம்… என்னை பார்த்தால் பயத்தில் அழுதாங்க… முன்னாடி ஆசையா சிரிச்சி பேசுவாங்க. அவங்க பேரெண்ட்ஸ் பசங்க பயப்படுறங்க நீ கொஞ்சம் ஒதுங்கி இருந்துக்கோ இப்படியே வெளில வராதேன்னு நேராவே சொல்லிட்டாங்க. அப்புறம் என்.. என் பிரெண்ட்ஸ் கூட என்னை… பார்க்க..  அரு..வருப்பா… கோ… கோரமா இருக்குன்னு கிட்ட வரவே யோசிச்சாங்க. எங்க என்கூட சேர்ந்தால் இதோ இவனை மாதிரி என்னை பழிவாங்க வரவங்க அவங்க பொண்ணையும் ஏதாவது செஞ்சிடுவாங்கன்னு என் ப்ரென்ட்ஸோட பேரன்ட்ஸ் என்கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எல்லோருமே என்னை தவிர்க்க ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி முன்னாடி… என்னை… என்னை பிடிக்கும் காதலிக்கிறேன்னு ஒருத்தன் சொன்னான், அப்புறம் அவன்கூட உன் முகத்தில் தினம் முழிச்சிட்டு போனா எந்த காரியமும் உருப்படாதுன்னு சொல்லிட்டான்…
அது… அதுமட்டுமில்லை வெளில போனாலே நான்… நான் ஏதோ… வேற்று கிரகத்திலிருந்து வந்த வேற்று கிரகவாசி போல எல்லோரும் ஒதுங்கியே போவாங்க… எனக்குன்னு உணர்ச்சிகள் இல்லாத மாதிரி எல்லோரும் என்னை பரிதாபமா பார்க்கிறது, இனி இவளால எதுவுமே செய்ய முடியாதுனு என்னை ஒருபொருட்டாகவே மதிக்காமல் வார்த்தைகளால் வதைப்பது… அப்படி என்ன தவறு செய்துட்டேன் நான்? எனக்கு மட்டும் ஏன் இப்படி? எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது? 
எல்லா… எல்லாத்துக்கும் காரணம் இவன்தானே? எல்லாமே இவனால் தானே. நான் இவன்கூட பழகுனது கூட இல்லை. அப்புறம் ஏன் இப்படி என் வாழ்க்கையை சூனியம் செய்தான்னு கேளு கார்த்தி. அவன் யாரு? அவனுடைய விருப்பத்திற்கு நான் ஏன் சம்மதம் சொல்லணும்? நோ சொல்லி மறுக்குற உரிமை எனக்கில்லையா? எனக்குன்னு ஆசை விருப்புகள் இல்லையா? நான் என்ன அவன் வீட்டு கிள்ளுக்கீரையா? அவனை கேளேன்… எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது. நெஞ்செல்லாம் வலிக்குது. அழுதழுது கண்ணெல்லாம் எரியுது. எனக்கு… என்னை கண்ணாடியில… என் பிம்பத்தை பார்க்கும் போதே குமட்டுது. இவனால் தானே எல்லாம்… அவனை…” என்று வேகமாய் எழுந்து எதிர் இருந்தவன் மேல் பாயப் போனவளை தடுத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக். அவள் முகம் தானாக அவன் தோளில் பதிய, அவன் விரல்கள் ஆதரவாக அவள் தலையை கோதின.
“ஸ்ஸ்… ரிலாக்ஸ்… காம் டவுன்…” கார்த்திக் குரல் மென்மையாய் ஒலிக்க, அவனுள் மேலும் புதைந்து கொண்டாள் மீரா. அழுகை நிற்காது மேலும் மேலும் பெருக, கேவலில் அவள் உடல் குலுங்கி தூக்கிவாரிப் போட்டது. அதை உணர்ந்தவன் அவள் தலை கோதிய கரத்தை கீழிறக்கி, அவள் தோள் சுற்றி வளைத்து பாதுகாப்பாய் அவளை தனக்குள் புதைத்து இறுக அணைத்துக் கொண்டான் கார்த்திக். அந்த நேரத்திற்கு அந்த அணைப்பு தேவையானதாய் இருக்க, அடைத்து வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் ஒருசேர படையெடுத்து அவளை தாக்கிய வேகத்தில் திணறி தடுமாறியவளுக்கு கிடைத்த பற்றுகோளாய் அவன் இடைசுற்றி கைகோர்த்து அவனை அணைத்துக் கொண்டாள் மீராவும்.
அவர்களின் இந்த முதல் அணைப்பு காதல் அணைப்போ, மையல் கலந்த அணைப்பாகவோ இன்றி துயரில் தோள் கொடுத்து உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளும் ஆறுதல் அணைப்பாகவே இருந்தது.
அணைப்பு இறுகினும், “இல்லை இவன்… இவனால் தான் எல்லாம்…” என்று அவள் விடாமல் விம்ம,
“நீ அழுது புலம்புறதுக்காக உன்னை இங்க அழைச்சிட்டு வரல. உன் உலகம் அந்த நான்கு சுவரோடு முடிஞ்சிடாதுன்னு சொல்லத்தான் கூட்டிட்டு வந்தேன். உனக்காக யாரும் தங்களோட உலகத்தை நிறுத்திக்க போறதில்லை. இதோ குற்றம் செய்தவனே எந்த ஒரு குற்றஉணர்ச்சியும் இல்லாமல் வாழும் போது, நீ ஏன் உன் வாழ்க்கைச் சக்கரத்தை தடுப்பு வைத்து தடுத்து வச்சிருக்க? இந்த சமூகம் உன்னை மட்டுமே நியாபகம் வச்சி உன்னையே கார்னர் பண்ணுங்கிற மூட நம்பிக்கையை இத்தோடு மறந்துடு. இதோ இந்த பாண்டியனை பற்றி எல்லா செய்தி சேனல்களிலும் 24*7 பிரேக்கிங் நியூஸ் போட்டாங்க. நிறைய யூ டியூப் சேனல், நிறைய மாத வார இதழ்களிலும் கட்டுரைன்னு வெளியிட்டாங்க. போதாததிற்கு நான்கு பேரை சேனல் ஸ்டூடியோக்கு கூப்பிட்டு எல்லா சேனல்களும் விவாதம் செய்தன. அதனால் என்ன பயன்? அவன் நல்லாத்தானே இருக்கான். நீ என்ன பண்ணிட்டு இருக்க?
நாளைக்கே இவன் பெயிலில் வெளியே வர்றான்னு வச்சிக்கோ… நாளைக்கு யாருக்கும் இவனை அடையாளம் கூட தெரியாது. எல்லோருக்கும் இப்படி ஒரு தவறு நடந்து ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்கின்ற செய்தியே மறந்து போய் இருக்கும். அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனையே பெரிசா இருக்கும். அதுல உன்னை எங்க கவனிக்க? பேசுரவங்க ஒரு நாள் இல்லை ஒரு வாரம் அதிகபட்சம் ஒரு மாசம் பேசுவாங்க, அதோட அவங்க கடமை முடிஞ்சிச்சு. ஆனா உன்னோட வாழ்க்கையை அந்த காசிப்காக பாழாக்கிக்க போறீயா? அவர்களுக்காக உனக்காக இருக்குற எங்களை வதைக்க போறீயா? குற்றம் செஞ்சவனே பாதுகாப்பா இருக்கும்போது உனக்கென்ன? நீ ஏன் இப்படி இருக்கணும்? நீ என்ன செஞ்ச?” என்று அவன் அடுக்கடுக்காய் பேசிச் செல்ல, அவன் பேச்சில் தெளிவு பெற்றவள் போல அவன் அணைப்பிலிருந்து வெளிவந்தவள் கண்களில் வழிந்த நீரை வீம்பாய் உதறி தள்ளிவிட்டு, 
“யூ ஆர் ரைட். நான் தான் ஏதேதோ… ச்ச… என் பாதி வருடத்தை வீண் செய்துட்டேன். இவன் யாரு என்ன முடக்க?.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
வாஞ்சையாய் அவள் முகத்தை இருகரம் கொண்டு பற்றியவன் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீரின் தடத்தை துடைத்துவிட்டான். மீரா முயன்று மெலிதாய் இதழை வளைக்க, அவளை விடுவித்து, தன் வலப்புறம் திரும்பி அங்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாண்டியனை உள்ளே செல்லச்சொல்லி சைகை காட்டினான். அவன் விட்டால் போதுமென்று ஓடியேவிட்டான். அந்த சைகை பரிமாற்றத்தை பார்த்த மீராவிற்கு அப்போது எல்லாம் புரிந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவன் கையை பற்றிக்கொண்டாள்.
“அது அமிலம் இல்லையா? நல்ல வேலை நீங்க உண்மையான அமிலத்தை வைக்கல. அது உண்மையா இருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்னும் துவண்டிருப்பேன்.” என்றவள் தொய்ந்து தலை தானாக அவன் தோளில் சாய்ந்தது. மீண்டும் அவன் கரம் அவள் சிகை கோத சென்றுவிட,
“அந்த தைரியத்தில் தான் இவனுங்க இது மாதிரி செய்யுறானுங்க. நீங்க பதிலுக்கு வீச ஆரம்பிச்சா அதோட வலி அவங்களுக்கு புரியும். பொண்ணுங்க மென்மையானவங்கன்னு சொல்லி சொல்லியே உங்களை மேல வரவிடாம வச்சிருக்காங்க, உங்களை ஈஸியா இதுமாதிரி செஞ்சு முடக்கிடலாம்னு அல்ப்பமா யோசிக்கிறாங்க…” என்று கை முஷ்டி இறுக சிறு இடைவெளி விட்டவன் அவளை இன்னும் இன்னும் தன்னோடு சேர்த்துக்கொண்டு,
“சிறையாக இருக்கேன்னு பார்த்தேன், இல்லைன்னா அமிலத்தை தான் வச்சிருப்பேன். உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்.” என்றான் வெறுமையை வெறித்தபடி. 
“ஏன்? நானும் என் பங்குக்கு அவன் மேல அமிலத்தை வீசிட்டு, இங்கேயே இந்த மூணாவது சிறையில் தண்டனை வாங்கி குப்பை கொட்டவா?” என்று கேலி போல் பேசியவள் அனைத்தும் முடிந்த களைப்பில் எதிர்பாரா விதமாய் கண்கள் சொருகி மயங்கிச் சரிந்தாள்.
உணர்ச்சிகளை கொட்டியவள் சற்று தெளிந்தார்போல இருந்து மயங்கிவிட, அதை வாங்கிக்கொண்டவனோ மனதால் துவண்டிருந்தான். மேம்போக்காய் பார்த்த போது தவறாய் தெரிந்த அவளது தயக்கமும் அழுத்தமும் பிடிவாதமும் இப்போது அவள் அகத்தை கண்டுகொண்டதும் அடிபட்டு போனது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை காவல் அதிகாரியாய் மூன்றாம் மனிதராய் எட்ட இருந்து பார்த்த போது தோன்றிய பரிதாபம் தனக்கென்று தன்னை சார்ந்தவளுக்கென்று வந்ததும் இதயம் பலம் இழந்து நடுங்கியது. என்ன முயன்றாலும் மறுத்தாலும் தொழில் வாழ்க்கையும் சுயவாழ்க்கையும் வேறு வேறுதானே. ஒன்றோடு ஒன்றை சேர்க்கவும் முடியாது, சேர்க்கவும் கூடாது சேர்த்தாலும் அது சரியாய் இருக்காதே.

Advertisement