Advertisement

*7*
என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள முடியம் என்ற அதீத நம்பிக்கை சுக்குநூறாகியிருந்தது மீராவின் உளைச்சலை நேராய் கண்டவுடன். அவள் கேட்டவுடனேயே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும், மாறாக பெரிய இவன்போல அவளை சிறைச்சாலை அழைத்துச் சென்று அவளது ரணத்தை கீறிவிட்டு அவள் சுக்குநூறாக சிதறுவதை கண் எதிரே பார்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்க கூடாது என்று காலதாமதமாய் புரிந்து வருந்திக் கொண்டிருந்தான் அவன்.
“நீங்க இருக்குற நிலைக்கு உங்களுக்கு தான் முதலில் ஆலோசனை கொடுக்கணும் போலிருக்கு. இங்கே வந்துட்டீங்கள்ள, இனி ஷோபா மேம் பார்த்துக்குவாங்க உங்க மனைவியை. கொஞ்சம் சாந்தமாகுங்க சார். இந்த செஷன் முடிந்தவுடன் நீங்க தான் திரும்ப உங்க மனைவியை கவனிச்சாகணும். நீங்களே இப்படி வருத்திக்கிட்டா அப்புறம் மனஅழுத்தத்தில் இருக்கும் உங்க மனைவியை எப்படி கையாளுவீங்க? உடலுக்கு வரும் பிணியைவிட பலமடங்கு கொடியது மனசை பதம்பார்க்கும் பிணி. மற்றதைவிட அதிகமா கன்சர்ன் எடுத்து பார்த்துக்கணும். இது ஒரு க்ரூஷியல் டைம் தான், நம்பிக்கையோட இருங்க.” என்று அந்த கிளீனிக்கின் வரவேற்பாளர் அவன் காவல் அதிகாரி என்று தெரிந்தவுடன் வலிய வந்து கார்த்திக்கிடம் பேசிவிட்டு செல்ல, முகத்தை அழுந்த தேய்த்தவன் அரவமற்று அமைதியாய் இருந்த அந்த காரிடாரின் முடிவில் இருக்கும் சன்னலின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
சன்னல் வெளியே மின்விளக்குகளையும் மீறி இருள் தன் ஆதிக்கத்தை செலுத்தியிருக்க, கார்த்திக்கின் மனமும் அன்று காலை முதல் நடந்த இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்த்தது.
என் புறத்தோற்றம் கண்டு என்னை எடைபோடாத இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அவள் சொன்னவுடன் அவனுக்கு தோன்றிய இடமெல்லாம் ஒன்றுதான். இவளின் இந்த நிலைக்கு காரணமான மூலகர்த்தாவை தேடிச் செல்வது. இடம் தேர்வானதும் தன் அதிகாரம் கொண்டு சில ஏற்பாடுகளை செய்தவன் அவளையும் அழைத்துக்கொண்டு சென்று நின்ற இடம், மத்திய சிறைச்சாலை – புழல்.
கார் நின்றவுடன் சன்னல் வழியே மீரா பார்வையை செலுத்த, மத்திய சிறை 2 – புழல், என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த பெயர் பலகையே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்தியது. ஏன் இங்கு அழைத்து வந்திருக்கிறான் என்று மீரா அவனை கேள்வியாய் நோக்க, காரை வாயிலிலேயே நிறுத்தியவன் தன் வேலெட்டிலிருந்து ஐ.டி கார்டை எடுத்து அங்கு சல்யூட் அடித்த காவலாளியிடம் காட்ட, அவர் அந்த பெரிய வாயிற் கதவை திறந்து விட்டார்.
கார் முன் கதவிலிருந்து முன்னேறி உள்ளே செல்ல, பொட்டல்காடாய் இருந்த அந்த சுற்றுப்புறம் மீராவின் கவனத்தை தன்வசமாக்கிக் கொண்டது. இது போன்றதொரு இடத்திற்கு வந்ததில்லை ஆனால் வர நினைத்திருக்கிறாள். கல்லூரியில் படிக்கும் போது இங்கு வந்து பலரை பேட்டிகண்டு, அவர்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். குற்றம் செய்து தண்டனை அனுபவிப்பவர்களை குற்றம் செய்யத் தூண்டுவது சூழ்நிலையா இல்லை அவர்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றமா இல்லை குற்றம் செய்வதே குலத்தொழிலா என்பது தான் அவள் அங்கு ஆராய நினைத்த களம். பற்பல மூத்த அறிஞர்களின் கட்டுரைகள் தான் அவளுக்கு இந்த யோசனையை கொடுத்தது. 
மனநல ஆலோசகர்கள் சிலர் பதிவிட்டிருந்த கட்டுரைகளில், பல குற்றவாளிகள் அந்த நேர உணர்சிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் ஊந்தப்பட்டு குற்றம் செய்து விடுகிறார்கள். ஆனால் அதை செய்த பின் சுயம் உணர்ந்து நிறுத்தி நிதானமாக யோசிக்கும் போது பலர் தங்கள் தவறை தண்டனைக்கு முன்பே உணர்கின்றனர் என்பதும் அவள் சிந்தையை கணிசமாக தூண்டியது. கேட்க விளையாட்டாய் இருந்தாலும் எப்படி டாக்டர் மக்கள் டாக்டர் ஆவார்கள், ஆசிரியர் மக்கள் ஆசிரியராவார்கள் என்று வாழையடி வாழையாய் கூறுகிறார்களோ அதே போல் தான் திருடுவதும், தவறு செய்து சிறை செல்வதும் சிலருக்கு குலத்தொழில் என்ற செய்தி, படித்து பட்டம்பெற்று உயர்தொழில் செய்யும் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு வேடிக்கையின் உச்சகட்டமாகவே தோன்றும். சூழ்நிலையால் குற்றவாலியாபவர்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேறு வழியின்றி பணத் தேவைகளுக்காகவோ அல்லது மிரட்டலுக்கோ பயந்து குற்றம் செய்பவர்கள் பலர். காலக்போக்கில் கத்தி எடுத்தவன் அது கொடுக்கும் தைரியத்தில் அதிகாரத்தை பிடிக்க ஆசைப்பட்டு அதையே தொழிலாக்கி கொண்டுவிடுகிறான்.
இங்கு எதற்கு இப்போது அழைத்து வந்திருக்கிறான்? ஒருவேளை இத்துறையில் தனக்கிருக்கும் ஆர்வம் பற்றி தெரிந்து கொண்டுதான் தன்னை இங்கு கூட்டி வந்திருக்கிறானோ? என்று நினைத்துக் கொண்டே கேள்வியாய் அவனை நோக்க, அதற்குள் காரை நிறுத்தியிருந்தவன் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கி பின்கதவை திறந்து அவளை இறங்கச் சொல்லாமல் அவனே கைபிடித்து அவளை வெளியே இழுத்தான். 
ஆதவன் தன் வேகத்தை கூட்டியிருக்க, சுளீரென தன் முகத்தில் வந்து விழுந்த கதிர்களை தன் மற்றொரு கரத்தால் மறைத்துக்கொள்ள, அவளை தன் இழுப்புக்கு நடத்தி அழைத்துச் சென்றான் கார்த்திக்.
“நான் என்ன சொன்னேன் நீங்க எங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க? இப்போ எங்கே போகிறோம்?” என்று கேள்விகளை அடுக்கியவள் கரம் தன் இடக்கன்னத்தை மறைத்த வண்ணமே இருந்தது.
“ஒரு முக்கியமான வேலையாத்தான் உன்னை அழைச்சிட்டு வந்திருக்கிறேன். அழுமூஞ்சு மீராவா இல்லாம நான் உன்கிட்ட உதவின்னு கேட்டு வந்து நின்னப்போ எடுத்தீயே ஒரு ஜான்சி ராணி அவதாரம் அதை அப்படியே மெய்ண்டைன் செய். அது தான் உனக்கு அழகு.” என்றவன் கன்னத்தை மறைத்திருந்த அவளது மற்றொரு கரத்தையும் தன் கரத்தினுள் பிடித்துக் கொண்டான்.
“இது சிறை-2, விசாரணை கைதிகளை இங்கு தான் வச்சிருப்பாங்க. சிறை-1 ல் தண்டனை கைதிகளும், சிறை-3 ல் பெண் கைதிகளும் இருப்பாங்க.” என்று அங்கிருந்த தொகுப்புகளை சுட்டிக்காட்டி கூடுதல் தகவல்களையும் கூறிக்கொண்டே அவளை உள்ளே இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். எரிச்சல் ஒருபுறம் வந்தாலும், ஆள் நடமாட்டாமின்றி நிசப்தமாய் இருக்கும் வெட்டவெளிப்பாதை அவள் பதட்டத்தை தணிக்கவும் செய்தது.
“ஹலோ சார்… திஸ் இஸ் கார்த்திக், கொஞ்ச நேரம் முன்னாடி பேசுனேனே… முன்னாடி சென்னை தான் இப்போ மாற்றல் ஆகி வேறு இடத்தில் இருக்கேன்.” என்று கை குலுக்கி தன்னை அங்கிருந்த அதிகாரியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டவன், மீரா கையை அங்கு நுழையும் போதே விட்டிருந்தான்.
“தெரியும் சார். யாரை பார்க்கணும்னு சொன்னால் அழைச்சிட்டு வர சொல்றேன்.” என்று எதிர்புறம் இருந்தவர் கேட்க,
“ரிமேண்டில் இருக்கும் பாண்டியனை பார்க்கணும். பார்வையாளர் அறையில் இல்லை, விசாரணை அறையில்.” என்று தீர்க்கமாய் கார்த்திக் பதில் கூற, எதிர் இருந்தவருக்கு இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்பது நன்கு புரிந்தது…
“தாராளமா பார்க்கலாம் சார். ஆனால் இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நைட் டியூட்டி வர்ற எஸ்.ஐக்கு தெரிஞ்சா கூட பிரச்சனை ஆகிடும், அவர் கொஞ்சம் முசுடு.” என்று விளித்தவரின் பார்வை வியப்பு கலந்த கேள்வி மற்றும் யோசனையுடன் கார்த்திக் அருகில் குழப்பம் தாங்கி நிற்கும் மீராவிடம் பதிந்தது. பாண்டியன் ஏன் உள்ளே இருக்கிறான் என்ற விஷயம் தெரிந்தவர் ஆதலால் மீராவையும் சட்டென கண்டுகொண்டார். ஆனால் அவள் எப்படி கார்த்திக்குடன் என்ற கேள்விதான் அவரிடம்.
“என் மனைவி, மீரா.” என்று சம்பிரதாயத்திற்கு அவளை அறிமுகப்படுத்திய கார்த்திக் பேச்சை வளர்க்க விரும்பாதவனாய் அவளை மேலும் உள்ளே இருக்கும் வேறு அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த அதிகாரியும் இவர்களை மரியாதை நிமித்தமாய் வழிநடத்தி அழைத்துச் சென்றார்.
அவள் அதை எல்லாம் கவனிக்கவில்லை. பாண்டியன் என்ற அந்த பெயரே அவளின் முழு கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருந்தது ஆனால் சட்டென்று நினைவு வரவில்லை. அவன் யார் என்று யோசித்துக்கொண்டே நடக்க, அவள் மனம் ஏனோ காரணமின்றி தவித்து அபாய மணி அடித்தது. அடுத்த நொடி அவளையும் அறியாமல் கார்த்திக்கை நெருங்கி அவனையொட்டி நடக்க ஆரம்பித்தாள். அவளின் தேகம் திடுமென தன் தோளில் உரச நடையின் வேகத்தை குறைத்தவன் அவளை பரிவாய் நோக்க, அவள் அகம் மட்டுமல்ல புறம் முழுதும் தவிப்பும், குழப்பமும் பரவிக்கிடந்தது. மனம் தாளாமல் ஆதரவாய் அவள் கரம் பற்றி அழுத்தினான் கார்த்திக். தத்தளிக்கும் போது கிடைக்கும் துடுப்பு போல் அவனின் கரத்தை தன் இருகரம் கொண்டு கெட்டியாக பிடித்துக் கொண்டு அவனை ஒட்டியே நடையை தொடர்ந்தாள் மீரா.
அந்த அறையில் இரு நாற்காலிகள் எதிர் எதிரேவும், ஒரு மேசை இவ்விரு நாற்காலிக்கும் இடையில் போடப்பட்டிருந்தது . 
“சார் ஒரு நிமிஷம், இன்னொரு நாற்காலி போடச்சொல்றேன்.” என்று அந்த அதிகாரி காத்திருக்க சொல்ல, வேண்டாம் என்று மறுப்பாய் கார்த்திக் தலையசைத்ததும், அந்த அதிகாரி சென்றுவிட மீராவை நாற்காலியொன்றில் அமர வைத்தான்.
அவளுக்கோ படங்களில் போலீஸ் குற்றவாளியை விசாரிக்கும் சீன் தான் கண்முன் வந்து சென்றது. எவ்வளவு படங்களில் இது போன்றதொரு காட்சியை பார்த்திருப்பாள். சட்டென்று ஏதோ நினைவு வந்து பதட்டம் கொண்டவளாய் நிமிர்ந்து தன் பக்கத்தில் நிற்கும் கார்த்திக்கை கேள்வியாய் பார்த்தாள்.
“உனக்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் புரியும்.” என்று கண்சிமிட்டி, அவள் தோள் பற்றி ஆதரவாய் அழுத்தினான்.
அதே நேரம் யாரோ கதவை திறந்து உள்ளே வரும் அரவம் கேட்க கேள்வியாய் மீரா தன் வலப்புறம் பார்வையை செலுத்தினாள். காக்கி உடை அல்லாமல் உதவியாள் போல் ஒருவர் கையில் சிறிய பாட்டிலுடன் நுழைந்து, அந்த பாட்டிலை அவளுக்கு எதிரே இருந்த டெஸ்கில் வைத்துவிட்டு கார்த்திக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு சென்றார். அதுவரை இல்லாத தாகம் அந்த பாட்டிலை பார்த்ததும் மீராவுக்கு வர, அதை எடுத்து குடிக்கப்போனவள் கையை வேகமாக பற்றி தடுத்தான் கார்த்திக்.
“தண்ணீர் வேணுமா?” என்ற அவனது கேள்விக்கு சந்தேகத்துடனே தலையசைத்து தன் தேவையை தெரிவித்தாள். 
மறுநொடியே கார்த்திக் போனில் ஒருவரை அழைத்து விவரம் சொல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவள் கைக்கு ஒரு புது பிஸ்லெரி பாட்டில் வந்தது. தன் முன் டேபிளில் வைத்த அந்த சிறிய பாட்டிலையும், தன் கையில் இருக்கும் பெரிய பிஸ்லெரி பாட்டிலையும் மாறி மாறி பார்க்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டும் நிறமற்று ஒரே நிறத்தில் தான் இருந்தது. பின்னர் ஏன் தடுக்கிறான்? என்பது போல் நிமிர்ந்து அவனை பார்க்க,
“என்ன பார்வை?” என்ற சீண்டலுடன் அவனே பாட்டில் மூடியை திறந்து கொடுத்தான். மனதில் கேள்வியும் சந்தேகமும் நாற்காலி போட்டு வந்தமர, மடமடவென அவன் திறந்து கொடுத்த பாட்டிலில் இருந்த தண்ணீரை விழுங்கினாள்.
“சார், இதோ இவன் தான் பாண்டியன். அடுத்த மாசம் கோர்ட்டில் ஹியரிங் இருக்கிறது.” என்று ஒருவனை உள்ளே அழைத்து வந்தார் அந்த அதிகாரி.

Advertisement