Advertisement

*6* 
முடிந்தது. சென்ற வார வெள்ளிக்கிழமையில் நடந்து முடிந்து இந்த வார வெள்ளிக்கிழமையும் ஆமை வேகத்தில் நகர்ந்து, சனி பிறந்துவிட்டது. ஆனால் பதட்டம் தணிந்த பாடில்லை. தெளிவு கிடைக்கவும் இல்லை. இடியாப்ப சிக்கலில் இருந்து விடுபடுவதாய் நினைத்து மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது போலத் தான் இருந்தது.
மாத்திரை போட்டு தூங்கிவிட்டால் எப்போது எழுவாள் என்று அவளுக்கே தெரியாது, எழுந்தாலும் தேவையின்றி அறையை விட்டு வெளியே வரமாட்டாள். ஆனால் இன்று தூக்கம் வருவேனா என்று முரடுபிடிக்க, நடுநிசியில் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து விட்டாள் மீரா. வெளியே வந்த பின்னோ இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டில் என்ன செய்வது என்று விளங்கவில்லை. வீடு இருளில் மூழ்கி அனைவரும் உறக்கத்தை தழுவியிருக்க, ஓரிரு முறை வீட்டை சுற்றி பார்வையை ஓட்டிவிட்டு தனியாய் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டாள். அதன் பின்பு தான் உறக்கம் அவளை நெருங்கவே செய்தது.
காலை ஐந்தரை மணி அளவில் எழுந்து வந்த அம்புஜமோ மீராவின் நிலையை கண்டு திகைத்து பின் கவலையுற்று என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தார். அன்னையாய் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதே சமயம் மீராவின் மனதையும் பார்க்க வேண்டி இருந்தது. அவளுக்கு அமைந்த வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள கடினமாய் இருந்தது.
அம்மா என்ன இங்கே நின்னுட்டு இருக்க?” என்று கேட்டபடியே கண்களை கசக்கிக்கொண்டு தன் அறையில் இருந்து வந்தான் ராகவ். நெற்றியில் சிறு பேண்டேஜ் ஒட்டியிருக்க, முழங்கையில் சிறிய கட்டு இருந்தது.
நீ என்ன இன்னைக்கு சீக்கிரமே எழுந்துட்ட?”
சுஜாவுக்கு எழ முடியலமா. சோர்வா இருக்காம். கொஞ்ச நேரம் தூங்குறேன்னு சொன்னா. அதுதான் உங்களுக்கு எதுவும் வேணுமான்னு கேட்க வந்தேன்.என்றவன் மீராவை கண்டு புருவம் சுருக்கினான்.
என்னமா அம்மு இங்க தூங்குறா?”
ஏன்னு தெரியாத மாதிரி கேக்குற? இப்படி இருந்தா என்னடா செய்யறது?”
எல்லாம் உடனேயே சரியாகிடாது. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.என்றவன் யோசனையுடன் குனிந்து தங்கையின் சிகை கோதினான்.
தன் பிள்ளைகளை கண்களில் நிரப்பிக் கொண்டவர், “என்னவோ எல்லாம் கையை மீறி நடக்குது. எல்லாம் நல்லதா முடிஞ்சா சரிதான். ஆனாலும் பயமா இருக்குடா.என்று அஞ்ச,
இந்த முறை எதுவும் தப்பா நடக்காது.என்று ராகவ் ஆறுதல் சொன்னான். இத்தனை நாட்கள் கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் போல் வெறும் வார்த்தைகளின்றி மெய்யாய் மனதில் உண்டான திடம் கொடுத்த தைரியத்தில் அன்னைக்கு ஆறுதல் சொல்லியிருக்க அந்த மாற்றத்தை அம்புஜத்தால் உணர முடிந்தது.
பார்வையை மீரா அறையின் புறம் செலுத்திய அம்புஜம், “அவள் ரூமுக்கு போய் பார்க்கலாமா?” என்று தயங்கிக் கேட்டார்.
வேண்டாம்மா… தூங்கிட்டு இருக்கும் போது போனால் நல்லாயிருக்காது.என்று ராகவ் அவரின் யோசனையை ஒதுக்க, மீண்டும் தயக்கமாய் மீரா அறை புறம் சென்று மீண்டது அவரின் விழிகள்.
என்னம்மா?”
எவ்வளவு நேரம் இவள் இப்படி இங்கேயே தூங்குவா? அவளை உள்ளே படுக்க சொல்லவா?”
நம்ம வீடு தானே அம்மா. தூங்கட்டும் விடு.என்றவன் இதற்கு மேல் அங்கே நின்றால் அவர் எதையாவது போட்டு குழப்பிக் கொண்டிருப்பார் என்று அவரை அங்கிருந்து நகர்த்தி அழைத்துச் சென்றான்.
மணி அதற்கு மேல் வேகமாய் சுழல, தந்தையின் குரலில் கண் விழித்தாள் மீரா.
அம்மு, என்னடா இங்கேயே தூங்குற? எழுந்துக்கோ. பல் துலக்கி வா, காபி குடிக்கலாம்.
பாதி திறந்த இமைகளோடு, “தூக்கம் வருதுப்பா.என்று செல்லம் கொஞ்சியவள் மீண்டும் உறக்கத்திற்கு செல்ல,
அவள் கன்னத்தை தட்டியவர், “உள்ள போய் அவருக்கு ஏதாவது வேணுமான்னு கேளு.என்கவும், படக்கென்று இமைகளை பிரித்து எழுந்து அமர்ந்தாள்.
தூக்கம் வந்த இடம் தெரியாது மறைந்துவிட, வதனம் முழுதும் தவிப்பு மண்டிக்கிடக்க, விழிகளை தன் அறை புறம் செலுத்திய வண்ணமே, “நீங்க போய் அவரை வெளியில் கூப்பிடுங்க. நான் குளிக்கணும்.
அது நல்லா இருக்காது மீரா. நீ போ.மாமனாருக்கு டிபன் எடுத்து வந்த சுஜா இடையில் குறுக்கிட்டு பதில் கூற,
நானா?” என்று அதிர்ந்து பார்த்தாள் மீரா.
நீ தான்.என்று பார்வையிலும், வார்த்தையிலும் அழுத்தத்தை கூட்டியவள் அதோடு நிற்காமல் மீராவின் கைபிடித்து எழுப்பி, நகரமாட்டேன் என்று ஊன்றி நிற்பவளை தன் பலம் கொண்டு அவள் அறை வாயிலுக்கு இழுத்துச் சென்றாள் சுஜா.
இது உன்னோட அறை. உள்ளே இருப்பது உன்னோட கணவன். அப்போ நீ தான் உள்ள போகணும்.என்று மீண்டும் அழுத்தமாய் வார்த்தைகளை கோர்த்தவள் தயங்காது மீராவை உள்ளே தள்ளி கதவை மூடினாள். அனுபவம் கற்றுக் கொடுத்திருந்தது மீராவிடம் தன்மையாய் பேசினால் மிஞ்சுவாள் என்று…
என்னம்மா இப்படி பண்ணிட்ட?” என்று ரகுநாதன் திகைத்துப் பார்க்க,
அவள் செய்யறது சரிதான். நாம சொன்ன கேட்க மாட்டா. இது மாதிரி அடாவடியா செஞ்சா தான் அடங்குவா. ஏதாவது முடிவுக்கு வருவா.என்று அம்புஜம் சுஜாவுக்கு பரிந்து பேசிட, அவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை. அவளின் மூடிய அறைக்கதவை மட்டும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மூடிய அறையினுள்ளோ இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு தீ சுட்டது போல் துள்ளிக் குதித்து விலகி நின்றனர். உள்ளங்கள் இரண்டும் ட்ரம்ஸ் வாசிக்க, அவனின் விழிகள் தன்னால் அவள் கழுத்திற்குத் தான் சென்றது. இன்னும் அவனால் நம்பமுடியவில்லை அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மங்கள நாண் அவன் கட்டியதென்பதை.
எப்பொழுதும் உயர்ந்த கழுத்து கொண்ட ஆடையை மட்டுமே அணிபவள் அன்று ஏனோ சாதாரண டீ ஷர்ட்டையும், பேலசோ பேண்டையும் அணிந்திருந்தாள். அவன் வருவான் என்று முன்னரே தெரிந்திருந்தால் நடந்திருக்கும் சங்கதியே வேறு. அவளின் டீ ஷர்ட்டின் உபயத்தால் அவன் பூட்டிய மஞ்சள் நாண் நன்றாகவே பார்வையில் பட்டது.
அவன் பார்வையை தொடர்ந்தவள் நெஞ்சம் வேகமெடுக்க, அவளின் வலக்கை தன்னால் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை இறுகப் பற்றியது. இந்த ஒருவாரமாகவே நெஞ்சுக்குழியில் பதிந்து புதுவரவை, உறவை அவளுக்கு நினைவுப்படுத்திக் கொண்டிருந்தாலும் நேற்று இரவு எதிர்பாராத விதமாய் திடுமென வந்து வீட்டு வாயிலில் நின்றவனை பார்த்த நொடியிலிருந்து அந்த கயிறு அவளுள் ஏதோ ரசாயன மாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அவனுக்கும் அதே நிலை தான்.
சென்ற வெள்ளி அன்று தாலி கட்டிய கையோடு கிளம்பியவன் தான் அதன் பின் நேற்று இரவு தான் மீண்டும் சென்னை வந்திறங்கினான். என்ன செய்வது என்று புரியாமல் சென்ற வாரத்தின் இறுதியில் கூட வேலை பார்த்துவிட்டு இப்போது சனி ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருக்கிறான்.
எவ்வளவு நேரம் அப்படியே தயங்கி நிற்பது என்று நினைத்தானோ என்னவோ, “எப்படி இருக்க?” என்று தன் குரலை தேடிப்பிடித்து நிமிர்ந்து தயக்கத்துடன் அவள் கண்களை பார்த்து கேட்க, பதிலின்றி மடமடவென குளியலறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள் மீரா. 
அவளின் அமைதி அவனையும் ஆட்கொள்ள, எச்சில் கூட்டி விழுங்கியவன், வெளியே செல்ல முயல எதிர்பாராத விதமாய் அவள் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. 
உங்களோட துணி எல்லாம் யார் எடுப்பா?” 
பின்னிலிருந்து திடுமென ஒலித்த அவளது குரலை மனதில் பதித்துக் கொண்டவன் தலையை மட்டும் பின்புறம் திருப்பி, “ஹாங்… என்ன?” என்று புரியாமல் மலங்க விழிக்கவும், பல்லை கடித்தவள், “குளிச்சீங்கல்ல உங்க பழைய துணியை அப்படியே அங்க போட்டுட்டு வந்துருக்கீங்க. யார் எடுப்பா அதெல்லாம்?” என்று அதிகாரம் செய்ய அவனின் பாவனை மட்டும் மாறவே இல்லை. 
அதை ஏன் என்கிட்ட கேக்குற? வேலை செய்றவங்க வந்து துவச்சு காய போட்டுடுவாங்க.என்று அவன் சாதாரணமாய் கூறவும் அவளுக்கு ஆத்திரம் தான் வந்தது. 
கண்களை இறுக மூடித் திறந்தவள் குளியலறை வாயிலில் நின்றபடியே, “இங்க வேலைக்கு எல்லாம் ஆள் கிடையாது. நீங்க தான் துவைக்கணும்.என்று அழுத்தமாய் சொல்ல,
என்ன நானா?” என்ற அதிர்ச்சி தான் அவனிடம்.
பின்ன… உங்க துணியை நீங்க துவைக்காம வேறு யார் செய்வா?” என்றவள், ஏதோ நினைவு வர உடனே குரலில் எள்ளலை கூட்டி, 
ஓ… நான் மறந்துட்டேன் பாருங்களேன். எத்தனை குடியை கெடுத்து அதுல வந்த பாவ காசுல கட்டுன பெரிய்யய பங்களா வீட்டுல பிறந்து வளர்ந்திருக்கீங்களோ யார் கண்டா… உங்களுக்கு எல்லோரையும் வேலை வாங்கித் தானே பழக்கம் இருக்கும். இந்த மாதிரி சின்ன விஷயமெல்லாம் கூட தெரிய வாய்ப்பில்லை தான். இந்த டாடிஸ் லிட்டில் ப்ரின்சஸ் மாதிரி நீங்க மாமிஸ் லிட்டில் ப்ரின்ஸோ? ஆமா இந்த ஒரு வாரம் என்ன செஞ்சீங்க?”
அவளின் எள்ளல் பேச்சு முள்ளாய் அவன் நெஞ்சத்தை பதம் பார்க்க, துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. எத்தனை பேரின் சாபத்தை சம்பாரித்துக் கொண்டு மாளிகை கட்டப்பட்டு அவனின் ஊண், உறக்கம், பகட்டு எல்லாம் நிறைவேற்றப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை தான். ஆனால் நேர்மையான வழியில் சேர்த்த காசில் அவன் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் புரிந்தது. 
தலை குனிந்து மெளனமாய் அவன் நின்ற கோலம் அவள் நெஞ்சை பிசைய குரலை தளர்த்தி, “எவ்வளவு நேரம் அப்படியே நிற்க போறீங்க? வந்து உங்க துணி எல்லாம் எடுங்க. நான் குளிச்சிட்டு வந்த பிறகு நீங்க துவைச்சுக்கோங்க.
அவளின் பேச்சில் துக்கத்தை விட்டு நிமிர்ந்தவன் அசட்டையாய், “எனக்கு துவைக்கத் தெரியாதே. அங்க குவார்டர்சில் கூட வேலைக்கு ஆள் இருக்காங்க.என்று அவளின் முந்திய கேள்விக்கு பதிலையும் இப்போது சேர்த்துக் கூறினான். 
முன்னர் மிடுக்குடன் இரண்டு மூன்று முறை அவனை பார்த்திருக்க இப்போது எதுவும் அறியா பிள்ளை போல் முழித்துக் கொண்டு தேங்கி நிற்பதை கண்டதும் தானாய் ஒரு இலகுத்தன்மை வந்து ஒட்டிக்கொண்டு இதழ் கூட விரியவா என்று நின்றது.  அதை அடக்கிக்கொண்டு, “நீங்க வேணும்னா யூ டியூப் பார்த்து கத்துக்கோங்களேன்.என்று சிரியாமல் மீரா சொல்ல,
அதெல்லாம் கூடவா யூ டியூபில் இருக்கு?” என்று யோசனையுடன் கேட்டான் அவன் பதிலுக்கு. 
உங்களை மாதிரி தெரியாத ஆட்களே இருக்கும் போது அதை சொல்லி கொடுக்க ஆள் இருக்க மாட்டாங்களா என்ன?” என்று அவள் புருவம் உயர்த்த, எவ்வித அச்சமோ கோபமோ இன்றி முதல் இயல்பான உரையாடல் இருவருக்கும்.

Advertisement