Advertisement

“அவங்க ஒய்வு எடுக்கட்டும். நான் அப்புறம் வரேன். ராகவ் வந்ததும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க.” என்று கார்த்திக் பொதுவாய் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று நகர, விழிகள் மீராவிடமே நிலை பெற்றிருந்தது.
மனமே இல்லாமல் கிளம்பியவன் ஷூ மாட்டும் போது சுஜா வேகமாக அவனிடம் வந்தாள்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று தயங்கி அவன் முகம் பார்க்க,
அவளின் குரலில் நிமிர்ந்தவன், “சொல்லுங்க.” என்றான்.
விழிகள் ஒருமுறை உள்ளே மீராவை சூழ்ந்து அவளிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருக்கும் மாமியார் மற்றும் மாமியாரை பார்த்துவிட்டு இவன் புறம் திரும்பியது, “மீராவுக்கு தொல்லை கொடுக்கும் அந்த வரதனைப் பற்றி ராகவ் சொல்லியிருப்பாருன்னு நினைக்குறேன். நீங்க கொஞ்சம் அது என்னென்னு சீக்கிரம் பார்க்க முடியுமா? எனக்கு என்னவோ இப்போ நீங்க இங்கே வந்துட்டு போனது தெரிஞ்சவுடனே அவர் சும்மா இருப்பாருன்னு தோணல. ப்ளீஸ்.” என்று கெஞ்ச,
“நான் வந்துட்டு போறது அவருக்கு தெரிஞ்சிடுமா? அப்போ உங்களை கண்காணிக்கிறாங்களா? ராகவ் இதை என்கிட்ட சொல்லவில்லையே,” என்று அதிர்ச்சியாய் வினவினான் கார்த்திக். ஆம், ராகவ் நேற்று அவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை கார்த்திக்கிடம் பகிர்ந்திருக்கவில்லை. சுஜா பகிர்ந்துகொண்ட பெண் குழந்தை பற்றிய அச்சத்தில் சிக்குண்டு அதிலேயே உழன்றவன் வரதனின் மிரட்டலை தற்காலிகமாக மறந்திருந்தான்.
“ஆமா. நேத்து அவர் உங்களை பார்க்க வந்ததும் தெரிஞ்சிருக்கு அதோட நேற்று முன்தினம் அவள் பீச்சில் மயங்கி சிகிச்சை எடுத்துகிட்டது கூட அவருக்கு தெரிஞ்சிருக்கு. ஒரு ஆள் கூடை நிறைய ஆரஞ்சு, ஆப்பில் பழம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு போலீஸ் சகவாசம் கூடாதுன்னு மிரட்டிட்டு போனான். அப்போவே அவருக்கு போன் பண்ணேன், அவர் உங்ககூட பேசிட்டு இருந்தார் போலிருக்கு, அப்புறம் ஈவ்னிங் அவர் வீட்டிலிருந்தே வேலை செஞ்சாரு அதுதான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டார் போலிருக்கு.” என்று சுஜா விவரம் தெரிவிக்க, சுதாரித்தான் கார்த்திக்.
கடைக்கண் பார்வை வீட்டையும் வீட்டை சுற்றியும் அந்தத் தெருவையும் நோட்டம் விட, சந்தேகப்படும் விதமாய் யாரும் சிக்கவில்லை தான். ஆனால் அவன் பார்வைக்கு அப்பால் தெரு முனையில் ஒருவன் மறைந்து நின்று இவன் வந்திருக்கும் தகவலை வரதனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தான்.
“நான் என்னென்னு பார்க்குறேன். என் நம்பர் உங்ககிட்ட இருக்குள்ள?” என்று கேட்டவன், சுஜா, “ராகவ் கிட்ட இருக்கு. நான் வாங்கிக்குறேன்.” என்கவும் தொடர்ந்த கார்த்திக், 
“எதுவா இருந்தாலும் என்ன நேரமா இருந்தாலும் என்னை கூப்பிடுங்க. பயப்படாதீங்க. நான் ஒரு கான்ஸ்டபுலை வீட்டு பாதுகாப்புக்கு அனுப்புறேன். ராகவை ஈவ்னிங் போல வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்கச் சொல்லுங்க. வரதனை பத்தி வேற ஏதாவது தெரியுமா உங்களுக்கு?”
“கே.எஸ் இண்டஸ்ட்ரீஸ் ஓனர்னு சொன்னார் அந்த தரகர். அதோட அவருடைய விசிடிங் கார்ட் கொடுத்துட்டு போயி இருக்கார். இருங்க அதை எடுத்துட்டு வந்து தரேன்.” என்றவள் உள்ளே செல்ல, கே.எஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அதிர்ந்து பின் குழம்பி நின்றான்.
சுஜா சென்ற வேகத்தில் திரும்பி வந்து அந்த கார்டை கொடுக்க, அதை குழப்பத்துடன் வாங்கியவன் அதன் டிசைன் முதற்கொண்டு சந்தேகத்துடன் நோக்கினான். வரதன் என்ற பெயரின் கீழ் கே.எஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. வேறு எதுவும் அதில் இல்லை.
“சரி நான் பார்த்துக்குறேன். நீங்க பத்திரமா இருங்க.” என்றுவிட்டு யோசனையுடனே அங்கிருந்து நகர்ந்தான்.
பைக்கில் சாவியை சொருகியவன் வண்டியை இயக்காமல் அலைபேசியில் தன் தந்தையை அழைத்தான். நாலைந்து முறை அழைப்பு மணி அடித்த பின்தான் அவர் தொடர்பில் வந்தார்.
“என்ன கார்த்தி? இப்போ தானே வேலைக்கு போன? அதுக்குள்ள கூப்பிட்டுருக்க?” என்று மறுமுனையில் குழப்பமாய் கேட்க,
“அப்பா உங்க ஆபீசில் வரதன் அப்படின்னு யாராவது வேலை செய்றாங்களா?” என்று எதிர்கேள்வி எழுப்பினான்.
மறுமுனையில் இரண்டு நொடி அமைதிக்கு பிறகு, “இங்கே நிறைய பேர் வேலை செய்றாங்களே. இதில் வரதன்னு யாராவது இருக்காங்களான்னு தெரியல கார்த்தி. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடு விசாரிச்சு சொல்லுறேன்.” என்று அவர் கூறவும் தன் அலுவலகம் விரைந்தான்.
தன் அலுவல் அறைக்கு சென்றவுடன் முதல் வேலையாய் விக்ரமை தன்னறைக்கு அழைத்து, “விக்ரம், இந்த கார்டை பாரேன். அப்பா கம்பனி பெயரை உபயோகித்து வரதன் என்கிற பெயரில் யாரோ மோசடி செய்றாங்க.” என்று அந்த கார்டை அவனிடம் நீட்டினான்.
கார்த்திக் எதிரே அமர்ந்தவன், அதை வாங்கி படித்துவிட்டு, “உங்க அப்பாவுக்கு தெரியாம எப்படிடா இன்னொருவர் இந்த பெயரில் உபயோகிக்க முடியும்? உங்க கம்பெனியில் வேலை செய்கிற யாரோ ஒருவனாத் தான் இருக்கும். இல்லை கம்பெனி பெயர் ரெஜிஸ்டர் செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாய் உங்க கம்பெனி பெயரை உபயோகிக்கணும்.”
“இதை கொடுத்தவர் கே.எஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னுடையதுனு சொன்னாராம். சோ யாரோ வேணும்னே கம்பெனி பெயரை தவறா உபயோகப்படுத்துறாங்க. ஊர் பேர் கூட இல்லை பார்த்தியா… இது யாரு என்னனு விசாரி கொஞ்சம். நம்ம ராகவ் தங்கையை கல்யாணம் செய்து வைக்கணும்னு மிரட்டுறாராம் இந்த ஆளு.” என்று தீவிரமாய் கார்த்திக் பேச,
“என்ன நம்ம ராகவ்வா… இது எப்போதிலிருந்து?” என்று கேலி பேசி கார்த்திக்கின் ரத்தஅழுத்தத்தை எகிறச் செய்தான் விக்ரம்.
“விளையாட இது நேரம் இல்லை விக்ரம். இந்த வரதனால் ஒரு பக்கம் ராகவ் குடும்பத்திற்கு நெருக்கடி மறுபுறம் கம்பெனிக்கு அவப்பெயர் ஏற்படுத்துற செயல். கம்பெனி லோகோ கூட அப்படியே அப்பா கம்பெனி லோகோ மாதிரியே இருக்கு. அப்பா கார்டில் அட்ரெஸ் அண்ட் அப்போவோட டெசிக்னேஷன் இருக்கும். இது ரெண்டுமே இந்த வரதன் கொடுத்திருக்கிற கார்டில் இல்லை. இந்த வரதனை எப்படியாவது கண்டுபிடிச்சாகனும்.” என்று பல்லைக் கடிக்க, அவனின் இன்டர்காம் அலறியது. 
எடுத்து பேசியவனின் முகம் மீண்டும் குழப்பத்தை தத்தெடுக்க, ‘என்ன’ என்பது போல் சைகையால் கேட்டான் விக்ரம். இரண்டு நொடி பேசிவிட்டு வைத்தவன், “ஏதோ முக்கியமான லெட்டர் fax வருதாம். பார்க்க சொன்னாங்க.” என்று பதில் கூறவுமே fax மெஷினில் இருந்து காகிதம் அச்சிட்டு வர, அதை எடுத்து படித்துப் பார்த்தவன் அதிர்ந்துப் போனான்.
***
“என்னடா அம்மு இப்படி பண்ணிட்ட? அவர் நமக்கு உதவனும் தானே இதெல்லாம் செய்யுறார். அவரைப் போய் இப்படிப் பேசலாமா?” மெத்தையில் படுத்திருக்கும் மகளின் தலையை வருடிக் கொண்டே அவளின் மன அயர்ச்சியை களைய முற்பட்டுக் கொண்டிருந்தார் ரகுநாதன்.
“எனக்கு எதுவும் வேண்டாம் அப்பா. எனக்கு எதுவுமே பிடிக்கல.” என்று மகள் வழக்கம் போல் முரடு பிடித்துக் கொண்டிருந்தாள்.
அம்புஜம் பழச்சாறு எடுத்துவந்து அவளுக்கு புகட்ட, “வேண்டாம் அம்மா.” என்று அதையும் மறுத்தாள்.
“என்ன தான்டி வேணும் உனக்கு? எதை சொன்னாலும் கொடுத்தாலும் வேண்டாம் இல்லை முடியாது. எங்களையும் கொஞ்சம் நினைச்சு பாருடி அம்மு.”
அன்னையின் குமுறலை ஒரு பொருட்டாய் கூட மதியாமல் உடலை குறுக்கி முகத்தை மறைத்து குப்புற படுத்துக் கொண்டாள் மீரா.
“அவ கொஞ்சம் தனியா ரெஸ்ட் எடுத்து யோசிக்கட்டும் அத்தை.” என்று சுஜா பரிந்து பேச,
“இன்னும் எவ்வளவு நாள் தனியா விட்டா இவள் சரியாகிடுவான்னு சொல்லு, விடுவோம்.” என்று விதண்டாவாதம் செய்தார் அம்புஜம்.
“என்ன அத்தை நீங்களும் இப்படி பேசுறீங்க?”
“வேற என்ன செய்ய சொல்ற என்னை? எல்லோரும் அவள் விருப்பத்திற்கு விடுங்க விடுங்கனு சொல்லி சொல்லி தான் இவள் விருப்பத்திற்கு அடஞ்சே கிடக்கா. அந்த தம்பி நமக்கு நட்பா? உறவா? இவளுக்காக ஏதோ செய்யணும்னு செய்யுது அதைக் கூட இவள் கண்டுக்கல.” என்று அன்னையாய் ஆதங்கப்பட, சுஜாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“அம்மு பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு புலம்பாத. சுஜா உன் அத்தையை கூட்டிட்டு போ. போய் மதியம் சாப்பாட்டை தயார் செய்யுங்க. இப்போ அம்மு தூங்குறா, கொஞ்ச தூங்கட்டும். நானும் ஆபீஸ் கிளம்புறேன்.” என்று மகள் தலையை மென்மையாய் வருடிவிட்டு ரகுநாதன் எழுந்துகொள்ள,
“எல்லோரும் என் வாயையே அடைங்க,” என்று நொடித்துவிட்டு அம்புஜம் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
சுஜா மட்டும் மீராவுடன் அவள் அறையில் தனித்துவிடப்பட, மீராவின் காலடியில் பொத்தென்று அமர்ந்தாள். மீராவுக்கு இப்படி ஆன புதிதில் வேதனையும் புலம்பல்களும் இதைவிட பன்மடங்காக இருந்தது. அப்போதெல்லாம் அந்த இக்கட்டையும் வருத்தங்களையும் தாண்டிவந்து அனைவருக்கும் சமாதானம் சொல்லி எல்லோரையும் சமாளித்துவிட்டாள் தான். ஆனால் இப்போது எல்லாமே அவளின் சக்திக்கு மீறியதாய் இருந்தது. எதற்கெடுத்தாலும் மனம் விரைவிலேயே சோர்ந்துவிட, சின்ன சுணக்கம் ஏற்பட்டாலும் கணவனின் அன்பையும் மீறி அம்மாவை தேடியது மனது. பேசாமல் அம்மா வீட்டுக்கு சென்றுவிடலாமா என்றுகூட ஒருசில நேரம் எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை. இது அனைத்தோடு மசக்கையும் சேர்ந்துகொண்டு அவளை உடலளவிலும் சோதிக்க அதில் இப்போது இந்த வரதன் பிரச்சனையும் சேர்ந்துகொண்டு அவள் மனதை ஐயத்தில் அரிக்கத் துவங்கியுள்ளது.
‘அம்மா எப்படியாவது இது எல்லாத்தையும் தாண்டி உன்னை ஆரோக்கியமா பெத்து எடுத்துரனும்டா. அம்மாவை புரிஞ்சிக்கிட்டு நீ கொஞ்சம் அம்மாவுக்கு தொல்லை கொடுக்காம இருந்தா உன் அத்தைக்கு ஏதாவது நல்லது செஞ்சிட்டு அப்புறம் நீ, நான், அப்பா எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம். நீ என்னை புரிஞ்சிப்ப தானே கண்ணு?’ என்று வளர்ந்து கொண்டிருக்கும் தன் குழந்தையிடம் பேசியவள், குழந்தை வரவை மகிழ்ச்சியாக கொண்டாடக் கூட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
இது எதுவும் தெரியாமல் மீரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அம்புஜத்திற்கு உதவவென சுஜா சென்றுவிட்டாள்.
அன்று முழுதும் எப்படியோ பொழுது கழிந்துவிட, ராகவ் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வீட்டில் நடந்தவற்றை அறிந்து கார்த்திக்கை அழைக்க, அவனோ அலைபேசியை எடுக்கவில்லை.
“என்னனு தெரியல கார்த்திக் சார் போன் எடுக்க மாட்டேங்குறார்.” என்று பொதுவாய் சொல்லியபடி வாயிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
“ஏதாவது வேலையாக இருக்கும் அதுதான் எடுக்கலையா இருக்கும். நீ கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணு.” என்று சாதாரணமாய் ரகுநாதன் சொல்ல,
“கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணி என்ன செய்யப் போறீங்க? என் மேல கம்ளைன்ட் கொடுக்க போறீங்களா?” என்ற குரல் நாராசமாய் ராகவின் பின்னிருந்து ஒலித்தது.
திடுக்கிட்டு வாயிலில் பார்க்க, கரை வேட்டிச் சட்டையில் வரதன் ஏளனமாய் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.
“போலீஸ் சகவாசம் வேண்டாம்னு தன்மையா சொன்னா கேட்கிற மாதிரி தெரியல… அதுதான் பார்த்தேன், அவனை தூக்கி அடிச்சிட்டேன்.” என்று எள்ளலாய் பேச, பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது அந்த குடும்பத்திற்கு. 
குறிப்பாக சுஜாவிற்கு. வீட்டு காவலுக்கு காவலரை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன கார்த்திக் இதுவரை அனுப்பவில்லை. ராகவ் அலைபேசியில் அழைத்ததற்கும் பதில் இல்லை. இப்போது வரதன் கூறுவதை கேட்கும் போது தங்களால் அவனுக்கு எதுவும் ஆபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
“இன்னொரு நல்ல செய்தி சொல்லவா? பொறுமையா அடுத்த மாசம் பார்த்துக்கலாம்னு இருந்தேன், ஆனால் நீங்க செய்த கூத்தில் அது  இன்னைக்கே இப்போவே நடக்கப் போவுது. இனியும் உங்களை சும்மா விட்டுவைக்க முடியாது.” என்று வன்மமாய் சொல்லிவிட்டு சொடுக்கு போட, வெளியிலிருந்து ஒருவன் ஒருதட்டுடன் வந்தான். அதில் ரோஜா நிற பட்டுப்புடவையின் மேல் இரண்டு மாலையும், அதன் மீது ஒரு மங்கள நாணும் இருக்க, மீள முடியாத ஐயம் அடிவயிற்றை பிடித்துக்கொண்டது அனைவருக்கும்.
“இந்த வயசுல இந்த மாலை தாலி எல்லாம் வேண்டாம்னு தான் நினைச்சேன், ஆனா பாருங்க உங்களால என்னோட மொத்த பிளானும் மாறிடுச்சு. ம்ம்.. சீக்கிரம் தயாராகி வரச் சொல்லுங்க, உங்க பொண்ணை.” என்றவர் சோபாவில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொள்ள,
“என்ன மிரட்டுறீங்களா? என்ன நடந்தாலும் சரி நீங்க நினைக்கிறது நடக்காது.” என்று ராகவ் பீதியிலிருந்து வெளிவந்து வரதனை எச்சரித்தான்.
“இளரத்தம்ல அதுதான் ரொம்ப துள்ளுது. இதுக்கு மேல வீராவசனம் பேசி ரத்தம் சிந்திடாத தம்பி. இவ்வளவு தைரியமா உங்க வீட்டு நடுவில நின்னு உங்களை மிரட்டுறேன்னா நிராயுதபானியாவா வந்திருப்பேன்?  போ தம்பி போய் ஓரமா நில்லு.” என்று அலட்சியமாய் பேசியவர் அந்த புடவையை அம்புஜத்திடம் கொடுக்கச் சொன்னார்.
அவர் கைகளை பின்னே கட்டிகொண்டு தலையை மறுப்பாக அசைத்தார்.
“அடடா ரத்தம் சிந்தாம எதுவும் நடக்காது போலிருக்கே.” என்று நெற்றியை தேய்த்தவர், தன் கடைக்கண் பார்வையால் வெளியில் இருந்த ஒருவனை அழைக்க, தடிமனான ஒருவன் துப்பாக்கியுடனும் அவன் பின்னே மற்றொருவன் அரிவாளோடும் உள்ளே நுழைந்தனர்.
அனைவரின் விழிகளும் அச்சத்தில் விரிய, உள்ளம் தடதடக்க, தேகம் நடுங்கி தூக்கிப்போட, வியர்வை அரும்புகள் படையெடுத்தன.
“ரெளடி மாதிரி இந்த வெட்டு குத்து எல்லாம் தாண்டி பல வருடம் ஆகிடுச்சி ஆனாலும் நீங்க என்னை அதை திரும்ப செய்ய வைக்கணும்னு கங்கணம் கட்டாத குறையாக இருந்தா நான் என்ன செய்யறது?” என்று கையை விரிக்க, அரிவாளை எடுத்துக்கொண்டு வந்தவன் ஒரு அடி தான் முன் எடுத்து வைத்தான், தன் அறைக்கதவின் பின் நின்றிருந்த மீரா பதறிக்கொண்டு வெளியே வந்தாள்.
“நீங்க சொல்றதை நான் கேட்குறேன், என் குடும்பத்தை எதுவும் செய்துறாதீங்க.”
“வாயை மூடிட்டு உள்ளே போ மீரா.” என்று ராகவ் அவளை பிடித்து அவள் அறைக்குள் தள்ள, திமிறிக்கொண்டு பிடியிலிருந்து வெளியேறியவள் அந்த தட்டில் வைக்கப்படிருந்த புடவையை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
ரகுநாதன் என்ன நடக்கிறது என்ன செய்வது என்று எதுவும் புரியாது மரத்துப் போய் வியர்வையில் நனைந்திருக்க, ராகவ் கார்த்திக்கிற்கு அழைக்க முற்பட, அவனின் அலைபேசி பறிக்கப்பட்டது.
“இன்னும் என்னை புரிஞ்சிக்கவே இல்லையே தம்பி. ஒரு பத்து நிமிஷம் அமைதியா இருந்தீங்கன்னா வந்த வேலை முடிஞ்சிடும்.”
ராகவிற்கு வந்த ஆத்திரத்தில் பாய்ந்து முன்னேறி வரதனின் கழுத்தை நெறிக்க, வரதனின் ஆட்கள் ராகவை இழுத்து சரமாரி அடிக்கத் துவங்க, அந்த இடமே ரணகலமாகியது. அமைதியாய் மீரா அறைக்குச் சென்று அவளை எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு மீராவின் அறையை நெருங்கிய ரகுநாதனின் காலிலே பலத்த அடி ஒன்று விழ, அவர் வலியில் சுருண்டு விழுந்துவிட்டார்.
தன் குடும்பத்தினரின் அழுகுரலோடு வரதன் ஆட்களோடு அவர்கள் செய்யும் ரகளையும் வலியில் முனகும் அரவமும் கண்ணீரை உற்பத்தி செய்திருக்க வழிந்த நீரையும் பொருட்படுத்தாமல் மீரா புடவையை சுற்றிக்கொண்டு வெளியே வந்து ராகவை அவர்களிடமிருந்து காத்தபடி, “நான் தான் ஒத்துக்குறேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க?” என்று கேவ, வரதனின் நாராசமான சிரிப்பும், சுஜாவின் விம்மலும், அம்புஜம் மற்றும் ரகுநாதனின் கையாலாகாத்தனத்தின் அழுகுரலும், ராகவின் முனகளும் அந்த வீட்டையே சூனியமாய் மாற்றியிருந்தது.

Advertisement