Advertisement

இருக்கு. ஆனால் நான் யூஸ் பண்ண மாட்டேன். மெஷினில் போட்டால் துணி எல்லாம் சீக்கிரம் கிழிஞ்சிடும். டிசைன்ஸ் போயிடும்.என்று திரும்பாமல் ஏதோ சாக்கு சொன்னாள் அவனிடம்.
ஆமாமா உன் டிரெஸ்ல தான் எவ்வளவு டிசைன்ஸ் இருக்கு…என்று கேலியாய் அவள் உடுத்தியிருக்கும் ப்லைன் உடையையும் காய வைக்கும் உடையையும் சுட்டிக்காட்டி பேச, முறைப்பதை தவிர என்ன செய்திடுவாள் மீரா. 
சரி சரி… அதெல்லாம் உன் விருப்பம். எனக்கு ஒரு உதவி வேணும்,”
என்னால அந்த கேஸ் பைல் எல்லாம் பார்க்க முடியாது.என்று முந்திக்கொண்டு பதில் அளித்தாள் துணிகளை உதறியபடி. 
அதில்லை… எனக்கு வேண்டப்பட்டவங்க, இங்க சென்னை வீட்டில் நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதிலிருந்தே வேலை செய்யுறாங்க. அவங்க உன்னை பார்க்க ஆசைப்படுறாங்கா. கோவில்ல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ அர்ச்சனை பண்ணனுமாம் அங்க வர சொல்லியிருக்காங்க. வரியா ஒருமுறை பார்த்துட்டு வந்துறலாம்?” தயக்கம் உடைத்து, இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி தணிவாய் வேண்டினான் கார்த்திக்.
அவளோ, “அவங்க ஏன் என்னை பார்க்க விருப்பப்படுறாங்க?” என்றாள் ஏதோவொரு யோசனையில்.
நொடி தாமதியாமல் அழுத்தமாய் வந்தது அவன் பதில், “ஏன்னா நீ என்னோட மனைவி.
அவனது பதிலில் கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட, அவள் நெஞ்சுக்கூடு வேகமாய் ஏறி இறங்கியது. எவர் வற்புறுத்தலும் இன்றி தானே இழுத்து விட்டுக்கொண்ட வாழ்க்கை தான் இது. ஏதோ உணர்ச்சி வேகத்தில் யோசியாமல் எடுத்த முடிவு அவள் நினைத்துப் பாராத மாற்றங்களை கொண்டுவர தயாராய் இருந்தது.
ரொம்ப நேரம் எல்லாம் வேண்டாம். அரைமணி நேரத்தில் போயிட்டு வந்துறலாம். உங்க அண்ணன் காரிலேயே போகலாம்.வெளியே வர அஞ்சிக்கொண்டு யோசிக்கிறாள் என்று நினைத்து அவன் கூற, அவளோ புதிதாக கணவன் என்ற உறவு தன்னுடைய வாழ்க்கை அட்டவணையில் சிறிது சிறிதாய் மாற்றம் நிகழ்த்திக் கொண்டிருப்பதை எண்ணி அதை கிரகிக்க முயன்று கொண்டிருந்தாள். கவனம் முழுதும் இந்த உறவின் மீதும் அதன் எதிர்காலம் குறித்தும் இருக்க அவளின் வீம்பும், வீராப்பும், வெற்றுக் கோபமும், தன் அகத்தை பற்றிய மறுகலும் மட்டுப்பட்டிருந்தது. 
என்ன மீரா எதுவுமே சொல்ல மாடேங்குற?”
உள்ளம் முழுதும் குழப்பம் மண்டிக்கிடக்க, புரியாத பார்வை வீசி, “என்ன சொல்லனும்னு தெரியல.என்றவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அப்படியே நின்றான். 
அவளுக்கு மட்டுமில்லை அவனுக்குமே அடுத்து என்ன செய்ய என்று புரியாத நிலைதான். ஆனால் அப்படியே இருந்திட முடியாதே. பிணைப்பு ஒன்று உருவாகி இருக்க அதற்கேற்ற மரியாதை கொடுத்து கடமையை செய்யத்தானே வேண்டும். அவனாவது எளிதில் விடுபடும் அளவு சஞ்சலத்திலும் கலக்கத்திலும் தான் இருக்கிறான் அவளோ தனக்குள்ளே புழுங்கி மறுகி அழுத்தத்தில் இருக்க, நெஞ்சத்தை நீவி விட்டுக்கொண்டவன், அவளை நெருங்கி, “கண்ணை மூடேன்.என்க, சம்மந்தமில்லாமல் என்ன சொல்லுகிறான் இவன் என்று தான் பார்த்தாள்.
கண்ணை மூடு மீரா.
மந்திரத்திற்கு கட்டுண்டது போல் அருகில் அவன் குரல் கேட்கவும் இமைகள் சேர்ந்து மூடிட, விரல்கள் கொடியை இறுக பற்றிக்கொண்டது. தன் கட்டளைக்கு மதிப்பளித்து இமைகளை மூடி தனக்காக தன் வார்தைகளுக்காக காத்திருந்தவளை காணக் காண ஏதோவொரு புதிய உணர்வு அவனை சூழ்ந்து கட்டிப்போட்டது. விழிகள் அதன் போக்கில் அவளின் வதனத்தை அணுஅணுவாய் குறித்துக்கொள்ள, அவனது விரல்கள் கொடியை பற்றியிருந்த அவளது விரல்கள் மேல் பட்டும் படாமல் படிந்து அதன் இறுகல் தன்மையை இலக்கி, இதழ்கள் வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என்று மென்மையாய் அசைந்தது.
சில்லுனும் இல்லாம சூடாவும் இல்லாம அப்படியே இதமான இந்த காலை சூடு நம்மளை தழுவும் போது ஒரு சிலிர்ப்பு ஓடுதுள்ள…இளஞ்சூட்டை உணர முடிந்ததோ இல்லையோ மென்மையாய் தொண்டைக்குழியில் இருந்து எழுந்த அவனது வார்த்தைகள் அவளை தீண்டி அவளை ம் கொட்ட வைத்தது.
அதை உணர்ந்துகிட்டே மென்மையா பட்டும் படாம நம்ம மேல வீசுற தென்றலை மெதுவா உள்ளிழுத்து உனக்குள்ள கலங்கி சிதறி அழுத்திட்டு இருக்குற எல்லாத்தையும் சேர்த்து, பிடிச்சுவச்சிருக்கிற மூச்சை வெளில விடும்போது மொத்தமா விட்டுரு.அவனது வார்த்தைகளுக்கு ஏற்ப அவளது செயல்கள் இருக்க, மனதை அழுத்தியிருந்த அனைத்தும் மூச்சுக்காற்றோடு வெளியேறி மனம் லேசாகிட, அவனது வார்த்தைகள் நின்றபாடில்லை.
கீச்கீச்சுன்னு கத்துற பறவையோட ஒலி எப்படி மெட்டமைச்ச மாதிரி இருக்கோ அதே மாதிரி என்னோட ஹார்ட்டும் ஓசைஎழுப்பி ஒன்னே ஒன்னு தான் சொல்லுது… என்ன சொல்லுதுன்னு கேட்க மாட்டீயா?”
எ… என்ன சொல்லுது?” என்று திக்கியவளின் விழிகளுக்குள் இப்போது கருவண்டுகள் நர்த்தனமாடியது.
உன் முன்னாடி நிக்குற பொண்ணோட மனசுக்கு புடிச்சதை செய்யுன்னு சொல்லுது. அவள் மனசை நோகடிக்குற எல்லாத்தையும் நொறுக்கி போடுன்னு சொல்லுது.என்றவன் மெல்ல அவளின் இடக்கன்னத்தில் தன் நுனிவிரல் கொண்டு ஊர்வலம் நடத்த, கண்களை இன்னும் இன்னும் இறுக மூடிக்கொண்டாள் மீரா.
நீ சொல்லு நான் என்ன செய்யட்டும்? எனக்கு உன்னை முத்தம்மாகிட்ட கூட்டிட்டு போகணும்னு தோணுது உனக்கு என்ன தோணுது? என்கூட வரணும்னு தோணுதா இல்லை வேண்டாம்னு தோணுதா?”
அவன் என்ன உலறினானோ அவள் என்ன புரிந்து கொண்டாளோ இரண்டொரு நாழிகை கழித்து அவள் பதில் சம்மதமாய் மாறியது. 
தான் எதிர்பார்த்த பதில் கிடைத்தவுடன், “கீழ போவோமா?” என்று கேட்க, விருப்பமே இன்றி மெல்ல இமைகளை பிரித்தவள் அவன் விழிகளை நிமிர்ந்து சந்திக்க, பட்டென்று அவள் கன்னத்தில் பட்டும் படாமல் கோலமிட்ட தன் விரலை தன்புறம் இழுத்துக் கொண்டான். 
விழிகள் சங்கமத்தில் ஒருவரை ஒருவர் படிக்க முயன்று இருவருமே மாய வலையில் சிக்குண்டவர் போல் விழித்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி ரீங்காரமிட்டது. யார் என்று பார்த்ததும் அவன் முகம் கடுப்பை தத்தெடுத்து பின் நிலையானது.
தாமதியாமல், “போலாம்,” என்று வாளியை எடுத்துக்கொண்டு அவன் படிகளில் இறங்க, பின்னேயே சுதாரித்து தொடர்ந்தவள்,
இப்போ என்னமோ சொன்னீங்கள்ள? என்ன சொன்னீங்க? மைன்ட் ரிலாக்ஸ் ஆனமாதிரியே ஒரு பீல்.என்று படிகளில் இறங்கியபடியே கேட்க,
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் நடையை தொடர்ந்து, “பெருசா ஒண்ணுமில்லை. அப்போதைக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன்… குழப்பம் வரும் போதெல்லாம் என் அம்மா இப்படி தான் கண்ணை மூடி டீப் ப்ரீத் எடுக்கச் சொல்லி இதமா பேசி மனசை ரிலாக்ஸ் பண்ணுவாங்க. ஏதோ சொல்லப் போறாங்கன்னு அதை கேட்கும் ஆர்வத்தில் என்னோட பழைய குழப்பத்தை ஒதுக்கி வச்சி அவங்க சொல்றதை அப்படியே கேக்க ஆரம்பிச்சுடுவேன். எக்ஸ்ஹேல் பண்ணும்போது எல்லாத்தையும் வெளில கொட்டினா மனசு இயல்பாகிடும்.
நான் சொன்னது சரிதான்… நீங்க மாமிஸ் லிட்டில் ப்ரின்ஸ் தான்.என்று மென்னகை சிந்தினாள் மீரா. 
அப்போ நீ இந்த டாடிஸ் லிட்டில் ப்ரின்சஸ் கேட்டகிரியோ?” என்று அவன் எதிர்வாதம் செய்தபடியே வீட்டினுள் நுழைய,
எந்த நிலையில் வருவார்கள் என்று இவர்களின் வரவை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த அவள் குடும்பத்தினருக்கு மீராவின் இயல்பாக தென்பட்ட முகம் மகிழ்ச்சியை கொடுத்தது.
ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.என்று அம்புஜம் அழைக்க, ரகுநாதன் இருவரிடமும் சொல்லிவிட்டு, மகளை வாஞ்சையோடு சேர்த்தனைத்து விட்டு ராகவை அழைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டார். 
உணவு மேசையில் கார்த்திக் அருகில் அமராமல் தள்ளி அமர்ந்து கொண்டாள் மீரா. நீ என் மனைவி என்று மாடியில் கூறியவன் அந்த நினைப்பு கூட இல்லாது உணவில் கவனம் செலுத்த, மீராவும் அப்படி ஒருவன் அங்கிருக்கிறான் என்று நினைவுகூட இன்றி மிகச் சாதாரணமாக இருந்தாள். சுஜா யோசனையுடன் இவர்களை கவனித்தபடியே உண்டு முடித்தாள்.
நீங்க எங்கேயோ வெளியில் போகணும்னு சொன்னீங்களே, எப்போ கிளம்புறீங்க அண்ணா?” சுஜா துணுக்குற்று கார்த்திக்கிடம் கேட்க, அவன் மீராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “மீரா தயாரானதும் கிளம்ப வேண்டியது தான். நீயும் வரியாமா?”
இல்லை நான் வரல, நீங்க போயிட்டு வாங்க…என்றவள் மீராவிடம் திரும்பி கவனமாய் மீராவின் பதிலை அறிய வேண்டி, “பூ கட் பண்ணி கிட்சன் செல்ப்பில் வச்சிருக்கேன். மறக்காம வச்சிட்டு போ மீரா.என்க,
கைகழுவி விட்டு எழுந்த மீராவோ அசிரத்தையாய், “நான் எங்கேயும் போகல அண்ணி.என்றாலே பார்க்கலாம் கார்த்திக் அதிர்ந்து விழித்தான்.
என்கிட்ட வரேன்னு சொன்ன.கேட்டேவிட்டான் கார்த்திக்.
ஓ… அப்போ வேதாளம் முருங்கைமரம் ஏறிடிச்சு.அம்புஜத்திற்கு மகள் கண்டிப்பாக வெளியே கிளம்ப மாட்டாள் என்று தெரிந்தமையால் அவர் அமைதியாய் பார்வையாளர் ஆகிவிட்டார்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ எனக்கு வெளில போகணும்னு தோணலை. சோ நான் வரல அவ்வளவு தான்.என்றவள் அவள்பாட்டிற்கு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் அலட்சியத்தில் திகைத்த கார்த்திக் சுஜாவிடம், “இப்போ தான்மா நான் போகலாமான்னு கேட்டதுக்கு வரேன்னு சொன்னா… இப்போ மாத்தி பேசுறா. அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியலை.என்று முறையிட்டான்.
அவளுக்கு யோசிக்க நேரம் கிடைச்சா அப்படித்தான்… வீட்டுக்குள்ள வந்து எங்க எல்லாரையும் பார்த்ததும் மனசு மாறியிருக்கும். முதலில் சரி சொன்ன விஷயத்திற்கு கொஞ்ச நேரம் கழிச்சி வேண்டாம்னு சொல்லுவா, வேண்டாம்னு சொன்ன விஷயத்தை பின்னாடி ஒத்துக்குவா. நீங்க அவளை தப்பா நினைக்காதீங்க அண்ணா. அவள் வேணும்னே இப்படி மாற்றி மாற்றி பேசல. அவள் ஒருநிலையில் இல்லை. மனசு அலைபாஞ்சிட்டே இருக்கு. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நினைச்சி பயந்து பயந்து வெளில போறதுனாலே அலர்ஜியா ஆகிடுச்சு அவளுக்கு. உங்களுக்கே அவளோட கலக்கம் இந்நேரம் புரிஞ்சிருக்கும். அதீதமா அவள் உணர்ச்சிவசப்பட்டதன் விளைவு தான் உங்க கல்யாணமே. நீங்க முடியாதுனு சொல்லி இருக்கலாம், ஆனால் அவள் கேட்டானு யோசிக்காம தாலி கட்டிடீங்க. இது விளையாட்டு இல்லை.என்று தீவிரமாய் தீர்க்கமாய் வந்தது சுஜாவின் அக்கறை. 
யோசிக்காமன்னு சொல்லாதமா… உணர்ச்சிவசப்பட்டு அவள் வேணும்னா என்னை கல்யாணம் செஞ்சிக்கோங்கன்னு என்கிட்ட கட் அண்ட் ரைட்டா கேட்டிருக்கலாம். ஆனால் நான் சுயநினைவோட யோசிச்சு தான் அவள் கழுத்துல தாலி கட்டினேன். அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதால அவளை என்ன வேணும்னாலும் செய்யலாம், எப்படியும் முடக்கிடலாம்னு ஏளனமா நினைச்சவங்க முன்னாடி நாங்க வாழ்ந்து காட்டணும்னு தான் இந்த உறவில் விரும்பிதான் இணைஞ்சேன்..என்றவனை குறுக்கிட்டு,
குற்றவுணர்ச்சியில் நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பீங்கனு நினைச்சேன். ஏன்னா தாலி கட்டின மறுநாளே நீங்க வேலைக்கு போயிட்டீங்க. அப்புறம் ஒரு வாரமா ஒரு போன் கூட பண்ணாம திடீர்னு நேத்து ராத்திரி சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறீங்க.என்று குறையாகவே சொன்னாள் சுஜா. மற்றவர்கள் போல அவளுக்கு அவனிடம் பேச பெரிதாக தயக்கமில்லை. மீராவின் வாழ்க்கைக்கு முன் தயக்கமாவது வருத்தமாவது என்று அந்த உறவை சீர்படுத்தும் வேலையை அவளே கையில் எடுத்துக் கொண்டாள்.

Advertisement