Advertisement

“குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல… ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே… எங்க வாழ்க்கை சம்மந்தமா நான் எடுத்த இந்த முடிவை செயல்படுத்த எனக்கு கொஞ்ச காலஅவகாசம் தேவைப்பட்டுச்சு. திடீர்னு எல்லாம் மாயம் போல முடிஞ்சிடுச்சு. மீரா என் வாழ்க்கையில் இணைந்ததை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோக எனக்கே நேரம் தேவைப்படும் போது மனதளவில் காயப்பட்டிருக்கும் மீராவை நினைச்சு பார்க்கணுமே… என்கூட கல்யாணமான நிதர்சனத்தை அவள் மனதளவில் முதலில் ஏத்துக்கிட்டும். அதுவரை இப்படி தான் வார இறுதி மட்டும் நான் இங்க வரேன்.”
“கேட்க கடினமாகத் தான் இருக்கு, ஆனாலும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். அவள் அழகா இல்லைன்னு நினைக்கிறீங்களா? எங்களுக்கு உதவி செய்ய ஒத்துக்காம இருந்திருந்தா மீராவைவிட பெட்டர் சாய்ஸ் உங்களுக்கு கிடைச்சிருக்கும்னு கவலையிருக்கா உங்களுக்கு?” என்று நேரடியாய் கேட்டவள் தன் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவர் எதுவும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் தான்…
ஆனால் அவரோ இவர்களின் உரையாடலை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பொருத்தவரை அவருக்கு இருக்கும் சந்தேகங்களை தயக்கம் உடைத்து கார்த்திக்கிடம் கேட்க முடியவில்லை, அதை மருமகள் செய்யும் போது தவறாய் தோன்றவில்லை மாறாக கார்த்திக்கின் மனநிலை என்னவாக இருக்கும் என்றே ஆவலோடும் பதட்டத்தோடும் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இதுவரைக்கும் அப்படி தோணல… இனியும் தோணாது. அவளோட தப்பு இதில் எதுவுமே இல்லையே. யாரோட வஞ்சத்துக்கோ பலி இவள். அதற்கு இவளை காரணமாய் வச்சு தண்டிக்கிறதில் எந்த நியாயமும் இல்லை. நான் பல குற்றவாளிகளை பார்த்திருக்கேன். என்னால குற்றம் செய்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பிரித்தறிந்துகொள்ள முடியும். அதனால் இந்த விஷயத்தில் நீங்க கவலைபட வேண்டாம். எனக்கும் அவளுக்கும் ஒத்துபோசுன்னா கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளில் நாங்க சந்தோஷமா வாழறதை நீங்களே பார்ப்பீங்க.” என்று அவன் நம்பிக்கை அளிக்க அவனின் வார்த்தைகளில் மீண்டோமொரு சந்தேகம் வந்தது சுஜாவிற்கு அல்ல அம்புஜத்திற்கு…
“உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலைன்னா?” இவ்வளவு நேரம்…  ஏன் அவன் வந்ததிலிருந்தே பெரிதாய் அவனிடம் பேசியிராதவர் இப்போது கேள்வி எழுப்பவுமே அவருக்கு இருந்த கேள்விகளும் தயக்கங்களும் நம்பிக்கையின்மையும் மட்டுப்படிருப்பதை உணர்ந்து கொண்டான்.
“ஒத்துப்போயிடும்னு நம்புவோமே அத்தை… எண்ணங்கள் தான் வாழ்க்கையின் நிலையை தீர்மானிக்குது. எவ்வளவு திருப்தியான வாழ்க்கை அமைஞ்சிருந்தாலும் ஏதோ ஒரு எதிர்மறை எண்ணம் போதும் அந்த வாழ்க்கையை பார்க்கும் கண்ணோட்டமே மாறிடும். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்னு நம்புவோமே. நாளைக்கு எப்படி வேணும்னாலும் இருக்கும் அதை நினைச்சு இன்னைக்கே நம்மோட முயற்சியை விட்டுடக் கூடாதுல்ல. சில நேரம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும், ஆனால் முன்னெச்சரிக்கையோட எடுக்கணும். எனக்கும் அவளுக்கும் சரியா வரும்னு தோணுது. மீராவுக்கும் அதுவே தோணினால் நல்லா இருக்கும் இல்லையா அவளுக்கு எது தேவையோ அதை கொடுக்க முயற்சி செய்றேன். அதோட… இன்னொரு வாக்கும் என்னால தரமுடியும்… 
இனி எப்போதும் என்னைக்கும் அவளுக்கு தீங்கு விளைவித்தவனாலும் விளைவிக்க நினைத்தவர்களாலும் குறிப்பா என்னை சார்ந்தவர்களால் மீராவுக்கு எந்த தொந்தரவும் வராது.” என்கவும் அம்புஜத்திற்கு இருந்த தயக்கமெல்லாம் உடைந்தது. அவன் பின்புலம் குறித்து உறுத்திக்கொண்டிருந்த பயம் கானலாகிட, கசடுகள் நீங்கி நம்பிக்கை துளிர்த்தது.
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. அவள் சொன்னதை மனதில் வச்சிக்காதீங்க. நான் அவளை தயார் செய்து அனுப்புறேன்.” அவனை முழுமையாய் தன் மகளின் கணவனாய் ஏற்றுக்கொண்டதன் அர்த்தம் அவர் வார்த்தைகளில் வெளிப்பட, புன்னகை முகமாய் அங்கிருந்து மகள் அறைக்கு விரைந்தார் அம்புஜம்.
“நாலாவது விக்கெட்டையும் எடுத்துட்டீங்க,” என்று சுஜா விளையாட்டாய் கூற, லேசாய் தலையை சிலுப்பி சிரித்தவன், “அது என்ன நாலு? மெயின் விக்கெட் இன்னும் இந்த பாவப்பட்டவனை ஒழுங்கா பார்த்த மாதிரியே தெரியல.”
“மச்சான் தயவு இருந்தாதான் மலை ஏறலாம்னு சொல்லுவாங்க. நீங்க முதல் விக்கெட்டா மச்சானையே கவுத்துட்டீங்க, நானும் அவர்கூட இனாமா வந்துட்டேன். இப்போ மாமியாரும் அவுட்டு, அவங்களோட இனாமா மாமனாரும் உங்க பக்கம் தான். ஆனால் இந்த மெயின் ப்ளேயர் தான் இடக்கானவங்க…” என்று அவள் தாடையில் கைவைத்து நிதானமாய் சொல்ல,
“என் கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை. இருந்திருந்தா உன்னை மாதிரி தான் இருந்திருப்பாங்க.” என்று அவளைப் பார்த்து நகைத்தவன், “ஆனால் நீ நாலு விக்கெட்னு சொன்ன மாதிரி இருந்ததே?”
“என்கூட சேர்ந்து என் பிள்ளையும் இனாமா வந்துட்டா.” என்று கண்களில் ஒளி மின்ன கூறியவள் ஏதோ ஒரு நினைவில், “இந்த வீட்டில் இதுமாதிரி இலகுவா பேசினதா எனக்கு நினைவு இல்லை.” என்கவும் கார்த்திக்கு வருத்தமாகிப் போனது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல்,
“ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்திவிட்டு தீவிரமானவன், “இதுமாதரி நேரத்தில் பழசை நினைச்சு மனசில் குழப்பிக்காதமா. எனக்கு புரியுது மீராவுக்கு இப்படி ஆனதில் உங்க எல்லோருக்கும் மனஉளைச்சல் தான். பட் அதை தாண்டி வந்துட்டீங்க. இனிதான் நீ மனசை தெளிவா வச்சிக்கனும்.”
“உண்மை தான். நீங்க இப்போ பேசுனதிலேயே மனசு நிறைஞ்சிடுச்சு. இதே மாதிரி மீரா மனசும் நிறைஞ்சிடனும்.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே சிடுசிடுப்புடன் இளம்பச்சை நிற சில்க் காட்டன் சேலையில் கடினத்தை ஒப்பனையாக்கி புருவத்திற்கு இடையில் சிறிய பொட்டிட்டு, முடியை தூக்கி போனி டைல் போட்டு, கழுத்தில் புதிய தாலியை மட்டும் தாங்கி வந்தாள் மீரா.
“கிளம்புங்க மாப்பிள்ளை.” என்று அம்புஜம் கண் ஜாடை காட்ட, சூடேறி பொரிய தயாராய் இருப்பது போலிருந்த தன் மனையாளின் வதனத்தை கண்ட கார்த்திக் வாய் கொடுக்காது கிளம்ப எழுந்துவிட, சுஜாவும் வேகமாய் ராகவின் கார் சாவியை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள்.
“ஏன் இவ்வளவு அவசரப்படுறமா… பொறுமையா வா,” என்றுவிட்டே வெளியே செல்ல, மீரா அசையாது சிலை போல் நின்றாள். அம்புஜம் அவளை முன்னே செல்லும்படி உந்த, காலை அழுந்த ஊன்றி படப்படப்புடன் விழிகளை அங்குமிங்கும் அலைபாயவிட்டபடி தவிப்பவளை காண பாவமாய் தான் இருந்தது.
வெளியேறியவன் மீரா தன்பின் வரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் உள்ளே வந்து மீரா எதிரில் நின்றான்.
“அன்னைக்கு சொன்ன, உனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன், உன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாதுன்னு? ஆனால் இப்போ வெளியே கிளம்பனும்னு முடிவு செய்துட்டு பெயர்கூட தெரியாத மனுஷங்களோட சிந்தனைகளுக்கும் பார்வைக்கும் பயந்து இப்படி யோசிச்சிட்டு நிக்கிற? உன்னோட வாழ்க்கையை நீ தான் கட்டுப்படுத்துவேணு நினைச்சேன், பட்…” என்று எள்ளலாய் பேசுபவன் போல அவன் பேசிக்கொண்டு செல்ல, சுயம் தூண்டப்பட்டு வெகுண்டவள் விறுவிறுவென வெளியேறி கார் அருகில் சென்று நின்றுகொண்டாள்.
இதழை லேசாய் வளைத்தவன் பெண்களிடம் விடைபெற்று வந்து கார் லாக்கை எடுத்துவிட, பின் சீட்டில் ஏறிக்கொண்டாள் பெண். அதை கண்டும் காணாதது போல ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துகொண்டு காரை இயக்கினான் கார்த்திக். குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு காரினுள் நிசப்தம் குடிகொண்டிருக்க, அதை உடைக்க இருவருமே முனையவில்லை. அவரவருக்கு அவரவர் சிந்தனையே துணையாகியது. அவர்கள் இறங்கும் இடம் வந்ததும் காரை பார்கிங்கில் விட்டவன் இறங்கிவிட்டு மீரா இறங்க காத்திருக்க, அவள் அசைவேனா என்று தன் இடம்விட்டு அசையாது பீதியில் ஒடுங்கி அமர்ந்திருந்தாள். பொறுத்துப் பார்த்தவன் கார் கதவை திறந்துகொண்டு, “இறங்கு மீரா.” என்று குனிந்து அவளை வேண்ட, கார் இருக்கையை இறுகப் பற்றிக்கொண்டாள் அவள்.
“வேண்டாமே ப்ளீஸ்.” சற்று முன் சிடுசிடுத்த முகம் தற்போது ஐயத்தை பூசிக்கொண்டிருக்க, பிடிவாதக் குரல் கெஞ்சலாய் மாறி இருந்தது. அவளை அதிகமாய் தொல்லை செய்கிறோமோ என்ற குற்றவுணர்வு அவனிடத்தில் தலைதூக்க, கோவில் வரை வந்துவிட்டு அப்படியே திரும்ப மனமின்றி மீராவிடமே சரணடைந்தான்.
“ஒன்னுமில்லை… நான் இருக்கேன்ல வா.”
“இல்லை… வேண்டாம். நாம வீட்டுக்கு போகலாம். இங்கெல்லாம் இருக்க வேண்டாம்.”
“உன்னோட வாழ்க்கையை நீ தான் வாழனும் மீரா. மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு பயந்து உன்னோட வாழ்க்கை பாதையை மாத்திக்க கூடாது. நீ எந்த தப்பும் செய்யாத போது நிமிர்ந்து வா. கோவில்தானே யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, நீ இவ்வளவு தயங்கவே தேவையில்லை.” என்றவன் அவள் கைபிடித்து வெளியே இழுக்க, அவனை ஒண்டிக்கொண்டாள் பெண்.
“ஏன் இப்படி பிடிவாதம் செய்றீங்க? நான் காரிலேயே இருக்கேன், நீங்க அவங்களை இங்க கூட்டிட்டு வாங்க.” 
“பிடிவாதம் பிடிக்கிறது நீயா இல்லை நானா? ஒரு முடிவு எடுத்துட்டா பின்வாங்கக் கூடாது மீரா.” என்று தீர்க்கமாய் சொன்ன கார்த்திக் அணைவாய் அவள் தோள் சுற்றி கைபோட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டான்.
“ப்ச்.. எல்லோருக்கும் அவங்கவங்க விருப்பம் தான் முக்கியமாகிடுச்சி.” என்று அவள் கடுகடுக்க, சென்ற வாரம் மருத்துவர் ஷோபா சொன்ன விஷயம் நினைவு வந்தவனாய் அவளை கட்டாயப்படுத்துவதை விடுத்து,
“சரிவிடு நாம இங்கே போக வேண்டாம். வேற எங்கேயும் போகலாமா? உனக்கு எங்க போகணும்னு தோணுதோ சொல்லு.” என்று இறங்கி வந்தவன் அவளை மீண்டும் காரினுள் அமரவைத்தான்.
உள்ளே அமர்ந்ததுமே அவளின் பதட்டம் பாதியாய் தணிந்துவிட, வியர்வை அரும்புகள் அவளை நனைத்திருந்தது. எஞ்சியிருந்த பதட்டத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “யாருமே இல்லாத இடத்துக்கு அழைச்சிட்டு போக முடியுமா உங்களால?”
“வீட்டுக்கு போகணும்னு சொன்னீல்ல வீட்டுக்கு போலாமா?”
“அங்க வேண்டாம்… எனக்கு அந்த ரூமை நினைச்சாலே இப்போ ஒருமாதிரி இருக்கு. என்னை… என்னோட முகத்தை வச்சு என்னை எடைபோடாத இடத்திற்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று திடுமென இறைஞ்ச, நெஞ்சம் இறுகி தொண்டைக்குழி அடைத்தது அவனுக்கு.
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாய் பேசுபவளை எப்படி புரிந்துகொள்ள போகிறோம் என்ற திகைப்பு ஒருபுறம், அவளுடைய சுயத்தை வெளிக்கொணர்ந்து அந்த சுயத்தோடு அவன் ஒன்றவேண்டும் என்ற சவால் ஒருபுறம் இவற்றை தவிர்த்து அவள் மனதில் மண்டிக்கிடக்கும் எதிர்மறைகளை விரட்டும் பிராதன வேலை என்று அவன் கணக்கிட்டு வைத்திருக்கும் யோசனைகளை செயல்படுத்த  நினைத்தாலே ஆயாசமாய் வந்தது. ஏடுகள் கொண்டு உணர்வுகளை தளர்த்தி கயவர்களை பிடிக்கும் வித்தையை, உணர்வுக்குவியலால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பவளை குணப்படுத்தும் இடத்தில் உபயோகிக்கும் போது அது தவறாகவே முடியும் என்பது மெல்லப் புரிவது போல இருந்தது. அது புரியும் நாளாகவும் அந்நாள் அமைந்தது. 

Advertisement