Advertisement

மூன்றே அடிகளில் அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் வழி விடுவாளா என்பது போல் பார்த்து நிற்க,
என்ன?” என்று நெற்றி சுருக்கினாள் பெண்.
நீ தானே என் துணி எல்லாம் எடுக்க சொன்ன. நீ நகர்ந்தால் தான் நான் உள்ளே போக முடியும்.என்று அவன் கூற, சட்டென்று நகர்ந்து கொண்டாள் மீரா.
அவள் வழி விட்டதும் உள்ளே நுழைந்தவன் ஒரு மூலையில் கழற்றி வீசியிருந்த தன்னுடைய துணிகளை கைகளில் அள்ளிக்கொண்டு வெளியே வந்து அவளிடம் முகச்சுழிப்புடன், “எல்லாம் ஈரமாகிடுச்சு. எங்கே வைக்கிறது இதையெல்லாம்?” என்று ஈரமான அவனது அழுக்கு உடைகளை காண்பித்துக் கேட்க, கடுப்பானவள் முறைப்புடன்,
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். அழுக்குத் துணியை துவைக்க சொன்னதற்கு இத்தனை அக்கப்போரு… எவ்வளவு கேள்வி கேக்குறீங்க.என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை மென்று துப்பிவிட்டு அவன் கைகளில் இருந்த அழுக்குத் துணியை தானே வாங்கிக் கொண்டு, அவனை இடித்துத் தள்ளிவிட்டு குளியறைக்குள் நுழைந்து டொம்மென்று கதவை சாத்தினாள்.
தன்னை இடித்து தள்ளிவிட்டு முறுக்கிக்கொண்டு உள்ளே சென்றவளை கண்டவனுக்கு மெல்லிய முறுவல் அரும்பியது.
என்னடா இந்த சொதப்பு சொதப்புற? உன்னை நல்லா ஆட்டி வைக்கப் போறா…என்று மனம் காலை வார, விழிகள் அறையின் ஓரத்தில் தரையில் விரித்தபடியே கிடந்த பாயையும் போர்வையையும் நோக்கி ஓடியது.
அடுத்து வெளியே வந்து நீங்க தூங்குன பாய், போர்வையை யார் மடிச்சு வைப்பாங்கனு கேட்பா. அதற்கு முன்னாடி நாமே மடிச்சு வச்சிடுவோம்.என்று மனக்கணக்கு போட்டு போர்வையை எடுத்தவன் ஏதோ தனக்கு தெரிந்த வகையில் மடித்து வைத்தானோ சுருட்டி வைத்தானோ ஆனால் எதுவோ செய்து ஓரமாக வைத்தான். பாயையும் தலைகாணியுடன் சேர்த்து சுற்றி வைத்தான். பின் தன் பொருள் வேறு எங்கும் கலைந்திருக்கிறதா என்று பார்த்து உறுதி செய்துவிட்டு கையை மேலே தூக்கி புதிதாய் வேலை செய்த களைப்பில் சோம்பல் முறித்துவிட்டு வெளியே சென்றான்.
அவன் அறைவிட்டு வெளியே வருவதை கண்ட ராகவ் மென்நகை சிந்தி, “குட் மார்னிங். காபி கொண்டு வர சொல்லவா?” என்று கேட்க, தயக்கத்துடன் தலை அசைத்தான் இவன்.
ஏன் அங்கேயே நின்னுடீங்க… பேப்பர் படிக்கிறீங்களா?” ராகவ் அவனின் சங்கடம் உணர்ந்து நிலையை சுமூகமாக்கும் நோக்குடன் பேச்சை துவங்க, அவனும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
இன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் உண்டா?” என்று கேட்டபடியே செய்தித்தாளை வாங்கிக்கொண்டு ராகவின் அருகில் அமர்ந்தான்.
போகணும் என்று ராகவ் பதில் கூறவும் இவன் முகம் சுருங்கி பின் மீண்டது. அதை தவறாது கவனித்த ராகவ், தன் மச்சினனை கூர்ந்து நோக்கி,
ஏன் என்னாச்சு?”
இல்லை… இன்னைக்கு எங்ககூட உங்களையும் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்.முன்பு எதற்குமே தயங்கியிராதவன் உறவுப் பிணைப்பில் இணைந்ததும் இயல்பாய் பேச சங்கடப்பட்டான். எல்லாம் அதன் முறையில் நடந்தேறி இருந்தால் இந்த தயக்கமே வந்திருக்காதோ என்னவோ…  
எங்களுடன்என்ற வார்த்தை ராகவை குழப்பியது, “எங்க போகணும்?”
இல்லை. ஒரு வாரம் ஆச்சு. என்… அந்த வீட்டுக்கு இன்னைக்கு வரை போகல. அங்க முத்தம்மா இருக்காங்க. அவங்களையும் பார்க்கல, வீட்டில் வேலை செய்றவங்க தான். ஆனால் சின்ன வயசிலிருந்து என் மேல் ரொம்ப பாசமா இருப்பாங்க. எனக்குன்னு இப்போ இருக்கிறது அவங்க தான். அவங்க ஆசிர்வாதம் கிடைச்சா அம்மாவே எங்களை வாழ்த்துறதுக்கு சமம். அவங்க உங்க தங்கையை பார்க்கணும்னு விருப்பப்படுறாங்க. இங்கேயே அவங்களை வரச்சொல்லாம்தான் ஆனா அவங்க நல்ல நாள் பார்த்து எல்லாம் செஞ்சு முறையா மருமகளை வீட்டுக்குத்தான் அழைச்சிட்டு வரமுடியல கோவில்ல ஒரு அர்ச்சனையும் பூஜையுமாவது பண்ணணும்னு வரச்சொல்றாங்க. நான் கூப்பிட்டா என்கூட வருவாளான்னு தெரியல. நீங்க துணைக்கு வந்தால் கண்டிப்பா மறுக்க மாட்டா.என்று மனைவியை தன்னுடன் தனியே அழைத்துச் செல்ல அவள் தமையனை துணைக்கு அழைத்தான்.
ராகவிற்குத் தான் சங்கடமாகிப் போனது அவனின் வேண்டலில். சென்ற வாரம் வரை பெற்றோரின் பெண்ணாக, அவனின் தங்கையாக மட்டுமே இருந்தவள் இப்போது கார்த்திக்கின் மனைவி.  
கார்த்திக்கின் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் அவனின் பின்புலம் அவ்வளவு நல்ல விதமாக இல்லாமல் இருக்க அதுவே அவர்கள் மனதில் நெருடிக் கொண்டிருக்கிறது. கார்த்திக்கை நம்புவதா வேண்டாமா என்று பெற்றோர் குழம்பி போய் இருக்க, ராகவாலும் சுஜாவாலும் சந்தேகிக்க முடியவில்லை. சொல்லப்போனால் இந்த இருவரும் தான் அனைவரையும் இறுக்கி பிடித்து குடும்பத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சேர்ந்து வாழத் துவங்கவில்லை என்றாலும் மீராவுடன் கார்த்திக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பந்தம் மெய்யானது. அதில் இவன் உள்ளே நுழைவது அத்தனை சரியானதாக படவில்லை. உள்ளே நுழைந்தாலும் இவர்களுக்குள் இருக்கும் விலகல் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை என்ற நிலையில் என்ன செய்ய என்று சங்கடமாய் நெளிந்தான்.
நான் இன்னைக்கு கண்டிப்பா போயாகனும். நீங்க கூப்பிடுங்க அவள் வருவா. ஆனால் வெளியிடத்தை கண்டு அவள் பதட்டம் அடையாமல் பார்த்துக்கோங்க மாப்பிள்ள.மீராவின் பெயரை கூட சொல்லத் தயங்குபவனை கண்டு துணுக்குற்று உறவை அழைப்பில் சேர்த்து அவனுக்குமே தங்கள் குடும்பத்தோடு இருக்கும் உறவை நினைவுபடுத்த முயன்றான் ராகவ்.
நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன். நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாமே ராகவ்.சட்டென பேச்சினுள் புகுந்த உறவுமுறையில் சங்கடப்பட்டு கார்த்திக் தடுமாற, ராகவ் தன் நிலையில் தெளிவாய் இருந்தான்.
முன்னாடி எப்படியோ, இப்போ நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை தானே… அதற்கான மரியாதை கொடுக்கணும்.
இவர்களின் பேச்சை காதில் வாங்கியபடியே காபி போட்டு எடுத்துவந்த சுஜா, “ஆமாம் அண்ணா, அவர் சொல்றது தான் சரி. நீங்க எதற்கும் தயங்காம உரிமையா என்ன வேணுமோ எங்ககிட்ட கேளுங்க.என்கவும் காபியை வாங்கிக் கொண்டவன் சற்று தள்ளி உணவு மேசையில் அமர்ந்திருந்த ரகுநாதனையும், அம்புஜத்தையும் பார்த்தான். 
இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்றுணர்ந்த ரகுநாதன், “மீரா வந்ததும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க. ராகவ் காரை எடுத்துக்கோங்க. நானும் ராகவும் சேர்ந்து வண்டியில போயிப்போம்.
சம்மதமாய் தலையசைத்தவன் செய்தித்தாளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான். சற்று நேரத்திலேயே குளித்துவிட்டு வழக்கம் போல உயர்கழுத்து கொண்ட சல்வாரில் வந்தாள் மீரா. கையில் ஒரு பக்கெட்டும் இருந்தது.
அண்ணி இதை காய வச்சுடுங்க.என்று அந்த பக்கெட்டை எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சாப்பிடச் செல்ல,
அம்மு நீயே காய வச்சிடு. அண்ணி இன்னைக்கு சோர்வா இருக்கா, அவள் மாடி ஏற வேண்டாம்.என்று அம்புஜம் மறுக்க, மலங்க விழித்தாள் பெண். 
என்றுமே அவளது உடைகளை காய போடுவது சுஜாவின் வேலைதான், மறந்தும் இவள் வீட்டை விட்டு வெளியே தலையை காட்டிட மாட்டாள். இன்று என்ன இது புது சோதனை? என்று மறுக்க நினைக்கும் போதே அம்புஜம் அவளை முறைத்த முறைப்பில் ஏனோ இன்று கையை பிசைந்து நின்றாள். கார்த்திக் இருக்கிறான் என்ற உள்ளுணர்வோ என்னவோ அவளின் பிடிவாதத்தை பின் சென்றிருந்தது. அவன் முன் தன்னை பலகீனமாய் நிதானமாற்றவளாய் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவள். 
அவளின் தயக்கம் உணர்ந்த கார்த்திக் தன் இடத்திலிருந்தே கழுத்தை மட்டும் நீட்டி அந்த பக்கெட்டை பார்க்க அவள் உடைகளுக்கு இடையில் அவனுடையதும் தென்பட்டது. அடுத்த நொடி எதையும் யோசிக்கவில்லை அவன், தானே அந்த வாளியை எடுத்துக் கொண்டு வெளியேற, பதறியபடி அவன் பின்னால் ஓடினாள் மீரா.
என்னடா அவர் பாட்டிற்கு எடுத்துட்டு போயிட்டார். அம்மு பின்னாடியே ஓடுறா?” என்று அம்புஜம் திகைப்புடன் மகனிடம் வினவ,
எப்படியோ அம்மு வெளில போறால்ல. இதுவே நல்ல தொடக்கமா இருக்கட்டும்.என்று ராகவ் சொல்லிவிட்டான்.
வெளியே ஓடிய மீராவின் மனதில் தன்னை பற்றிய வெளியுலக பார்வை எல்லாம் இல்லை. மாறாக தன்னுடைய அனைத்து உடைகளையும் அவன் காய வைக்கப் போகிறான் என்ற பதட்டமே இருந்தது.
நில்லுங்க… என்ன செய்ய போறீங்க?” என்று சற்று மூச்சு வாங்க மாடிப்படியின் பாதியில் அவனை பிடித்து நிறுத்தினாள் மீரா.
காய வைக்க போறேன். நீ ஏன் இப்படி வேகமா வர?” என்று அவளின் பதட்டம் புரியாமல் கார்த்திக் இயல்பாய் கேட்க,
பல்லை கடித்தவள், “அதில் என் துணியும் இருக்கு.என்று அந்த வாளியை பிடுங்கவென அதன் பிடியில் கை வைத்தாள்.
அவளுக்கு அதை கொடுக்கும் எண்ணமின்றி வாளியை உயர தூக்கிப் பிடித்தவன், “தெரியுமே. அதுக்கென்ன இப்போ?”
என்னுடையதை நான் காய வச்சிப்பேன்.என்று அவளும் கரத்தை உயர்த்தி அவனிடமிருந்து அதை பிடுங்க முயல,
இல்லை பரவாயில்லை நான் செய்றேன். உன் அண்ணியை செய்ய சொன்னதை நான் செய்யுறேன், அதில் என்ன தப்பு?” என்றவனுக்கு அவளின் தயக்கம் புரிவதாய் இல்லை.
அண்ணி செய்றதும் நீங்க செய்றதும் ஒன்றா?” என்று முறைத்தாள்.
ஏன்? என்ன பிரச்சனை?” என்று அவன்  புரியாமல் வினவ, அவள் இன்னுமே அவனிடமிருந்து வாளியை பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க, என் துணியில் எல்லாம் கை வைக்காதீங்க.
என்னுடையதை நீ துவைக்கும் போது, உன்னுடையதை நான் காய வைக்கலாம்.என்பதே அவனுடைய வாதமாய் இருக்க,
அதுவும் இதுவும் ஒன்று இல்லை. நானே என் வேலையை செஞ்சிப்பேன்.என்று அவள் மிஞ்சவும் இவன் கொஞ்சம் தளர்ந்தான்.
சரி சரி… உன் துணியை நீயே காய வச்சிக்கோ, என்னுடையதை நான் காய வச்சிக்கிறேன். டீல்? பட் தேங்க்ஸ்… என்னோட வேலையையும் நீயே செஞ்சிட்ட.என்று அவன் இறங்கி வந்து டீல் பேச, அவனை முறைத்தவள் எதுவும் சொல்லவில்லை.
அவள் எதாவது சொல்லுவாள் என்று பார்த்தவன் அவள் எதுவும் பேசவில்லை என்றதும் மாடி ஏறினான். மீராவும் அவனைத் தொடர்ந்து மாடிக்கு சென்றாள். ஆறு மாதங்களுக்கு பிறகு இளம்வெயிலின் இதம் அவளை தீண்ட, அதெல்லாம் கருத்தில் பதியவில்லை. அவன் வாளியை மாடிக் கட்டையின் மேல் வைக்கவும், விறுவிறுவென தன்னுடைய துணிகள் அனைத்தையும் அதிலிருந்து எடுத்துக் கொண்டவள் அவனை விட்டு தள்ளிச் சென்று கொடியில் மொத்தமாய் போட்டு பின் ஒவ்வொன்றாய் எடுத்து உதறி பரப்பிப் போட்டாள். அவள் புறம் திரும்பிக்கொண்டு, அவள் செய்வதை கவனித்து அதுபோலவே தன் உடைகளையும் உதறிப் போட்டவன்,
இங்க வாஷிங் மெஷின் இல்லையா?” என்று கேட்கவும் தான் அவளுக்கு வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின் கூட நினைவு வந்தது. வீட்டில் அடைபட்ட பின்பு பொழுதுபோகாமல் இருக்க ஏதோ ஒரு பிடிவாதத்தில் உடைகளை கைகளால் துவைக்க ஆரம்பித்தாள், அதன் பிறகு அது அப்படியே பழகிவிட்டது. அதை அவனிடம் ஒப்புக்கொள்வதா?

Advertisement